461 புனித சவேரியார் மலங்கரை தேவாலயம், பாலவிளை


புனித சவேரியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்

இடம் : பாலவிளை, பாலவிளை அஞ்சல் 629160.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்
மறை வட்டம் : கொல்லங்கோடு

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்தந்தை அலெக்ஸ் குமார் அடிகள்.

குடும்பங்கள் : 280
அருள் வாழ்வியங்கள் : 9

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

செவ்வாய் வெள்ளி சனி காலை 06.00 மணிக்கு திருப்பலி.

புதன் மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 01.00 மணிவரை உபவாச ஜெபம்.

முதல் வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நற்கருணை ஆராதனை.

திருவிழா : நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 03 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள். பங்கு பாதுகாவலர் விழா டிசம்பர் 03.

மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருட்தந்தை. பாபுராஜ்
2. அருட்தந்தை. அஜீஸ்குமார்
3. அருட்தந்தை. ஸ்டீபன்
4. அருட்சகோதரி. ஸ்டெபின் றோஸ் DM
5. Bro. ஜெனிட்டோ
6. Bro. யோவான்

வழித்தடம் : களியக்காவிளை -நடைக்காவு (அல்லது சூழால்) -காட்டுக்கடை.

பேருந்து எண் : 82A, 82B, 82M, 82J.

Church facebook : https://www.facebook.com/st.xaviers.msc.church/

Location map :
https://maps.google.com/?cid=8523135939832985998

வரலாறு:

கி.பி 52 ஆம் ஆண்டில் இயேசுவின் சீடரான புனித தோமையார் நற்செய்தியை அறிவிப்பதற்காக இந்தியா வந்தார். கேரளாவில் அவர் உருவாக்கிய கிறிஸ்தவ சமூகம் ஒரு உள்நாட்டு சபையாக வளர்ந்து பரவியது.

15 ஆம் நூற்றாண்டில் கேரளா வந்த போர்த்துக்கீசியர் இலத்தீன் வழிபாட்டு முறைகளையும், சடங்கு முறைகளையும் கிறிஸ்தவர்களிடையே புகுத்த முயன்றனர். இதன் விளைவாக கேரள கிறிஸ்தவர்களிடையே பிரிவினை உருவானது. ஒருபகுதி மக்கள் கத்தோலிக்க திருச்சபையின் ஒன்றிப்பிலிருந்து வேறுபட்டு நின்றனர்.

இவ்வாறு வேறுபட்டு நின்ற சமூகத்தின் ஒரு பகுதியினர் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 -ம் தேதி மேதகு பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகையின் தலைமையில் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்பை ஏற்படுத்திய நிகழ்வை மறு ஒன்றிப்பு என்கிறோம்.

இறை ஊழியர் மார் இவானியோஸ் ஆண்டகையின் பணிக்காலத்தில் ஏராளமான ஆலயங்களும், பள்ளிக்கூடங்களும் நிறுவப் பட்டன. மேலும் இறை ஊழியர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள் கிராத்தூர் -இல் வந்து மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு 1946 இல் பாலவிளையில் புல்லுவிளை புதுவல் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த திரு. மிக்காயேல், திரு. சின்னன், திரு. கொச்சு நாடார், திரு. கொச்சுபிள்ளை, திரு. பப்பு, திரு. பொடியப்பி, திரு. கொச்சுமணி, திரு. அனந்தபப்பு, திரு. இராமையான் நாடார், பானு, ஆபிரகாம் மற்றும் பெரியவர்களின் அரும் முயற்சியால் மலங்கரை கத்தோலிக்க ஆலயம் பாலவிளையில் உருவானது.

பாலவிளையானது இயற்கை வளம் சூழ்ந்த அழகிய பகுதியாகும். இப்பகுதியில் இன்று அருள் வரங்களை அள்ளித் தருகின்ற புனித சவேரியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயத்தின் வரலாற்றைக் காண்போம்.

இரண்டாம் பவுலடியார் என அன்போடு அழைக்கப்படும் பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் உள்ள சேவியர் கோட்டையில் 1507 இம் ஆண்டு ஏப்ரல் 07 ம் நாளில் பிறந்தார். இவர் பாரிஸ் நகரில் இருந்த பார்பரா பல்கலைக் கழகத்தில் மெய்யியல் பயின்று வந்த போது இவரது அறையில் வசித்து வந்த இஞ்ஞாசியார், "மனிதர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன" - மத்தேயு 16:26 என்று அடிக்கடி சொல்லி வந்தார். தொடக்கத்தில் இவ்வார்த்தையை கண்டு கொள்ளாமல் இருந்த சவேரியார் பின்னர் அதனை ஆழமாக சிந்தித்து, உலக வாழ்வின் நிலையா தன்மையை உணர்ந்து கொண்டு ஆண்டவருக்கு பணிசெய்ய தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.

இதனால் 1541 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ம் நாளில் இந்தியாவை நோக்கி தம்முடைய பயணத்தைத் துவங்கி 1542 மே மாதம் 06 ஆம் நாளில் கோவா வந்தடைந்தார். அதன் பிறகு நற்செய்திப் பணியை இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் தமது வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்து 1552 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ம் நாளில் மண்ணுலக வாழ்வை துறந்தார். இந்த புனிதரையே பாலவிளை ஆலயம் தமது பாதுகாவலராகக் கொண்டுள்ளது.

ஆலய தொடக்கம் :

முதன் முதலாக தற்போது அமைந்திருக்கும் முதியோர் இல்லத்திற்கு எதிரே சாலையில் மேற்குப் பக்கம் அமைந்துள்ள ஓலைக்குடிசையில் திருப்பலி நடத்தப்பட்டு வந்தது.

ஒருசில வருடங்களுக்கு பிறகு தற்போது மாதா குருசடி பக்கத்தில் திரு. மிக்காயேல் அவர்கள் நன்கொடையாக வழங்கிய 16 சென்ட் நிலத்தில் ஆலயம் கட்டப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

இவ்வாலய வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர் அருட்தந்தை தாமஸ் பணிக்கர் ஆவார். அருட்தந்தையின் முயற்சியால் முதலில், புல்லுவிளையில் 50 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஒரு ஏக்கர் 99 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டு, பெரிய ஆலயம் கட்டும் பணியானது துவக்கப்பட்டது. புதிய ஆலயப் பணிகள் நிறைவு பெற்று அப்போதைய திருவனந்தபுரம் மறை மாநிலத்தின் இரண்டாவது பேராயராக இருந்த பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை அவர்கள் 27.12.1964 அன்று அர்ச்சிப்பு செய்தார். பேராயர் அவர்களும் அருட்தந்தை தாமஸ் பணிக்கர் அவர்களும் மக்களின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்ததனால் பாலவிளை பங்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது.

அருட்தந்தை தோமஸ் பணிக்கர் அவர்களும், அருட்சகோதரிகளும் வீடு வீடாகச் சென்று மக்களின் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து, இறை இயேசுவை சொந்த இரட்சகராக மக்கள் ஏற்றுக் கொள்ள செய்தார்கள்.

அந்த காலத்தில் அருட்தந்தை தோமஸ் பணிக்கர் அவர்கள் SSLC வெற்றி பெற்று, மேற்படிப்பு படிக்க இயலாமல் ஏழ்மை நிலையில் இருந்த மாணவ மாணவியர்களை கேரளாவில் ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்ததுடன், படிப்பு முடிந்தவுடன் அவர்களை இங்கே உள்ள பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக வேலைக்கு அமர்த்தி அந்த குடும்பங்களின் ஏழ்மை நிலை மாற உதவினார்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்தந்தை ஜேம்ஸ் DFM
2. அருட்தந்தை பிரடெரிக் ஜோஸ் DFM
3. அருட்தந்தை அக்கிலோஸ்
4. அருட்தந்தை ஜோஸ்
5. அருட்தந்தை ஜஸ்டின்
6. அருட்தந்தை எல்மார்க்
7. அருட்தந்தை அவுதியோஸ்
8. அருட்தந்தை லீன்ஸ்
9. அருட்தந்தை ரெய்மண்ட் DFM
10. அருட்தந்தை தோமஸ் பணிக்கர்
11. அருட்தந்தை தோமஸ் எழியத்
12. அருட்தந்தை தோமஸ்
13. அருட்தந்தை கீவர்க்கீஸ் மண்ணிக்கரோட்
14. அருட்தந்தை லாரன்ஸ் (மார்த்தாண்டம் மறை மாவட்ட முதல் ஆயராக பின்னர் திருநிலைப்படுத்தப் பட்டார்)
15. அருட்தந்தை ஜோசப் புத்தன்குளம்
16. அருட்தந்தை ஜோண் தாழையில்
17. அருட்தந்தை ஜோண் C. புத்தன்வீடு
18. அருட்தந்தை அகஸ்டின் விரிப்பேல்
19. அருட்தந்தை ஜேக்கப் கிழக்கேடத்து
20. அருட்தந்தை பிலிப் தயானந்த்
21. அருட்தந்தை மரிய பிரான்சிஸ்
22. அருட்தந்தை G. வர்க்கீஸ்
23. அருட்தந்தை ஸ்கரியா கொச்சுமுருப்பேல்
24. அருட்தந்தை ஜோசப் சுந்தரம்
25. அருட்தந்தை தோமஸ் காவுவிளை (ஸண்ணி மேத்யூ)
26. அருட்தந்தை மரிய அற்புதம்
27. அருட்தந்தை றாபின்சன்
28. அருட்தந்தை இயேசுதாஸ்
29. அருட்தந்தை ஜாண். S
30. அருட்தந்தை S. அலெக்ஸ் குமார்.

பங்கில் பணியாற்றிய அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி மோனிக்கா
2. அருட்சகோதரி யூப்றசீனா
3. அருட்சகோதரி அகஸ்டீனா
4. அருட்சகோதரி ஜூலியா
5. அருட்சகோதரி லூசியா
6. அருட்சகோதரி டெல்மா
7. அருட்சகோதரி ஹைசிந்த்
8. அருட்சகோதரி மேழ்சி
9. அருட்சகோதரி அல்போன்சா மரியா
10. அருட்சகோதரி ஜெயா
11. அருட்சகோதரி பெனவஞ்சர்
12. அருட்சகோதரி பொனிபாசி
13. அருட்சகோதரி ப்ரோமியா
14. அருட்சகோதரி நிர்மலா
15. அருட்சகோதரி தேஜஸ்மரியா
16. அருட்சகோதரி ஏஞ்சல்
17. அருட்சகோதரி கபரினாள்
18. அருட்சகோதரி ஜெபா
19. அருட்சகோதரி மிலேடி
20. அருட்சகோதரி புஷ்பா
21. அருட்சகோதரி லிற்றில் ஜோதி
22. அருட்சகோதரி மினி
23. அருட்சகோதரி ஷோபா
24. அருட்சகோதரி அனிதா
25. அருட்சகோதரி தெரசா
26. அருட்சகோதரி சோனியா
27. அருட்சகோதரி சோபியா
28. அருட்சகோதரி அனிலா
29. அருட்சகோதரி லூசியா.

பங்கில் பணியாற்றிய வேதியர்கள் :
1. திரு. சாலமன்
2. திரு. செல்வன்
3. திரு. தாவீது
4. திரு. ஜோசப்
5. திரு. சார்லஸ்
6. திருமதி. எமிலி
7. திரு. பிரான்சிஸ் சேவியர்
8. திரு. சத்தியநேசன்
9. திரு. இவான்ஸ்
10. திரு. ஜாண்.

ஆயர்களின் பங்களிப்பு :

பாலவிளை பங்கின் வளர்ச்சியில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர்களின் பங்கு முக்கியமானது. திருவனந்தபுரம் மறை மாநிலத்தின் துணை ஆயரும், மார்த்தாண்டம் மறை மாவட்டம் உதயமான போது அதன் முதல் ஆயராக இருந்த லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகை அவர்கள் பாலவிளை பங்கின் ஆன்மீக வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கினார்.

அதன் பிறகு மார்த்தாண்டம் மறை மாவட்ட இரண்டாவது ஆயராக பணியாற்றிய ஆயர் யூகானோன் மார் கிறிஸோஸ்டோம் ஆண்டகை காலத்தில் இரண்டு ஏக்கர் 12 சென்ட் நிலம் பாலவிளை பங்கிற்கு வாங்கப் பட்டது. மேலும் அருட்தந்தையர் தங்கும் இல்லமும் கட்டப் பட்டது.

தற்போது ஆயராக பணியாற்றி வரும் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை அவர்கள் மார்த்தாண்டம் மறை மாவட்டத்தையும், பாலவிளை பங்கையும் சீரோடும் சிறப்போடும் வழிநடத்தி வருகிறார்கள். மேலும் ஆயரின் ஒத்துழைப்புடன் புதிய பள்ளிக்கூடம் கட்டும் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இவ்வாறு பாலவிளை பங்கானது மக்களின் ஆன்மீகம், பொருளாதாரம், கல்வி ஆகிய மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இறை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.

நோயாளிகளுக்கான ஜெபம் :

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி முடிந்தவுடன் நோயாளிகளுக்கு சிறப்பு ஜெபம் நடத்தப்படுகிறது.

நவநாள் ஜெபம் :

1. புனித அந்தோணியார் குருசடி கரும்பனவிளை:

செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணிக்கு.

2. புனித சவேரியார் குருசடி, ஆலய வளாகம், பாலவிளை :

புதன்கிழமை மாலை 07.15 மணிக்கு

3. மாதா குருசடி, பாலவிளை :

சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு.

மறைக்கல்வி மற்றும் பக்த இயக்கங்கள் :

1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. மலங்கரை கத்தோலிக்க இளைஞர் இயக்கம்
4. ஒன்றிப்பின் சிறார் இயக்கம்
5. கோல்பிங் இயக்கம்
6. பாலர் சபை
7. மலங்கரை கத்தோலிக்க இயக்கம்
8. மறைக்கல்வி
9. அருள் வாழ்வியம்
10. தாய்மார் சங்கம்
ஆகியன சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று சிறந்து விளங்கும் பாலவிளை புனித சவேரியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயத்தின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தும் விதமாக மேலும் நல்ல பல இறை விருப்ப திட்டங்களை பங்குத்தந்தையர், பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகின்றனர். சிறந்த இப்பங்கு மென்மேலும் வளர புனித சவேரியார் வழியாக இறைவனிடம் மன்றாடுவோம்...!

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்தந்தை. S. அலெக்ஸ் குமார் அவர்கள்.