744 புனித பாத்திமா மாதா ஆலயம், கண்டர்விளாகம்

          

புனித பாத்திமா மாதா ஆலயம்

இடம்: கண்டர்விளாகம்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: குளச்சல்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. ஜான் குழந்தை

குடும்பங்கள்: 250

அன்பியங்கள்: 9

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:45 மணி மற்றும் காலை 08:00 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணிக்கு

சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி

திருவிழா: பாத்திமா மாதாவின் 6-வது காட்சி நாளாகிய அக்டோபர் 13-ம் தேதியை அடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜான் போஸ்கோ, MSFS (late)

2. அருட்பணி. ஜெயகுமார், MSFS

3. அருட்பணி. அல்போன்ஸ், SDB

4. அருட்சகோதரி.‌ மேரி விஜிலா

வழித்தடம்:

நாகர்கோவில் -குளச்சல் வழித்தடத்தில், வாணியக்குடியில் இறங்கி, நடக்கும் தொலைவில் கண்டர்விளாகம் உள்ளது. 

மார்த்தாண்டம் -கருங்கல் -ஆலஞ்சி -கண்டர்விளாகம்

Location map:

St.Fathima Matha Church,Kandervilagam

56PP+5C8, Panavilai, Tamil Nadu 629251

https://maps.app.goo.gl/tDid6ah4hxUQwaiq7

வரலாறு:

முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி மாவட்டத்தில், குளச்சல் ஊருக்கு மேற்கே 3கி.மீ தொலைவில் வாணியக்குடி என்னும் கடற்கரை ஊருக்கு வடக்கே, வற்றாத மூன்று குளங்களைக் கொண்டு இயற்கை வளம்மிக்க பூமியாக விளங்கும் உள்நாட்டுப் பகுதி தான் கண்டர்விளாகம். இங்கு அமைந்துள்ள புனித பாத்திமா மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்...

முன்வரலாறு:

1541 ஆம் ஆண்டு கோவா வந்திறங்கிய புனித பிரான்சிஸ் சவேரியார், மணப்பாடு, கன்னியாகுமரி பகுதிகளில் நற்செய்தி அறிவித்தபின், இப்பகுதியில் வந்து பணியாற்றினார்.  அப்போதிருந்தே இப்பகுதியில் கிறிஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள். புனித ஞானப்பிரகாசியார் குருசடி, புனித சவேரியார் குருசடி மற்றும் இப்பகுதியில் உள்ள பழைய கல்லறைகளையும் இதற்குச் சான்றெனக் கொள்ளலாம்.

18-ம் நூற்றாண்டில் 1749-க்கும் 1751-க்கும் இடைப்பட்ட காலத்தில் மறைசாட்சி தேவசகாயம் (நீலகண்டபிள்ளை) இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக சொல்லப் படுகிறது. அவர் திருவிதாங்கூர் அரசின் முக்கிய இடங்களுக்கு கைவிலங்குடன் கொண்டு செல்லப்பட்டார். அப்போது குன்னங்கல் பகுதியில் கொண்டு வரப்பட்டார் என்பது வாய்வழிச் செய்தியாகும்.

தற்போதைய வரலாறு:

1949 ஆம் ஆண்டு வரை கண்டர்விளாகம் ஊர், ஆலஞ்சி புனித சவேரியார் பங்கின் கீழ் இயங்கிய ஒரே ஊராகவே இருந்தது.‌ 1949 பிப்ரவரி மாதம் ஆலஞ்சி ஆலயத் திருவிழாவைத் தொடர்ந்து கண்டர்விளாகம் கத்தோலிக்க இறைமக்கள் தாங்கள் தனியாக ஆலயம் கட்டி மறைத்தளம் உருவாக்க முடிவு செய்தார்கள்.

கண்டர்விளாகத்தில் இருந்த ஒரு குடும்பம் 22 சென்ட் நிலம் கொடுக்கவே, அதில் ஓலைக்கூரை ஆலயம் கட்டப்பட்டு, கையில் குழந்தை இயேசுவைத் தாங்கிய மாதா சுரூபம் நிறுவப்பட்டு, வழிபாடுகள் தொடங்கின. அப்போது குறும்பனை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. உபால்டுராஜ் அவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்தார்.‌ அவரது முயற்சியால் புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 05.10.1949 அன்று ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

பாத்திமா மாதா ஆலயம்:

1950 ஆம் ஆண்டில் போர்த்துகல் நாட்டின் பாத்திமாவிலிருந்து "திருப்பயணச் சுரூபம்" (Pilgrim Statue) ஒன்று உலகின் பல பகுதிகளிலும் மக்களின் வணக்கத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டது. இந்தியாவிலும் பல இடங்களுக்கு கொண்டு வரப்பட்டது. இப்பகுதிக்கும் வந்தது.

பாத்திமா மாதா சுரூபம் ரீத்தாபுரத்தில் இருந்து இரும்பிலி மற்றும் மேட்டுக்கடை வழியாக வாணியக்குடி கொண்டு செல்லப்பட்டது. மேட்டுக்கடை சந்திப்பில் கண்டர்விளாகம் மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்றனர். 

அச்சமயம் மாதாவின் சுரூப பவனியை பார்க்க இயலாமல் படுக்கையில் இருந்த மரியம்மாள் என்ற பெண்மணிக்கு, பாத்திமா மாதா கனவில் தோன்றி எனக்கு இப்பகுதியில் ஒரு ஆலயம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஊராரும் ஒன்றுகூடி வந்து இதனை ஏற்று 'பரலோக மாதா' என்னும் பாதுகாவலி பெயரை 'பாத்திமா மாதா' என்று மாற்றினார்கள்.

முதல் ஆலயம் அர்ச்சிப்பு:

1949-ல் ஆரம்பிக்கப்பட்ட ஆலயக் கட்டுமானப் பணிகள் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக மெதுவாகவே நடந்து வந்தது. அருட்பணி. ஜேக்கப் லோப்பஸ் அவர்கள் குறும்பனை பங்குத்தந்தையாக இருந்த போது ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 04.10.1956 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ரோக் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

முதலாம் விரிவாக்கம்:

1996 ஆம் ஆண்டு அருட்பணி. சேகர் மைக்கேல் பணிக்காலத்தில் முதலாவது விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. ஓட்டுக்கூரை ஆலயத்திற்கு பின்பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய பீடம், பெரிய பாடுபட்ட சுரூபம், புதிய வட்ட வடிவான முகப்புடன் நற்கருணைப் பெட்டியும் வைக்கப் பட்டன. இவை மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 05.12.1998 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 

தனிப் பங்காக உயர்வு:

கண்டர்விளாகம் ஆலயமானது தொடக்கத்தில் குறும்பனை பங்கின் கிளைப்பங்காகவும், 1944 ஆம் ஆண்டு வாணியக்குடி தனிப்பங்கான போது அதன் கிளைப்பங்காகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. 15.06.2005 அன்று கண்டர்விளாகம் தனிப் பங்காக உயர்வு பெற்றது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. கிளேட்டன் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

இரண்டாம் விரிவாக்கம்:

2010 ஆம் ஆண்டு ஆலயத்தை மீண்டும் விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டு கட்டிடக்குழுவும் ஏற்படுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் ஆலய விரிவாக்கம் என்பது புதியதோர் ஆலயம் என மாற்றம் பெற்றது.‌ 01.01.2012 அன்று தற்போதைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நவம்பர் 30 ம் தேதி வீசியடித்த ஒக்கி புயலால் பழைய ஆலயகூரை மிகவும் மோசமாக பாதிப்படைந்தது. ஆகவே புதிய ஆலயப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, அருட்பணி. ஜான் குழந்தை பணிக்காலத்தில் 13.10.2019 அன்று மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

புதிய ஆலயத்தின் சிறப்புகள்:

போர்த்துகல் நாட்டின் பாத்திமா என்னும் இடத்தில் 1917 ஆம் ஆண்டு தேவமாதாவின் காட்சி அருளப்பட்டவர்களில் ஒருவராகிய அருட்சகோதரி. லூசி அவர்கள் விளக்கினார். அவர் விளக்கியதற்கு ஏற்றவாறு 1947 ஆம் ஆண்டு பாத்திமா அன்னை சுரூபம் சிற்பக் கலைஞரால் வடிவமைக்கப் பட்டது. 1950 ஆம் ஆண்டு அந்த சுரூபத்தை அடியொற்றி பாத்திமா நகரிலே வடிவமைக்கப் பட்ட சுரூபங்கள் அவ்வப் போது உலகம் முழுவதும் திருப்பயணமாக கொண்டு வரப்பட்டது. அதே போன்று ஒரு சுரூபமானது பாத்திமா திருத்தல நிர்வாகத்தால் கண்டர்விளாகம் ஆலயத்திற்கு 2019 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப் பட்டது. பாத்திமா அன்னையின் அழகையும் அற்புதங்களையும் தரிசிக்க ஏராளமான இறைமக்கள் நாள்தோறும் ஆலயம் வருகின்றனர்.

உரோமை கட்டிடக்கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தி எழிலுற அமைக்கப்பட்ட மூன்று கோபுரங்கள் உள்ளன. இதில் நடுக்கோபுரம் 127 அடி உயரம் கொண்டது.‌ இதில் பாத்திமா மாதா காட்சியில் காட்டப்பட்ட மரியாவின் மாசற்ற இதயம், அதற்கு மேல் மகுடம் அமைக்கப்பட்டுள்ளது.

இளையோர்களால் காணிக்கையாக கொடுக்கப்பட்ட அழகிய மாதா சுரூபமானது நடுக்கோபுரத்தில் வைக்கப் பட்டுள்ளது தனிச் சிறப்பு.

🪴மாதாவின் வரலாறு, புதுமைகள் அடங்கிய கண்ணாடி ஓவியங்கள் அமைந்துள்ளது சிறப்பாகும்.

உரோமை கட்டிடக்கலை 'போரோக்' கலை நுணுக்கங்கள்படி அமைந்துள்ள திருப்பீடம் தனிச் சிறப்பு கொண்டதாகும்.

53 அடி உயரம் கொண்ட கல்லில் செதுக்கப்பட்ட கொடிமரம் ஒன்று உள்ளது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

3. கத்தோலிக்க சேவா சங்கம்

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. பாலர் சபை

6. சிறுவழி இயக்கம்

7. கிராம முன்னேற்ற சங்கம்

8. இளையோர் இயக்கம்

9. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

10. தொழிலாளர் இயக்கம்

11. திருவழிபாட்டுக் குழு

12. பங்குப்பேரவை

13. மறைக்கல்வி

பங்கின் தனிச்சிறப்புகள்:

1. தேவமாதா சிற்றாலயம், பனவிளை

2. பாத்திமா மாதா கெபி

3. புனித அந்தோனியார் குருசடி

4. அருட்பணி. ஜான் போஸ்கோ நூலகம்

5. புனித பாத்திமா மாதா சமூக நலக்கூடம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி.‌ கிளேட்டன் (15.06.2005 -23.06.2006)

2. அருட்பணி. லாரன்ஸ் late (23.06.2006 -26.12.2006)

3. அருட்பணி. N. M. ஹென்றி (26.12.2006 -25.05.2008)

4. அருட்பணி. A. மரியதாஸ் (25.05.2008 -20.05.2010)

5. அருட்பணி.‌ ஆன்ட்ரூ (20.05.2010 -20.02.2015)

6. அருட்பணி. கஸ்பார் (20.02.2015 -15.06.2015)

7. அருட்பணி. இவாஞ்சலின் பெஸ்கி (15.06.2015 -20.06.2016)

8. அருட்பணி. மார்க்கோனி ரவிச்சந்திரன் (20.06.2016 -05.10.2017)

9. அருட்பணி. ஜான் குழந்தை (05.10.2017 முதல்..)

ஆலய வரலாறு மற்றும் தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜான் குழந்தை அவர்கள்.

தகவல்கள் திரட்ட உதவியவர்: அருட்சகோதரர். அபிசன்

ஆலய புகைப்படங்கள்: நண்பர் திரு. Antony Raj (Matha TV)