1. சென்னை சாந்தோம், புனித தோமையார் ஆலயம்


சாந்தோம் தேவாலயம்//பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர். "கடவுளின் அன்னை" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் ("மதராஸ்", "மதராஸ்பட்டணம்") பெயராயிற்று என்பர். "மதராஸ்" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.

சாந்தோம் கோவில் வரலாறு

பண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்பிடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.

1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது "பெத் தூமா" ("தோமாவின் வீடு" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாகக் கூறப்படுகிறது.

1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.

போர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. என்றீ ரீத் த சில்வா என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோத்திக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.

கோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் பெரிய கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.

கோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது.

சென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.

2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது.

புனித தோமா கல்லறை

போர்த்துகீசியர் இந்தியாவோடு வணிகம் செய்ய வந்தார்கள். மே 20, 1498இல் வாஸ்கோதகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்து கோழிக்கோட்டில் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து பேத்ரோ அல்வாரஸ் கப்ரால் என்பவர் 13 செப்டம்டர், 1500இல் வந்தார். அதைத் தொடர்ந்து கிறித்தவ மறைபரப்பாளரும் வந்தனர். கொச்சி, கொல்லம் ஆகிய நகர்களில் அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டாலும், பின்னர் கோவாவைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் போர்த்துகீசிய குடியிருப்புகள் உருவாயின. 1516இல் போர்த்துகீசியர் லஸ் கோவில் (Luz Church) கட்டினர். அக்கோவில் ஒளியின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் Our Lady of Light (போர்த்துகீசியம்: Nossa Senora da Luz) என்று அழைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, போர்த்துகீசியர் 1522-23இல் சாந்தோம் ஆலயத்தை புனித தோமா கல்லறைமீது எழுப்பினார்கள். அக்கல்லறை அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் அகழ்ந்தபோது தோமாவின் எலும்புத்துண்டுகளும் அவர் குத்திக் கொல்லப்பட்ட ஈட்டிமுனை ஒன்றும் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அத்திருப்பொருள்கள் தற்போது புனித தோமா கல்லறைக் கோவிலில் பார்வைக்கும் வணக்கத்துக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரே, கி.பி. 232இல் தோமாவின் எலும்புகள் மயிலாப்பூரிலிருந்து அகற்றப்பட்டு இன்றைய துருக்கியில் உள்ள எதேசா (Edessa) என்னும் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கிருந்து கியோசு (Chios) என்னும் கிரேக்க நாட்டுத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து இத்தாலியில் உள்ள ஒர்த்தோனா (Ortona) நகருக்கு 1258இல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மரபு. ஒர்த்தோனாவில் தோமாவின் எலும்புகள் அடங்கிய அவர்தம் முக உருவ வெள்ளிப் பேழை உள்ளது.[10] அதை வடிவமாகக் கொண்டு, இந்திய அரசு ஒரு 15 காசுகள் தபால் தலை வெளியிட்டது. 1964 டிசம்பர் மாதம் பம்பாய்க்கு (மும்பை) வருகைதந்த போப்பாண்டவர் 6ஆம் பவுல் (சின்னப்பர்), உலகளாவிய நற்கருணை மாநாட்டின்போது அதைப் பெற்றுக்கொண்டார். இந்திய அரசு வெளியிட்ட இன்னொரு 20 காசுகள் தபால் தலையில் கி.பி. 7-8 நூற்றாண்டைச் சேர்ந்த தோமா சிலுவை (St. Thomas Cross) இடம்பெறுகிறது.

சாந்தோமில் அமைந்துள்ள புனித தோமா கல்லறைச் சிற்றாலயம் பேராலயத்தின் கீழ்ப்பகுதியில், சிறிய கோபுரம் இருக்கும் இடத்தின் நேர்க்கீழே உள்ளது. அச்சிற்றாலயத்தை எளிதாகச் சென்றடையவும் திருப்பயணிகள் அமைதியாக இறைவேண்டல் செய்ய வசதியாகவும் 2002-2004இல் புதியதொரு வாயில் திறக்கப்பட்டது. பயணிகள் கோவிலின் பின்புறமுள்ள தோமா அருங்காட்சியகம் நுழைந்து, அங்கிருந்து படியிறங்கி கல்லறைச் சிற்றாலயத்தை அடையலாம். அது முற்றிலும் புதுப்பிக்கப்பெற்று எழிலுடன் காட்சியளிக்கிறது. குறிப்பாக, தேக்கு மரத்தால் ஆன கூரையின் கலையழகு பளிச்சிடுகிறது. அதை மூடியிருந்த சாயம் அகற்றப்பட்டு தொடக்கநிலை அழகு தெரிகிறது. தரை பளிங்குக் கல்லால் ஆனது. நிறப்பதிகைக் கண்ணாடிகளும் மெருகூட்டப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தில் சாந்தோம் பகுதியை அகழ்ந்ததில் கிடைத்த பல தொல்பொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கிறித்தவ மறைசார்ந்தவை. கி.பி. 7-8 நூற்றாண்டைச் சார்ந்த கருங்கல் சிலுவைகள், சிறு நிலுவைகள் போன்றவை ஆங்குளன.