221 புனித ஆரோபண அன்னை ஆலயம், மருதூர்குறிச்சி


புனித ஆரோபண அன்னை ஆலயம்

இடம் : மருதூர்குறிச்சி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : இயேசுவின் திரு இருதய ஆலயம், #இருதயபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி மேரி ஜான்

குடும்பங்கள் : 68
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு

புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு புனித ஆரோபண அன்னை நவநாள் திருப்பலி

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி முதல் 15- ம் தேதி வரையிலான ஐந்து நாட்கள்.

வரலாறு :

1950 -ம் ஆண்டளவில் முளகுமூடு அருட்சகோதரிகள் இல்லத்திலிருந்து, அருட்சகோதரிகள் இப்பகுதியில் வந்து கிறிஸ்துவின் நற்செய்தியை போதித்தனர். அது போல முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் பணிபுரிந்த அருட்பணியாளர்களும் இங்கு வந்து மறைபரப்புப் பணி செய்தனர். மக்களில் பலர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாயினர்.

அந்நாட்களில் இம்மக்கள் யாவரும் வெள்ளிகோடு தூய வியாகுல அன்னை ஆலயத்திற்கே வழிபாட்டிற்கு சென்று வந்தனர். வெள்ளிகோடு ஆலயம் இங்கிருந்து தொலைவில் இருப்பதாலும், ஞாயிறு காலை 06.00 மணிக்கு திருப்பலி நடப்பதாலும் இங்குள்ள மக்கள் சென்றுவர கடினமாக இருந்தது.

1991- ம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி பிரான்சிஸ் டி. சேல்ஸ் அவர்களிடம், மருதூர்குறிச்சியில் ஓர் ஆலயம் அமைக்க அணுகிய போது, மக்களின் முயற்சிக்கு பெரிதும் துணை புரிந்தார்கள்.

திரு. பீட்டர் மணி அவர்கள் ஆலயம் அமைக்க நிலம் வழங்கினார்கள். பங்கு மக்களின் முயற்சியாலும், பங்குத்தந்தையின் வழி காட்டுதலாலும் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 20-10-1991 அன்று தூய ஆரோபண அன்னை ஆலயம் அருட்பணி பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அப்போது 12 குடும்பங்கள் இருந்தன. ஞாயிறு காலை 10.30 மணிக்கு திருப்பலி நடைபெற்று வந்தது.

1993 ம் ஆண்டு அருட்பணி ஜூலியஸ் அவர்கள் சனிக்கிழமை மாலை திருப்பலி நடத்தி வந்தார்கள். இவ்வாலயத்தை பற்றிய தகவல்களை மேதகு ஆயரிடம் எடுத்துக் கூறி, 12-07-1994 அன்று கோட்டாறு மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்கள் இப்பங்கை சந்தித்த போது, மேதகு ஆயர் அவர்கள் பெரிய அளவில் ஆலயம் கட்ட மேலும் நிலம் வாங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அதனடிப்படையில் 1998 ஏப்ரல் மாதத்தில் திருமதி இராஜம்மாள் ஆதிலிங்கம் அவர்கள் ஆலயத்திற்கு 16 சென்ட் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்கள். அதில் ஆலயம் அமைக்கப்பட்டது.

2002 -ம் ஆண்டு அருட்பணி டேவிட் மைக்கேல் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்த போது ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மாலையில் நடந்தது. மீண்டும் மாற்றப்பட்டு காலையில் சுவாமியார்மடம் திருத்தல அதிபர் அருட்பணி பீட்டர் ஜூலியன் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள்.

2002 -ம் ஆண்டு ஆலயத்திற்கு மின்சார இணைப்பு கிடைத்தது. அப்போது தான் இவ்வாலயம் கிளைப்பங்கு என்ற நிலையை எட்டியது.

2004- ம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி இயேசுதாசன் தாமஸ் அவர்களின் நிதியுதவியாலும், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் ஒத்துழைப்பாலும் ஓலைக்குடிசையாக இருந்த ஆலயம் மாற்றியமைக்கப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அப்போது அருட்சகோதரராக இருந்த புஷ்பராஜ் அவர்கள் பங்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

மூன்று நாட்களாக இருந்த திருவிழா 2005 லிருந்து ஐந்து நாட்களாக உயர்த்தப்பட்டது.

2009- ம் ஆண்டு ஆலயம் மேலும் விரிவாக்கப்பட்டு கோபுரம் எழுப்பப் பட்டது. மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் ஆலயத்தை பார்வையிட்டு ஜன்னல், கதவுகள் போடுவதற்கு நிதியுதவி செய்தார்கள்.

2010 ல் கிறிஸ்துமஸ் பஜனை தொடங்கப்பட்டது.

2011 -ம் ஆண்டு அருட்பணி ததேயு லியோன் அவர்கள் பணிக் காலத்தில் புனித அந்தோணியார் குருசடி கட்டப் பட்டது.

வெள்ளிகோடு தலத்திருச்சபையிலிருந்து 03-11-2014 அன்று மாற்றப்பட்டு, இருதயபுரம் திரு இருதய ஆலயத்தின் கிளைப் பங்காக ஆனது. முதல் பங்கு அருட்பணியாளராக அருட்பணி ஜெனித் சேகர் அவர்கள் பணியாற்றினார்.

2015 -ம் ஆண்டு பழைய ஆலயம் செப்பனிடப்பட்டு கிறிஸ்தவ ஒன்றிப்பின் ஆலயமாக செயல் பட்டு வருகிறது. இதன் தொடக்கமாக 31-05-2015 அன்று ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் CSI, LMS சபையை சார்ந்த மக்களும், போதகர்களும் கலந்து கொண்டு சிறப்புற செய்தனர்.

ஆலயத்தின் வளர்ச்சிக்காக 24 சென்ட் நிலம் வாங்கப்பட்டு அதில் வெள்ளிவிழா தொடக்க நிகழ்வாக 20-03-2016 அன்று திருச்சிலுவை திருப்பீடம் அமைக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

2016 மே மாதத்திலிருந்து அருட்பணி மேரி ஜான் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்து, இப் பங்குதளத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

இப் பங்கில் பணியாற்றிய அருட்பணியாளர்கள் :

1. Fr பிரான்சிஸ் டி சேல்ஸ்
2. Fr ஜான் அம்புறோஸ்
3. Fr R. ஜான் ஜோசப்
4. Fr S. M ஜூலியஸ்
5. Fr J.அகஸ்டின்
6. Fr M. டேவிட் மைக்கேல்
7. Fr ஏசுதாசன் தாமஸ்
8. Fr அருள்ராஜ்
9. Fr சதீஷ்குமார் ஜாய்
10. Fr ததேயு லியோன் ஜோன்
11. Fr ஜெனித் சேகர்
12. Fr மேரி ஜான் (2016 முதல் தற்போது வரை)

இணை பங்குத்தந்தையாக பணிபுரிந்தவர்கள் :

1. Fr ஜோசப் ஜெயசீலன்
2. Fr ஆன்றனி மெகலன்
3. Fr ஜியோ கிளிட்டஸ்
4. Fr செல்வா
5. Fr ஆன்ட்றூஸ்

வழித்தடம் :

நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், காட்டாத்துறை -யிலிருந்து வலப்புறமாக ஒரு கி.மீ உள்ளே சென்றால் மருதூர்குறிச்சியில் உள்ள இவ்வாலயத்தை அடையலாம்.