521 தூய சலேத் அன்னை ஆலயம், கோனேரிப்பட்டி


தூய சலேத் அன்னை ஆலயம்
இடம் : கோனேரிப்பட்டி

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : ஆத்தூர்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், மண்கரடு
2. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கவுண்டர்பாளையம்
3. புனித அந்தோணியார் ஆலயம், முள்ளுக்குறிச்சி.

சிற்றாலயம் மற்றும் கெபிகள்:
1. புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம், சோப்பு மண்டி
2. புனித செபஸ்தியார் கெபி
3. புனித வனத்து அந்தோணியார் கெபி
4. புனித வனத்து சின்னப்பர் கெபி
5. புனித அந்தோணியார் கெபி.

பங்குத்தந்தை : அருட்பணி. இன்னாசிமுத்து

குடும்பங்கள் : 800
அன்பியங்கள் : 21

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு : காலை 06.00 மணிக்கு, காலை 09.00 மணிக்கு திருப்பலி

ஞாயிறு : காலை 07.30 மணிக்கு கிளைப்பங்கு மண்கரட்டில் திருப்பலி.

வாரநாட்கள் : காலை 06.30 மணிக்கு திருப்பலி

வியாழன் : மாலை 06.00 மணிக்கு சோப்பு மண்டி சிற்றாலயத்தில் திருப்பலி.

வெள்ளி : மாலை 06.00 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆராதனை

மாதத்தின் பௌர்ணமி : மாலை 06.30 மணிக்கு புனித லூர்து மாதா மலைக்கோவிலில் தேர்பவனி மற்றும் சிறப்புத் திருப்பலி.

மாதத்தில் முதல் புதன் : மாலை 06.00 மணிக்கு கவுண்டர்பாளையத்தில் திருப்பலி.

திருவிழா : தூய சலேத் அன்னை திருவிழா செப்டம்பர் மாதம் 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்.

பங்குப்பெருவிழா : புனித காணிக்கை மாதா திருவிழா பிப்ரவரி 2 ஆம் தேதியன்று வெகு சிறப்பாக நடைபெறும்.

மண்ணின் மைந்தர்கள்: அருட்பணியாளர்கள் :

1. அருட்பணி. சுரேஷ், I.N.S
2. அருட்பணி. ரொசாரியோ, தருமபுரி மறைமாவட்டம்
3. அருட்பணி. ஜான் ஜோசப், சேலம் மறைமாவட்டம்
4. அருட்பணி. கிறிஸ்டோபர், கப்புச்சின் சபை
5. அருட்பணி. சிரில் ராஜ், இரக்கத்தின் சபை
6. அருட்பணி. அதிரூபன், SDB
7. அருட்பணி. மார்டின், SJ
8. அருட்பணி. யேசுராஜ், பிரான்ஸ்.

20க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்.

வழித்தடம் : ஆத்தூரிலிருந்து கெங்கவல்லி வழியாக 30கி.மீ தொலைவில் கோனேரிப்பட்டி தூய சலேத் அன்னை ஆலயம் உள்ளது.

தம்மம்பட்டியிலிருந்து 3கி.மீ தொலைவு வந்தால் கோனேரிப்பட்டியில் உள்ள இவ்வாலயத்தை அடையலாம்.

location map : https://maps.app.goo.gl/jqjvnTuSgd3dfrSCA

வரலாறு :

சேலம் மறைமாவட்டம் கோனேரிப்பட்டி பங்கின் மேன்மையான சரித்திரம்!!!

16 -ஆம் நூற்றாண்டில் கோனரிப்பட்டி கோவேரிபட்டு என்று அழைக்கப்பட்டது.

மேலும் இந்தப் பெயர் 20 ஆம் நூற்றாண்டில் கோனேரிப்பட்டி என மாற்றப்பட்டது. இந்த இடம் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது, மற்றும் ஸ்வேத நதி என்ற ஆறு ஓடுகிறது. நிலங்களில் நெல், காய்கறிகளும், பழங்களும், மரவள்ளி கிலங்கு, கம்பு, சோளம், கரும்பு, கேழ்வரகு, மஞ்சள் போன்றவை பயிரிடப்படுகிறது. மேலும் இங்கு பால் மற்றும் தேன் ஆகியனவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

கி.பி 1621 இல் அருட்பணி. இராபர்ட் டி நோபிலி திருச்சிராப்பள்ளிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பெருமாள் பாளையம் (துறையூர் அருகில்) வந்து அங்கிருந்து கோவேரிபட்டு அடைந்தார். இந்த இடம் மதுரா மிஷனின் கீழ் இருந்தது. இயேசு சபையை சேர்ந்த அருட்பணி. இராபர்ட் டி நோபிலியின் அயராத முயற்சியால் 1623 ஆம் ஆண்டில் கிறித்துவம் சேலம் மாவட்டத்திற்கு வந்தது.

இத்தாலிய மேன்மைக் குடியில் பிறந்த ராபர்ட் டி நோபிலி தனது படிப்புகளுக்கு மத்தியில், தனது குடும்பத்தின் கனவுகளை விட்டுவிட்டு, இயேசு சபையில் சேர்ந்தார்.

ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பானில் கிறிஸ்தவம் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றால் ஈர்க்கப்பட்ட நோபிலி, பயணங்களுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.

1605 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு கோவா வந்தடைந்தார்.

ஆரம்பத்தில் டி நோபிலி கோவாவில் இருந்த போர்த்துகீசிய மக்களோடு வாழ்ந்தார். பின்பு ஐரோப்பிய கலாச்சாரத்தில் (ஆங்கிலேய கலாச்சாரம்) தன்னை மாற்றிக்கொண்டார்.

அவர் உள்ளூர் மொழியான தமிழைப் படித்தார். உயர் சாதி இந்துக்களிடையே, போர்த்துகீசியர்கள் தாழ்ந்த சாதியின் ஒரு பகுதியாக கருதப்படுவதை டி நோபிலி கண்டார்.

இந்திய மக்களிடையே போதித்து மக்களை மன மாற்றம் செய்ய முடியுமா என நோபிலியின் உயரதிகாரியின் சவாலுக்கு ஆளானார்.

இந்தச் சவாலை ஏற்று இராபர்ட் டி நோபிலி மக்களிடையே போதித்து பலரை மனமாற்றம் அடையச் செய்தார். பெரிய எண்ணிக்கையில் மாற்றம் நடந்த இடங்களிலெல்லாம் சபைகளை நிறுவினார்.

1623 இல், அவர் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்தார். சுற்றுப்பயணத்தின் போது திருச்சிராப்பள்ளி, பெருமாள்பாளையம், கோட்டப்பாளையம், கோவேரிபட்டு (கோனேரிப்பட்டி), சேந்தமங்கலம் மற்றும் சேலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அவர் மதுரையிலிருந்து கோவேரிபட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​தன்னுடன் இறைவனுக்காக உழைக்க முன்வந்த சிலரை அழைத்து வந்தார்.

மேலும் அவர்களை திருச்சி, பெருமாள்பாளையம், கோட்டப்பாளையம் மற்றும் கோவேரிபட்டு ஆகிய இடங்களில் தங்கச் சொன்னார். அவர் பல சாதி மக்களையும் கத்தோலிக்க நம்பிக்கையில் உறுதியாக வாழச் செய்தார்.

வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார், அதனால் மாற்றம் ஏற்பட்டது.

தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி அவர் நன்கு அறிந்திருந்ததால், அவர் மாதாவை எங்கள் குலதெய்வம் (குடும்பக் கடவுள்) என்று தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தினார்.

எனவே அவர் மாதாவை உபகார மாதா, காணிக்கை மாதா, அலங்கார மாதா, ஆரோக்கிய மாதா, சிந்தாயாத்திரை மாதா என்று அறிமுகப் படுத்தினார்.

மேலும் அவர் திருமுழுக்கு பெற்றவர்களுக்கு உபகார சாமி, காணிக்கை சாமி, அலங்காரம் போன்ற பெயர்களை வைத்தார்…

நோபிலி, கடவுளுக்காக பணிசெய்ய வந்த உபகார சாமி என்ற கோயில் பிள்ளையை கோவேரிபட்டுக்கு அழைத்து வந்தார்.

அந்த உபகார சாமி காணிக்கை மாதாவின் நினைவாக ஒரு சிறிய தேவாலயத்தை கட்டினார். பிப்ரவரி 2 ஆம் தேதி மாதா திருவிழாவாக கொண்டாட அவர் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர் கோவேரிபட்டுவிலிருந்து சேந்தமங்கலத்திற்கு புறப்பட்டார். கி.பி 1623 ஜுன் மாதத்தில், மதுரையின் திருமலை நாயக்கின் வாரிசான ராமச்சந்திர நாயக்கின் தலைநகரான சேந்தமங்கலம் வந்தார்.

உபகார காணிக்கை மாதா

இராபர்ட் டி நோபிலி கோவேரிபட்டுக்கு வந்தபோது, ​​அவர் பூர்வீக மக்களை ஞானஸ்நானம் பெறச் செய்தார், அவர் ஒரு சிறிய தேவாலயத்தை கட்டினார். (இது இப்போது செபஸ்தியார் மேடை என்று அழைக்கப் படுகிறது)

பின்பு ஆலயம் உபகார காணிக்கை அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டது. மேலும் அவர் 1623 பிப்ரவரி 2 ஆம் தேதி இயேசு காணிக்கையாக்கிய திருநாளை கொண்டாடினார்.

2 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தில், கிறிஸ்தவ மக்கள் கடவுளின் தாயாகிய மரியாளுக்கு எட்டுவிதமான திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள்.

அதாவது ஜனவரி 1 கன்னிமரியா இறைவனின் தாய்,

பிப்ரவரி 2 தேவ அன்னை இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்த திருநாள்,

மார்ச் 25, மே 31 மாதா என்றும் கன்னி,

மே 31 தேவ அன்னை எலிசபெத்தை சந்தித்தல் திருநாள்,

ஆகஸ்ட் 15 மாதாவின் விண்ணேற்ப்பு திருவிழா,

செப்டம்பர் 8 மாதாவின் பிறப்பு பெருவிழா,

நவம்பர் 21 கன்னி மரியாவை காணிக்கையாக அர்ப்பணித்த திருநாள்,

டிசம்பர் 8 மாதா கருவுற்ற திருநாள்.

எனவே இராபர்ட் டி நோபிலி பிப்ரவரி 2 ஆம் தேதி காணிக்கை மாதா திருநாளை அறிமுகப்படுத்தினார்.

1623 முதல் 2020 வரை இந்த விழாவானது கோனேரிப்பட்டியில் மிக ஆடம்பரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் தேவாலயம் புனித காணிக்கை மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இந்த விழாவானது 397 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வந்தது.

பங்கின் வெளியேற்றம்

கோவேரிபட்டு 1830 ஆம் ஆண்டு கோட்டப்பாளையத்தின் துணைப் பங்காக இருந்தது.

மேலும் 1899 ஆம் ஆண்டில் திருத்தந்தை லியோ அவர்கள், கும்பகோணம் என்ற புதிய மறைமாவட்டத்தை அமைத்தார்.

எனவே கோவேரிபட்டு கும்பகோணம் மறைமாவட்டத்தின் கீழ் வந்தது.

கி.பி.1840 ஆம் ஆண்டு சமாதானபுரம் என்ற சிற்றூரில் தான் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு காலத்தில் சமாதானபுரம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதி இராயப்பர்பாளையம் என்றும், சிலுவைக்குப்பம் என்றும் பெயர்கள் பெற்றன. தற்போது சவனாபுரம் என்றழைக்கப் படுகிறது. இன்று சவனாபுரத்தில் பூமிக்கடியில் முன்னோர்கள் வாழ்ந்த அடிச்சுவடுகள் வரலாற்றுச் சின்னங்களாக கிடைக்கின்றன. இப்படியாக சவனாபுரம் கோனேரிப்பட்டி பங்கின் மூலைக்கல்லாக இருந்துள்ளது. அருட்பணி. புயர் சுவாமிகள் மற்றும் அருட்பணி. காந்தி ஆகியோர் மக்களை கிறிஸ்தவ மறையில் இணைத்தனர்.

1872 உம் ஆண்டு அருட்பணி. காந்தி சுவாமிகள் அறைவீட்டைக் கட்டினார். அப்போது குருசடி ஒன்று மட்டுமே இங்கு இருந்தது. குருக்கள் பற்றாக்குறை இருந்த அந்நாட்களில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர், கோட்டப்பாளையம் மற்றும் கோனேரிப்பட்டியை விசாரணை செய்து வந்துள்ளார். 1872 ஆம் ஆண்டு தனிப் பங்காக கோனேரிப்பட்டி உயர்த்தப் பட்டது.

கோனேரிப்பட்டியின் கிளைப் பங்குகளாக இருந்த ஆத்தூர், கெங்கவல்லி, சிலுவைகிரி, செந்தாரப்பட்டி, திருமனூர் ஆகியன தனிப் பங்குகளாயின.

அருட்பணி. காந்தி அவர்கள் பாண்டிச்சேரி ஆயராக மாற்றம் பெற்றுச் சென்ற பிறகு அவருக்கு அடுத்து வந்த அருட்பணி. தெய்சதெர் (மகிமைநாதர்) (1873-1903) பொறுப்பேற்று, 1903 ஆம் ஆண்டில் தூய சலேத் மாதா தேவாலயம் என்ற பெயரில் ஆலயம் கட்டி சீரும் சிறப்புமாக நடத்த வழிசெய்தார். (1846 -ஆம் ஆண்டில் தேவ அன்னை பிரான்ஸ் நாட்டில் சலேத் என்ற இடத்தில் காட்சி கொடுத்தார். எனவே உலகெங்கும் சலேத் மாதாவின் பெயருக்கு பல ஆலயங்கள் கட்டப்பட்டு அர்ப்பணிக்கப் பட்டன. ஆகவே சலேத் என்ற இடத்தில் தோன்றிய அன்னையின் நினைவாக, கோனேரிப்பட்டி ஆலயமானது புனித சலேத் அன்னை ஆலயமாக ஆனது.)

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆலயம் புதுப்பிப்புப் பணிகள் மக்களால் 2003 இல் ஆரம்பிக்கப்பட்டு, 30.12.2004 அன்று ஆலய புதுப்பிப்பு பணிகள் நிறைவு பெற்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு.செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

லூர்து மாதா மலைக்கோவில்:

இங்குள்ள மக்கள் லூர்து நகருக்கும், தம்மம்பட்டியில் உருவாகியிருக்கும் மலைக்கோவிலுக்கும், சிலுவைகிரி மலைக்கும் தவக்காலத்தில் பாதயாத்திரை சென்று வருகின்றனர். தம்மம்பட்டி மலைக்கோவிலில் பாஸ்கா விழா நடத்துவதும் வளர்ந்து வருகிறது. 10.07.1978 அன்று 14 சிலுவைப்பாதை நிலைகள் கட்டப்பட்டன. நாளடைவில் அவை சில சமூக அமைதியைக் கெடுப்பவர்களால் தாக்கப்பட்டு, பிறகு மாவட்ட அதிகாரிகளால் சமாதானப்படுத்தப் பட்டது.

பங்கில் உள்ள பக்தசபைகள் :

*பங்குப்பேரவை
*மரியாயின் சேனை
*இளையோர் இயக்கம்
*பீடச்சிறுவர்கள் இயக்கம்
*பாடகற்குழு
*கோல்பிங் இயக்கம்
*மறைக்கல்வி குழந்தைகள் இயக்கம்
*சலேத் மாதா அன்னதானக் குழு
*ஆரோக்கிய மாதா பாதயாத்திரை குழு
*லூர்து மாதா நற்பணி நண்பர்கள் இயக்கம்
*பெரியநாயகி மாதா பாதயாத்திரை குழு
*உலக மீட்பர் கலைக்குழு
*பாரம்பரிய பாஸ்கா குழு
*புனித வனத்தார் குழு
*புனித அந்தோணியார் நற்பணிக் குழு.

பங்கில் உள்ள இல்லம் :
குளூனி சபை அருட்சகோதரிகள் இல்லம்.

பங்கில் உள்ள கல்விக்கூடம் மற்றும் மருத்துவமனை :

*தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி (மறைமாவட்ட நிர்வாகம்)
*புனித சூசையப்பர் மருத்துவமனை (குளூனி சபை அருட்சகோதரிகள் நிர்வாகம்)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. பியர் (1840)
2. அருட்பணி. குயோன் (1851)
3. அருட்பணி. காந்தி (1872)
4. அருட்பணி. தெய்சதெர் (1873-1903)
5. அருட்பணி. சாப்பீஸ் (1903-1909)
6. அருட்பணி. செசன் (1910-1919)
7. அருட்பணி. J. P. பல்வேல் (1920-1923)
8. அருட்பணி. P. லிசோன் (1924-1925)
9. அருட்பணி. J. L. உர்மாண்ட் (1926-1930)
10. அருட்பணி. ராபர்ட்ஸ் (1931-1940)
11. அருட்பணி. குரியாகோஸ் குருசுங்கல் (1941)
12. அருட்பணி. இக்னேஷியஸ் களத்தில் (1942-1951)
13. அருட்பணி. பால் தாழ்தாட் (1952-1956)
14. அருட்பணி. மத்தேயு கடவில் (1957-1960)
15. அருட்பணி. ஜோசப் பழப்பரம்பில் (1960-1965)
16. அருட்பணி. ஜார்ஜ் எடத்தி பரம்பில் (1965-1973)
17. அருட்பணி. M. ஆரோக்கியம் (1974)
18. அருட்பணி. M. ஜெகராஜ் (1974-1979)
19. அருட்பணி. M. A. கோலாஸ் (1980-1983)
20. அருட்பணி. அந்தோணி பால் (1983-1990)
21. அருட்பணி. பிலவேந்திரம் (1990-1997)
22. அருட்பணி. ஆரோக்கியராயர் (1997-2003)
23. அருட்பணி. S. ஆரோக்கியசாமி (2003-2008)
24. அருட்பணி. இருதய செல்வம் (2008-2013)
25. அருட்பணி. ஜான் அல்போன்ஸ் (2013-2018)
26. அருட்பணி. இன்னாசி முத்து (2018 முதல் தற்போது வரை...)

அன்னையின் அருளால் அளவற்ற நன்மைகள் நடந்து வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இறை மக்கள் இவ்வாலயம் நாடி வருகின்றனர். தங்கள் வேண்டுல்கள் நிறைவேறப்பேற்று சாட்சியம் பகிர்கின்றனர். புதுமைகள் நிறைந்த கோனேரிப்பட்டி தூய சலேத் அன்னை ஆலயம் வாருங்கள். இறைவனின் ஆசீரை பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. இன்னாசிமுத்து அவர்கள்.