183 தூய அந்தோணியார் ஆலயம், வடக்கன்குளம்

  

தூய அந்தோணியார் ஆலயம்

இடம்: வடக்கன்குளம்

மாவட்டம்: திருநெல்வேலி 

மறைமாவட்டம்: தூத்துக்குடி 

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை : சிற்றாலயம் 

பங்கு : பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தலம், வடக்கன்குளம்

பங்குத்தந்தை பேரருள்தந்தை மார்ட்டின் மனுவேல்

உதவி பங்குத்தந்தை அருள்தந்தை G. பிரதாப் 

சகோ. K. ஜெர்மான்ஸ் (களப்பணியாளர்)

செவ்வாய் மாலை 05:30 மணி திருப்பலி

திருவிழா: ஜூன் மாதம் 01-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையிலான 13 நாட்கள். 

வழித்தடம்:

நாகர்கோவில் -காவல்கிணறு விலக்கு -வடக்கன்குளம். 

திருநெல்வேலி -காவல்கிணறு விலக்கு -வடக்கன்குளம். 

Location map: https://g.co/kgs/8X1zSq5

முகவுரை:

ஆலயத்தை மையமாக வைத்தே கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்வு அமைகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் கிறிஸ்தவ வாழ்வானது ஆலயத்தில் தொடங்கி ஆலயத்தில் முடிகிறது. ஆலயமானது மக்களின் வாழ்வோடு பிரிக்க முடியாத, இரண்டற கலந்த ஒன்று.

ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு நோக்கம் உண்டு. அதுபோல ஆலயங்கள் உண்மையான ஜெபவீடாகவும், கடவுளின் இருப்பிடமாகவும், மோட்சத்தின் வாயிலாகவும் திகழ்கிறது. கடவுளையும் மனிதனையும் ஒப்புரவிற்கும், உறவிற்கும் அழைப்பு விடுக்கும் புனிதமிக்க இடம் ஆலயம். எனவே தான் நம் முன்னோர் 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றனர். அவ்வண்ணமே சீர்மிகு வடவையில், எழில்மிகு மேற்கத்திய கட்டிடக்கலையில், சிறப்புற அமைந்துள்ளது பரிசுத்த திருக்குடும்ப தேவாலயம். இவ்வாலயத்தில் முப்பொழுதும் கன்னியாகிய நம் தேவஅன்னை மக்களுக்குத் திருவருள் பாலித்து, அருளாட்சி புரிந்து வருகிறார். இறைமக்களை இறைவனோடு உறவு கொள்ளவும், இறையாசீர் பெறவும் இவ்வாலயங்கள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

வடவையில் அன்பின் திருப்பீடமாகவும், அருளின் பிறப்பிடமாகவும் விளங்குபவை சிற்றாலயங்கள். 

வடவையின் சிற்றாலயங்கள்

1. வியாகுல அன்னை சிற்றாலயம்

2. புனித செபஸ்தியார் சிற்றாலயம்

3. புனித அந்தோணியார் சிற்றாலயம்

4. தூய மிக்கேல் அதிதூதர் சிற்றாலயம்

5. வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்

6. புனித ஜார்ஜியார் சிற்றாலயம்

7. புனித காணிக்கை மாதா சிற்றாலயம்

8. அற்புத மாதா சிற்றாலயம்

புனித அந்தோனியார் சிற்றாலய வரலாறு:

வடக்கன்குளத்தின் தென்கிழக்கு எல்லையில் குளத்தின் அருகில் புனித அந்தோணியார் சிற்றாலயம் அமையப் பெற்றுள்ளது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகச் சிறிய ஓலைக்குடிசையில் அந்தோணியார் ஆலயம் இருந்தது. 1910ஆம் ஆண்டு முதல், திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அக்காலத்தில் திருவிழா அன்று மட்டும் திருப்பலிகள் நடைபெற்றது.

கிழக்கிலிருந்து பங்கு ஆலயத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபடியால், ஞாயிறு திருப்பலியிலாவது அவர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மறைதிரு. சுவக்கின் சுவாமிகளால் இவ்வாலயம் எழுப்பப்பட்டு, 1948-ம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. மறைதிரு. சுவக்கின் அடிகளார் அவர்களின் சொந்த பணமே பெருந்தொகையாக இவ்வாலயத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சிற்றாலயமானது ஆரம்பத்தில் புனித வனத்து அந்தோணியாரின் ஆலயமாக இருந்தது. காலப்போக்கில் புனித பதுவை அந்தோணியாரின் ஆலயமாகியது. ஆலயத்தில் உள்ள புனிதரின் சுரூபம் அருட்திரு. சுவக்கின் அடிகளாரின் தந்தையால் இலங்கை குருநாக்கலில் இருந்து கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் இருந்த பங்குத்தந்தையர்களால் புனரமைக்கப்பட்டது.

இவ்வாலய மக்களின் நன்கொடைகள் உதவியில், பங்குத்தந்தை பேரருட்பணி. ததேயுஸ் ராஜன் அவர்களால் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 53 மணி செபமாலை நினைவூட்டும் விதமாக ஆலய கோபுரமானது 53 அடியாக உயர்த்தப்பட்டு, 01.06.2016 அன்று மேதகு ஆயர் யுவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

கோடி அற்புதராம் புனித அந்தோனியார் எண்ணற்ற புதுமைகளை இந்த சிற்றாலயத்தில் நிகழ்த்தி வருகிறார். அவரது புதுமைகளை நீங்களும் பெற்றுக் கொள்ள வடக்கன்குளம் வாருங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு :

வடவை கத்தோலிக்க கூட்டமைப்பு,  வடக்கன்குளம்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: திரு. பென்கர் கட்டளை, வடக்கன்குளம்.