999 புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், பூமனூர்

       
   

புனித பெரியநாயகி அன்னை திருத்தலம்

இடம் : பூமனூர்

மாவட்டம் : சேலம்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : மேட்டூர்

நிலை : திருத்தலம்

பங்கு : புனித சவேரியார் ஆலயம், சவேரியார்பாளையம்

பங்குத்தந்தை : அருள்பணி. A. சிங்கராயன்

தொடர்புக்கு : 9443939135, 9025224644

உதவிப்பங்குத்தந்தை : அருள்பணி. A. எட்வின் சைமன்

திருவழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு : காலை 11.00 மணிக்கு திருப்பலி

சனிக்கிழமை : காலை 10.30 மணிக்கு செபமாலை மற்றும் நவநாள் செபம். காலை 11.00 மணிக்கு திருப்பலி மற்றும் குணமளிக்கும் வழிபாடு. மதியம் 01.00 மணிக்கு பொங்கல் மந்திரித்தல் மற்றும் நோயாளிகளை ஆசீர்வதித்தல் (மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் திருப்பலிக்கு பிறகு அன்னையின் தேர்பவனி நடைபெறும்)

அன்னையின் பெருவிழா நாட்களான ஜனவரி 1, பிப்ரவரி 2, மார்ச் 25, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 8, டிசம்பர் 8 ஆகிய நாட்களில் காலை 11 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

அனைத்து சனிக்கிழமைகளிலும் நோயாளிகளை ஆசீர்வதித்தலும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

திருத்தலப்பெருவிழா : பிப்ரவரி மாதத்தின் முதல் சனிக்கிழமை

வழித்தடம் : மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் கொளத்தூர் உள்ளது. அங்கிருந்து பவானி செல்லும் சாலையில் 8 கி.மீ தொலைவில் பூமனூரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

சேலம் - மேட்டூர் - கொளத்தூர் - பூமனூர்

ஈரோடு - மேட்டூர் - கொளத்தூர் - பூமனூர்

Church Location : https://maps.app.goo.gl/BMC3AQh8yW8oQMDT7

திருத்தல வரலாறு :

தனித்துவமிக்க தமிழகத்து சேலம் மாவட்டம் சென்றாயன் மலைப்பகுதிகளின் அடிவாரத்தைக் கவின் செய்து நிற்பது சவேரியார்பாளையம் கத்தோலிக்கப் பங்கு. மேட்டூர் அணையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்வழகிய பகுதியின் கிளைப்பங்காக, பெருமையுடன் திகழ்வது பூமனூர் என்கின்ற புண்ணிய பூமி. இவ்விடத்தில் பேரருள் அருவியாக பெரியநாயகி அன்னையின் திருத்தலம் அமைந்துள்ளது.

காட்சி ஒன்று :

பெண்களுக்குள் பேறுபெற்ற பெரியநாயகி அன்னை பூமனூரில் காட்சி அளிக்க திருவுளம் கொண்ட ஆண்டு 1997. பூமனூர் காட்டு வளவில் வசித்து வருபவர் ஜெகநாதன். ஒரு நாள் இரவு, அவருக்கு கனவில் மாதாவும், வீரமா முனிவரும் தோன்றினர். ஒரு புறம் மாதா, மற்றொரு புறம் முனிவர். இப்போது கோவில் இருக்கும் இடத்தில், அவருக்கு காட்சி கொடுத்தனர். "நான் வடக்கிலிருந்து இங்கு தென்பகுதிக்கு வந்துவிட்டேன். ஒரே வெயிலாக இருக்கிறது. எனக்கு பந்தல் போடு, உன் வீட்டில் உள்ள பணம், தானியத்தைக் கொண்டு எதுவும் செய்ய வேண்டாம். சுற்றிலும் உள்ளவர்களிடம் மடிப்பிச்சை எடுத்து (தானம்பெற்று) இதைச் செய்" என்று மாதா கனவில் சொன்னதும் ஜெகநாதன் விழித்தெழுந்து உட்கார்ந்து கொண்டார். அடுத்த சில நாட்களுக்கு பின் விடியற்காலை 5 மணிக்கு அவர் செபித்துக் கொண்டு இருக்கும்போது மீண்டும் மாதா அவருக்கு தோன்றினார். இந்த இரண்டு காட்சிகளையும் திரு. ஜெகநாதன் தன் வீட்டாருக்கும், பக்கத்து தோட்டத்தில் உள்ள கோட்டையன் காட்டிலும் மற்றவர்களிடமும் சொன்னார்.

இருமுறை தமக்கு அருளப்பட்ட கட்டளையை நிறைவேற்ற எண்ணிய அப்பெரியவர், தமது பேரனுடன் புறப்பட்டுச் சென்று, வீடுதோறும் நின்று, அன்னையின் அன்புக் கட்டளையை எடுத்துக்கூறி மடிப்பிச்சை கேட்டார். இரண்டு மரக்கால் அரிசி கிடைத்தாலே பெரிது என்று கருதியிருந்த அவருக்கு மக்கள் வாரி வழங்கியதோ இரண்டு மூட்டை அரிசி!

திருச்சிலுவை நடப்பட்டது:

அரிசி கிடைத்தது பற்றிய வியப்பில் ஆழ்ந்துபோன திரு. ஜெகநாதன் கனவில் தாம் மரியன்னையைக் கண்ட இடத்தைச் சரியாக இனங்கண்டார். ஒரு முறைக்கு இருமுறை வந்த கனவல்லவா? அந்தப் புனித இடம் சென்றாயன் மலை அடிவாரம் ஓடையை அடுத்துள்ள ஒரு பாறைப்பகுதி தான்! அவரும் அப்பகுதியில் உள்ள அனைவரும் அங்குச்சென்று பந்தல் ஒன்று அமைத்தனர். சிலுவை ஒன்றை அந்த இடத்தில் நட்டு வைத்தனர். தாம் மடியேந்திச் சேகரித்த அரிசியை சமைத்து, மாதாக்கஞ்சி என்று பசித்தோர் அனைவருக்கும் பரிமாறி மகிழ்ந்தவர்களாய் தம் இல்லம் திரும்பினார்கள். 

காட்சி இரண்டு :

மலையில் விறகுக்கு சென்ற பெண்களிடம் மாதா காட்சி கொடுத்தல்

மேற்கண்ட நிகழ்ச்சிக்கு பின்னர், மேடுதானப்பட்டியைச் சேர்ந்த சுசீலா மற்றும் வேளாங்கண்ணி என்ற இரண்டு பெண்களும் இப்போது கோவில் அமைந்துள்ள இடத்திற்கு நேராக மேலே உள்ள சென்றாயன் மலைக்கு விறகு பொறுக்க சென்றனர். மலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இரு பெண்களுக்கும் ஒரு பிரம்மாண்டமான ஒளி தென்பட்டது. அந்த பேரொளியில் ஊதா நிற புடவை அணிந்த பெண், கைக்குழந்தையுடன் காட்சியளித்தார். இதை பார்த்ததும் வேளாங்கண்ணி என்ற பெண் பயத்தில் மலையில் இருந்து இறங்கி ஓடிவிட்டாள். சுசிலா ஒரு மணிநேரம் அன்னையின் தரிசனத்தை கண்டபின், கீழே இறங்கி வந்து திரு. மதலைமுத்து பெரியவரிடம் பின் வருமாறு கூறினார். "நான் தான் மாதா. கோணாங்குப்பத்தில் இருந்து இங்கு வந்திருக்கிறேன்" என்று சுசீலாவிடம் மாதா கூறியதாக சொன்னார். மாதா தரிசனத்தை இப்பெண் ஏறக்குறைய ஒரு மணிநேரம் பார்த்ததாகவும், ஆனந்தத்தின் பிரமிப்பில் மாதா தன்னை இந்த ஒரு மணிநேரமும் வைத்திருந்ததாகவும் திருமதி. சுசீலா சாட்சி பகிர்ந்தார். பிறகு, அன்னை அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி நேராக அங்கு இருந்த சிற்றாலயத்திற்கு வந்துவிட்டதை தான் காட்சியில் பார்த்ததாகவும் சாட்சியம் கூறியுள்ளார்.

காட்சி மூன்று :

ஆலயம் அமைக்குமாறு அன்னையின் கட்டளை

இதன்பிறகு, திரு. மதலைமுத்துவின் கனவில், மரியன்னை அழகே உருவாய் தோற்றம் தந்து, சிலுவை நடப்பட்டுள்ள பாறை அருகில் தமக்கு ஆலயம் ஒன்றை அமைக்குமாறு கட்டளையிட்டார்கள். ஆயினும், அப்பெரியவர் ஆலயம் எழுப்பும் பணியில் ஈடுபாடு காட்டவில்லை.

அதே 1997 ஆம் ஆண்டு இரவு ஒன்பது மணியளவில், திரு. மதலைமுத்து செபமாலை செபித்துக் கொண்டிருந்தபோது, மரியன்னை குழந்தை இயேசுவைத் தாங்கியபடி தரிசனம் தந்து, தமக்குச் சிற்றாலயம் ஒன்றை எழுப்புமாறு கோரிக்கை விடுத்தார். அதன்பிறகுதான், அப்பெரியவர் சுறுசுறுப்பானார். மரியாவின் கட்டளைப்படி மடிப்பிச்சை எடுத்த திரு. ஜெகநாதனுடன் கலந்தாலோசித்தார்.

அன்னைக்கு சிற்றாலயம்:

அன்னையின் பக்தர்களான அம்முதியவர் இருவரும் தம் உறவினர்களின் உதவிகளைக்கொண்டு, முதலில் சென்றாயன் மலை அடிவாரத்தில் உள்ள பாறை அருகில் சிறிய கோயிலொன்றை எழுப்பி சிமெண்ட் கூரையால் மேற்பகுதியை வேய்ந்தனர். சில மாதங்களுக்குப்பிறகு, அதே இடத்தில் 50 சதுர அடியில், செங்கல் கட்டிடம் ஒன்றை எழுப்பி, கோணாங்குப்பத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பெரியநாயகி அன்னையின் திருவுருவப்படத்தை அதில் நிறுவி, வணக்கம் செலுத்தலாயினர். இதனைத் தொடர்ந்து, அன்னையின் அற்புதங்களும், வரங்களும் கணக்கின்றி பொழியலாயின. சுற்றுவட்டாரங்களிலிருந்து பக்தர்கள் பலரும் சாதி, மத, இன, மொழி, பேதங்களின்றி பூமனூருக்குத் திருயாத்திரையாக வரலாயினர்.

அதிசயச் சிறுவன் தந்த அற்புத உருவப்படம்:

இங்ஙனம் அடுத்தடுத்த அற்புத நிகழ்வுகள் பலவற்றுடன் 1998 ஆம் ஆண்டு பொலிவுடன் பிறந்தது. பூமனூர் பெரியநாயகி சிற்றாலயத்தில் அன்னையின் திருவுருவத்தை நிர்மாணிப்பது குறித்து முதியவர் திரு. ஜெகநாதன் நெடுநாட்கள் சிந்தித்து வந்தார். அவரது பேரனும், இராணிப்பேட்டையில் BHEL நிறுவன தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவருமான திரு. பெரியநாயகம் என்பவர், தமது தாத்தாவின் மூலமாக பூமனூரில் புண்ணிய அன்னையின் வரலாற்றைக் கேட்டறிந்து வியப்புற்றார். தமது சொந்த செலவில் பெரியநாயகி அன்னையின் சொரூபத்தைச் செய்து வருவதாக நேர்ந்து கொண்டார். அதற்காக, அச்சிற்றாலயம் சென்று, மாதாவிடம் செபித்துவிட்டு, அங்கு நிறுவப்பட்டிருந்த பெரியநாயகியின் திரு உருவப்படத்தையும் ஒளிப்படம் (Photo) எடுத்துக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சிலை வடிக்கும் கலைஞர் ஒருவரை அணுகி, தாம் கொண்டு சென்றிருந்த ஒளிப்படத்தினைக் காட்டி, அது மாதிரியான திருஉருவச்சிலையொன்றை வடித்துத் தருமாறு கோரினார். ஒளிப்படம் மிகச் சிறியதாக தெளிவின்றி இருப்பதாகக்கூறி, அக்கலைஞர் மறுத்துவிட்டார். அதன்பிறகு அவர் பல்வேறு நிறுவனங்களை அணுகி, அன்னைக்கு திருஉருவம் செய்துத் தருமாறு வேண்டினார். ஆனால், அத்தனை பேருமே ஒளிப்படம் தெளிவின்றிச் சிறியதாக இருப்பதாகக்கூறி அதனடிப்படையில் வடிக்க இயலாது என்று மறுத்து விட்டனர். இறுதி முயற்சியாக, அன்று மாலை முதலில் தாம் சந்தித்த கலைஞரிடமே அவர் திரும்பவும் சென்று வேண்டினார். அவரோ முன்போலவே மறுத்தார். அப்போது, சிறுவன் ஒருவன், தெளிவாக உருவம் அமைந்த பெரியநாயகியின் பெரிய படமொன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். சிறுவன் தந்த படத்தை நோட்டமிட்ட கலைஞர், அதன் அடிப்படையில் உருவம் அமைக்க ஒப்புக்கொண்டார். ஆயினும் அப்பெரிய திருஉருவப்படத்தைக் கொண்டு வந்த சிறுவன் யார்? அவன் அப்படத்தை எங்கே? யாரிடம் பெற்றான்? யார் அனுப்பி அவன் அங்கே அதனைக் கொண்டு வந்தான்? என்பன போன்ற விவரங்கள் எதனையும் அறிய முடியவில்லை. சிலைக்கலைஞரிடம் விசாரித்தபோது, அச்சிறுவனைத் தமக்குத் தெரியாது என்றும், அவன் உங்களோடு வந்தவன் என்று கருதினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அன்னைத் திருஉருவத்தின் அற்புதப்பயணம் ஏறத்தாழ மூன்று வாரங்களில் அன்னையின் திருஉருவம் தயாரித்து முடிக்கப்பெற்றது. பிறகு அதனை எடுத்துவர, திரு. பெரியநாயகம் மறுபடியும் சென்னை சென்றார். அன்று டிசம்பர் மாதம் 6 ஆம் நாள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவுதினம். சென்னை நகர் முழுவதிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் கடுமையாக இருந்தன. "ஊர் திரும்பும் வரை அன்னையின் திருஉருவம் அடங்கிய பெட்டியை யாரும் திறந்து சோதனைக்கு உட்படுத்தவே கூடாது" என்று, திரு. பெரியநாயகம், அன்னையிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக்கொண்டது போலவே சேலத்தை அடையும்வரை வழியில் ஓரிடத்திலும் அன்னையின் சொரூபம் அடங்கிய பெட்டியை யாரும் திறக்கச் சொல்லவே இல்லை!

ஊர்வலமும் திருஉருவம் நிறுவுதலும்:

1998 டிசம்பர் 8 ஆம் நாள் சவேரியார்பாளையத்தின் அன்றைய பங்குத்தந்தை அருள்பணி. D. குருசடி சகாயராஜ் தலைமையில், பெரியநாயகியின் திருஉருவம், பூமனூர் சிற்றாலயத்திற்கு ஆடம்பரப்பவனியாக, பக்தர்கள் புடைசூழ, பாடலுடன் எடுத்துச் செல்லப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டு நிறுவப்பட்டது. அன்னையின் அருள்வரங்களும் அற்புதங்களும் நாளுக்கு நாள் வளர்ந்து நாடெங்கும் பரவலாயின. மேட்டூர், சேலம், ஏற்காடு, எடப்பாடி, நாமக்கல், திருச்செங்கோடு, பூதப்பாடி, மைக்கேல்பாளையம், அந்தியூர், ஈரோடு, கோவை, குன்னூர், பாலக்காடு, தர்மபுரி, கிருட்டிணகிரி, எலத்தகிரி, ஓசூர், சேசுராஜபுரம், மார்ட்டள்ளி, பெங்களூர், மைசூர் உள்ளிட்ட தமிழக, கர்நாடக மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்வேறு இன, மொழி, கலாச்சாரங்களைச் சார்ந்த பலரும் பூமனூர் புனித அன்னையைத் தரிசிக்க திரள்திரளாக வந்தவண்ணம் உள்ளனர்.

பலி நிலை :

1999 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 30 ஆம் நாள் அன்னையின் திருவிழா மிகச்சிறப்பாக முதன்முதலில் பூமனூரில் நடைபெற்றது. சேலம் மறைமாவட்டத்தின் அன்றைய முதன்மை குரு பேரருள்பணி. M. S. மார்ட்டின் அவர்கள் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட குருக்களுடன் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டு, அன்று மாலை அன்னைக்குத் தேர்பவனி நடைபெற்றது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குவிந்தனர். இனம், மொழி, மதம் போன்ற பாகுபாடுகளைக் கடந்து வந்திருந்த மக்கள் கூட்டம், அங்கு நடைபெற்ற விழா, இவை அனைத்தைப்பற்றியும் மறைமாவட்டத்தின் அன்றைய ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களிடம் முதன்மை குரு அவர்கள் விளக்கிக் கூறினார்கள்.

அனுமதி அளித்தல் :

பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டம்கூட்டமாக பேருந்து, மகிழுந்து, லாரி போன்றவற்றில் மக்கள் வரும் கண்கொள்ளாக்காட்சியைப்பற்றி மறைமாவட்டத்தின் அன்றைய பரிபாலகர் பேரருள்பணி. R. விக்டர் சுந்தர்ராஜ் அவர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. இது மக்களின் பக்தியை வளர்ப்பதற்கும், மறைபரப்பிற்கும் ஒரு வாய்க்காலாக இருக்கும் என்பதை உணர்ந்து அன்னையின் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்ற 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அனுமதி வழங்கினார். அன்றுமுதல் மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்னையின் திருத்தலத்தில் திருவிழாதான்.

ஆரம்பகால புதுமைகள்:

ஒரு வெள்ளிக்கிழமை நாளில், அன்னையின் பக்தர் திரு. வின்சென்ட் என்பவரை பாம்பு கடித்துவிட்டது. பூதப்பாடியில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவிக்குப்பின் மருத்துவர்கள் சேலம் SKS மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லும்படி கூறிவிட்டனர். பங்குத்தந்தை அருள்பணி. D. குருசடி சகாயராஜ் அவரை சேலம் மருத்துவமனையில் சேர்த்தார். அடுத்தநாள் சனிக்கிழமை அன்னையின் ஆலயத்திற்கு வந்த பங்குத்தந்தை அவர்கள், "இந்த அன்னையின் உண்மையான பக்தரை பாம்பு கடித்துவிட்டது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இன்று நான் உங்களுக்கு திருப்பலி நிறைவேற்றவில்லை. அவரைச்சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறேன். அன்னைதான் வின்சென்டை காப்பாற்ற வேண்டும் அனைவரும் உருக்கமாக ஜெபியுங்கள்" என்று சொல்லி புறப்பட்டு விட்டார். எல்லோரும் ஆச்சரியப்படும் படியாக வின்சென்ட் முழுவதும் குணமடைந்தார். அடுத்த சனிக்கிழமை பெரியநாயகி ஆலயத்திற்கு திரளான மக்களுடன் வந்து நன்றி திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். மாதாவின் புதுமையை அனைவரும் நேரில் கண்டு வியந்தனர். உயிர்ப்பிச்சை கொடுத்த அன்னையைப் போற்றிப்புகழ்ந்தனர்.

அதிசய நீரூற்று:

பிறகு ஒருநாள், பெரியநாயகி அன்னையின் ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள கற்பாறையில் திடீரென தண்ணீர் வழிந்தோட ஆரம்பித்தது. இதை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவ, பல நூற்றுக்கணக்கான அன்னையின் பக்தர்கள் திரண்டு வந்து அதிசய நீருற்றைக்கண்டு, இது பெரியநாயகி அன்னையின் புதுமை என்று அன்னையை போற்றி சென்றனர். சிற்றாலயத்தின் உட்பகுதியிலும் இந்த ஈரம் நன்றாக தெரிந்தது. இந்த அதிசய நீரூற்று மதியம் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை நீடித்தது. பல மாதங்கள் ஊரெங்கும் இந்த புதுமைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.

ஆலயம் அமைக்கும் நிலை:

அருள்பணி. D. குருசடி சகாயராஜ் அவர்களின் காலத்தில், அன்னையின் சிற்றாலயத்தின் முன் திருப்பலி நிறைவேற்ற தென்னங்கீற்றுப்பந்தல் அமைக்கப்பட்டது. அன்னைக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் பங்குத்தந்தையிடம் வேண்டுதல் வைக்கவே அதற்கான திட்டம் தீட்டுவது குறித்து ஆயர் மேதகு. சிங்கராயருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அருள்பணி. A. சகாயராஜ் அவர்களின் காலத்தில் புனித பெரியநாயகி அன்னை காட்சி தந்த இடத்தில் புதிய கெபி கட்டப்பட்டது. பூமனூரில் இருந்து திருத்தலம் செல்ல, சாலை வசதி அமைக்கப்பட்டது. தற்போது திருத்தலம் இருக்கும் பகுதியில் சரிசமமாக நிலத்தை மாற்றி அமைக்கப்பட்டது. திருத்தல மின் அமைப்பிற்கு வசதியாக ஜெனரேட்டர் வசதி அமைக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக தண்ணீர்த்தொட்டி மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டது.

அதன்பிறகு, 29.09.2005 அன்று ஆயர் அவர்கள் பங்குத்தந்தை அருள்பணி. A. சகாயராஜ் அவர்களுக்கு 120 அடி நீளமும், 35 அடி அகலமும் (4200 சதுர அடி) கொண்ட ஆலயத்தைக்கட்ட அனுமதி வழங்கினார்.  பக்தர்களின் காணிக்கை வாயிலாக பெற்ற தொகையிலிருந்து ரூ.6,29,030 செலவிடப்பட்டு தூண் அமைக்கும் வரை கட்டிடப்பணி நடைபெற்றது.

அருள்பணி. A. ஜோசப் லாசர் சவேரியார்பாளையம் பங்குத்தந்தையாக 07.06.2007 அன்று பொறுப்பேற்றார். இரண்டு மாதங்கள் பெரியநாயகி அன்னையின் திருத்தல நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்த பிறகு, பங்குத்தந்தை அவர்கள் சேலம் ஆயர் அவர்களின் ஆலோசனைப்படி "பெரியநாயகி அன்னை திருத்தல வளர்ச்சிக்குழு" அமைத்தார். அதன்பிறகு, திருத்தலப் பணிகள் அனைத்தும் வளர்ச்சிக் குழுவின் நேரடி கண்காணிப்பில் மிகச்சிறப்பாக நடந்தது.  அன்னையின் பக்தர்கள் கொடுத்த காணிக்கை மற்றும் நன்கொடைகளின் உதவியுடன், புனித பெரியநாயகி அன்னையின் பிரமாண்ட ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, 06.02.2010 அன்று சேலம் ஆயர் மேதகு சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலய கோபுரங்கள் கட்டப்பட்டு 19.05.2012 அன்று ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருள்பணி. V. ஜெய் பெர்னார்ட் ஜோசப் அவர்கள் 2012 ஆம் ஆண்டு புதிய பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். 2013 ஆம் ஆண்டு ஜனவரியில் பங்குதந்தையின் கனவில் காட்சியாக வெளிப்படுத்தப்பட்ட அன்னைமரி நம்பிக்கை தோட்டம், மக்களின் காணிக்கையால் கட்டப்பட்டு 01.02.2014 அன்று சேலம் ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அருள்பணி. M. செல்வம் அவர்களின் பணிக்காலத்தில் திருத்தலத்தின் திருத்தூயகமும், திருத்தலத்தின் முற்றமும் மரத்தால் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அருள்பணி. M. செல்வம் அவர்களின் முயற்சியால் மக்களின் பயன்பாட்டிற்காக 2021-ம் ஆண்டு புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய திருத்தல அதிபர் அருள்பணி. A. சிங்கராயன் அவர்களின் பெரும் முயற்சியால் திருத்தலத்தின் வெள்ளிவிழா நினைவாக 25 அடி உயர புனித பெரியநாயகி அன்னையின் திருச்சுரூபம் தாங்கிய 35 அடி உயர மலைக்குன்றும், அன்னையை காண 53 படிக்கட்டுகளும் உள்ள புதிய கெபி கட்டிமுடிக்கப்பட்டு, 25.01.2025 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு அருள்செல்வம் இராயப்பன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும், புதிய நற்கருணை சிற்றாலயம் கட்டப்பட்டு 25.01.2025 அன்று ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இத்துடன் திருத்தலத்தை சுற்றி பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு மெருகூட்டப்பட்டது.

திருத்தலத்தில் பணியாற்றிய அருள்பணியாளர்கள் :

1. அருள்பணி. S. குருசடி சகாயராஜ் (1998-2002)

2. அருள்பணி. A. சகாயராஜ் (2002-2007)

3. அருள்பணி. A. ஜோசப் லாசர் (2007-2012)

4. அருள்பணி. V. ஜெய் பெர்னார்ட் ஜோசப் (2012-2014)

5. அருள்பணி. D. மைக்கேல்ராஜ் செல்வம் (2014-2016)

6. அருள்பணி. M. செல்வம் (2016-2022)

7. அருள்பணி. A. சிங்கராயன் (2022- தற்போது வரை...)

அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்த பூமனூர் புனித பெரிய நாயகி அன்னையின் திருத்தலத்தைநாடி நாள்தோறும் ஏராளமான இறைமக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தருகின்றனர். 

பூமனூர் திருத்தலம் வாருங்கள்.. உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. சிங்கராயன் அவர்களின் வழிகாட்டலில் உதவிப் பங்குதந்தை அருள்பணி. எட்வின் சைமன் மற்றும் டீக்கன். ஜோ செபாஸ்டின் ஆகியோர்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: சகோதரர். ஜான் பீட்டர், எஸ்.பி.பி காலனி பங்கு, சேலம் மறைமாவட்டம்.