திருமலை மாதா புனித லூர்து அன்னை திருத்தலம்
இடம் : திருமலாபுரம்
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை
பங்குத்தந்தை : அருட்பணி S. Aஅந்தோணிசாமி
நிலை : திருத்தலம்
பங்கு : தூய இராயப்பர்- சின்னப்பர் ஆலயம், #சேர்ந்தமரம்
ஞாயிறு திருப்பலி : இல்லை
சனிக்கிழமை காலை 08.45 மணிக்கு திருப்பலி
மாதத்தின் முதல் சனிக்கிழமை : காலை 08.45 மணிக்கு திருப்பலி, திவ்ய நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதம் மற்றும் நண்பகல் 12.00 மணிக்கு திருப்பலி தொடர்ந்து அசனப் பகிர்வு.
திருவிழா : பெப்ரவரி மாதத்தில் பௌர்ணமியைத் தொடர்ந்து வருகின்ற வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 3 நாட்கள்.
திருமலாபுரம் திருத்தல வரலாறு :
1878 முதல் 1917 வரை சேர்ந்தமரத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை இஞ்ஞாசியார் அவர்கள், 1911 -ல் அன்னை மரியாளுக்கு ஊரில் உயரமான இடத்தில் ஆலயம் கட்ட விரும்பினார்.
இதனைக் கேட்ட மக்களும் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தனர். அருட்தந்தை அவர்கள் ஆலயம் அமைக்க புகழ் பெற்ற வீரசிகாமணி அருகே உள்ள மலையை தேர்ந்தெடுத்தார்.
அன்று இரவு அருட்தந்தை தூங்கிக் கொண்டிருந்த போது, அன்னை மரியாள் அருட்தந்தைக்கு காட்சி கொடுத்து வீரசிகாமணி மலைக்கு பதிலாக திருமலாபுரம் திருமலையில் ஆலயம் அமைக்க கூறினார்.
பங்குத்தந்தையோ தயங்கினார். "உயரமான இம்மலையில் எப்படி பொருட்களை கொண்டு போய் சேர்ப்பது..? வறண்ட இம்மலையில் எங்கிருந்து தண்ணீர் எடுப்பது..? "
அன்னை மரியாள் அருட்தந்தையிடம் "நீங்கள் விவிலியம் வாசித்தது இல்லையோ? பாறையை தட்டுங்கள் நீரூற்று புறப்படும் என்றார் "
மறுநாள் காலையில் இறைமக்களோடு மலைக்கு வந்து சேர்ந்தார். அன்னை காட்சியில் காண்பித்த இடத்தில் சிலுவை அடையாளமிட்டு, ஆலயம் இங்குதான் எழுப்பப் பட வேண்டும் என்றார்.
மற்றொரு பாறையை நெருங்கி அருகில் நின்ற பணியாளரிடம் சுட்டிக் காட்டி, இங்கே தோண்டுங்கள் என்றார். இரண்டு கெஜ அடிகள் தோண்டியிருப்பார்கள்...! எல்லோரும் வியக்கும் வண்ணம் பாறையிலிருந்து நீரீற்றுகள் பீறிட்டு வந்தன.
வறண்ட பாறையில் நீரூற்று உருவாகி அன்னையின் அன்பை பறைசாற்றியது. உடனே கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின.
1913 ல் ஆலயம் குன்றின் மேலிட்ட தீபமாய் ஒளிர்ந்தது. இறைமக்கள் முன்னிலையில் பங்குத்தந்தை ஆலயத்தை அர்ச்சித்தார்.
திருத்தலத்தின் தனிச்சிறப்புகள்:
1. அருட்தந்தை இன்னாசியார் கலையரங்கம் :
அருட்தந்தை இன்னாசியாரின் பெயரில் நூற்றாண்டு விழா கலையரங்கம் கட்டப்பட்டு பெருமைப் பட்டது.
2. புனித அல்போன்சாள் இல்லம் :
அருட் சகோதரிகள் தங்குமிடமாக இருந்த இல்லம், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புனித அல்போன்சாள் பெயர் சூட்டப்பட்டு பெருமை படுத்தப்பட்டது
3. புனித அந்தோணியார் அசன வளாகம் :
திருப்பயணிகள் இல்லமாக விளங்குகிற இந்த அசன வளாகத்தில், திருப்பயணிகள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், வேண்டுதல் நிறைவேறவும் அசன உணவு வழங்கி வருகின்றனர்.
4. அன்னையின் அற்புத கெபி :
கல்வாரி மலைகாட்சியின் அடிவாரத்தில் தூய லூர்து அன்னையின் அற்புத கெபியானது அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா அதிகாலை திருப்பலி இங்கு தான் நடைபெறுகிறது. இந்த கெபி 16-031933 ல் கட்டப் பட்டதாகும்.
5. கல்வாரி மலை கெபி :
மலையின் மேற்குப் பகுதி உச்சியில் அனைத்திற்கும் உச்சமாக அமைந்துள்ளது இக் கெபி. மலையடிவாரத்திலிருந்து சிலுவைப்பாதை செபித்து வரும் மக்களுக்கு இந்த கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கும் இயேசு தாம் நிறைவு. 1935 ல் கட்டப்பட்டது இந்த அற்புதமான கெபி.
6. வாழ்வு தரும் நீரூற்று :
1911 -ல் திருத்தல கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கின்ற தருவாயில் மலை உச்சியில் தண்ணீர் கிடைப்பதும், எடுத்துக் கொண்டு சேர்ப்பதும் மிகவும் கடினமாக இருந்தது. ஆகையால் மழை நீரை சேகரித்து அதன்மூலம் கட்டலாம் என்று திட்டமிட்டு பாறையை தோண்ட ஆரம்பிக்கின்ற போது தான் இறைவனின் இந்த அற்புத நீரூற்று பீறிட்டு வெளியே வந்தது. (பாலைவனப் பயணத்தின் போது இஸ்ரேயல் மக்களுக்கு மெரிபாவில் நடந்தது போன்று வி. ப 17:7) இந்த அற்புத நீரூற்று தாகம் கொண்டவரின் தாகத்தையும், நோயுற்றோருக்கு நலன்களையும் தருகிறது.
இந்நீரை பருகுகின்ற குழந்தை பாக்கியமற்ற தம்பதியர் குழந்தைச் செல்வம் பெறுகின்றனர். பேய், பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் நலமடைகின்றனர்.
7.சிலுவைப்பாதை ஸ்தலங்கள் :
மலையின் அடிவாரத்திலிருந்து திருப்பயணத்தை ஆரம்பிக்கும் திருப்பயணிகள் ஜெப மனநிலையோடு பங்கெடுக்கிறார்கள். வழிநெடுக இயேசுவின் பாடுகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மலையின் அடிவாரத்தில் துவங்கூம் சிலுவைப்பாதை மலைமீதுள்ள கல்வாரி கெபியில் நிறைவு அடைகின்றது.
8. நூற்றாண்டு விழா கெபி :
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழுப்பப் பட்ட இந்த கெபியானது ஜெப அறையாக, தீப அறையாக பயன் படுத்தப்படுகிறது. அன்னையின் சுரூபத்தை தாங்கிச் செல்லும் தேர் இங்கு தான் வைக்கப் பட்டுள்ளது.
"மாதாவை தரிசிக்க மலையேறுங்கள் ! வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திருங்கள்"
வழித்தடம் :
நாகர்கோவிலிருந்து வரும் பொழுது திருநெல்வேலி -ஆலங்குளம் - சுரண்டை -சேர்ந்தமரம் - திருமலாபுரம்.
சென்னை மதுரையிலிருந்து வரும் பொழுது திருவில்லிபுத்தூர் - இராஜபாளையம் - சங்கரன்கோவில் - சேர்ந்தமரம் - திருமலாபுரம்.
தூத்துக்குடியிலிருந்து வரும் பொழுது திருநெல்வேலி -ஆலங்குளம் - சுரண்டை - சேர்ந்தமரம்- திருமலாபுரம்.