தமிழகத்தில் செயல்பட்டு வருகிற கத்தோலிக்க துறவற சபைகளைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எமது சிறு முயற்சி...
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்.
என்னும் இறை வார்த்தையின்படி உலகின் பல பகுதிகளுக்கும் சென்று நற்செய்தி அறிவிப்பு பணி செய்பவர்களே துறவற சபையினர்..
மறைமாவட்ட குருக்களை நாம் அறிந்திருப்போம். இவர்கள் குறிப்பிட்ட மறைமாவட்டங்களைச் சேர்ந்தவராகவும், அவரவர் மறைமாவட்டங்களில் பணிசெய்பவராகவும் இருப்பார்கள்.
துறவற சபைகளின் தலையாயப்பணி மறைப்பரப்புப் பணியாகும். இதனை அனைத்து துறவற சபைகளும் மிகச் சிறப்பாக ஆற்றி வருகின்றனர்.
திருஅவையின் புகழ்பெற்ற சில துறவற சபைகள்
புனித பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) நிறுவிய ஆசீர்வாதப்பர் சபை,
புனித அசிசி பிரான்சிஸ் நிறுவிய பிரான்சிஸ்கன் சபை, புனித சுவாமிநாதர் நிறுவிய டொமினிக்கன் சபை,
புனித அவிலா தெரசாள் மற்றும் புனித சிலுவை அருளப்பரால் மறுமலர்ச்சிக்கு உட்பட்ட கார்மல் சபை,
புனித லயோலா இஞ்ஞாசியார் நிறுவிய இயேசு சபை,
புனித அல்போன்ஸ் லிகோரி நிறுவிய இரட்சகர் சபை,
புனித தொன்போஸ்கோ நிறுவிய சலேசிய சபை ஆகிய இத்துற சபைகள் உலகெங்கும் பரந்து விரிந்து மறைப்பரப்பு பணியில் சிறந்து விளங்குகின்றன.
இவர்களது ஆன்மீகத்தைப் பின்பற்றுகின்ற நூற்றுக்கணக்கான பெண் துறவிகள் சபைகளும் உள்ளன.
சபைதுறவிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் சென்று கிறிஸ்துவை அறிந்திராத மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பணி செய்கின்றனர். மேலும் கல்விப்பணி, ஆற்றுப்படுத்துதல், பொதுநிலையினரை வழிநடத்துதல், மருத்துவம், பங்குப்பணி எனப் பல்வேறு பணிகளையும் தன்னலம் பாராது இயேசுவின் சீடர்களாய் இருந்து வழிகாட்டுகின்றனர்.
இவர்களின் மறைப்பரப்பிற்கு எல்லையேயில்லை... அழைப்பு விடுக்கின்ற இடங்களுக்கெல்லாம் சென்று பணி செய்து கொண்டேயிருப்பார்கள்.
இத்தகைய இறைப்பணியை ஆற்றி வருகிற துறவற சபைகளை தெரிந்து கொள்வது கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆதலால் துறவற சபைகளைக் குறித்தும் அவற்றின் வரலாற்றைக் குறித்தும் உங்களிடம் பகிர உள்ளோம்..
ஆகவே இந்த எளிய பணியைச் செய்ய எமக்கு அருள் புரிந்த இயேசுவுக்கும், இப்பணியை செய்ய ஊக்கமும், ஒத்துழைப்பும், வழிகாட்டுதலையும் தந்துவரும் அருள்தந்தை ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை (திருஅவை வரலாற்றுப் பேராசிரியர்) அவர்களுக்கும், எமக்கு என்றும் உற்ற தோழமையாய் விளங்கும் எமது பங்குத்தந்தை அருள்தந்தை. சார்லஸ் விஜூ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
தமிழக துறவற சபைகள் வரிசையில் முதன்முதலாக கப்புச்சின் பிரான்சிஸ்கன் சபையைக் குறித்து நாளையதினம் (29.07.2021) பதிவு செய்கின்றோம் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்...