253 புனித அந்தோணியார் ஆலயம், அஞ்சுகூட்டுவிளை


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : அஞ்சுகூட்டுவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய அலங்கார உபகார மாதா ஆலயம், கன்னியாகுமரி

பங்குத்தந்தை : அருட்பணி ஜோசப் ரொமால்ட்

இணை பங்குத்தந்தையர்கள் :

அருட்பணி டோனி ஜெரோம்

அருட்பணி சகாய ஸ்டாலின்

அருட்பணி வில்பிரட்

குடும்பங்கள் : 100
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு

செவ்வாய் : மாலை 05.30 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலி.

மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 05.30 மணிக்கு சப்பரபவனியாக செபமாலை, நவநாள், திருப்பலி, நற்கருணை ஆசீர் அதனைத் தொடர்ந்து அசனவிருந்து நடைபெறும்.

திருவிழா : ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள்.

வரலாறு :

பழமையும் பெருமையுமுடைய அஞ்சுகூட்டுவிளை இறை சமூகம் புனித அந்தோணியார் மீது கொண்ட விசுவாசம் காரணமாக கத்தோலிக்கர்களாக உள்ளனர். வாழ்வாதாரத்தைத் தேடி குமரிமுனை நோக்கி வந்த காலத்திலே, இம்மேட்டு நிலத்தில் வந்து முதலில் குடியமர்ந்த சான்றோர்கள் வாழும் பகுதி இது.

பனை மரமும், புளிய மரமும், குடை போன்ற நாட்டுஉடை மரங்களும் செழிப்பாக வளர்ந்து நின்ற இம்மண்ணில் முன்னோர்கள் பல குடும்பங்களாக ஐந்து வீடுகளில் வாழ்ந்து வந்ததால் ஐந்து வீட்டுவிளை என்ற பெயர் விளங்கலாயிற்று. அது இப்போது அஞ்சுட்டுவிளை அல்லது அஞ்சுகூட்டுவிளை என்றழைக்கப்படுகிறது.

தற்போது உள்ள ஆலயமானது ஐந்தாவது ஆலயமாகும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன், முதல் வழிபாட்டு தலமாக இவ்வூரின் இன்றைய கல்லறைத் தோட்ட பகுதி விளங்கியது. முதல் கல்குருசு வழிபாடும் இங்கேயே தான் துவங்கியது. இரண்டாவது புனித ஞானப்பிரகாசியாருக்கும், புனித ஜார்ஜியாருக்கும் குருசடி கட்டி வழிபாடு நடந்தது. அதன்பிறகு இன்றைய ஆலயம் இருக்கும் இடத்தில் மண்சுவர் கொண்ட ஓலைக்கொட்டகை ஆலயம் கட்டினர்.

கருங்கற்சுவர் கொண்ட வீடுகள் கட்டிடங்கள் கட்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் அனுமதியளித்த காலத்திற்குப்பின், கருங்கற்சுவர் ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது.

காலப்போக்கில் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க, 1997 ல் ஆலயம் இடிக்கப்பட்டு, புதிய ஆலயம் கட்டப்பட்டு 2000 - ஆம் ஆண்டில் மேதகு கோட்டார் ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1970 க்கு முன்புவரை ஆலயத்தில் திருப்பலி என்பது எப்போதாவது தான் நடந்தது.

அருட்பணி சீசர் அடிகளார் காலத்தில் அவரது முயற்சியில் ஞாயிறு திருப்பலி நிறைவேற்ற மறைமாவட்ட ஆயரின் உத்தரவு பெற்று திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

1976 முதல் அருட்தந்தை வின்சென்ட் பெரைரா காலத்தில் செவ்வாய்க்கிழமைகளில் மாலை வழிபாடுகள் துவக்கப்பட்டது.

விருந்தோம்பல் என்பது இச்சமூகத்தின் பாரம்பரியம். முற்காலங்களில் இறந்தோர் அடக்கப்பட்ட கல்லறைகளுக்கு அருகில் அவர்கள் நினைவு நாளில் கஞ்சி காய்ச்சி பனை ஓலைப்பட்டையில் எல்லோருக்கும் கொடுத்து பசியாறினார்கள்.

இதன் நீட்சியாகவே பக்தர்களின் நேர்ச்சை அசனம், தவநாட்களில் அசனம் மற்றும் திருவிழா காலங்களில் சமபந்தி விருந்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

2005 -ஆம் ஆண்டு வரை ஆலய காணிக்கை மற்றும் ஊர் மக்கள் வரியை நம்பியே ஆலய செலவுகள் நடத்தப்பட்டு வந்தது. அருட்தந்தை லியோன் எஸ் ஹென்சன் வருகைக்கு பின்னர் மாற்றம் பெற்று அவரது பணிக்காலத்தில் தன்னிறைவு திட்டத்தின் மூலம் நான்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. பிறகு ஹென்சன் மஹால் என்கிற பெயரில் திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 2012 ல் திறக்கப்பட்டது.

தற்போது கோட்டார் மறை மாவட்ட ஆயராக உள்ள மேதகு நசரேன் சூசை அவர்கள், பங்குத்தந்தையாக இருந்த போது மண்டபத்தின் பின்புறம் நிலம் வாங்கப்பட்டு திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வறையும் பொருள் பாதுகாப்பு அறையும் கட்டப்பட்டது. தூய பாத்திமா அன்னை அன்பியம், குழந்தை இயேசு அன்பியம் என இரண்டு அன்பியங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் திருவிழாவின் போது செவ்வாய்கிழமை அன்று வருகிற 5 -ஆம் திருவிழாவில் பங்கு ஆலயமான கன்னியாகுமரி ஆலய மக்கள் சீர்வரிசைகளுடன் (காய், கனிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் ஆடுகள் பல்வேறு வகையான பொருட்கள்,காசுகள்) வந்து திருப்பலியில் கலந்து கொண்டு இங்குள்ள மக்களுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். மேலும் அன்றைய நாளில் சிறப்பான விருந்தும் வழங்கப்பட்டு இந்த நாளை மிகச் சிறப்பாக இவ்வாலய மற்றும் பங்கு ஆலய மக்கள் இணைந்து கொண்டாடுவது சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

இவ்வாறு பல்வேறு நிலைகளில் சிறப்பு பெற்று தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப் ரொமால்ட் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் மூன்று இணை பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது அஞ்சுகூட்டுவிளை இறை சமூகம்.