08 பரலோக மாதா திருத்தலம், காமநாயக்கன்பட்டி


பரலோக மாதா திருத்தலம்.

இடம்: காமநாயக்கன்பட்டி

மாவட்டம் : தூத்துக்குடி 
மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

நிலை : பங்குத்தளம் (திருத்தலம்) 

கிளைப் பங்குகள் : 
1. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்,  எட்டுநாயக்கன் பட்டி.
2. புனித அந்தோணியார் ஆலயம், செவல்பட்டி. 
3. திருக்குடும்ப ஆலயம்,  குருவிநத்தம். 
4. புனித குழந்தை தெரசாள் ஆலயம், ஈராச்சி 
5. புனித சூசையப்பர் ஆலயம், சால்நாயக்கன்பட்டி
6. புனித அந்தோணியார் ஆலயம், துறையூர்

பங்குத்தந்தை : 
அருட்பணி. S. M. அருள் ராஜ். 

குடும்பங்கள் : 1000
அன்பியங்கள் : 22

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 05.30 மற்றும் காலை 08.15 மணிக்கும் திருப்பலி. 

நாள்தோறும் காலை 06.00 மணிக்கு திருப்பலி. இரவு 07.30 மணிக்கு இரவு ஜெபம். 

சனிக்கிழமை காலை 06.00 மணிக்கு நற்கருணை ஆராதனை. 
நண்பகல் 12.00 மணிக்கு நற்கருணை ஆசீர், நவநாள் ஜெபம். 
நண்பகல் 12.30 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி. 
இரவு 07.30 மணிக்கு நவநாள் ஜெபம், திருப்பலி, நற்கருணை ஆசீர், நோயாளிகளுக்கு ஆசீர். 

மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை : இரவு 10.00 மணி முதல் அதிகாலை 01.30 மணிவரை இரவு ஜெபம். தொடர்ந்து திருப்பலி. 

மாதத்தின் கடைசி சனிக்கிழமை (ஜெபமாலை தோட்டத்தில்):
இரவு 07.00 மணிக்கு நவநாள் ஜெபம், திருப்பலி. 
இரவு 10.00 மணிக்கு சிறப்பு ஜெபமாலை, அன்னையின் அருளுரை. 
நள்ளிரவு 12.30 மணிக்கு திருப்பலி. 

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியை ஒட்டிய பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள்:
16 அருட்பணியாளர்களையும், 18 க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளையும் மறைப்பரப்புப் பணிக்காக தந்துள்ளது காமநாயக்கன்பட்டி இறைசமூகம்.

வழித்தடம் :
கோவில்பட்டி -காமநாயக்கன்பட்டி. 
மதுரை -கோவில்பட்டி -காமநாயக்கன்பட்டி.

வரலாறு :

கி.பி 1600 -ஆம் ஆண்டு காலகட்டத்தில் காமநாயக்கர், எட்டுநாயக்கர் என்ற இருசகோதரர்கள் வரிவசூல் செய்யும் பணிக்காக இந்தப் பகுதியில் குடியேறினர். பின்னர் இவர்களின் பெயரிலேயே காமநாயக்கன்பட்டி என்றும், அருகிலுள்ள ஊருக்கு எட்டுநாயக்கன் பட்டி என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

கி.பி 1600 -களில் மதுரையை மையப்படுத்தி பணிசெய்த ஐரோப்பிய சேசு சபை மறைப்பணியாளர்களின் தன்னலமற்ற நற்செய்திப் பணியால், இப்பகுதியில் கிறிஸ்தவம் துளிர் விட்டு வளரத் துவங்கியது. ஆகவே இதனை நன்றியோடு நினைவுகூரும் வண்ணமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் இரவு 07.00 மணி திருப்பலியும் நற்கருணைப் பவனியும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி சேசு சபை அருட்பணியாளர்களால் சிறப்பிக்கப் படுகிறது. 

கி.பி 1600 -ஆம் ஆண்டிலேயே காமநாயக்கன்பட்டியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், வழிபட ஒரு கிறிஸ்தவ திருக்கூடமும் இருந்ததாக கூறப்படுகிறது. 

1664 - அருட்பணி. ஆண்ட்ரூ பெரைரா அவர்கள் காமநாயக்கன்பட்டிக்கு வருகை புரிந்தார். பின்னர் 
1666 இல் அருட்பணி. ஆண்ட்ரூ பெரைரா அவர்கள் மீண்டும் காமநாயக்கன்பட்டிக்கு வந்து நற்செய்திப் பணியாற்றி  அருட்சாதனங்களை நிறைவேற்றினார். கயத்தாறில் இருந்து இறைமக்கள் இங்கு வந்து பாவசங்கீர்த்தனம் செய்தனர். 

1679 -இல் அருட்பணி. M. ரோட்ரிக்ஸ் இங்கு வந்து, இங்கிருந்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் வரை சென்று பணி புரிந்துள்ளார். 
தொடர்ந்து புனித அருளானந்தர் இங்கு வந்து இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார். 

1684 ஆம் ஆண்டில் புனித அருளானந்தர் அவர்களால் ஒரு குடிசை ஆலயம் கட்டப்பட்டது. 

1688 இல் இயேசு சபையினரின் நிலையான தங்குமிடமாகவும், மக்களுக்கு அருட்சாதனங்களை நிறைவேற்ற மிகச் சிறந்த இடமாகவும் புனித அருளானந்தர் (அருட்பணி. ஜான் டி பிரிட்டோ) அவர்களால் காமநாயக்கன்பட்டி ஏற்படுத்தப்பட்டது. 

இவ்வூரில் தங்கி பணிசெய்ய அருட்பணி. சேவியர் போர்க்கீசு அடிகளாரை முதல் பங்குத்தந்தையாக, மதுரை பணித்தள அதிபராக இருந்த புனித அருளானந்தர் அவர்கள் நியமித்தார். எட்டயபுரம் ஜமீன்தார் இவ்வாலயத்திற்கு தாராளமாக உதவிகள் செய்ததை, 1690 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட கல்வெட்டில் இன்றும் காணலாம்.

அருட்பணி. சேவியர் போர்க்கீசு அவர்கள் 15 ஆண்டுகள் காமநாயக்கன்பட்டியில் பணிபுரிந்து, கிறிஸ்தவ வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டார். இவரது பணிக்காலத்தில் காமநாயக்கன்பட்டியும், வடக்கன்குளமும் பெருமளவு கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்தன. 1686 ஆம் ஆண்டிலேயே 354 பேருக்கு திருமுழுக்குக் கொடுத்தார். கிறிஸ்தவம் பெருமளவில் பரவியதால் பணிகள் அதிகமாயின. எனவே 1701 -ஆம் ஆண்டு வடக்கன்குளம் தனிப்பங்காக பிரிக்கப்பட்டது. மறைப்பரப்பு செய்த காரணத்திற்காக ராணி மங்கம்மாவால் 41 நாட்கள் அருட்பணி. சேவியர் போர்க்கீசு சிறைவாசம் அனுபவித்தார். 1701 ஆம் ஆண்டில் பல்வேறு போராட்டங்கள், அச்சுறுத்தல்கள், சவால்கள், துன்பங்களுக்கும் மத்தியில் காமநாயக்கன்பட்டி மற்றும் வடக்கன்குளம் பணித்தளங்களில் 1635 பேர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டது. 

1714 முதல் 1716 வரை இரண்டு ஆண்டுகளுக்கு வீரமாமுனிவர் (ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி) பணிபுரிந்தார். இவர் வந்த பின்னர் இவ்வூர் புது வடிவமும் மலர்ச்சியும் பெற்றது. 575 பேர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். இரத ஊர்வலம், சப்பர ஊர்வலம் என கிறிஸ்தவ பக்தி முயற்சிகளை இந்தியமயப்படுத்தி, விசுவாசத்தில் மக்களை உறுதிப்படுத்தினார். பல்வேறு சவால்களையும் துன்பங்களையும் வீரமாமுனிவர் இங்கு சந்தித்த போதும், ஒரு துறவியாக மதத்தை மட்டுமே போதிக்காமல், மக்களின் உள் உணர்வுகளை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். மக்களுக்கு வெறும் போதனை மட்டும் போதாது. எனவே அவர்கள் வாழும் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவர விரும்பினார். 

ஆகவே இரண்டு முக்கியப் பணிகளை மேற்கொண்டார். அவை :
1. சமயம் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் 
2. கலாச்சாரம், பண்பாடு சார்ந்த வளர்ச்சிப் பணிகள். 

கிறிஸ்தவ மக்களிடம் தொண்டு செய்தாலும், தமிழக மக்களிடம் இருந்து அந்நியராகி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து, அந்நியப்பட்டிருந்த கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளில் தமிழ் கலாச்சாரத்தை ஒன்றிணைத்து புதிய பரிமாணத்தை உருவாக்கினார். ஆகவே 1715 -ஆம் ஆண்டு திருவிழாவில் தமிழக மக்களிடமிருந்த அனைத்து கலாச்சாரங்களையும், கிறிஸ்தவ மக்களிடமும் மாற்றி ஒரு புதிய அத்தியாயம் படைத்தார். குறிப்பாக புனிதர்கள் வணக்கம், சப்பர தேர் பவனிகள், முளைப்பாரி, தூம்பா, வாசகப்பா (பாஸ்கா நாடகம்), அன்னதானம், கும்பிடு சேவை, பொங்கலிடுதல், மொட்டையடித்து முடிகாணிக்கை, தீப விளக்கேற்றி வழிபடுதல் போன்ற நிகழ்வுகளைக் கூறலாம். தமிழ் மரபுகளை அதிகம் நேசித்ததால், அன்னை மரியாளை ஒரு தமிழ் பெண்ணாக பார்த்து மகிழ்ந்தார். 

1716 ஆம் ஆண்டில் வீரமாமுனிவரைத் தொடர்ந்து அருட்பணி. போர்க்கியோ பிரேன்டோலின் பொறுப்பேற்றார். தீவிர கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட எல்லா நோயாளிகளையும் சந்தித்து நோயிற்பூசுதல் பெறச்செய்தார். அன்னையின் புதுமைகள் தொடரவே கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்தது. அன்னை மரியாள் பக்தி முயற்சி தொடங்கப்பட்டு,  "மரியே வாழ்க" என்னும் அருள்நிறை மந்திரத்தை ஜெபிக்கும் பழக்கத்தை ஆரம்பித்தார். 

1717 -இல் தமிழகம் முழுவதும் கொடும் பஞ்சம் ஏற்பட்டு, கொலையும் கொள்ளையும் நடந்தேறி, கிராமங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. காமநாயக்கன்பட்டி ஆலயமும், வீடுகளும் இரண்டு முறை தீக்கிரையான போதும், அன்னையின் அருளால் இரண்டு முறையும் தீயானது அணைக்கப் பட்டது.

1730 - இல் திருடர்களால் மீண்டும் ஆலயம் எரிக்கப்பட்டது. கிராமமும் அழிக்கப் பட்டது. ஆனால் இதே ஆண்டிலேயே ஆலயமும், வீடுகளும் மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாண்டு விளைச்சல் மிகுதியாக இருந்தது. 

1731 அருட்பணி. பெஸ்கி (வீரமாமுனிவர்) அவர்களின் ஆண்டு நாட்குறிப்பேட்டு தகவலின்படி காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட ஆலயம் இருந்தது, அதில் வழிபாடுகளும் நடந்து வந்தன என உள்ளது. 

1747 -அருட்பணி. லாரன்ஸ் டி அல்மெய்டா என்கிற இராஜேந்திர சுவாமிகள் இறப்பு. 

1748 -மதுரை ராணி மங்கம்மாள் -திருவிதாங்கூர் மன்னர் இடையே நடந்த போரில் ஆலயம் எரிக்கப்பட்டது. இதே ஆண்டிலே மீண்டும் கட்டப் பட்டது. 

1760 ஆம் ஆண்டிற்குள் கீழக்கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பெரிய கோயில் கட்டப்பட்டது. 

1773 - இயேசு சபை உலகெங்கும் தடை செய்யப்படவே, இவர்களின் பொறுப்பிலிருந்து காமநாயக்கன்பட்டி கோவாவைச் சேர்ந்த குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. 

1784 - நான்கு புறமும் காரைக் கட்டாக அமைந்த சுவர்களும், மேற்பகுதி கூரைக் கோயிலாகவும் அமைந்திருந்தது. 

1819 - ஆலய வேலை தொடங்கி 1823 -ல் நிறைவு பெற்றது. தற்போது உள்ள ஆலய பீடத்தை சுற்றியுள்ள பகுதிகள் விரிவு படுத்தப் பட்டது. 

1838 - புதிய மதுரை மறைப்பணி தொடக்கம். 

1878 -ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இப்பங்கின் எல்லைப் பகுதிகள் வடக்கே சாத்தூர், தெற்கே கடம்பூர், மேற்கே சேர்ந்தமரம், கழுகுமலை, வடமேற்கே திருவில்லிபுத்தூர். 

1887 -ஆம் ஆண்டு உருவான திருச்சி மறைமாவட்டத்தின் கீழ் இருந்தது. 

1911 - வியாகுல அன்னை அருட்சகோதரிகள் சபை இல்லம் திறக்கப் பட்டது. 

1914 - ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 

1918 - ஆலயம் விரிவாக்கப்பட்டு பரலோக மாதா பீடம் மற்றும் வடபுறம், தென்புறம் உள்ள இரு பீடங்கள் அமைக்கப் பட்டது. 

1920- பங்குத்தந்தை இல்லம் மேல்மாடி கட்டப்பட்டது. 

1938 - இல் உருவான மதுரை உயர் மறைமாவட்டத்துடன் இணைக்கப் பட்டது. 

1973 -இல் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் கீழ் வந்தது. 

1991 - இல் மணிக்கோபுரம் கட்டப்பட்டது. 

2000 - இல் ஆலயம் புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம். மேலும் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாளை மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்பணி. ம. சூசை மரியான் அடிகளார் அவர்கள் காமநாயக்கன்பட்டி ஆலயத்தை திருத்தலமாக உயர்த்தினார்.

2005 - ஆலய தளம், பீடம் அழகுற அமைக்கப் பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டது. 

2006 - தேர் கூடங்கள் புதுப்பிக்கப்பட்டது. 

அருட்பணி. போர்க்கீசு இல்லம் கட்டப்பட்டது. ராஜேந்திர சுவாமிகள் குருசடி புதுப்பிக்கப் பட்டது. 

2007 -அருள் ஊற்று கெபி கட்டப்பட்டது. 

2008 - ஜெபமாலைத் தோட்டம் அமைக்கப்பட்டது. 

2009 - நடுநிலைப்பள்ளி புதிய கட்டடம் கட்டப்பட்டது. 

2010 -புனித சூசையப்பர் மற்றும் மாதா கெபி கட்டப்பட்டது. 

2012 - உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப் பட்டது. 

2013 - சிலுவைப்பாதை ஸ்தலங்கள் அமைக்கப்பட்டது. 

2014 - புனித தெரசாள் துவக்கப் பள்ளி புதிய கட்டடம் கட்டப்பட்டது. புனித செபஸ்தியார் கெபி கட்டப்பட்டது. 

2016 - வீரமாமுனிவர் திருப்பயணிகள் இல்லம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

திருத்தலத்தில் உள்ள  பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்குப்பேரவை
2. அன்பியங்கள் 
3. பாலர்சபை 
4. பீடப்பணியாளர்கள் இயக்கம் 
5. பாடகற்குழு 
6. மாதா நற்பணி மன்றம் 
7. வீரமாமுனிவர் இளையோர் இயக்கம் 
8. மரியாயின் சேனை
9. நற்கருணை வீரர் சபை
10. மறைக்கல்வி மன்றம் 
11. புனித வின்சென்ட் தே பவுல் சபை 
12. நற்செய்தி பணிக்குழு 
13. இயேசுவின் திருஇருதய பரிகார சபை. 
14. சம்மனசுகளின் இராக்கினி சபை.

நிறுவனங்கள் :
1. ஆர். சி. தொடக்கப்பள்ளி, காமநாயக்கன்பட்டி
2. ஆர். சி. தொடக்கப்பள்ளி, செவல்பட்டி 
3. புனித அலாய்சியஸ் உயர்நிலைப் பள்ளி, காமநாயக்கன்பட்டி
4. மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் இல்லம் 
5. விண்ணரசி மருந்தகம் (மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள்)

பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:
1. Fr. பிரைரா சே. ச (1664-1666)
2. Fr. ம. ரொட்ரிகஸ் சே. ச (1667-1684)
3. Fr. புனித அருளானந்தர் சே. ச (1684-85)
4. Fr. சேவியர் போர்க்கீசு சே. ச (1685-1700)
5. Fr. பெர்னார்டு சே. ச (1701-1710)
6. Fr. லூயிஸ் நாடால் சே. ச (1711-1713)
7. Fr. லூயிஸ் நாடால் சே. ச & வீரமாமுனிவர் சே. ச (1713-1715)
8. Fr. வீரமாமுனிவர் சே. ச (1714-1716)
9. Fr. அ. போர்ஜியோ பிராண்டோலின் சே. ச (1716-1727)
10. Fr. பிராஸ்பர்சியோலின் சே. ச (1728)
11. Fr. பிகாலியோ சே. ச (1728-1735)
12. Fr. ஜான் டி போன்ஸ்கா சே. ச (1735-1737)
13. Fr. ஜான் அலாய்சியஸ் சே. ச (1737-1740)
14. Fr. ஜேம்ஸ் ஹார்ட்மென் சே. ச (174-1743)
15. Fr. லியோனார்டு ஜேம்ஸ் சே. ச (1745)
16. Fr. சால்வதோர் தோஸ் சே. ச (1745-1746)
17. Fr. ஜேம்ஸ் கிரேனிங் சே. ச (1946-1948)
18. Fr. லாரன்ஸ் தே அல்மெய்தா சே. ச (1948)
19. Fr. மனுவேல் பெரஸ் சே. ச (1948-1956)
20. Fr. பெலிக்ஸ் மரிய கொரட்டி சே. ச (1956)
(1756 முதல் 1838 குருக்கள் இல்லாத காலம்) 
21. Fr. அலெக்சாண்டர் சே. ச (138-1839)
22. Fr. லூயிஸ் ரேங்வட் சே. ச (1839-1843)
23. Fr. அந்தோனிசேல்ஸ் சே. ச (1843-1845)
24. Fr. பெஞ்சமின் குனோலியோ, ஜூலியஸ் பில்லாஸ் சே. ச (1850-1852)
25. Fr. தாமஸ் சிஜ் சே. ச (1852-1855)
26. Fr. எர்னஸ்ட் ரிகோட் சே. ச (1855-1858)
27. Fr. தாமஸ் சியோஜ் சே. ச (1858-1864)
28. Fr. ஹென்றி எலேர்ஸா சே. ச (1864-1865)
29. Fr. பிரான்சிஸ் பியுசன் சே. ச (1865-1867)
30. Fr. விக்டர் பிசட் சே. ச (1867-1875)
31. Fr. ஜூலியஸ் லார்மே சே. ச (1875-1876)
32. Fr. C. கைரிசன் சே.ச (1876-1884)
33. Fr. அட்ரியன் பெனசியட் சே. ச (1884-1893)
34. Fr. ஜஸ்டின் பௌசே சே. ச (1893-1895)
35. Fr. ஸ்டீபன் டாலன் சே. ச (1895-1899)
36. Fr. பீட்டர் செக்ரீடன் சே. ச (1899-1901)
37. Fr. பரஞ்சோதி சே. ச (1901-1902)
38. Fr. ஸ்டீபன் டாலன் சே. ச (1902-1903)
39. Fr. சாமிநாதன் (1903)
40. Fr. J. மரியதாஸ் (1903-1918)
41. Fr. அடைக்கலம் (1918-1921)
42. Fr. A. மார்ட்டின் (1921-1922)
43. Fr. மேக்ஸ் (1922-1938)
44. Fr. தாமஸ் பெர்னாண்டோ (1938-1941)
45. Fr. J. குருவில்லா (1941-1946)
46. Fr. ரோஸ் (1946-1947)
47. Fr. மரியதாஸ் (1947-1954)
48. Fr. K. S. விசுவாசம் (1954-1957)
49. Fr. J. மனலா (1957-1958)
50. Fr. S. M. குலாஸ் (1958-1964)
51. Fr. P. S. அந்தோணிசாமி (1964-1973)
52. Fr. S. ஆரோக்கியசாமி (1973-1976)
53. Fr. I. லூர்துராஜ் (1976-1978)
54. Fr. S. ஜோக்கிம் (1978-1981)
55. Fr. M. பெர்க்மான்ஸ் (1981-1983)
56. Fr. S. அல்போன்ஸ் (1983-1985)
57. Fr. N. ஜேம்ஸ் நிக்கோலாஸ் (1985-1989)
58. Fr. S. A. அன்னசாமி (1989-1994)
59. Fr. S. ஜோக்கிம், பொறுப்பு (1994-1996)
60. Fr. T. Y. ராசையா, OSM (1996-2000)
61. Fr. S. ரெக்ஸ் ஜஸ்டின் (2000-2005)
62. Fr. M. அருள் அம்புரோஸ் (2005-2010)
63. Fr. S. A. அந்தோணிச்சாமி (2010-2015)
64. Fr. S. M. அருள்ராஜ் (2015 முதல் தற்போது வரை)

அன்னையின் அருளால் எண்ணற்ற அற்புதங்கள் அதிசயங்கள் நடந்து வருவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் திருத்தலம் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர். நீங்களும் பரலோக அன்னையின் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...