482 குழந்தை இயேசு ஆலயம், கொல்லிமலை


குழந்தை இயேசு ஆலயம்

இடம் : செம்மேடு, கொல்லிமலை

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோளக்காடு

பங்குத்தந்தை : அருட்பணி. டோனி ஆண்டனி MSFS Contact no : 8524876990

குடும்பங்கள் : 18
அன்பியம் : 1

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு : காலை 08.00 மணிக்கு திருப்பலி

திங்கள், செவ்வாய், புதன் : மாலை 06.30 மணிக்கு வாசலூர்பட்டி இல்லத்தில் திருப்பலி

வியாழன், வெள்ளி, சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : மே மாதத்தில் குழந்தை இயேசு திருவிழா நடைபெறும்.

வழித்தடம் : நாமக்கல்லில் இருந்து காலப்பநாயக்கன்பட்டி வழியாக மலை அடிவாரத்திலிருந்து 18கி.மீ தூரத்தில் மலைமீது செம்மேட்டில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map : https://maps.app.goo.gl/HY6s7mytxtGMmhwN9

வரலாறு :

"மூலிகைகளின் இராணி" என்றழைக்கப்படும் கொல்லிமலை -யின் சிகரத்தில் செம்மேடு எனப்படும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் வரலாற்றைக் காண்போம்.

சேலத்துக்கு கிழக்கே இராசிபுரம், நாமக்கல் தாலுக்காக்களை பிரிக்கும் கொல்லிமலை தமிழ்நாட்டின் 12 மலைநாடுகளில் ஒன்றாகும். இங்கு மலை உச்சிகளில் கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். கி.பி 1851 ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மலையில் சுமார் 21,000 கன்னடம் மற்றும் தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 

17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மைசூர், மராட்டியயர்களின் படையெடுப்பின் போது கிறிஸ்தவ மக்கள் இம்மலையில் தஞ்சம் புகுந்தனர். 1949 ஆம் ஆண்டில் அருட்பணி. மெஹே, அருட்பணி. லெரு மற்றும் அருட்பணி. பிரிக்கோ ஆகியோர்  தோளூர்பட்டியிலிருந்து, கோட்டப்பாளையத்திற்கு சென்ற போது அவர்கள் கொல்லிமலையின் தென்கிழக்குப் பகுதியை கடந்து சென்றனர். 

மேலும் அருட்பணி. கிரிமோ அவர்கள் அவ்வப்போது கொல்லிமலைக்கு வந்து நற்செய்தி பணியாற்றினார். அவர் 18.05.1855 இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அருட்பணி. பியர் அவர்கள் கோட்டப்பாளையத்தின் பங்குத்தந்தை ஆனார். 

தொடர்ந்து அருட்பணி. பார்பே மற்றும் அருட்பணி. பிரிக்கோ ஆகியோரின் கண்காணிப்பில் கொல்லிமலை இருந்தது. இருவரும் 1855 ல் கொல்லிமலைக்கு வந்த போது வலப்பூர் பகுதியில் இருந்த புதுக் கிறிஸ்தவர்கள் இருவரின் கண்களில் படாமல் இருந்தனர். பின்னர் அருட்பணி. பிரிக்கோ அவர்கள் மலையாளிகளுடன் நட்புறவு கொண்டு பெரிய கோம்பையில் சிறு குடியிருப்புகளைத் தொடங்கினார். 1856 ஆம் ஆண்டிலேயே மலேரியா காய்ச்சல் வரவே, அவர் கொல்லிமலையை விட்டு வெளியேறினார். 

தொடர்ந்து வலப்பூருக்கு பணியாற்ற வந்த அருட்பணி. பாதனியே அலெக்சாண்டர் மற்றும் அருட்பணி. ரோஜர் யாகப்பநாதர் ஆகியோருக்கும் மலேரியா காய்ச்சல் வந்தது. இதில் அருட்பணி. ரோஜர் அவர்கள் இந்த நோயினால் திருச்சியில் மரணமடைந்தார். 

தொடர்ந்து அருட்பணி. தூரியெ ஜான் அவர்கள் கொல்லிமலைப் பகுதியில் பணியாற்றினார்.  அருட்பணி. தூரியெ ஜான் அவர்களுக்கும் மலேரியா காய்ச்சல் வந்து பாண்டிச்சேரியில் இறந்தார். இதனைத் தொடர்ந்து அருட்பணி. பியர் அவர்கள் 1860 இல் மீண்டும் கொல்லிமலையின் பொறுப்பேற்றார். அவருக்கும் மலேரியா காய்ச்சல் வந்தது.

மூன்று குருக்கள் மலேரியா வந்து மரணமடையவே, மேதகு ஆயர் லவூவென்னான் ஆண்டகை அவர்கள் கொல்லிமலை சென்று பணியாற்ற தடை விதித்தார். இந்தத் தடையை அறியாத கோட்டப்பாளையம் பங்குத்தந்தை கொல்லிமலைக்கு பயணம் வந்து மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக குருக்கள் கொல்லிமலைக்கு பணிபுரிய செல்லவில்லை. 

கி.பி.1999 ம் ஆண்டு கொல்லிமலையில் SMMI சபை அருட்சகோதரிகளுக்கென ஒரு இல்லம் அமைத்து நற்செய்தி அறிவிப்பதன் வாயிலாக கிறிஸ்தவ மக்களுக்கு இறைப்பணி செய்து வந்தனர்.

2002 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சலேசிய வேதபோதகச் சபையினர் கொல்லிமலையில் மறைப்பணியாற்ற விரும்பி வந்தனர். கொல்லிமலையில் வாழ்ந்த 104 கத்தோலிக்கர்களைக் கொண்டு 2004 ஆம் ஆண்டில் செம்மேடு குழந்தை இயேசு ஆலயம் தனிப் பங்காக உருவானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. டோனி ஆன்டனி MSFS அவர்கள் பொறுப்பேற்று, இங்கு  கூடாரத்தாலான (shed) ஒரு ஆலயம் அமைத்து நற்செய்தி அறிவித்து வந்தார். இதனால் இங்கு கிறிஸ்தவம் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது.

பின்னர் கூடார ஆலயத்தை இடித்து, பங்குத்தந்தை அருட்பணி. டோனி ஆண்டனி MSFS அவர்களின் முயற்சியாலும், பங்குமக்களின் நன்கொடையாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 07.02.2011 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

சேலம் மறைமாவட்டமும், SMMI அருட்சகோதரிகளும், சிறப்பாக, அருட்பணி. டோனி ஆண்டனி அவர்களும் இணைந்து கொல்லிமலையில் ஏழை எளிய மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்தனர்.

இவ்வாலயத்தில் கி.பி 2004 -மாவது ஆண்டு முதல் அருட்பணி. டோனி ஆண்டனி, MSFS அவர்கள் பொறுப்பேற்று, கடந்த 14 வருடங்களாக (இடையிடையே சில ஆண்டுகள் MSFS சபை குருக்கள் இங்கு பணியாற்றினார்கள்) இம்மக்களுக்காக சிறப்பாக இறைப்பணியாற்றி, வருவது குறிப்பிடத்தக்கது. 

"உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்". 
-திருப்பாடல்கள் 68:10

ஆதரவற்றோர் இல்லம்:

கொல்லிமலையில் ஆதரவற்றோர், ஏழைக்குழந்தைகள் ஆகியோருக்கு இல்லம் அமைத்து இலவச கல்வி, இலவச உணவு, என அனைத்து அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டு சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தங்களுக்குத் தெரிந்த ஆதரவற்ற அல்லது தங்களின் பிள்ளைகளை காப்பாற்ற இயலாத நிலையில் இருப்பவர்கள் இருந்தால் ஆசிரமத்தில் (இல்லம்) சேர்க்க விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு : அருட்பணி. டோனி ஆண்டனி MSFS : 8524876990

கொல்லிமலைக்கு வரும் அனைத்து இறைமக்களின் வேண்டுதல் தீர்க்கும் (குறிப்பாக, குழந்தை வரம்) அற்புத குழந்தை இயேசுவிடம் வாருங்கள்!!! இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்!!!

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. டோனி ஆண்டனி MSFS அவர்கள்.