96 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சூழால்

     

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

மாவட்டம்: கன்னியாகுமரி 

மறைமாவட்டம்: குழித்துறை 

மறைவட்டம்: திரித்துவபுரம் 

நிலை : பங்குத்தளம்

கிளை : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், மணலி, கொல்லங்கோடு 

பங்குத்தந்தை அருட்பணி. ‍M. மார்ட்டின்.

குடும்பங்கள்: 235 

அன்பியங்கள்: 12

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 09:00 மணி

செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

வெள்ளி மாலை 06:00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி

சனி மாலை 06:00 மணி புனித மிக்கேல் அதிதூதர் நவநாள் திருப்பலி

திருவிழா : மே மாதம் முதல் வாரத்தில் எட்டு நாட்கள் நடைபெறும். (ஞாயிறு முதல் ஞாயிறு வரை)

வழித்தடம்: மார்த்தாண்டம் -களியக்காவிளை -சூழால் 

Location map: St. Michael The Archangel's Church, Choozhal

https://maps.app.goo.gl/Ac4Jwz12d7ifydPY7

ஆலய வரலாறு :

சூழால் துய மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கானது சுமார் நூறு வருட வரலாறும் வளர்ச்சியும் கொண்டது. 1930 க்கு முன் கொல்லம் உயர்மறை மாவட்டத்தின் கீழும், 1930 ஆம் அண்டுக்கு பின் கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழும், 2015 ஆண்டு முதல் குழித்துறை மறைமாவட்டத்தின் கீழும் செயல்பட்டு வருகிறது. முழு மனித விடுதலை தேடி என்ற இலட்சிய தாகத்தோடும், வாழ்வு பகிர்வதற்கே என்ற நீதியோடும் இயங்கி வருகிறது.

சூழால் ஆலயம் இருக்கும் இடத்தின் முற்கால பெயர் பிலாவிளை என்பதாகும் பின்னர் சுடர்கடை என்று அழைக்கப்பட்டது. சுடர்கடை என்பது பின்னாளில் பேச்சு வழக்கில் சூழாக்கடை என்று அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே மருவி இன்று "சூழால்" என்று அழைக்கப்படுகிறது. இவ்விடம் தமிழ்நாடு - கேரளா எல்லையை ஒட்டி இருப்பதால் மக்கள் தமிழ், மலையாளம், மற்றும் தமிழ் கலந்த மலையாள மொழிகளில் பேசி வருகின்றார்கள்.

தொடக்க வரலாறு :

1905 ஆம் ஆண்டுவரை உச்சக்கடை பங்கு, விளாத்தான்கரை பங்கின் கிளை பங்காகவும், கொல்லம் உயர் மறைமாவட்டத்தின் கீழாகவும் இயங்கி வந்தது. 1905-ல் உச்சக்கடை தனி பங்காக உயர்த்தப்பட்டப்போது சுடர்கடை என்ற சூழால், சிலுவைபுரம் ஆகிய பங்கு தளங்கள் உச்சக்கடை பங்கின் கிளை பங்குகளாக மாறின. 

1915-ஆம் ஆண்டு முதல் 1922 ஆம் ஆண்டு வரை ஸ்பெயின் நாட்டு அருள்தந்தை ஜாண் டமாசின் அவர்கள், உச்சக்கடை பங்கின் பங்குப் பணியாளராக பணியாற்றினார். இவர் 1920 -ஆம் ஆண்டு சுடர்கடை (சூழால்) பகுதி மக்களுக்காக ஒரு குடில் அமைத்து, அதில் வழிபாடு நடத்தினார்கள். அந்நாட்களில் ஏறக்குறைய 300 -பேர் கிறிஸ்தவம் தழுவி, இப்பங்கின் உறுப்பினர்களாக ஆனார்கள். இதற்குபின் 1922 -ஆம் ஆண்டு அருள்தந்தை பீட்டர் லாசர் கிறிஸ்டியான் அவர்கள் உச்சக்கடை பங்கின் பங்குதந்தை ஆனார்கள்.

நிலம் வாங்கிய வரலாறு :

அருள்தந்தை பீட்டர் லாசர் கிறிஸ்டியான் காலத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட ஓலைக் குடில் கோயில் மழையினால் இடிந்து விழுந்தது. இதனால் வழிபாடும் தடைபட்டது. இதனால் பங்கு மக்கள் பலரும் பிரிந்து அருகிலுள்ள இரட்சண்ணிய சேனையில் சேர்ந்தார்கள். கோயில் இல்லாததாலும், புதிய ஆலயம் கட்ட இடம் இல்லாததினாலும், பிரிந்து போன மக்களை ஒன்று சேர்த்து பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு ஆலயத்திற்காக 2 ஏக்கர் 79 சென்ட் நிலம் ரூ. 1534.50 பைசாவுக்கு வாங்கப்பட்டு, 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 - ஆம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிரிந்து போன பலரும் திரும்ப வந்தார்கள். அப்போது ஏறக்குறைய 500 பேர் பங்கு உறுப்பினர்களாயும், அவர்களோடு ஒரு உபதேசியாரும் இருந்தார்கள்.

1928 முதல் 1946 வரை உச்சக்கடை பங்கு பணியாளராக அருள்தந்தை. ஜெரால்டு பணியாற்றினார்கள். இக்காலகட்டத்தில் 1930 மே மாதம் 26-ம் தேதி கொல்லம் உயர் மறை மாவட்டத்திலிருந்து பிரிந்து, கோட்டாறுமறைமாவட்டம் உதயமானது. அப்போது கொல்லம் உயர் மறைமாவட்டத்தின் கீழ் கிளைப் பங்காக செயல்பட்ட சிலுவைபுரம் தனி பங்காக உயர்த்தப்பட்டது. சூழால் அதன் கிளைப் பங்காக இணைக்கப்பட்டது. 

கோட்டாறு மறைமாவட்டம் பிரியும் காலத்தில் தான் சூழால் பங்கின் புதிய ஆலயம் கட்ட முயற்சிகளும் எடுக்கப்பட்டன. கொல்லம் உயர் மறைமாவட்டத்தின் கீழ் உச்சக்கடை பங்கின் பங்குபணியாளர் அருள்தந்தை. ஜெரால்டு 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் நாள் புதிய ஆலயம் கட்ட அரசிடம் அனுமதிப் பெற்றார். புதிய ஆலயம் கட்ட அருள்தந்தை ஜெரால்டு கொல்லம் உயர்மறை மாவட்ட ஆயர் மரிய பென்சிகரிடம் அனுமதி கேட்டபோது, அவர் கோட்டாறு மறைமாவட்ட புதிய ஆயரிடம் இதை நான் பரிந்துரைக்கிறேன் என்று, பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அருள்தந்தை ஜெரால்டு அவர்களால் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 க்கும் 29 க்கும் இடைப்பட்ட நாளில் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கலாம், எனவே தான் தூய மிக்கேல் அதிதூதரை பாதுகாவலராக ஏற்றுக் கொண்டார்கள் என்று ஒரு கூற்றும், 1920-ல் ஓலைக் குடிசை வழிபாட்டிற்காக இவ்விடத்தில் அமைக்கப்பட்ட போது இப்போதுள்ள குருசடியின் அருகில் ஒரு கிணறு தோண்டப்பட்டதாகவும், சுமார் 40 அடிக்கு மேல் தோண்டிய போது அது இடிந்து விழத் தொடங்கியதாகவும், மீண்டும் தோண்ட முயற்சிகள் எடுக்கப்பட்ட போது சாத்தான் அதனை உடைத்து விட்டதாகவும், எனவே தீயசத்தியை முறியடிக்க இந்த ஆலயத்திற்கு மிக்கேல் அதிதூதரின் பெயரை சூட்டியிருப்பார்கள் என்று மற்றொரு கூற்றும் பேச்சு வழக்கில் உள்ளது.

பின்னர் 1931-ஆம் ஆண்டு சிலுவைபுரம் பங்கின் முதல் பங்கு பணியாளர் அருள்தந்தை ஸ்டீபன் நாசரேத்து அவர்களின் முயற்சியால் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு போதிய அளவு வழிபாட்டு பொருள்கள் இல்லாததால், இவர்தான் வழிபாட்டு பொருள்களை வாங்கி இருக்க வேண்டும். இவரது காலத்தில் 01-04-1931ல் ஆலய வளாகத்தில் ஒரு வழியோர குருசடியும் கட்டப்பட்டது. அதன் பின் அருள்தந்தையர்கள் அம்புரோஸ், பால்டன்ஸ், டோமினிக், பெஞ்சமின் விளாஸ், பிரான்சிஸ் போர்சியா, பீட்டர் எ.ஜெ. ஜோசப், வலேரி மெலாட், சூசை மரியான், ஸ்டென்சிலாஸ், அந்தோணி முத்து ஆகியோர் பணியாற்றினார்கள்.

அருள்தந்தை. வலேரி மெலாட் (17-05-1960- 24-02-1962) பங்குத்தந்தையாக இருந்த காலத்தில், காக்கவிளை இறைமக்களுக்காக நிலம் வாங்கி ஆலயம் கட்டினார்கள். 1975-ஆம் ஆண்டு அருள்தந்தை ராபர்ட் அவர்கள் பங்கு தந்தையாக இருந்த போது ஆலய வளாகத்தில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிலம் வழங்கப்பட்டது.

மேலும் ஆலய வளாகத்தில் குருசடி ஒன்றும் கட்டப்படட்து. அருள்தந்தை லூக்காஸ் அவர்கள் 19-10-1979 ஆம் ஆண்டு பங்கு பணியாளராக பொறுப்பேற்றோர். இவர் காலத்தில் பங்கு பேரவை உருவாக்கப்பட்டது. அத்தோடு பழைய ஆலயம் விரிவாக்கப்பட்டு, இரு சிறிய அறைகள் கட்டப்பட்டன. ஆலயத்திற்கு மின் இணைப்பும் பெறப்பட்டது. அருள்தந்தை ஜஸ்டஸ் (21-05-1985 - 12-06-1991) மிக்கேல் அதிதூதரின் திரு சுரூபம் வாங்கி கண்ணாடி கூண்டு அமைத்தார். மேலும் ஆலய வளாகத்தின் எல்லைகளில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. 

01-03-1988 அன்று, மணலி சூழாலிலிருந்து பிரிக்கப்பட்டு கிளைப்பங்காக உயர்த்தப்பட்டது. அத்தோடு சூழால் தனிபங்காக மாற வேண்டும் என்ற கோரிக்கை வலுபட்டு, ஆயருக்கு பங்கு மக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அருள்தந்தை ஜஸ்டஸ் முயற்சியால், 25-05-1991 ஆம் ஆண்டு சூழால் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயமானது, சிலுவைபுரம் பங்கிலிருந்து பிரிந்து, கோட்டாறு மறைமாவட்டத்தின் 100-வது பங்காக மணலி, குளப்புறம், சந்தனபுரம் ஆகிய கிளைப் பங்குகளைக் கொண்டு தனிப்பங்காக உருவானது.

அருள்தந்தை மரியதாசன் அவர்கள் 25-05-1991 அன்று சூழால் பங்கின் முதல் பங்குபணியாளராக பொறுப்பேற்றார். இக்காலத்தில் புதிய ஆலயம் மற்றும் பங்குத்தந்தை இல்லம் ஆகியவை

கட்டப்பட்டன. பங்கு வளர்ச்சிக்காக KSS மூலம் தூய மிக்கேல் தையல் பயிற்சி நிலையமும் துவங்கப்பட்டது.

இவருக்கு பின் அருள்தந்தை கார்மல் அவர்கள் இரண்டு மாதங்கள் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு அருள்தந்தை பெனடிக்ட் M. அனலின் பணியேற்றார்கள். அக்காலத்தில் 4 அறைகள் கொண்ட கடை ஒன்று கட்டப்பட்டது. அத்தோடு ஆலய முகப்பும் கட்டப்பட்டது.

1997-ஆம் ஆண்டு அருள்தந்தை பெர்பெச்சுவல் ஆன்றணி பங்கு பணியாளராக பெறுப்பேற்று 3 அறைகள் கொண்ட கடை கட்டப்பட்டது. ஆலயத்திற்கு முன் மணிக்கூண்டு ஒன்றும் கட்டப்பட்டது.

பின்னர் பணியேற்ற அருள்தந்தை. ஜாண் ராபர்ட் ஜூலியஸ் அவர்கள் சமூக நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

தொடர்ந்து அருள்தந்தை. மரிய சூசை காலத்தில் சமூகநலக் கூடத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. அருள்தந்தை. மேரிஜாண் அவர்கள் காலத்தில் விடியல் சமூக நலக் கூடம் கட்டி முடிக்கப்பட்டு, அர்ச்சிக்கபட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆலய முன் பகுதியிலுள்ள மணிக்கூண்டோடு சேர்த்து, குருசடி ஒன்றும் கட்டப்பட்டது. அருள்தந்தை சுரேஷ்குமார் காலத்தில் தேருவிளையில் குருசடி ஒன்று கட்டப்பட்டது. ஆலய வளாகம் சீர்செய்யப்பட்டு, சமூக நலக் கூடத்திற்காக ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. அருள்தந்தை காட்வின் செல்வ ஜஸ்டஸ் அவர்கள் காலத்தில் பங்கு பயிற்சி அறை கட்டப்பட்டது. அதன் பின் அருள்தந்தை சகாய வில்பிரட் ஓராண்டு பங்கு பணியாளராய் பணியாற்றினார். 22.05.2016 முதல் அருள்தந்தை M. மார்ட்டின் தற்போதையை பங்குதந்தையாக செயல்பட்டு வருகிறார்.

பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, புதிய ஆலயத்திற்கு 29.09.2019 அன்று குருகுல முதல்வர் ஏசு ரத்தினம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி. M. மார்ட்டின் அவர்களின் வழிகாட்டலில், சூழால் இறைமக்களின் ஒத்துழைப்பு, நன்கொடைகள் வழியாக அழகிய ஆலயம் கட்டப்பட்டு 18.06.2023 அன்று பாளை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

25.05.1991-ல் உதயமான சூழால் பங்கு கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை புரிந்து செயலூக்கம் பெற்று நடைபயிலுகிறது.

ஏழைப்பெண் திருமண உதவித்திட்டம், ஏழை மாணவர்கல்வி உதவித் திட்டம், முதியோர் நல உதவி திட்டம், வீடு கட்டுதல் திட்டம், நோயாளிக்கு உதவுதல் ஆகிய எளியோர் வாழ்வு மேம்பாட்டு செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறது.

சூழால் என்ற ஆலமரம், கொல்லம் உயர் மறைமாவட்டம் உச்சக்கடை பங்கின் கிளைப் பங்காக 10 ஆண்டுகளையும், சிலுவைபுரம் பங்கின் கிளைப் பங்காக 60 ஆண்டுகளையும், தனி பங்காக 30 ஆண்டுகளையும் கடந்து முன்னோக்கிச் செல்கிறது. கடந்த 30 ஆண்டுகள் இறையாட்சியின் பாதையில் வாழ்வு பகிர்வதற்கே என்னும் விருதுவாக்கோடு, ஏழைகள் வாழ்வு ஏற்றம்பெற; ஒன்றிப்பிலும், நட்பிலும், பகிர்விலும், செபத்திலும் நிறை வாழ்வை நோக்கி பயணித்த நாள்களை நினைத்து இறைவனை நன்றியோடு ஆராதிக்கின்றனர். அன்றும் இன்றும் என்றும் சூழால் இறைசமூகத்தை பாதுகாக்கும் தூய மிக்கேல் அதிதூதரை வாழ்த்தி வணங்குகிறோம்.

பங்கின் குருசடிகள்:

1. புனித மிக்கேல் அதிதூதர் குருசடி

2. புனித அந்தோனியார் குருசடி

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பீடச்சிறுவர்

2. பாலர்சபை

3. சிறுவழி இயக்கம்

4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

5. இளந்தென்றல் இளைஞர் இயக்கம்

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. கத்தோலிக்க சேவா சங்கம் (ஆண்கள்)

8. மரியாயின் சேனை

9. விவசாயிகள் சங்கம்

10. கிராம முன்னேற்ற சங்கம்

11. கைகள் இயக்கம்

12. பெண்கள் இயக்கம்

13. திருவழிபாட்டுக் குழு

14. மறைக்கல்வி மன்றம்

15. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

16. அன்பியங்கள்

17. பங்கு அருட்பணிப் பேரவை

18. தொழிலாளர் இயக்கம்

19. கத்தோலிக்க சேவா சங்கம் (பெண்கள்)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. மரியதாசன் (25.05.1991-06.05.1995)

2. அருட்பணி. கார்மல் (06.05.1995-16.08.1995)

3. அருட்பணி. பெனடிக்ட் M. D. ஆனலின் (16.08.1995-15.11.1997)

4. அருட்பணி. பெர்பெச்சுவல் ஆன்றனி (15.11.1997-07.05.2002)

5. அருட்பணி. ஜான் ராபர்ட் ஜூலியஸ் (07.05.2002-25.05.2003)

6. அருட்பணி. மைக்கிள் ராஜ் (25.05.2003-22.11.2003)

7. அருட்பணி. மரிய சூசை (22.11.2003-23.05.2009)

8. அருட்பணி. மேரி ஜாண் (23.05.2009-25.06.2012)

9. அருட்பணி.‌ சுரேஷ் குமார் (25.06.2012-12.05.2014)

10. அருட்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ் (12.05.2014-18.06.2015)

11. அருட்பணி. சகாய வில்பிரட் (18.06.2015-22.06.2016)

12. அருட்பணி. M. மார்ட்டின் (22.06.2016---)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. M. மார்ட்டின் அவர்கள