232 புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம், சானல்கரை


புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம்

இடம் : சானல்கரை, சிற்றார் Dam 2

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

பங்குத்தந்தை : அருட்பணி V. வின்சோ ஆன்றனி

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை

குடும்பங்கள் : 22
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 11.00 மணிக்கு

திருவிழா : மே மாதத்தில் மூன்று நாட்கள்.

சிற்றார் அணை பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றிலும் மரங்கள் நிறைந்த அமைதியான இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இயற்கை இரசித்துக் கொண்டே ஆலய தரிசனம் செல்ல விரும்புபவர்கள் இவ்வாலயம் செல்லலாம்.

தற்போது இவ்வாலயத்தின் வளர்ச்சிக்காக பங்குத்தந்தை அருட்தந்தை V. வின்சோ ஆன்றனி அவர்கள் சிறப்பாக திட்டமிட்டு பங்கு மக்களை வழிநடத்தி வருகிறார்கள்.

இது போன்ற வெளிஉலகிற்கு அதிகம் தெரியாத ஆலயங்களை கண்டடைந்து அவற்றை பதிவு செய்து அனைத்து கத்தோலிக்க இறை மக்களும் அறிந்து கொள்ளச் செய்வதே ஆலயம் அறிவோம் பதிவின் முக்கிய நோக்கம்.

புனித சலேசியார் வரலாறு :

"இறைவன் நமது உடலாகிய கோவில் குடிக்கொள்ள விரும்புகிறார். எனவே நமது உடலைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். குருத்துவ மாண்பே மற்ற உலகப் பதவிகளைவிட மேன்மையானது. இறைவா! எனக்கு ஆன்மாக்களைத் தாரும். மற்றெல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும்” என்ற வரிகளுக்கு வாழ்க்கையால் சான்று பகர்ந்தவரே புனித பிரான்சிஸ் சலேசியார்.

இவர் பிரான்ஸ் நாட்டில் அரசக் குடும்பத்தில் 1567ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21ஆம் நாள் பிறந்தார். பிறப்பாலே அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சி இவைகளுக்குச் சொந்தக்காரர்.

தினந்தோறும் தவறாமல் திருப்பலிக்குச் சென்றார். தனது வாழ் நாட்களில் தூய்மைக்கு எதிரான சிந்தனை, சொல், செயல் ஈடுப்படவில்லை. நாளும் விவியம் வாசித்து வாழ்வாக்கிட முயன்றவர். செபம் தனது வாழ்வின் உயிர்மூச்சாகவே மாற்றினார். அன்னை மரியாளின் பாதத்தில் விழுந்து “அம்மா மாமரியே! நான் நித்திய நரகத்திற்குச் செல்லாமருக்க, இவ்வுலகில் பாவம் செய்யாமல் இறைவனையும், உம்மையும் அதிகமாக அன்பு செய்து தூய்மையுடன் வாழ வேண்டும்” என்று உருக்கமாக மன்றாடினார். குருவானவராகப் பணியாற்ற தனக்கு இறையழைத்தல் இருப்பதை உணர்ந்தார்.

பிரான்சிஸ் இறைவனுக்காகப் பணிசெய்ய தனது உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். “இன்று முதல் இறைவனே எனது மாபெரும் சொத்து. அவரது வார்த்தைகளை வாழ்வாக்கி வழங்கிடச் செல்கிறேன்” என்று கூறினார். குருத்துவப் பயிற்சி பெற்று 1593இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். “குருத்துவ மாண்பே மற்ற உலகப் பதவிகளைவிட மேன்மையானது” என்று கூறினார். இறை நம்பிக்கையில் வளர்ந்த பிரான்சிஸ் தெளிந்த பார்வையோடு இறைபணியைத் தொடங்கினார். தனது பணியை முதல் முறையாகப் பிரிந்து சென்ற கால்வின் சபை உறுப்பினர்களை, மறுபடியும் தாய்த் திருச்சபையில் சேர்த்திட ஆவல் கொண்டார். வீடுகள்தோறும் சென்று மறையுரையாற்றினார். மக்கள் கதவுகளை அடைத்துக் கொண்டார்கள். ஆனால் பிரான்சிஸ், “இறைவனே எனது பாதுகாப்பு, அரண், கோட்டை, தஞ்சம். நான் அவருடைய ஊழியன். அவர்மீது என் முழு நம்பிக்கையை வைக்கின்றேன். நீங்கள் வன்முறையைக் கைவிட்டு, தாய்த் திருச்சபையில் மறுபடியும் இணைய வேண்டும்” என்று கூறி வீறுநடைப் போட்டார். பெரியோர்கள், இவரின் குரலுக்குச் செவிமடுத்து 40,000 பேர் கத்தோக்கத் திருச்சபையில் இணைந்தனர். நம்பிக்கையின் வெளியடையாளமாக மக்கள் மத்தியில் நற்கருணை நாதரைப் பவனியாக அழைத்துச் சென்றார்.

இவர் ஜெனிவா நகரத்தின் ஆயராக 1602இல் திருநிலைப்படுத்தப்பட்டார். மக்களின் உள்ளங்கள் இறையன்பால் பண்பட்டு, ஆன்மீக வளர்ச்சியடைந்து புனிதமான வாழ்க்கை வாழக் கடினமாக உழைத்தார். உலக இன்பங்களைப் புறக்கணித்தார். மக்கள் பாவ வாழ்க்கையிருந்து மனந்திரும்ப ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். “எதற்கும் ஆசைப்படாதே, எதையும் கேட்காதே, எதையும் வேண்டாம் என்று சொல்லாதே. கோபம்வரும் நேரத்தில் வாயைத் திறவாமல் இருப்போம்” என்று கூறி அவ்வாறே வாழ்ந்து காட்டினார். மகிழ்ச்சியான நேரத்தில் சமநிலையோடு இருந்தார். எப்பொழுதும் இறைவனின் துணை நாடினார். கடவுள்மீது என் பார்வையைப் பதித்து நான் எனது வாழ்க்கைப் படகைச் செலுத்துகிறேன். ஏழ்மையிலும் திருப்தியுடன் இருக்கிறேன் என்றுகூறி வாழ்ந்து வந்தார். இயேசுவே உம்மை நான் அன்பு செய்கிறேன். மேலும் “தாழ்ச்சி” என்னும் வார்த்தையைக் கடைசியாக கூறினார். 1622, டிசம்பர் 28 ஆம் நாள் இயற்கை எய்தினார்.