397 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், புஷ்பவனம்


புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம்

இடம் : புஷ்பவனம், 627109

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : வடக்கன்குளம்

நிலை : பங்குத்தளம்
கிளைப் பங்குகள் :
1. புனித லூர்து அன்னை ஆலயம், கலந்தபனை
2. புனித அந்தோனியார் ஆலயம், வேப்பிலான்குளம்

பங்குத்தந்தை அருட்பணி அருள்மணி.

குடும்பங்கள் : 320
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு.

நாள்தோறும் திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

திருவிழா : செப்டம்பர் மாதம் 22 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 1 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
1. Fr. சூசைமணி
2. Fr. பால் ரோமன்

1. Sr. ஜென்சி சலேட்மேரி (SAT)
2. Sr. தெரஸ் ஜெனிகா (SSHJ)
3. Sr. மரிய ஜெபா (Bethl)

வழித்தடம் : பணகுடி - புஷ்பவனம்.
வள்ளியூர் - புஷ்பவனம்.

Location map :

https://g.co/kgs/jkgMDU

புஷ்பவனம் வரலாறு :

சிறுமலர் தெரசாவின் அரவணைப்பில் வாழும் புஷ்பவனம் இறை சமூகத்தின் எழுச்சி மிகு வரலாறு..!

நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் துன்புறுத்தப்பட்டு, வாழ வழியின்றி சிதறி காடுகளிலும், மற்றும் பல இடங்களிலும் குடிபுகுந்தனர். இவர்களில் 47 குடும்பங்கள் கடம்பை மரச் சோலைகள் நிறைந்த பகுதியில் குடியேறி, தங்கள் கடின உழைப்பால் காடுகள் திருத்தப்பட்டு, பாசன வசதிகள் ஏற்படுத்தி பயிரிட்டு இவ்வூருக்கு 'கடம்பன்குளம்' எனப் பெயரிட்டு வாழ்ந்து வந்தனர்.

சேரநாட்டு ஆட்சி, கடம்பன்குளத்திற்கு கிழக்கே கோட்டை கருங்குளம் வரை பரவியிருந்தது. இருந்தும் கடம்பன்குளத்தில் வாழ்ந்த மக்கள் கப்பம் (வரி) ஏதும் கட்டாமல் தனித்து சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் வேட்டை, மருத்துவம், விளையாட்டு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினர்.

வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஆங்கிலேயர் குமரி வரை தீர்வை (வரி) வசூலித்தனர். வரி செலுத்துபவர்களுக்கே நிலப்பட்டா கொடுத்தனர். இவ்வேளையில் வீரம் நிறைந்த கடம்பன் குளத்து மக்கள், இது நாங்கள் உழைத்து வளமாக்கிய இடம். ஆகவே வரி கட்டமாட்டோம் என வீரத்துடன் பேசினார்கள்.

ஆனால் வீரம் நிறைந்த அளவிற்கு இவர்கள் படிப்பறிவு இல்லாதிருந்தனர். இதனை பயன்படுத்தி இவர்களது நிலத்திற்கு திருவாடுதுறை ஆதீனம் வரி செலுத்தி வந்தது. இதனால் ஆங்கிலேயர், ஆதீனத்திற்கு பட்டா வழங்கி விட்டனர் என்பதை இம்மக்கள் அறியாமல் இருந்தார்கள்.

நாளடைவில் ஆதீனத்தினர் தங்கள் அதிகாரத்தை இம் மக்களிடம் செலுத்திய போது தான் இவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளதை உணர்ந்தனர். ஆனாலும் வீரம் நிறைந்த இவர்கள் இது எங்கள் பாட்டன் சொத்து...! நாங்கள் ஒருவருக்கும் அடிபணிய மாட்டோம் என்று கூறிய போதும், ஆதிக்க வர்க்கத்தினரின் படைபலம், பணபலத்திற்கு முன்னால் இவர்களது வீரம் ஒன்றுமில்லாமற் போனது. இவ்வாறு பல்வேறு துன்புறுத்தல்களால் அவதியுற்ற மக்கள் வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை கௌசானல் அடிகளின் உதவியை நாடினர். அருட்தந்தையும் இவர்களுக்கு உதவுவதாக உறுதியளிக்க...! 40 குடும்பத்தினர் கிறிஸ்தவம் தழுவினர். இவர்கள் புனித மிக்கேல் அதிதூதருக்கு ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வாழ்ந்து வந்தனர்.

ஆனால் இவ்வாலயமும் இவர்களது மகிழ்ச்சியும் நெடுநாள் நீடித்திருக்கவில்லை. ஆலயம் தரைமட்டமானது. அருட்தந்தை கௌசானல் அவர்கள் இம்மக்களை ஆறுதல்படுத்தி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

பூக்கள் நிறைந்த பெரிய வனமாக இருந்த இப்பகுதியை, அப்போது வடக்கன்குளம் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை இஞ்ஞாசியார் அடிகளாரின் ஒத்துழைப்புடன் வாங்கி, அதனை சமன்படுத்தி, பூக்கள் நிறைந்த ஊர் ஆதலால் புஷ்பவனம் எனப் பெயரிட்டு குடியமர்த்தினார். அப்போது (1925-ம் ஆண்டு) 18 குடும்பங்கள் தான் இங்கே குடியேறின.

வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை இஞ்ஞாசியார் அடிகள் 1925ம் ஆண்டு இங்கு ஒரு ஆலயம் அமைத்துக் கொடுத்தார். இவ்வாண்டு முதல் புஷ்பவனம் ஆலயம் வடக்கன்குளம் ஆலயத்தின் கிளைப்பங்காக ஆனது.

1928 ம் ஆண்டு புஷ்பவனத்திற்கு அருகாமையில் உள்ள வேப்பிலாங்குளத்தில் இருந்து 9 குடும்பத்தினரும், 1930 -ம் ஆண்டு தண்டையார்குளத்தில் இருந்து 5 குடும்பங்களும் வந்து சேர 32 குடும்பங்களுடன் வாழ்ந்து வந்தனர்.

1929 ம் ஆண்டு அருட்தந்தை இஞ்ஞாசி அடிகள் சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தின் உதவியுடன், புஷ்பவனம் மக்களின் உழைப்பாலும் புதிய ஆலயம் கட்டினார். இவ்வேளையில் புனித குழந்தை தெரசாளின் உடன்பிறந்த சகோதரி செலினா அவர்கள், புனித குழந்தை தெரசாளின் 2 சுரூபங்களை பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அதில் ஒன்று புஷ்பவனம் ஆலயத்தில் நிறுவப்பட்டு, ரோஜாமலர்மாரி பொழியும் புனித குழந்தை தெரசாள் ஆலயமாக விளங்கியது.

1935 ம் ஆண்டு புஷ்பவனம், வடக்கன்குளம் பங்கில் இருந்து மாற்றப்பட்டு, பணகுடி பங்கின் கிளைப் பங்காக ஆனது.

1938 ம் ஆண்டு ஒரே கல்லால் ஆன 35 அடி உயரமும் 6 அடி சுற்றளவும் கொண்ட கொடிமரம் வைக்கப்பட்டது தனிச் சிறப்பு.

1974 ம் ஆண்டு புனித குழந்தை தெரசாள் நூற்றாண்டு விழா மேதகு ஆயர் அம்புறோஸ் அவர்கள் தலைமையில் கொண்டாடப் பட்டது. இவ்வாண்டில் பரலோக மாதா கெபி கட்டப்பட்டது.

17-05-2003 அன்று புஷ்பவனம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப் பட்டார்.

அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் பணிக்காலத்தில் பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நிதியுதவியுடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு 30-12-2006 அன்று மேதகு ஆயர் யுவான் அம்புறோஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தனிப்பங்கான பின்னர் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :

1. Fr. நெல்சன் பால்ராஜ் (2003-2008)
2. Fr. V விக்டர் சாலமோன் (2008-2009)
3. Fr. தேவசகாயம் (2009-2010)
4. Fr. ஜேசுதாஸ் (2010-2011)
5. Fr. ரெக்ஸ் லூமின் (2011- 2012)
6. Fr. பர்ணபாஸ் (2012-2015)
7. Fr. மரிய அரசு (2016)
8. Fr. அருள்மணி (2016-till date)

தற்போது பங்குத்தந்தை அருட்பணி அருள்மணி அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி அருள்மணி மற்றும் அருட்பணிப்பேரவை து. தலைவர் திரு. புஷ்பராஜ்.