531 புனித மரிய மதலேனாள் ஆலயம், பட்லூர்

  

புனித மரிய மதலேனாள் ஆலயம்

இடம் : பட்லூர்

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : குழந்தை இயேசு ஆலயம், யாமப்பள்ளி

பங்குத்தந்தை : அருட்பணி. பிரான்சிஸ் சேவியர், OdeM

குடும்பங்கள் : 52
அன்பியங்கள் : 2

திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 09.30 மணிக்கு திருப்பலி

திங்கள் முதல் சனி வரை : மாலை 07.00 மணிக்கு திருப்பலி

சனி : மாலை 07.00 மணிக்கு திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆராதனை.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் புனித மரிய மதலேனாள் ஆலயத் திருவிழா.

மண்ணின் இறையழைத்தல் :
அருட்சகோதரி. மேரி.

வழித்தடம் : திருச்செங்கோட்டிலிருந்து கொக்கராயன்பேட்டை வழியாக 25கி.மீ தொலைவில் பட்லூர் புனித மரிய மதலேனாள் ஆலயம் உள்ளது.

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி நதிக்கரையில் தென்னந்தோப்புகள், வாழைத்தோப்பு, நெல்வயல்கள், கரும்புத்தோட்டம் என எங்கும் செழுமையும் அழகும் சூழ்ந்த பகுதி தான் பட்லூர் கிராமம். இங்கு அமைந்துள்ள ஆலயம் முதன் முதலில் பெருங்குறிச்சி பங்கின் கிளைப் பங்காக இருந்தது.

அப்போதைய சிறிய ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததால் அருட்தந்தை. மரியோ ரொடீசினி அவர்களால், சேலம் மறைமாவட்டத்தில் எங்கும் இல்லாத வகையில் அழகான வட்ட வடிவிலான ஆலயம் கட்டப்பட்டு 14.05.2005 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

பின்னர் இவ்வாலயம் சோழசிராமணி பங்கின், கிளைப்பங்காக மாற்றப் பட்டது. அப்போது அருட்தந்தை. மரியோ ரொடீசினி அவர்கள் ஞாயிறு தோறும் தவறாமல் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

பட்லூர் கிராமம் என்பதால், கிடைக்கப்பெறாத பல சலுகைகள் இப்பகுதிக்கு அருட்தந்தை. மரியோ ரொடீசினி அவர்களின் முயற்சியால் கிடைத்தன. குறிப்பாக மேற்படிப்பு, மருத்துவவசதி, மறைக்கல்வி என பல்வேறு உதவிகள் மக்களுக்கு கிடைத்தது.

2012 ஆம் ஆண்டு இரக்கத்தின் அன்னை சபை (OdeM) குருக்கள் பட்லூர் பங்கிற்கு வருகை புரிந்ததின் காரணமாக, அதிக அளவில் ஆன்மீகத்திலும், விசுவாசத்திலும் வளர்ந்தது. அப்போது அருட்பணி. சிறில் அவர்களுக்கு உதவியாக, அருட்பணி. ஷாஜி, அருட்பணி. விக்டர் ஆகியோர் இருந்து சிறப்பாக பணியாற்றினர்.

இரக்கத்தின் அன்னை சபை குருக்கள் முயற்சியால், நீண்ட காலமாக கிளைப்பங்காக இருந்த பட்லூர் 27.12.2015 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களின் தலைமையில் தனிப் பங்காக உயர்த்தப் பட்டதுடன், முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தை. பிலவேந்திரன் (OdeM) அவர்களின் முயற்சியால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இதே நாளில் ஆயர் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. பிலவேந்திரன் அவர்களுடன் அருட்பணி. விக்டர், அருட்பணி. நசரத் ஆகியோர் உதவியாக இருந்து வந்தனர்.

தனிப் பங்காக ஆனதிலிருந்து இன்றுவரை, பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது பட்லூர் இறைசமூகம்.

பங்கில் உள்ள பக்தசபைகள் :
*வின்சென்ட் தே பவுல் சபை
*பங்கு நிர்வாகக்குழு
*இளையோர் குழு
*மறைக்கல்வி மன்றம்
*பீடச்சிறார்கள் குழு
*பாடகற்குழு.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்தந்தை. பிலவேந்திரன், OdeM (2014-2018)
2. அருட்தந்தை. ஆரோக்கியதாஸ், OdeM (2018-2019)
3. அருட்தந்தை. பிரான்சிஸ் சேவியர், OdeM (2020 ஏப்ரல் முதல் தற்போது வரை)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் OdeM அவர்கள்.