ஆங்கிலத்தில்: Order of Friars Minor Capuchin
சுருக்கமாக: (OFM Cap)
சபை நிறுவனர் மற்றும் பாதுகாவலர்: புனித அசிசி பிரான்சிஸ் (1182-1226)
கப்புச்சின் சபையின் மறுமலர்ச்சி (துவக்கம்) : 1528, இத்தாலி
மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்: அருள்தந்தை. மாத்யூ தெ பாஷியோ
(1520 ஆம் ஆண்டு முதல் மேத்யு தெ பாஷியோ என்ற பிரான்சிஸ்கன் அப்செர்வன்ட் துறவி, புனித பிரான்சிசின் வாழ்வில் செபத்தையும் ஒறுத்தல் முயற்சியையும் பிரிக்க இயலாது என்று கூறி, கடினமான ஒறுத்தல் வாழ்வினை மேற்கொண்டார். இவரோடு சில பிரான்சிஸ்கன் அப்செர்வென்ட் மற்றும் பிரான்சிஸ்கன் கன்வென்சுவல் துறவிகளும் இந்த புதிய வாழ்வில் இணைந்து செபத்திற்கும் மறைபணி வாழ்வுக்கும் சம முக்கியத்துவம் தந்து புனித அசிசி பிரான்சிசின் வாழ்வை பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரதிபலித்தனர். இது பிரான்சிஸ்கன் சபையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியாகும்.)
கப்புச்சின் சபை பெயர்க்காரணம்: கப்புச்சின் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பிரான்சிஸ்கன் துறவிகள் நீண்ட தொப்பி உடைய காப்பி நிற அங்கியை அணிந்தார்கள். இவர்களைப் பார்த்த கேமரினோ என்னும் நகரைச் சார்ந்த சிறார்கள், தங்கள் கரங்களைத் தட்டி கப்புச்சினோ.. கப்புச்சினோ.. (தொப்பி சாமியார்! தொப்பி சாமியார்..!) என மகிழ்ந்தனர். ஆகவே சிறு குழந்தைகள் வாய்மொழியாக வந்த கப்புச்சினோ என்ற பெயர் இச்சபைக்கு நிலைத்து நின்றது.
கப்புச்சின் சபை தலைமையகம்: உரோம், இத்தாலி
உலகில் உள்ள கப்புச்சின் சபை துறவிகள் (2019-ம் ஆண்டு கணக்குப்படி): 10,515 துறவிகள்
குருக்கள் மற்றும் துறவிகள்: 8,521 (குருக்கள்: 7064
அருள்சகோதரர்கள்: 1457)
பயிற்சி நிலையில்: 2535
மொத்த துறவற இல்லங்கள்: 1564
கர்தினால்கள்: 3
ஆயர்கள்: 85
கப்புச்சின் சபையினர் பணிபுரியும் நாடுகள்: 124
இந்தியாவில்: 1600 துறவிகள் (16 மறைமாநிலங்கள், 3 மறைவட்டங்கள்)
தமிழ்நாட்டில்: 300 துறவிகள், 2 மறைமாநிலங்கள் (திருச்சி, மதுரை)
இந்தியாவிற்கு கப்புச்சின் சபையினரின் முதல் வருகை: 08.01.1632, புதுச்சேரி
தமிழகத்தில் உள்ள கப்புச்சின் சபை மறைமாநிலங்கள்: 2
1. அமல அன்னை மறைமாநிலம், ஞானாலயா, திருச்சி 1
2. புனித அமைதியின் அரசி மறைமாநிலம், திருமங்கலம், மதுரை
தமிழகத்தில் கப்புச்சின் சபையின் முதல் இல்லம்: அமல ஆசிரமம் (1943), ஸ்ரீரங்கம், கும்பகோணம் மறைமாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள துறவற இல்லங்கள்: திருச்சி 18, மதுரை 17
கப்புச்சின் சபையின் தனிவரம்: ஏழ்மை, எளிமை, சகோதர கூட்டுவாழ்வு மற்றும் நற்செய்தி அறிவிப்புப்பணி
சிறப்பு பணிகள்: மறைப்பரப்பு, ஆன்மீகம், ஒப்புரவு, பங்குப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி, ஆற்றுப்படுத்துதல், பிரான்சிஸ்கன் பொதுநிலையினரை வழிநடத்துதல்
கப்புச்சின் சபையினர் அடையாளங்கள்: அங்கியில் நீண்ட தொப்பி உடைய காப்பி நிற உடை, கயிறால் ஆன இடுப்பு கச்சை
கப்புச்சின் சபை புனிதர்கள்:
(பிறப்பு -பிறந்தநாடு -இறப்பு -புனிதர் பட்டம் பெற்றநாள்)
பிறப்பு: 1515
நாடு: இத்தாலி
இறப்பு: 18.05.1587
புனிதர்: 22.05.1712
2. புனித மோன்தே கிரானாரோ செராஃபின்
பிறப்பு:1540
நாடு: இத்தாலி
இறப்பு: 12.10.1604
புனிதர்: 16.07.1767
பிறப்பு: 08.01.1556
நாடு: இத்தாலி
இறப்பு: 04.02.1612
புனிதர்: 26.06.1746
பிறப்பு: 22.07.1559
நாடு: இத்தாலி
இறப்பு: 22.07.1619
புனிதர்: 08.14.1881
பிறப்பு: அக்டோபர் 1578
நாடு: ஜெர்மனி
இறப்பு: 24.04.1622
புனிதர்: 29.06.1746
பிறப்பு: 06.02.1605
நாடு: இத்தாலி
இறப்பு: 12.01.1667
புனிதர்: 10.06.2001
பிறப்பு: 13.11.1668
நாடு: இத்தாலி
இறப்பு: 19.05.1750
புனிதர்: 20.06.1982
பிறப்பு: 19.10.1669
நாடு: இத்தாலி
இறப்பு: 30.10.1739
புனிதர்: 15.10.2017
பிறப்பு: 05.06.1686
நாடு: இத்தாலி
இறப்பு: 22.09.1770
புனிதர்: 19.05.2002
பிறப்பு: 18.12.1701
நாடு: இத்தாலி
இறப்பு: 11.05.1781
புனிதர்: 21.10.1951
பிறப்பு: 05.11.1715
நாடு: இத்தாலி
இறப்பு: 31.05.1787
புனிதர்: 23.10.2005
பிறப்பு: 27.12.1804
நாடு: இத்தாலி
இறப்பு: 17.09.1866
புனிதர்: 09.12.1962
பிறப்பு: 22.12.1818
நாடு: ஜெர்மனி
இறப்பு: 21.04.1894
புனிதர்: 20.05.1934
பிறப்பு: 12.05.1866
நாடு: குரோஷியா
இறப்பு: 30.07.1942
புனிதர்: 16.10.1983
பிறப்பு: 25.05.1866
நாடு: இத்தாலி
இறப்பு: 23.09.1968
புனிதர்: 16.06.2002
பிறப்பு: 27.12.1660
நாடு: இத்தாலி
இறப்பு: 09.07.1727
புனிதர்: 26.05.1839
அருளாளர்கள்: 109
வணக்கத்துக்குரியவர்கள்: 36
இறையடியார்கள்: 42
தமிழ்நாட்டில் பிரான்சிஸ்கன் சபை:
வரலாற்றுப் பயணி மார்க்கோ போலோ தனது பயண நூலில் பிரான்சிஸ்கன் துறவிகளுள் ஒருவராகிய ஜான்மோன்தே கொர்வினோ சென்னையில் உள்ள மைலாப்பூரில் 1291-1292 வரை தங்கி 100க்கும் அதிகமானோருக்கு திருமுழுக்கு கொடுத்து கிறிஸ்தவ மறையில் சேர்த்தார் என கூறுகின்றார். இந்த பிரான்சிஸ்கன் சபை துறவி, புனித பிரான்சிஸ் மரித்த 60 ஆண்டுகளுக்குள் இந்தியா வந்தடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சீனாவின் பெக்கிங் மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றவர். தனது மறைமாவட்டத்தை நோக்கிய பயணத்தில் தான் ஏறக்குறைய ஓராண்டு புனித தோமாவின் கல்லறை ஆலயத்தில் தங்கி மறைப்பணி ஆற்றினார். இவரது வழியில் இயேசுவின் போதனைகளைப் போதிக்க 1500 இல் பிரான்சிஸ்கன் துறவிகள் இந்தியாவிற்கு வந்தனர். அவ்வாறு இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்த முதல் துறவற சபை என்ற பெருமைக்குரியது பிரான்சிஸ்கன் சபை.
இந்த போர்த்துக்கீசிய பிரான்சிஸ்கன் துறவிகள் முதலில் கோவா வந்தடைந்தனர். பின்பு கொச்சின், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தூத்துக்குடி போன்ற கடலோரங்களில் புதிய கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கினர். ஐந்து நூற்றாண்டுகளை கடந்து இன்றும் வரலாற்றுச் சிறப்புடன் திகழும் சென்னை புனித பிரகாச அன்னை ஆலயம் (லஸ் சர்ச்) பிரான்சிஸ்கன் துறவிகளால் 1516 இல் தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் ஆலயமாகும். நாகப்பட்டினத்தை நடுவமாக கொண்டு மறைப்பணி ஆற்றியபோது வேளாங்கண்ணியில் ஒரு சில மீனவ குடும்பங்களை 1552 இல் கிறிஸ்தவ மெய்மறையில் சேர்த்து அங்கு ஒரு சிற்றாலயத்தையும் அமைத்தனர். பின்பு 1642-இல் போர்த்துக்கீசிய மாலுமிகள் கடலோரம் வேறு ஒரு புதிய ஆலயத்தை எழுப்பி, அதை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் என அழைத்தனர். 1552 முதல் 1889 வரை 337 ஆண்டுகள் புனித ஆரோக்கிய அன்னை காட்சியருளிய வேளாங்கண்ணி திருத்தல பேராலயத்தின் பொறுப்பாளர்கள் பிரான்சிஸ்கன் துறவிகள் ஆவர். அதற்குச் சான்றாக புனித ஆரோக்கிய அன்னை திருப்பீடத்தில் புனித அசிசி பிரான்சிஸ் மற்றும் புனித பதுவை அந்தோனியார் சுரூபங்கள் 1961 ஆம் ஆண்டுவரை வீற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கப்புச்சின் சபையின் தோற்றம்:
13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அசிசி பிரான்சிஸ் (1182-1226) அவர்களின் அடிச்சுவட்டில் வந்தவர்கள்தான் கப்புச்சின் சபை துறவிகள். புனித அசிசி பிரான்சிஸ் நிறுவிய எளிய துறவிகளின் சபை என்பது பொதுவாக பிரான்சிஸ்கன் சபை என அறியப்படுகிறது.
பிரான்சிஸ்கன் சபையில் புகழ்பெற்ற புனிதர்கள்:
புனித அசிசி பிரான்சிஸ்
புனித அசிசி கிளாரா
புனித பதுவை அந்தோனியார்
புனித பொனவெந்தூர்
புனித சீயன்னா பெர்னாடின்
புனித சிக்மரிங்ஙன் பிதேலிஸ்
புனித பிரிந்திசி லாரன்ஸ்
புனித மேக்ஸ்மிலியன் மரிய கோல்பே
புனித குப்பர்த்தினோ சூசை
புனித அசிசி ஆக்னஸ்
புனித தந்தை பியோ
ஆகியோர் அடங்குவர்.
புனித அசிசி பிரான்சிஸ் மூன்று சபைகளின் நிறுவனர் ஆவார்.
1. ஆண் துறவிகள்
2. பெண் துறவிகள் (அடைப்பட்ட கன்னியர் வாழ்வு)
3. பொதுநிலையினர்
பிரான்சிஸ்கன் 3-ம் சபை (பொதுநிலையினர்) & (துறவிகள் - பின்னாட்களில் பொதுநிலையினருக்கு என எழுதப்பட்ட ஒழுங்குகளை வேறுசில துறவற சபைகளும் பின்பற்றின. அவர்கள் புனித அசிசி பிரான்சிஸ்குவை தங்களது சபையின் பாதுகாவலராகவும் அல்லது இணை பாதுகாவலராகவும் ஏற்றுக் கொண்டு, புனித பிரான்சிஸ்குவின் ஆன்மீகத்தை பின்பற்றினர். இவர்கள் பிரான்சிஸ்கன் 3-ம் சபையில் துறவிகளின் பிரிவில் அடங்குவர்)
ஆண்களுக்கு நிறுவப்பட்ட துறவிகள் சபையானது, புனித அசிசி பிரான்சிஸ் மறைவிற்குப் பிறகு மூன்று சபைகளாகப் பிரிந்தது.
1. பிரான்சிஸ்கன் அப்சர்வன்ட்ஸ் (OFM)
2. பிரான்சிஸ்கன் கன்வென்சுவல் (OFM Conv)
3. கப்புச்சின் சபை (OFM Cap)
இந்த மூன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் பிரிந்தாலும், இந்த மூன்று சபைகளுக்கும் புனித அசிசி பிரான்சிஸ் நிறுவனராகக் கொண்டாடப் படுகிறார்.
இந்தியாவில் கப்புச்சின் சபை:
1528 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபையிலிருந்து பிரிந்து தனி அமைப்பாக கப்புச்சின் சபை உருவாகியது. 1632 ஆம் ஆண்டு பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள் இந்தியாவில் முதன் முறையாக புதுச்சேரியில் காலடி வைத்தனர். தென்னிந்தியாவில் மேலும் சூரத் (1639) மற்றும் சென்னையில் (1642) கப்புச்சின் மறைப்பணித்தளங்கள் நிறுவப்பட்டன.
இத்தாலிய கப்புச்சின் துறவிகள் 1707 இல் திபெத், கைலாசாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் - திபெத் மறைப்பணித்தலத்தை நிறுவினர். 1773 இல் ஆக்ரா மறைப்பணித்தலம் கப்புச்சின் சபை துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வட இந்தியா முழுமையும் சந்திர நாகூர் முதல் லாகசா வரை, சிந்து முதல் எங்கானம் (வங்காளம்) வரை, இமயமலை முதல் நர்மதா ஆறு வரை பரந்து விரிந்த பகுதியில் மறைப்பணியாற்றி 30 க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களை தங்களது விசுவாசத்தின் வியர்வையால் உருவாக்கி ஆக்ரா, பாட்னா, லாகூர், தில்லி, சிம்லா, அலகாபாத், சென்னை (இன்று இணை பேராலயம்) மற்றும் ஆஜ்மீரின் மறைமாவட்ட பேராலயங்களை எழுப்பினர்.
பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, அயர்லாந்து, மால்டா, அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கப்புச்சின் துறவிகள் இந்தியாவில் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் குறிப்பிடத்தக்கவர் பாட்னா மற்றும் மும்பையின் ஆயர் வணக்கத்துக்குரிய அனஸ்தாசியுஸ் ஹார்ட்மேன். இன்று 1600 கப்புச்சின் சபை இந்திய துறவிகள் 14 மறை மாநிலங்கள் மற்றும் 3 மறை தூதுவட்டங்களில் இயேசுவின் புனிதப் பணியை தொடர்கின்றனர்.
தமிழகத்தில் கப்புச்சின் சபையினர்:
1632 இல் தமிழ் மண்ணில் புதுச்சேரியில் கால்பதித்த பிரெஞ்சு கப்புச்சின் குருக்கள், ஒரு நிலையான மறைப்பணித்தலத்தை 1674 இல் நிறுவி இந்தியாவில் உள்ள அனைத்து பிரெஞ்சு குடியிருப்புகளில் ஆன்மீகப் பணியை 1828 ஆம் ஆண்டுவரை செய்தனர். புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டப் பகுதியில் முதல் கிறிஸ்தவ மறைபோதகர்கள் கப்புச்சின் குருக்கள் ஆவர். சென்னை மாநகரின் முதல் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் கப்புச்சின் குருக்கள் ஆவர்.
சென்னையில் பிரெஞ்சு கப்புச்சின் மறைப்பணியாளர் எப்ரேம் தெ நேவெர் அவர்களால் 1642 இல் உருவாக்கப்பட்ட கப்புச்சின் மறைபணித்தலம் 1834 ஆம் ஆண்டுவரை (192 ஆண்டுகள்) நீடித்தது. இந்த கப்புச்சின் மறைப்பணித்தலமே 1886 இல் சென்னை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டு, பின் 1954 இல் மயிலை மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டு சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம் ஆனது. சென்னையில் பல இடங்களில் புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கி ஆலயங்களை அமைத்தனர். பிரெஞ்சு புரட்சியால் போதிய மறைப்பணியாளர்கள் இன்றி, பிற மறைபரப்பு சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 109 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் கப்புச்சின் துறவிகள் தமிழ்நாட்டில் திருச்சி திருவரங்கத்தில் 1943 ஜூன் 13 அன்று அமல ஆசிரமம் என்ற பெயரில் நிறுவப்பட்டது.
தமிழகத்தில் பிரெஞ்சு கப்புச்சின் சபையினர் உருவாக்கிய பங்குத்தளங்கள்:
சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்:
1. புனித அந்திரேயா ஆலயம் (1642-1752), புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை மாநகரின் முதல் கிறிஸ்தவ ஆலயம். அமைத்தவர் சென்னையின் முதல் கிறிஸ்தவ மறைப்பணியாளர் பிரெஞ்சு கப்புச்சின் குரு எப்ரேம் நெவேர் (1603-1695). இவர் இந்தியாவின் முதல் ஆங்கிலப் பள்ளியை இவ்வாலய வளாகத்தில் நிறுவினார்.
2. புனித மரியாள் வானதூதர்களின் அரசி ஆலயம் (1658). இன்று சென்னை பாரிஸ் கார்னர் புனித பதுவை அந்தோனியார் ஆலயமாக அறியப்படுகிறது. இவ்வாலயத்தையும் அமைத்தவர் எப்ரேம் தெ நெவேர் ஆவார். இந்தக் கப்புச்சின் ஆலயம் சென்னை உயர் மறைமாவட்டத்தின் பேராலயமாக 1886 -1952 வரை விளங்கியது.
3. புனித புதுமை அன்னை ஆலயம் (1750-1756), வேப்பேரி. இவ்வாலயம் கப்புச்சின் துறவிகளிடமிருந்து ஆங்கிலேய அரசால் பறிக்கப்பட்டு, டேனிஷ் பிரிவினை சபையினருக்கு வழங்கப்பட்டது. இங்கு பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரெஞ்சு கப்புச்சின் குரு செவிரினி தெ சாவாய். இன்று அவ்விடத்தில் புனித மத்தியாஸ் சிஎஸ்ஐ ஆலயம் அமைந்துள்ளது.
4. புனித காணிக்கை அன்னை ஆலயம் (1752), இராயப்பேட்டை
5. புனித லாசர் ஆலயம் (1758), சிந்தாதிரிப்பேட்டை. இன்று அரசியாகிய புனித மரியன்னை ஆலயம் என அழைக்கப்படுகிறது.
6. புனித இரக்கத்தின் அன்னை ஆலயம் (1822), பெரியபாளையம். இன்று புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அழைக்கப்படுகிறது. இங்கு பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் இத்தாலிய கப்புச்சின் குரு கிரகோரி மேரி தெ பெனோ.
7. புனித அந்திரேயா ஆலயம் (1830), வேப்பேரி. இத்தாலிய கப்புச்சின் குரு பெலிக்ஸ் முயற்சியில் களத்தியப்பா முதலி தெருவில் இவ்வாலயம் அமைக்கப்பட்டது.
8. புனித பேதுரு ஆலயம் (1829), இராயபுரம். இவ்வாலயம் குருகுல வம்ச வர்ணகுல முதலியார்களால் எழுப்பப்பட்டது. இங்கு பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்க கப்புச்சின் துறவிகள் ஜான் பேப்டிஸ்ட் பிதலிஸ், லாரன்ஸ்,
எஸ்தாக்கியோ மற்றும் மைக்கேல் தெ வலான்ஸ்.
9. புனித வியாகுல அன்னை ஆலயம் (1830), இராயபுரம். இத்தாலிய கப்புச்சின் குரு கிரகோரி மேரி தே பெனோ அவர்களால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது.
10. புனித ஆரோக்கியநாதர் ஆலயம் (1814), பழைய வண்ணாரப்பேட்டை. கல்லறைத் தோட்டத்தை நிறுவி கப்புச்சின் துறவிகள் அங்கு ஓர் ஆலயம் அமைத்தனர்.
11. புனித பதுவை அந்தோனியார் ஆலயம் புதுப்பேட்டை. சென்னை மாநகரில் புனித பதுவை அந்தோனியாருக்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயம். பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள் 1642 முதல் தங்களது இறுதி காலமாகிய 1832 வரை இங்கு பணியாற்றினர்.
12. புனித அசிசி பிரான்சிஸ் ஆலயம் (1832), வாலாஜாபாத், காஞ்சிபுரம். இராணுவப் பயிற்சி முகாமில் இவ்வாலயம் அமைக்கப்பட்டது. இன்று செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஒருபகுதியாக உள்ளது.
13. புனித பதுவை அந்தோனியார் ஆலயம் இராயபுரம். சென்னையில் பிரெஞ்சு கப்புச்சின் மறைப்பணித்தளம் முடிவுற்ற பிறகும், ஐரிஸ் அகஸ்தீனிய குருக்களின் பராமரிப்பின்கீழ் பணியாற்றிய கடைசி பிரெஞ்சு கப்புச்சின் குரு மைக்கேல் தெ லாரன்ஸ் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
14. புனித ஜார்ஜ் ஆலயம் (1830), மாதவரம். மேலும் பாரிஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், ப்ளாக் டவுன் புனித யோவான் ஆலயம் மற்றும் பழவேற்காடு ஆகிய பகுதிகளிலும் பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள் பணியாற்றினர். 1642 முதல் 1834 வரையிலும் சென்னை மாநகரில் மறைப்பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி -கடலூர் உயர் மறைமாவட்டம்:
1. புனித பேதுரு (அ) புனித லாசர் ஆலயம் (1686). பிரெஞ்சு கப்புச்சின் துறவிகளால் எழுப்பப்பட்ட இவ்வாலயமே புதுச்சேரி மாநகரின் முதல் கிறிஸ்தவ ஆலயம் ஆகும். தாணப்ப முதலியார் என்ற கிறிஸ்தவரின் உதவியால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது.
2. புனித மரியாள் வானதூதர்களின் அரசி ஆலயம் (கப்ஸ் கோவில்) (1709), கடற்கரை சாலை, புதுச்சேரி. இன்றும் இவ்வாலயம் இரு நூற்றாண்டு பிரெஞ்சு கப்புச்சின் சபை துறவிகளின் மறைப்பணிக்கு சாட்சியாகத் திகழ்கிறது.
3. புனித மரியன்னை ஆலயம் (1674), லூயி கோட்டை, புதுச்சேரி. இவ்வாலயம் ஆளுநரின் மாளிகையில் அமைந்திருக்கிறது. துவக்ககாலத்தில் இங்குதான் கப்புச்சின் துறவிகள் அனைவருக்குமான ஆன்மீகப் பணியாற்றி வந்தனர்.
4. புனித மதுரநாயகி ஆலயம், மரக்காணம். கப்புச்சின் மற்றும் இயேசு சபை துறவிகள் இம்மறைப்பணித்தளத்தில் பணியாற்றினர்.
5. புனித புதுமை அன்னை ஆலயம் (1751), கடப்பாக்கம். புதுச்சேரி ஆளுநரின் மனைவி திருமதி. டியுப்ளக்ஸ் நன்கொடையால் கப்புச்சின் சபையினர் இவ்வாலயத்தை எழுப்பினர்.
6. புனித சிந்தாத்திரை அன்னை ஆலயம் (1751), செய்யூர். இங்கு கப்புச்சின் துறவியர் 1810 வரைப் பணியாற்றினர்.
மேலும் புதுச்சேரி உயர் மறைமாவட்டத்திற்குட்பட்ட ஆலம்பரை, கரையாம்பட்டு, கடலூர், மஞ்சக்குப்பம் ஆகிய தமிழ்ப்பகுதிகளிலும் மற்றும் காரைக்கால், சந்திரநாகூர், ஏனாம், மாஹி, மசூலிப்பட்டிணம், குண்டூர், விசாகப்பட்டிணம் ஆகிய பிரெஞ்சு குடியிருப்புப் பகுதிகளிலும் கப்புச்சின் சபையினர் 1828 வரைப் பணியாற்றினர்.
இன்று தமிழகத்தில் கப்புச்சின் சபை:
1922 இல் முதன் முதலில் இந்திய கப்புச்சின் துறவிகளுக்கு பயிற்சி கொடுக்க நவசந்நியாச மடம் ஒன்று உத்திரப்பிரதேசத்தில் உள்ள முசோரியில் ஆரம்பித்தனர். பின்பு மங்களூருக்கு 1930 இல் மாற்றினர். 1963 வரை மறைப்பணித்தலமாக செயல்பட்ட இந்திய கப்புச்சின் சபையின் தலைமையகம் ஒருங்கிணைந்த மறைமாநிலமாக உயர்த்தப்பட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள சாந்தி ஆசிரமத்தில் இருந்து செயல்பட்டது. இந்தியாவில் ஒரே மறைமாநிலமாக இருந்த சபை 1972 இல் தனது பொன்விழா ஆண்டில் (1922-1972) மே மாதம் 17 ஆம் தேதி மூன்று மறைமாநிலமாகவும், ஒரு துணை மறைமாநிலமாகவும் உருவானது. அந்த மூன்று மறைமாநிலத்தில் ஒன்றாக தமிழக அமல அன்னை கப்புச்சின் மறைமாநிலம் உருவானது. அப்போது 50 துறவிகள் (21 குருக்கள், 18 சகோதரர்கள், 2 குரு மாணவர்கள், 4 முதல் வார்த்தைப்பாடு கொடுத்த சகோதரர்கள், 5 இளம் துறவிகள்) 7 மடங்களில் இருந்தார்கள்.
இன்று ஏறக்குறைய 300 துறவிகள் 30 மடங்கள் மற்றும் பல நாடுகளில் அருட்பணியாற்றுகிறார்கள். தமிழ்நாட்டின் முதல் கப்புச்சின் சபையின் மடம் திருச்சி திருவரங்கத்தில் இருக்கும் அமல ஆசிரமம் 1943 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது கும்பகோணம் மறைமாவட்டத்தின் கீழ் உள்ளது. நற்செய்திப்பணி, பங்குப்பணி, சமூகப்பணி, வேதபோதகப்பணி (ஜிம்பாபுவே, புர்கினோ, பாசோ, இலங்கை), நலிவுற்ற பழைமையான கப்புச்சின் மறைமாநிலங்களை திடப்படுத்துதல் (பிரான்ஸ், கனடா, இத்தாலி), பயிற்றுவிப்புப்பணி, பொதுநிலை பிரான்சிஸ்கன் சபையை வழிநடத்துதல், வளைகுடா நாடுகளில் ஆன்மீகப்பணி போன்ற பணி தமிழக கப்புச்சின் துறவிகளால் மேற்கொள்ளப்படுகிறது. சில துறவிகள் தங்களது மேற்படிப்புகளை வெளிநாடுகளில் மேற்கொள்கிறார்கள். ஒருசிலர் தமது பணியை அகில உலக கப்புச்சின் தலைமையகத்திலும், பிற இடங்களிலும் தாய்த்திருச்சபைக்காக பணியாற்றுகின்றார்கள்.
யாசகம் செய்வது (பிச்சை எடுப்பது) பிரான்சிஸ்கன் சபையின் முக்கியமான பணிகளில் ஒன்று. யாசகப்பணி என்பது தங்கள் வாழ்வில் பிரான்சிஸ்கன் துறவிகள் தாழ்ச்சியை கடைபிடிப்பதற்காகத் தான் யாசகம் செய்கின்ற பணியை புனித அசிசி பிரான்சிஸ் தனது சகோதரர்களுக்கு அறிமுகப் படுத்தினார். நாளெல்லாம் அவர்கள் வயல்வெளிகளிலும் பல்வேறு இடங்களிலும் உழைத்து வந்த உணவை அல்லது பொருளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு, மேலுமாக தங்களுக்கும் மற்றும் இன்னும் ஏழைகளுக்கும் உணவளிப்பதற்கு சகோதரர்கள் யாசகம் செய்யட்டும் என்கின்றார். ஆகவே இது சோம்பேறியாக இருந்து வாழ்வதற்காக அல்ல, மாறாக தங்கள் வாழ்விலே தாழ்ச்சியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் யாசகப் பணியை புனித அசிசியார், சபை சகோதரர்களுக்கு கட்டளை பிறப்பித்தார். அப்பணியை கப்புச்சின் துறவிகள் உலகெங்கும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறிப்பாக நமது தமிழகத்திலே கும்பகோணம் மறைமாவட்டத்தில் அமலாசிரமத்தில் வசிக்கக் கூடிய கப்புச்சின் துறவிகள் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இம்மறைமாவட்டத்தில் உள்ள பல்வேறு பங்குத்தளங்களுக்கு சென்று, யாசகம் செய்து நெல்மணியை பெற்று வருகின்றனர். அவ்வாறு பெறப்பட்ட நெல்மணியைத் தான் தங்கள் உணவிற்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தங்களை நாடி வருகின்ற ஏழைகளுக்கும் கொடுத்து உதவி வருகின்றார்கள். இவ்வாறு இன்றுவரை யாசிக்கும்பணி கப்புச்சின் துறவிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.
2012 ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடக்கு தெற்கு என இரு கப்புச்சின் மறைமாநிலங்கள் செயல்படுகின்றன. வடமாநிலம் திருச்சி பேராலய பங்கிலுள்ள ஞானாலயத்தை தலைமையிடமாகக் கொண்டு அமல அன்னை பாதுகாவலிலும், தென்மாநிலம் மதுரை உயர் மறைமாவட்டம் திருமங்கலம் பங்கிலுள்ள அமைதியின் அரசி இல்லத்தை தலைமையிடமாகக் கொண்டு அமைதியின் அரசி பாதுகாவலிலும்
என தமிழகத்தில் இரு மறைமாநிலங்கள் இயங்குகின்றன.
தமிழக அமல அன்னை கப்புச்சின் மறைமாநில (திருச்சி) பணித்தளங்கள் :
1. அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம்
2. ஞானாலயா கப்புச்சின் தலைமையகம், திருச்சி
3. உதயம் கப்புச்சின் சமூகப்பணி மையம், திருச்சி
4. கிளேர்ஸ் கப்புச்சின் சட்ட உதவிமையம், திருச்சி
5. கப்புச்சின் மனநல ஆலோசனை மையம், தில்லைநகர், திருச்சி
6. இயற்கை நலவாழ்வு மையம், சங்கம், பெருகமணி
7. கப்புச்சின் இறையியல் கல்லூரி, பிரான்சிஸ்கோ வெங்ககுடி, திருச்சி
8. புனித மத்தியாஸ் ஆலயம், அசோக்நகர், சென்னை
9. குழந்தை இயேசு இல்லம், வல்லம், செங்கல்பட்டு
10. தந்தை பியோ இல்லம், ஆற்காடு
11. தி பவுண்டன் உளவியல் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணகிரி
12. அல்வேர்னா, ஏற்காடு
13. ஜீவநதி, சேர்ந்தமங்கலம்
14. உதயம் பாலிடெக்னிக் கல்லூரி, தென்குடா, இராமேஸ்வரம்
15. பிரான்சிஸ் ஆசிரமம், தியாகத்துருவம்
16. கப்புச்சின் அருள்வாழ்வு மையம், தளிர், விழுப்புரம்
17. புனித மரியா ஆலயம், கனகம்மாசத்திரம்
18. புனித செபஸ்தியார் ஆலயம், சிவபுரம், கும்பகோணம்
19. புனித சூசையப்பர் ஆலயம், எட்டுகால்பட்டி, கீரனூர்
தமிழக அமைதியின் அரசி கப்புச்சின் மறைமாநில பணித்தளங்கள் (மதுரை):
1. நிர்மலா ஆசிரமம், திருமங்கலம்
2. கப்புச்சின் தலைமையகம், திருமங்கலம்
3. கப்புச்சின் மெய்யியல் கல்லூரி, தி பிரையரி, கோத்தகிரி
4. புனித பாத்திமா அன்னை ஆலயம், சாந்தி ஆசிரமம், கோவை
5. பதுவை ஆசிரமம், புனித யூதா ததேயு திருத்தலம், தூத்துக்குடி
6. அசிசி ஆசிரமம், நாகர்கோவில்
7. புனித அசிசி பிரான்சிஸ் ஆலயம், அருளகம், விக்கிரமசிங்க புரம்
8. போதையினின்று மறுவாழ்வு மையம், புனித பிரான்சிஸ் அன்பகம், ஒக்கூர்
9. புனித அருளப்பர் ஆலயம், கீழமுடி, மன்னார்கோட்டை
10. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அருணோதயா, வண்ணம்பட்டி
11. புனித அசிசி பிரான்சிஸ் ஆலயம், கவியாலயா, ஒக்கூர்
12. அனுகிரஹா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நொச்சியோடைபட்டி, திண்டுக்கல்
13. அனுகிரஹா அருள்வாழ்வு மையம், திண்டுக்கல்
14. RTU (Reaching The Unreached), கெங்குவார்பட்டி.
15. மெர்சி ஹோம், தெற்கு கருங்குளம்
16. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தேமானூர்
17. மேனான் பாறை, பாலக்காடு
இறைஊழியர் ஜான்பீட்டர்:
இளங்குரு அருள்தந்தை. ஜான்பீட்டர் சவரிநாயகம் (1941-1979) தன் புனித வாழ்வால் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளார். ஏழ்மை, எளிமை, எதார்த்தம் இவரது வாழ்வை அழகுப்படுத்திய பண்புகள். கனிவு உள்ளம் கொண்டவராக, கரிசனை மிகுந்தவராக, இரக்கமிகு அருள்பணியாளராக அடையாளப்படுத்தப் படுகிறார். புற்றுநோய் என்னும் கொடிய சிலுவை அவரை வாட்டியப்போதும், புன்னகை பூத்த முகத்துடன் உமது திருவுளம் நிறைவேறட்டும் என அமைதியாக சிலுவை நாயகனின் வழிநடந்தார். அவரின் தாழ்ச்சி நிறை வாழ்வு ஒவ்வொரு துறவிக்கும் பாடமாக அமைகிறது. துன்பங்களைக் கண்டு அச்சமடையாமல், வெறுத்து ஒதுக்காமல் புன்முறுவலுடன், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டது இயேசுவின் உண்மையான சீடத்துவ வாழ்வுக்கு சாட்சியாக அமைகிறது. மறைச்சாட்சிக்குரிய துணிச்சலான வாழ்வு தந்தையிடம் வெளிப்பட்டது. கொடிய புற்றுநோய் தந்தையின் பொறுமைக்கு முன்னால் தோற்றுப்போய் வெட்கி தலைகுனிந்தது உண்மை. இறப்பைக் கண்டு அஞ்சாமல் விண்ணக பிறப்பிற்காக காத்திருந்ததும் ஆச்சரியம். சிலுவை, துன்பம், வேதனைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றோடு இணைந்து வாழ்க்கையில் பயணிப்பது எவ்வாறு என்று நமக்கு கற்றுத் தருகிறார். திருப்பலி, திவ்யநற்கருணை, திருச்சிலுவைப்பாதை, திருச்செபமாலை, தியானம் போன்றவை தந்தைக்கு அத்தகைய துணிச்சலை தந்தன என்பதை அவரின் வாழ்க்கையின் வரிகள் விவரிக்கின்றன. நோயும், வேதனையும் தான் இவரது வாழ்க்கை. ஆனால் அவற்றை எவ்வாறு வென்றெடுக்கலாம் என்பதற்கு தந்தையின் வாழ்க்கை வரலாறு நமக்கு அருமருந்தாக அமைகிறது.
இந்தியாவில் பணியாற்றிய புகழ்பெற்ற கப்புச்சின் சபை துறவிகள் (Missionaries):
சூரத்:
அருள்தந்தை. ஜெனோ தெ போஜே,
அருள்தந்தை. அம்புரோஸ் தெ பெருலி
சென்னை:
அருள்தந்தை. எப்ரேம் தெ நெவேர்,
அருள்தந்தை. தாமஸ் தெ போத்தியே,
அருள்தந்தை. செவிரினி தெ சாவாய்
புதுச்சேரி:
அருள்தந்தை. கோஸ்மாஸ் தெ ஜீயன், 💐அருள்தந்தை. பிரான்சிஸ் மேரி தெ தூர்,
அருள்தந்தை. சிபிரிட் தெ தூர்
பாட்னா:
அருள்தந்தை. பெலிக்ஸ் மோன்தெஜ்ஜியோ,
அருள்தந்தை. ஜோசப் ரோவார்தோ மற்றும்
ஆயர் வணக்கத்துக்குரிய அனஸ்தாசியுஸ் ஹார்ட்மேன்
பெட்டையா:
அருள்தந்தை. ஜோசப் மேரி பெரினி
ஆக்ரா:
ஆயர் மரிய ஜெனோபியோ பெனூச்சி
அலகாபாத்:
அருள்தந்தை. பெலிக்ஸ் தெ துரின் மற்றும்
ஆயர் வணக்கத்துக்குரிய அனஸ்தாசியுஸ் ஹார்ட்மேன்
அருள்தந்தை. லானர்வள்ளி அர்பன் (அமல ஆசிரமம், திருச்சி)
லாகூர்:
ஆயர் ஜோசப் ஆன்டனி போர்ஹி,
அருள்தந்தை. பிரான்சிஸ் தெ புனித எத்தியன்
அஜ்மீர்:
அருள்தந்தை. பெர்நாந்து தெ டாங்கல், 🍎அருள்தந்தை. இஞ்ஞாசி பெவிரியே,
ஆயர் இறைஊழியர் போர்ச்சுனாத்தூஸ் ஹென்றி,
அருள்தந்தை. கௌமோன் தெ தூர்
டெல்லி:
அருள்தந்தை. ஜாக்ரி தெ பெரப்பி,
பேராயர் சில்வெஸ்டர் பாட்ரிக் முல்லிங்கன்
அருள்தந்தை. பயஸ் பிஸ்துவாயா (போபால்)
லக்னோ:
அருள்தந்தை. பாட்ரிக் ஃபேர்ஹஸ்த்,
ஆயர் கோன்ராட் தெ வீதோ
ஆயர் ஜோசப் பர்தலோமியோ இவான்சலிஸ்ட் (மீரட்)
புனிதர் நிலையில் உள்ள கப்புச்சின் சபை துறவிகள் (இந்தியா)
1. ஆயர் வணக்கத்துக்குரிய அனஸ்தாசியுஸ் ஹார்ட்மேன் (1803-1866)
2. ஆயர் இறைஊழியர். போர்ச்சுனாத்தூஸ் ஹென்றி (1871-1930)
3. இறைஊழியர். சார்லஸ் தெ மோமெர்
4. இறைஊழியர். தியோபின் (1913-1968), பொன்னூரணி, எர்ணாகுளம், கேரளா
5. இறைஊழியர். ஜான்பீட்டர் (1941-1979), அமல ஆசிரமம், திருச்சி
6. இறைஊழியர். ஆல்ஃபிரட் (1924-1996), மங்களூர், கர்நாடகா
7. இறைஊழியர். அர்மான்ட் (1930-2001), நடவயல், கேரளா
கப்புச்சின் சபையுடன் தொடர்புடைய பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் (3-ம் சபை):
1. இறைஊழியர். ஜோசப் தம்பி, (1883-1945) பெத்தவுட்டப்பள்ளி, விஜயவாடா, ஆந்திரா
2. இறைஊழியர். பரதேசி பீட்டர் (1895-1958), பாளையங்கோட்டை
3. இறைஊழியர். தோமச்சன் புத்தன்பறம்பில், (1896-1968), எடத்துவா, ஆலப்பி, கேரளா
கப்புச்சின் துறவற பயிற்சி:
விருப்பநிலை: ஓர் ஆண்டு
புகுமுகு நவதுறவு: ஓர் ஆண்டு
நவதுறவு: ஓர் ஆண்டு
மெய்யியல் பட்டயப் படிப்பு: மூன்று ஆண்டுகள்
களப்பணி: ஓர் ஆண்டு
இறையியல் பட்டயப் படிப்பு: மூன்றரை ஆண்டுகள்
திருத்தொண்டர்: களப்பணி
குருத்துவ அருள்பொழிவு:
புனித அசிசி பிரான்சிஸ்குவின் வழியில்: நீயும் ஒரு கப்புச்சின் துறவியாக மாறி இயேசு ஆண்டவருக்கு சான்று பகர விருப்பமா......!
"உங்கள் உதடுகள் மட்டுமல்ல உள்ளமும் சேர்ந்தே அமைதியை அறிவிக்கட்டும்"
"உங்களுக்கு தேவையானதை செய்யுங்கள், பின்பு இயன்றதை செய்யுங்கள், அதன்பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்! உங்களால் இயலாததையும் நீங்கள் செய்து கொண்டிருப்பீர்கள்" -புனித அசிசி பிரான்சிஸ்
தொகுத்தவர்: அருள்தந்தை. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை (திருஅவை வரலாற்றுப் பேராசிரியர்) Mob: 9751990282