761 புனித இஞ்ஞாசியார் ஆலயம், கிருஷ்ணகிரி

   

புனித இஞ்ஞாசியார் ஆலயம்

இடம்: பழையபேட்டை, கிருஷ்ணகிரி

மாவட்டம்: கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: கிருஷ்ணகிரி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித பாத்திமா அன்னை ஆலயம், கிருஷ்ணகிரி

பங்குத்தந்தை: அருட்பணி.‌ இசையாஸ்

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி.‌ வில்லியம் சார்லஸ்

அன்பியங்கள்: 2

திங்கள் மாலை 06:00 மணிக்கு திருப்பலி

திருவிழா: ஜூலை மாதம் 31-ம் தேதி

வழித்தடம்: கிருஷ்ணகிரி புதிய பேருந்தில் நிலையத்தில் இருந்து டவுன் பேருந்து நிலையம் சென்று வடக்கே 500 மீட்டர் பழையபேட்டை செல்ல வேண்டும். 

Location map:

https://goo.gl/maps/nziVZts1p6KHNWFT6

வரலாறு:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி பகுதி பாரமஹால் என்றழைக்கப்பட்டது. பாரமஹால் என்பது பன்னிரெண்டு கோட்டைகள் கொண்ட பகுதி. திப்பு சுல்தானிடமிருந்து பாரமஹால் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு, 1765-ஆம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்கள் எலத்தகிரி - வெண்ணம்பள்ளி பகுதியிலிருந்து, கிருஷ்ணகிரியில் குடியேறினர். ஆங்கிலேயப்படையில் இருந்த கிறிஸ்தவர்களுக்காக, படைவீரர்கள் கி.பி. 1792-ஆம் ஆண்டு ஒரு சிற்றாலயத்தை புனித லொயலா இஞ்ஞாசியார் பெயரில் அமைத்தனர். பாரீஸ் மறைப்பணி சபையினர் (M.E.P) மறைப்பணி பொறுப்பை தமிழகத்தில் ஏற்றுக்கொண்ட பின்னர் தந்தை அபே தூபுவா கிருஷ்ணகிரி, எலத்தகிரி கிறிஸ்தவர்களை சந்தித்தார். 

1832 ஆம் ஆண்டு ஆங்கிலேய இராணுவம் கிருஷ்ணகிரியிலிருந்து வெளியேறியது. பின்னர் கிறிஸ்தவர்கள் அவ்விடத்தில் இரண்டாவது ஆலயத்தை அமைத்தனர். 1883 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரியில் 50 அல்லது 60 கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்று சேலம் மேற்றிராசன சரித்திர சுருக்கம் என்ற நூலில் காணப்படுகிறது. 

1857-ஆம் ஆண்டிலிருந்து கிருஷ்ணகிரி பகுதி திருப்பத்தூர் - வேல்லூர் மறைப்பணியாளரின் பொறுப்பில் இருந்தது. 1897 -இல் எலத்தகிரி பங்கு உருவாக்கப்பட்டபோது கிருஷ்ணகிரி அதன் கிளைப்பங்கானது. 1925-ஆம் ஆண்டு எலத்தகிரி பங்குத்தந்தையான தோமினிக் அடிகளார் பழைய ஆலயம் இருந்த இடத்தில் மூன்றாவது ஆலயத்தை கட்டியெழுப்பினார். 14.07.1925 அன்று அவ்வாலயம் புனிதப்படுத்தப்பட்டது.

1930-ஆம் ஆண்டு சேலம் மறைமாவட்டம் உருவானபோது, கும்பகோணம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய பாரிஸ் மறைப்பரப்பு சபை குருவான அருள்திரு. கபிரியேல் பிளேயுஸ்ட், சேலம் மறைமாவட்டத்தில் இணைந்தார். அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் தங்கி, கிருஷ்ணகிரி மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றி வந்தார். அப்போது அருட்தந்தை கபிரியேல் பிளேயுஸ்ட் (இப்போது பெங்களூர் சாலையில் இருபுறமும் இருக்கும் பாத்திமா அன்னை ஆலயம், பள்ளி, மருத்துவமனை அமைந்துள்ள இடம்) நிலத்தினை வாங்கினார். 12.1.1933 -இல் அருள்தந்தை கபிரியேல் பிளேயுஸ்ட் இறைவனடி சேர்ந்தார். அவரது விருப்பப்படியே அவர் கும்பகோணம் மறைமாவட்டம் அய்யம்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மறைமாவட்ட ஆயரின் அழைப்பை ஏற்று 1934-ஆம் ஆண்டு நவம்பர் 29 -இல் மரியாயின் பிரான்சிஸ்கு ஊழியர் சபை சகோதரிகள் பழையபேட்டை ஆலய வளாகத்தில் தங்கி தங்கள் பணியை தொடங்கின.

பங்கு ஆலயம் பாத்திமா அன்னை ஆலயத்திற்கு மாற்றப்படும் வரை (1972 வரை), பழையபேட்டை புனித இஞ்ஞாசியார் ஆலயம் பங்கு ஆலயமாக திகழ்ந்தது.

பின்னர் பழுதடைந்திருந்த ஆலயம் அருள்பணி. மதலைமுத்து அடிகளாரின் முயற்சியாலும், திரு. சின்னப்ப முதலியார் குடும்பத்தினர் உதவியாலும் 2008 -ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

பின்னர் அருள்தந்தை. தேவசகாயம் அடிகளாரின் முயற்சியால் ஆலயம் சீரமைக்கப்பட்டது. சிலுவை வடிவ ஆலயம் மாற்றப்பட்டு ஒரே சாலையாக அமைக்கப்பட்டது. சீரமைத்து புதுப்பிக்கப்பட்ட ஆலயம் 13.08.2017 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

தகவல்கள்: பங்கு ஆலய இணையத்தள பொறுப்பாளர் திரு. ஏசுதாஸ் அவர்கள்.