898 புனித சூசையப்பர் ஆலயம், மணலிக்கரை

         

புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: மணலிக்கரை

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: முளகுமூடு

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித யூதா ததேயு திருத்தலம், சுவாமியார்மடம்

2. தூய விண்ணக அன்னை ஆலயம், கல்லங்குழி

3. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், முகிலன்கரை

4. புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், சோலாபுரம்

5. புனித செபஸ்தியார் ஆலயம், பெருஞ்சிலம்பு

6. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், குமாரபுரம்

பங்குத்தந்தை அருட்பணி. அலோசியஸ் பாபு, OCD

ணை பங்குத்தந்தையர்கள்: 

அருட்பணி. வின்சென்ட், OCD

அருட்பணி. மரிய டேவிட், OCD

அருட்பணி. திவ்யானந்தம், OCD

அருட்பணி. டென்னிசன், OCD

அருட்பணி. சுரேஷ் பாபு, OCD

குடும்பங்கள்: 1100

அன்பியங்கள்: 35

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:30 மணி மற்றும் காலை 08:00 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி

புதன்கிழமை மாலை 06:00 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி

சனிக்கிழமை காலை 06:00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி

திருவிழா: மே மாதம் 01-ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்

மணலிக்கரை மண்ணின் இறையழைத்தல்கள்:

அருள்பணியாளர்கள்:

1. Rev. Fr. R. Maria Arputham, OCD

2. Rev. Fr. Silvester D'Cruz, Diocese of Sulthanpet

3. Rev. Fr. Michel Dennis, MMI

4. Rev. Fr. John Britto, Diocese of Shrewsbury, UK

5. Rev. Fr. Daniel Abraham, Diocese of Kuzhithurai

6. Dn. Vibin, Diocese of Kuzhithurai

அருள்சகோதரிகள்:

1. Rev. Sr. Benzy, CTC

2. Rev. Sr. Melsy, CTC

3. Rev. Sr. Bosco, CSST

4. Rev. Sr. Georgetta, CTC

5. Rev. Sr. Carlin Ambrose, CTC

6. Rev. Sr. Getrude Rani, SSA

7. Rev. Sr. Salate, CTC

8. Rev. Sr. Romana, CTC

9. Rev. Sr. Rayden, CTC

10. Rev. Sr. Maria Alphonsal

11. Rev. Sr. James Mary, CTC

12. Rev. Sr. Lucia (Gracian Compassion)

13. Rev. Sr. Antonitta, CTC

14. Rev. Sr. Amala Maria, CTC

15. Rev. Sr. Mettilda

16. Rev. Sr. Nirmal, CSST

17. Rev. Sr. Mary Seema, CSST

18. Rev. Sr. Olivia, CTC

19. Rev. Sr. Arul Kala, CTC

20. Rev. Sr. Bridget, CTC

21. Rev. Sr. Pritha Piris, CTC

22. Rev. Sr. Shiny, CTC

வழித்தடம்: நாகர்கோவில் -தக்கலை -மணலிக்கரை

Location map: https://g.co/kgs/Mvc6H1

வரலாறு:

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் மாநகரிலிருந்து 23கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இயற்கை எழில் கொஞ்சும் மணலிக்கரை ஊரில், கார்மெல் சபை குருக்களின் சீரிய வழிகாட்டலில் சிறப்புற்று விளங்கும் புனித சூசையப்பர் ஆலய வரலாற்றைக் காண்போம்...

1905 ஆகஸ்ட் முதல் 1931 ஜூலை வரை கொல்லம் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்தவர் கார்மெல் சபையைச் சேர்ந்த மேதகு ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர், OCD அவர்கள். இவரது பணிக்காலத்தில் 1912 -ம் ஆண்டு, (மலையாள வருடம் 1087, ஆவணி மாதம் 17-வது நாள்), மணலிக்கரையில் வாங்கப்பட்ட 5 ஏக்கர் 20 சென்ட் நிலப்பரப்பில் ஒரு ஆலயம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டு, 1913 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டது. இவ்வாறு 100 ஆண்டுக்கு மேல் பழைமையானது மணலிக்கரை புனித சூசையப்பர் ஆலயம். 

அக்காலத்தில் மணலிக்கரை தலத் திருஅவை கொல்லம் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வந்த, முளகுமூடு தலத்திரு அவையின் கிளை சபையாக இருந்தது. மணலிக்கரையில் புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்னால், ஆர்.சி தெருவில் புனித இராயப்பர் சின்னப்பர் சிற்றாலயம் ஒன்று அமைந்திருந்தது. வாரந்தோறும் முளகுமூட்டிலிருந்து அருட்பணியாளர்கள் வந்து, ஆர்.சி தெரு சிற்றாலயத்தில் திருப்பலியும், மற்ற அருள்பணிகளும் நிறைவேற்றி வந்தனர். தனது பணிக்காலத்தில் ஆயர் அலோசியஸ் மரியபென்சிகர், OCD அவர்கள் இன்றைய முளகுமூடு திருத்துவபுரம் வட்டாரப் பகுதிகளில், 14 பெரிய ஆலயங்களைக் கட்டியெழுப்பியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் மணலிக்கரை புனித சூசையப்பர் ஆலயம். எனவே மணலிக்கரை சூசையப்பர் ஆலயம் நூற்றாண்டை கடந்து நிற்கும் ஒரு வரலாற்று அடையாளமாகும்.

இத்தலத் திருஅவையின் முதல் பங்குப் பணியாளராக இருந்தவர் அருள்பணி. தனிஸ்லாஸ் என்ற ஐரோப்பிய குரு ஆவார். அவர் 1918 ஆகஸ்டு முதல் 1919 பிப்ரவரி வரையும், 1921 பெப்ருவரி முதல் 1923 அக்டோபர் வரையும் இப்பங்கை வளர்ச்சிப் பாதையை நோக்கி வழி நடத்தியுள்ளார்கள். இவரது பணியிடைக் காலங்களில் அருள்பணி. பிரழ்ச்சியார், OCD (1919 பெப்ருவரி முதல் ஜூலை வரை), அருள்பணி. பிரான்சீஸ் இம்மானுவேல், OCD (1919 நவம்பர் முதல் 1920 பெப்ருவரி வரை), அருள்பணி. ஸ்டீபன், OCD (1920 பெப்ருவரி முதல் ஆகஸ்டு வரையும், 1920 டிசம்பர் முதல் 1921 ஏப்ரல் வரையும்), அருள்பணி. இம்மானுவேல், OCD (1920 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை), அருள்பணி. பால் (1921 மே முதல் டிசம்பர் வரை) ஆகிய அருள்பணியாளர்கள் பங்கு பணிகளை ஏற்று நடத்தியுள்ளார்கள். 

தொடர்ந்து 1923 அக்டோபர் முதல் 1925 ஏப்ரல் வரை அருள்பணி. பால் அவர்களும், 1925 மே முதல் 1928 ஜூன் வரை அருள்பணி ஏ. கு. பெர்னார்டு அவர்களும், 1933 ஜூன் முதல் 1935 பிப்ரவரி வரை அருள்பணி. இக்னேஷியஸ் மரியா, அருட்பணி. இரபேல் ஏசுதாஸ் ஆகியோரும், 1939 மார்ச் முதல் 1949 ஜூலை வரை அருள்பணி. பயஸ் மோரீஸ் அவர்களும், 1949 ஆகஸ்டு முதல் 1950 ஏப்ரல் வரை அருள்பணி. ஜோசப் அவர்களும் பங்குப் பணியாளர்களாக இருந்து, இப்பங்கின் மேய்ப்புப் பணியை நடத்தி வந்தார்கள். 

அக்காலத்தில் ஏராளமான மக்கள் நம் கத்தோலிக்க திருமறையில் வந்து சேர்ந்து கொண்டேயிருந்தார்கள். ஆயினும் சுற்றிலுமுள்ள பகுதிகளிலெல்லாம் -கிறிஸ்துவின் மீட்புச் செய்தி சென்றடையவில்லை. ஆகவே அப்பணிக்கு அதிகமான அருள்பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். இச்சூழலில் அன்றைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு  ஆஞ்ஞிசுவாமி ஆண்டகை அவர்கள் மணலிக்கரையை ஒரு மறைபரப்பு பணித்தளமாக மாற்றி, கார்மெல் சபையிடம் நிரந்தரமாக ஒப்படைத்தார்கள். செம்பருத்திவிளையும், முளவிளையும் இம்மறைப்பணித் தளத்தின் கிளைப் பங்குகளாக இருந்தன. புனித சூசையப்பர் ஆலயத்தின் அருகில் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி மட்டும் இருந்தது.

கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு  ஆஞ்ஞிசுவாமி அவர்களும், கார்மல் சபையின் மஞ்சும்மல் மறைமாநில தலைமையகமும் செய்து கொண்ட நிரந்தர ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1950 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் கார்மல் துறவற சபையின் மஞ்சும்மல் மறைமாநில குருக்களான அருள்பணி. லூக்காஸ் பவுல் OCD, அருள்பணி. ஸ்டீபன் மேரி, OCD ஆகிய இருவரும் கேரள மாநிலத்திலிருந்து மணலிக்கரை தமிழ் மண்ணில் காலடி வைத்தார்கள். அவர்கள் வரும் போது இங்குள்ள மக்கள் வாழ்க்கைத் தரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கியிருந்தார்கள். இந்நிலையினை மாற்றியமைக்க இவ்விருவரும் இரவும் பகலும் ஊண் உறக்கமின்றி ஓயாது உழைத்தார்கள். இவர்களது உழைப்பின் பயனாக 1953 ம் ஆண்டு புனித மரிய கொரற்றி நடுநிலைப்பள்ளி உருவானது. அருள்பணி. ஸ்டீபன்மேரி, OCD அடிகளார் அதன் முதல் தாளாளர் ஆவார்.

அவர்களுக்குப் பின் வந்த எல்லா அருள்பணியாளர்களும், முன்னவர் தொடங்கி வைத்த பணிகளைத் தொடர்ந்து செய்வதில் ஆர்வம் காட்டினார்கள். சுற்றுப்புற பகுதிகளுக்கும் சென்று இல்லங்கள் சந்தித்து, மக்களுக்கு கிறிஸ்துவின் மீட்புச் செய்தியை அறிவிக்க பொதுநிலையிலிருந்து சில சகோதரிகளும், சகோதரர்களும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் சகோதரி. செபஸ்தியாள், திரு. மரியான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். மேலும் இப்பணியைத் தீவிரப்படுத்தி கார்மல் சபை அருட்பணியாளர்களோடு நற்செய்தி அறிவிப்பு பணியில் ஒத்துழைத்து செயல்பட, 1960ஆம் ஆண்டு கேரள மாநிலம் வாராப்புழையிலிருந்து, தெரேசிய கார்மல் சபை அருள்சகோதரிகள் வரவழைக்கப்பட்டார்கள். இவ்வாறு கார்மல் சபைக் குருக்களின் ஆர்வமிக்க உழைப்பால் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது.

செட்டிச்சார்விளை, கல்லறவிளை, இளம்பிலாவிளை, மச்சுவிளை, சோலாப்புரம், சுருளோடு, வீரப்புலி, குமாரபுரம், சுவாமியார்மடம், கல்லங்குழி, முகிலன்கரை, பெருஞ்சிலம்பு என்னும் 12 கிளைப்பங்குகள் உருவாயின. ஒவ்வொரு கிளைப் பங்கிலும் ஆலயம் எழுப்பப்பட்டது. பல வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன. 

கார்மல் சபை அருள்பணியாளர்கள் மணலிக்கரை பங்கின் பொறுப்பேற்ற பிறகு கிளைப்பங்கான செம்பருத்திவிளை பிரிந்து தனிப்பங்கானது. 1984 ல் முளவிளை, கல்லறவிளை, இளம்பிலாவிளை, மச்சுவிளை என்னும் நான்கு கிளைப் பங்குகள் இணைந்து முளவிளை தனிப்பங்கானது. 

பின்னர் வீரப்புலி, சுருளோடு ஆகிய பணித்தளங்கள் எட்டாமடை பங்கோடு இணைக்கப்பட்டது. அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு செட்டிச்சார்விளை தனிப்பங்காக மாறியது. 

இப்பொழுது மணலிக்கரை தலத்திருச்சபை தாய் பங்கும், சுவாமியார்மடம், கல்லங்குழி, முகிலன்கரை, சோலாபுரம், பெருஞ்சிலம்பு, குமாரபுரம் ஆகிய 6 கிளைப் பங்குகளும் கொண்ட ஒரு மிஷன் பணித்தளமாக திகழ்கிறது. 

தாய்ப்பங்கான மணலிக்கரையானது ஆர்.சி தெரு, மணக்காவிளை, மாவறவிளை, ஆற்றுக்கோணம் என்னும் 4 ஊர்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஊரிலும் சிற்றாலயம் உள்ளது. தற்போது நான்கு ஊர்களையும் உள்ளடக்கிய மணலிக்கரை தாய் பங்கில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1100 ஆகும். கத்தோலிக்க கிறிஸ்தவர் எண்ணிக்கை 6805 ஆகும்.  

அருள்பணி. லூக்காஸ் பவுல் OCD அடிகளாருக்குப் பின் அருள்பணி. லியோனார்டு, OCD அடிகள் பங்குப் பணியாளராக (1954 - 1957) பணிபுரிந்தார். இவரே புனித மரிய கொரற்றி நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளி ஆகும்படி ஆவன செய்து, அரசு அனுமதியும் பெற்றுத் தந்தார்கள். இவரோடு அருள்பணி. பயஸ் OCD, அருள்பணி. மாற்கு OCD, அருள்பணி. அல்போன்ஸ் OCD ஆகியோர் இணைந்து பணி செய்தார்கள்.

1957 முதல் 1960 வரை பங்குப் பணியாளராகப் பணியாற்றியவர் அருள்பணி. சில்வெஸ்டர் OCD அடிகளாவர். இவரே பங்கில் பக்த சபைகளை உருவாக்கி மக்களை திருமறைப் பணிகளில் ஈடுபட வைத்தவர். இவர் பங்குப் பொறுப்பேற்ற 1957 ஜூன் மாதம் மணலிக்கரை புனித மரிய கொரற்றி நடுநிலைப் பள்ளி நடைமுறையில் உயர்நிலைப் பள்ளியாக செயல்பட ஆரம்பித்தது. அக்காலத்தில் அருள்பணி. இரபேல் OCD, அருள்பணி. கமில்லஸ் OCD, அருள்பணி. தனிஸ்லாஸ் OCD ஆகியோர் இணைப் பணியாளராக பணிபுரிந்தனர். 

1963 முதல் 1969 வரை பங்குப் பணியாளராக இருந்த அருள்பணி. ஜெரோம் பையப்பள்ளி, OCD அடிகளின் முயற்சியால் முதலிலிருந்த புனித சூசையப்பர் ஆலயம் சிலுவை வடிவில் பெரிதாக்கப்பட்டு, சலவைக் கல்லால் ஆன தரைத்தளமும் அமைக்கப்பட்டது. பீடமும் புதிய முறையில் மாற்றியமைக்கப்பட்டது. 

அருள்பணி. ரெய்மண்ட், OCD அடிகளார் காலத்தில் புதிய கதவு, ஜன்னல்கள் அமைக்கப்பட்டு, ஆலயத்திற்கும் புதுமெருகூட்டப்பட்டது. 

1963 முதல் 1969 வரையிலும், 1972 லும் பங்குப் பணியாளராக இருந்தவர் அருள்பணி. ஜெரோம் பையப்பள்ளி அடிகளாவர். இவர் நிர்மலா தொழிற்பயிற்சி நிலையம், கார்மல் மருத்துவமனை, கார்மல் சிறுவர் இல்லம் முதலியவற்றை உருவாக்கி மணலிக்கரையின் முகத்தோற்றத்தையே மாற்றி அமைத்தவராவார். இவர் காலம் மணலிக்கரையின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது.

சுவாமியார்மடம் புனித யூதா ததேயு திருத்தலத்தை உருவாக்கியவரும் இவரே. இவரோடு இணைந்து அங்கு கிறிஸ்தவம் வளர்ந்து பெருக முழு மூச்சோடு உழைத்தவர் அருள்பணி. சிக்டஸ் OCD அடிகளாவார். கைவிடப்பட்ட சிறுவர்களின் துணையாளராகவும், இல்லங்கள் சந்தித்து ஏழை எளியவரின் நலனுக்காக அருட்பணியாளர்களும் உழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1969 முதல் 1972 வரை அருள்பணி. பேசில் OCD அடிகளார் பங்குப் பணியாளராக இருந்து மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினார். 1972 ல் அருள்பணி. ஜெரோம் பையப்பள்ளி OCD அடிகளார் 2ம் முறை வருகை தந்து, இம்மண்ணிலேயே இறைப்பதம் அடைந்தார்கள். அவரது நினைவு நாளில் மணலிக்கரை இறைசமூகத்தினர் இன்றுவரை நன்றிகூறி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்குப்பின் 1972 முதல் 1975 வரை அருள்பணி. ஜாண்பிரிட்டோ OCD அடிகளார் பங்குப் பணியாளராகப் பொறுப்பேற்றார். அப்போது இணைந்து பணி செய்தோர் அருள்பணி. ஜெரால்டு OCD, அருள்பணி. றோக் OCD அருள்பணி. இம்மானுவேல் OCD, ஆகியோராவர். 1975 ல் பங்குப் பணியாளராக பணியேற்ற அருள்பணி. ரெய்மண்ட் அடிகளார் ஆறு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். இவரது அரும் முயற்சியால் புனித மரிய கொரற்றி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது. அருள்பணி. செபாஸ்டின் OCD, அருள்பணி. ஏஞ்சல் OCD, அருள்பணி. ஜோசப் OCD, ஆகியோர் இணைந்து பணியாற்றினார்கள். 

1981 முதல் 1984 வரை அருள்பணி. தாமஸ் ஜாண் OCD அடிகளாரும், 1984 முதல் 1987 வரை அருள்பணி. அகஸ்டின் பூப்பாடி OCD அடிகளாரும், 1988 முதல் 1990 வரை அருள்பணி. கிளீட்டஸ் OCD அடிகளாரும், 1990 - 1991 வரை அருள்பணி. ஆன்சலம் OCD அடிகளாரும், பங்குப்பணியாளர்களாக இருந்து மக்களின் ஆன்மீக அருள் வாழ்வையும், சமூக பொருளாதார வாழ்வையும் வளம் பெறச் செய்தனர். இவர்களோடு அருள்பணி. மைக்கேல் OCD, அருள்பணி. சேவியர் OCD முதலானோர் இணைந்து பணி செய்தார்கள்,

1991 ம் ஆண்டு முதல் மஞ்சுமல் கார்மெல் சபையிலிருந்து மணலிக்கரை பணித்தளம், கார்மெல் சபை தமிழ்நாடு மறைமாநிலத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் அருள்பணி. பீற்றர் சூசைராஜ் OCD அடிகள் பங்குப்பணியாளராகப் பொறுப்பேற்றார். 

1993 முதல் 1995 வரை அருள்பணி. அருள்ராஜ் OCD அடிகளாரும், 1995 - 1996 முதல் மற்றும் 2001 - 2002 வரை அருள்பணி. கிறிஸ்துதாஸ் OCD அடிகளாரும், தொடர்ந்து அருள்பணி. பெரிய நாயகம் OCD அடிகளாரும் பங்குப்பணியாளர் பொறுப்பினை ஏற்று பல்வேறு விதத்தில் பங்கினை வளர்த்துள்ளனர். அருள்பணி. பீட்டர் ஜூலியன் OCD, அருள்பணி. வென்சஸ்லாஸ் OCD, அருள்பணி. பெலிக்ஸ் மதுரம் OCD, அருள்பணி. அனஸ்தாஸ் OCD, அருள்பணி. நிக்கோலஸ், OCD, அருள்பணி சகாயதாஸ் OCD, அருள்பணி. பிரான்சிஸ் சேவியர் OCD ஆகியவர்களும் பங்கு பணியாளர்களாக தமிழக கார்மல் சபை பொறுப்பேற்ற பின் வழிநடத்தியுள்ளனர். 2020 -ம் ஆண்டு ஜூலை முதல் 2023 வரை அருள்பணி. A. மரிய டேவிட், OCD அவர்கள் பங்குப் பணியாளராக சிறப்புடன் பணியாற்றினார்.

புதிய ஆலயம்:

1912 ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயச் சுவர்கள் மிகவும் பழுதுபட்டு ஆபத்தான நிலையில் இருந்ததால், மூன்றாவது முறையாக பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. கிறிஸ்துதாஸ், OCD அவர்கள்

புதிய ஆலயப் பணிகளைத் தொடங்கினார். புதிய ஆலயத்திற்கு 23.12.2018 அன்று மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் பேரருட்பணி. இயேசு ரெத்தினம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பழைய ஆலயமானது 2019 மே மாதம் திருவிழாவிற்கு பின்னர் இடிக்கப்பட்டது. பங்குத்தந்தையின் அயராத முயற்சி மற்றும் அனைவரின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 ஜூலை மாதம் பங்குப்பணியாளராக பொறுப்பேற்ற அருள்பணி. முனைவர். அ. மரிய டேவிட் OCD அவர்கள், ஆலய கட்டிடப் பணிகளைத் தொடர்ந்து நடத்தினார். 120 அடி நீளமும், 55 அடி அகலமும், 107 அடி உயரம் கொண்ட இரண்டு கோபுரங்களும், 60 அடி உயரம் கொண்ட நடு கோபுரமும் என அழகிய ஆலயம் கட்டப்பட்டு, கார்மெல் சபையின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேரருள்பணி‌. நேசமணி OCD, மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ், அருள்பணியாளர்கள் மற்றும் இறைமக்கள் முன்னிலையில் பாளை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் 26.01.2023 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

தற்போது பங்குத்தந்தையாக அருட்பணி. அலோசியஸ் பாபு, OCD அவர்கள் 2023 ஜூன் மாதத்தில் பொறுப்பேற்று மணலிக்கரை பணித்தளத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்கு அருள்பணிப் பேரவை

2. சிறுவழி இயக்கம்

3. கத்தோலிக்க சேவா சங்கம்

4. திருவழிபாட்டுக் குழு

5. கிராம முன்னேற்ற சங்கம்

6. மரியாயின் சேனை பெண்கள் / ஆண்கள்

7. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

8. கைகள் இயக்கம்

9. பாலர் சபை

10. புனித வின்சென்ட் தே பவுல் சபை

11. இளைஞர் இயக்கம் பெண்கள்/ ஆண்கள்

12. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

13. பாடகற் குழு

15. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

16. மறைக்கல்வி மன்றம்

17. கார்மெல் பொதுநிலையினர் சபை

18. பெண்கள் இயக்கம்

19. பீடப்பூக்கள்

20. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

21. கத்தோலிக்க சங்கம்

22. விவிலிய பணிக்குழு

பங்கில் உள்ள சிற்றாலயங்கள்:

1. புனித பேதுரு பவுல் ஆலயம், ஆர்சி தெரு

2. புனித ஜார்ஜியார் ஆலயம், ஆற்றுக்கோணம்

3. புனித கார்மெல் அன்னை ஆலயம், மணக்காவிளை

4. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மாவறவிளை

பங்கில் உள்ள  நிறுவனங்கள்:

1. புனித வளனார் தொடக்கப் பள்ளி

2. புனித மரியகொரற்றி மேல் நிலைப்பள்ளி

3. கார்மெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

4. கார்மெல் மெட்ரிக் பள்ளி

5. நிர்மலா தொழிற் பயிற்சிப் பள்ளி

6. கார்மெல் மருத்துவமனை

7. கார்மெல் மாணவர் இல்லம்.

பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லம்:

Congregation of Teresian Carmel (CTC)

புனித சூசையப்பரின் பாதுகாவலில் இயங்கி வரும் மணலிக்கரை தலத்திருச்சபை தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆன்மீக அருள் வளத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து, கிறிஸ்துவுக்கு சான்று பகரும் உண்மைச் சீடர்களைக் கொண்ட அருள்வாழ்வு சமூகமாகத் திகழவும், மக்கள் இவ்வுலக வாழ்வுக்குத தேவையான சீரிய வளங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழவும் எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவாராக!

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அலோசியஸ் பாபு, OCD அவர்கள்.

வரலாறு: ஆலய அர்ச்சிப்பு விழா மலர்