புனித ஜார்ஜியார் மற்றும் புனித தோமையார் ஆலயம்
இடம் : திருமூலநகர், 629401
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை: அருட்பணி. X. பீட்டர் பாஸ்டின்
Contact no: +91 96881 98955
குடும்பங்கள்: 180
அன்பியங்கள்: 4
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 05:00 மணி திருப்பலி (புனித ஜார்ஜியார் ஆலயம்)
மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளி மாலை 05:30 மணி (புனித தோமையார் ஆலயம்)
திருவிழா : ஜுன் 24 -ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. L. ஜார்ஜ் ஆலிபன்
2. அருட்சகோதரி. V. ஞானசெல்வம், புனித அன்னாள் சபை
3. அருட்சகோதரி. V. சகாய ரெனி, திருஇருதய சபை
4. அருட்சகோதரி. A. மோனிஷா, புனித அன்னாள் சபை
வழித்தடம்: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண் V3 பேருந்து.
அழகப்பபுரம் -திருமூலநகர் (ஒன்றரை கி.மீ தொலைவு)
Location map: https://maps.app.goo.gl/fUfmRBVGqfB97Xi4A
ஆலய தனிச்சிறப்புகள்: தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் எல்லைக் கோடுகள் சந்திக்கும் இடமான, தூத்துக்குடி மறைமாவட்டம், திருமூலநகரின் வடக்கே அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையான பர்வத மலை என்றழைக்கப்படும் மலையின் அடிவாரக் குகையில் அமைந்துள்ள தூய தோமையாரின் திருத்தலமே குருசுமலை.
ஆலய புதுமைகள்:
1. சில ஆண்டுகளுக்கு முன் உயிர்க்கொல்லி மருந்தை அருந்தி, மலை மேல் தற்கொலை செய்ய முயன்று சாகும் நிலையில் இருந்த இரு இளைஞர்கள் தூயவரால் அற்புதமாக காப்பாற்றப்பட்டனர்.
2. திருமணமாகி குழந்தைகள் இல்லாத பல தம்பதியினருக்கு தூய தோமையார் அருளால் குழந்தைச் செல்வம் கிடைத்தது.
வரலாறு:
நம் இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியின் வடமேற்கில் அமைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள, அழகிய சிற்றூர் நிலப்பாறை என்று அழைக்கப்படும் திருமூலநகர். இயற்கையின் எழில் மிகுந்த திருமூலநகர், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் மரங்கள் அடர்ந்த காடுகளாக காணப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான சில குடும்பங்கள் பிழைப்பு தேடி நிலப்பாறையில் வந்து குடியேறினார்கள். அடர்ந்த காடுகளாவும், கரடு முரடாகவும் விளங்கிய இடங்களை சமப்படுத்தி அதில் குடியேறினர்.
அந்த காலக்கட்டத்தில் வெள்ளை குதிரையில் கம்பீரமாக வந்த ஒருவர் ஒருகருவேல மரத்தில் குதிரையை கட்டிவிட்டு தானும் களைப்பாறிச் சென்றதைக் கண்டு..! இது யார்? என மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அப்போது திரு. ஞானப்பிரகாசம் என்பவரது கனவில், வந்தது ஜார்ஜியார் என உணர்த்தப்பட்டது. உடனே, அந்த கருவேல மரத்தை அகற்றிவிட்டு அவ்விடத்தில் ஒரு சிலுவை -யை நிறுவி இறைமக்கள் வழிபட்டு வந்தனர்.
பின்னாளில் அருட்பணி. செல்வராசு அவர்கள் ஒரு சிறிய கெபி அமைத்து அதில் புனித ஜார்ஜியார் சுரூபம் வைத்து, இரவில் இறைமக்கள் வந்து ஜெபிக்க வசதி செய்து கொடுத்தார். நாளடைவில் பல குடும்பங்கள் வந்து குடியேற மக்களின் முயற்சியால், அழகப்பபுரம் பங்குத்தந்தை அருட்பணி. பவுல் ராபின்சன் (1979-1982) அவர்களின் வழிகாட்டுதலில் புனித ஜார்ஜியாருக்கு ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டு, அழகப்பபுரம் பங்கின்கீழ் செயல்படத் தொடங்கியது.
அருட்பணி. தனிஸ்லாஸ் பாண்டியன் (1961-1972) பணிக்காலத்தில் பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு குழந்தைகள் கல்வி கற்க வசதி செய்து கொடுத்தார். அருட்பணி. ஜெபநாதன் (1986-1991) பணிக்காலத்தில் பள்ளிக்கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு மலையடிவாரத்தில் ஆடு மேய்க்க சென்ற இடையர்கள் மலைக்குகை ஒன்றில் நண்பகலில் சிலுவை வடிவில் ஒளி தோன்றக் கண்டு, இது கிறிஸ்தவர்களின் அடையாளமாகத் தெரிகிறதே என்று வியந்து, அவர்கள் ஊருக்குள் சென்று மக்களிடம் இச்செய்தியை தெரிவித்தனர். உடனே ஊர்மக்கள் இடையர்களை பின் தொடர்ந்து சென்று அவ்விடத்தை பார்த்த போது மெழுகுவர்த்திகள் எரிந்து, கரைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர். ஆகவே இவ்விடம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித இடமாகத்தான் இருக்க வேண்டும் என்றெண்ணி, ஒளி தெரிந்த இடத்தில் கல்லால் ஆன சிலுவையை நிறுவி இறைவனை வழிபட்டு வந்தனர். அதுமுதல் அவ்விடம் குருசுமலை என அழைக்கப்பட்டு வந்தது. அந்த சிலுவைக்கு முன்னால் நீர்ச்சுனை உருவாகி, இன்றளவும் வற்றாமல் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது.
இந்தியாவில் முதன் முதலாக புனித தோமையார் மறைப்பரப்ப வந்த போது அவர் பாதம்பட்ட இடமாதலால் மலைமீது புனித தோமையார் சுரூபம் நிறுவப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் இக்குகையில் செபித்த மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதால், மக்களின் வருகையும் அதிகரித்தது. மேலும் பலர் அற்புத சுகம் பெற்றதால் புனித தோமையாரின் திருத்தலமாக ஆனது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் விஷம் அருந்தி மலைமேல் தற்கொலை செய்ய முயன்ற இரு இளைஞர்கள், புனிதரால் அற்புதமாக காப்பாற்றப் பட்டனர்.
ஊர் மக்கள், இறைமக்கள், வெளியூர் மக்கள் உதவிகளால் தற்போது பேருந்துகள் செல்லும் வகையில் சாலை வசதியும், மின்விளக்கு, தண்ணீர் வசதிகளும், அசனம் கொடுக்கவும் தியானம் செய்யவும் வசதிகள் அருட்பணி. செல்வஜார்ஜ் அவர்களின் முயற்சியால் செய்யப்பட்டுள்ளன. மேலும் அருள்தந்தையின் பணிக்காலத்தில் தான் புனித தோமையாருக்கு திருவிழா கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படுகின்றது. இவ்வாறு குருசுமலை வளர்ச்சியில் பங்குத்தந்தை அருட்பணி. செல்வ ஜார்ஜ் (1996-2001) அவர்களின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். ஆகவே திருமூலநகரின் சிற்பி என அருட்பணி. செல்வ ஜார்ஜ் அவர்களை திருமூலநகர் இறைமக்கள் அழைக்கின்றனர்.
பங்குத்தந்தையர் அருட்பணி. ததேயுஸ் ராஜன்(2003-2008), அருட்பணி. குரூஸ்மரியான் ஆகியோர் பங்கின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினர்.
22.04.2006 அன்று அருட்பணி. ததேயுஸ் ராஜன் அவர்களால், புனித ஜார்ஜியார் ஆலய தேர் மற்றும் தேர் அறை அமைக்கப்பட்டது.
06.11.2011 அன்று புனித ஜார்ஜியார் அசன சாவடி அருட்பணி. பீட்டர் ஜான்பால் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 08.07.2012 அன்று அவராலேயே திறந்து வைக்கப்பட்டது.
மறைமாவட்ட முதன்மைகுருவாக பணியாற்றி வரும், முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. ததேயுஸ் ராஜன் அவர்கள் வழியாக திருமூலநகரை தனிப்பங்காக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
அருட்பணி. மைக்கிள் ஜெகதீஷ் அடிகளாரின் பணிக்காலத்தில் அவரின் முயற்சியால் 23.07.2015 அன்று திரூமூலநகர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி. ஜோசப் ஸ்டார்லின் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பணிப்பொறுப்பேற்றார்.
பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக அருட்பணி. X. பீட்டர் பாஸ்டின் அவர்கள் 2020 -ல் பொறுப்பேற்றார். அருட்பணி. X. பீட்டர் பாஸ்டின், அருட்பணி. ஜார்ஜ் ஆலிபன் முன்னிலையில் 02.07.2020 அன்று புனித தோமையார் சிறுவர் பூங்கா அருட்பணி. செல்வஜார்ஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
புனித தோமையார் திருத்தலத்திற்கு புதுப்பொலிவைத் தர பங்குத்தந்தை அருட்பணி. X. பீட்டர் பாஸ்டின் அவர்களின் தலைமையில், 28.06.2020 அன்று திரு. செல்வகுமார் (கலப்பை மக்கள் இயக்கத் தலைவர்) அவர்களால் அழகிய சிற்றாலயம் மற்றும் மலைமாதா குகை ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று பங்குத்தந்தை அருட்பணி. X. பீட்டர் பாஸ்டின் முன்னிலையில் 23.01.2021 அன்று, மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோனி ஆண்டகையால் அர்ச்சிக்கப் பட்டது.
23.01.2021 அன்று புனித ஜார்ஜியார் புதிய ஆலயத்திற்கு மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது புதிதாக கட்டப்படுகின்ற திருமூலநகர் புனித ஜார்ஜியார் ஆலய பணிக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் கீழ்க்காணும் வங்கி எண் மூலமாக உதவி செய்ய அன்புடன் வேண்டுகின்றோம்.
Name: Peter Pastian X, Amala Pushpa Rani, Antony Gnanaraj and Maria Selvi George
A/C. : 721001000577
IFSC. : ICIC0007210
Branch: Anjugramam
MICR Code: 629229007.
Name: William Prabu, Jasu
Rathinam and Jesintha
Micheal Arulseelan
A/C. : 177100050308155
IFSC. : TMBL0000177
MICR. : 629060005
Branch: Alagappapuram
என்றும் இறைப்பணியில்
அருட்பணி. பீட்டர் பாஸ்டின், பங்குத்தந்தை, திருமூலநகர்.
Contact no: +91 96881 98955
பங்கின் சபைகள்/ இயக்கங்கள்:
1. பாலர் சபை
2. நற்கருணை வீரர் சபை
3. குழந்தை இயேசுவின் புனித தெரசாள் சபை
4. அமலோற்பவ மாதா சபை
5. மரியாயின் சேனை
6. திருக்குடும்ப சபை
7. புனித வின்சென்ட் தே பவுல் சபை
பங்கில் உள்ள கெபி/ குருசடி:
1. புனித மிக்கேல் அதிதூதர் கெபி
2. மலை குகை மாதா கெபி
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. ஜோசப் ஸ்டார்லின் (2015-2020)
2. அருட்பணி. X. பீட்டர் பாஸ்டின் (2020 முதல்..)
கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த போது பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் செல்லும் கால்வாய் திருமூலநகர் ஊரின் நடுவே, புனித ஜார்ஜியார் ஆலய வளாகம் தொட்டுச் செல்வது தனிச்சிறப்பு.
வெளியூர் இறைமக்கள் குறிப்பாக கடலோரப் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அதிகமாக திருமூலநகர் வந்து புனித ஜார்ஜியார், புனித தோமையாரின் அன்பையும், அருளையும், அரவணைப்பையும் அபரிமிதமாக பெற்றுச் செல்கின்றனர்.
இளைப்பாறுவதற்கு ஏற்ற சூழல், சிறுவர் மகிழ்ந்து களிக்க சிறுவர் பூங்கா, கழிப்பறை வசதிகள் உள்ளன. தவக்கால புனிதப் பயணம் செல்பவர்கள் மற்றும் அமைதியாக ஜெபிக்க விரும்பும் அனைவரும் மறவாமல் செல்ல வேண்டிய ஆலயம்...
இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்து, தம்மை நாடி வருகின்ற மக்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்து மகிழ்விக்கும் புனித ஜார்ஜியார், புனித தோமையார் ஆலயத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் ஆழைக்கின்றது திருமூலநகர் இறைசமூகம்.
ஆலய வரலாறு மற்றும் தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. X. பீட்டர் பாஸ்டின்
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்