01 புனித அந்தோணியார் ஆலயம் விழுந்தயம்பலம்

   

புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : விழுந்தயம்பலம்

மாவட்டம் : கன்னியாகுமரி 
மறை மாவட்டம் : குழித்துறை 
மறைவட்டம் : வேங்கோடு

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்கு : புனித காணிக்கை மாதா ஆலயம், மாதாபுரம்

குடும்பங்கள் : 300

அன்பியங்கள்: 12 

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு 

பங்குத்தந்தை: அருட்பணி. பிரைட் சிம்சராஜ் 

திருவிழா : ஜனவரி மாதம் துவக்கத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள். 

வழித்தடம் : நாகர்கோவில் -கருங்கல்- விழுந்தயம்பலம். 

மார்த்தாண்டம் -தொலையாவட்டம் -விழுந்தயம்பலம். 

Location map : https://maps.google.com/?cid=9781315832753434629

வரலாறு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த விழுந்தயம்பலம் ஊரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயமானது  சிறந்த வரலாற்றையும், இறை விசுவாசத்தையும் தன்னகத்தே கொண்டது... வாருங்கள் இதன் வரலாற்றைக் காண்போம்.. 

புனித பிரான்சிஸ் சவேரியார் கி.பி 16 -ஆம் நூற்றாண்டில் வேங்கோடு பகுதி வழியாக கடந்து சென்ற காலத்தில் இருந்தே, அங்குமிங்குமாக பல குடும்பங்கள் விழுந்தயம்பலம் பகுதியில் கிறிஸ்தவம் தழுவினர். 

விழுந்தயம்பலத்தில் வழிபோக்கு அம்பலம் (வழியோர ஆலயம்) இருந்த அம்பலத்து விளையில் முதன்முதலாக கல்லால் ஒரு மேடு உருவாக்கப்பட்டு, அதில் ஒரு சிலுவை நாட்டப் பட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, சிலுவையின் அருகிலேயே ஒரு உண்டியல் வைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் இப்பகுதியில் மக்கள்தொகை குறைவாகவும், அவர்களில் பெரும்பாலும் கிறிஸ்தவத்தில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்த மக்கள் பெரும்பாலும் பனையேற்ற தொழில் செய்து வந்ததாலும், இத்தொழிலை ஓய்வின்றி செய்ய வேண்டி வந்ததாலும், அதனை ஆண்களும் பெண்களும் இணைந்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததாலும், ஆலயம் சென்று வழிபாடுகளில் பங்கேற்க இயலாதிருந்தனர். மேலும் இங்கு வாழ்ந்த வேறு பல இனத்தாரும் தங்கள் தொழில் காரணமாக ஆலயம் செல்ல இயலாத நிலையில் இருந்தனர். இவ்வேளையில் செழிப்பான பகுதிகளில் இருந்து கொண்டு இந்த மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஆதிக்க சாதியினரிடமிருந்து படிப்படியாக இவர்கள் விடுதலையடைந்து வந்தனர். 

அந்த காலகட்டத்தில் பங்கு ஆலயமாக விளங்கிய தொலைவில் உள்ள ஆலயங்களிலிருந்து அருட்பணியாளர்கள் வந்து, இந்த மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்ற சிரமமாக இருந்தது. என்றாலும் அவர்கள் தளராமல் இறைப்பணி செய்து வந்தனர். 

கி.பி 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் நீண்ட காலம் மிஷன் பகுதிகளுக்கு (மறைப்பரப்பு தளங்கள்)  பொறுப்பிலிருந்த (அக்காலத்தில் விழுந்தயம்பலமும் மறைப்பரப்பு தளமாக இருந்தது) வேங்கோடு பங்குத்தந்தை அருட்தந்தை. வர்க்கீஸ் அவர்கள், வழிபோக்கு அம்பலம் அருகில் குடியிருந்த உம்மிணி அப்பச்சி என்று செல்லமாக அழைக்கப்படும் திரு. ஞானமுத்து அவர்களிடமிருந்து 135 சென்ட் நிலத்தை இனாமாகவும், சிறிது விலை கொடுத்தும் வாங்கினார். இதன் ஒருபகுதி சந்தைக்கு வழங்கப்பட்டது. மேலும் இவரது முயற்சியால் கீழ்குளம் - தொலையாவட்டம், விழுந்தயம்பலம் - தேங்காப்பட்டணம் சாலை வெட்டப்பட்டது (போடப்பட்டது). இந்த சாலைகள் விழுந்தயம்பலத்திற்கு புதுப் பொலிவை ஏற்படுத்தின. 

இந்த நேரத்தில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடமாகிய முச்சில்லியார் விளையில் புனித ஜார்ஜியார் குருசடி ஒன்று வைக்கப்பட்டு, அதில் பக்தி முயற்சிகள் முறையாக நடந்து வந்தன. 

அதன்பிறகு தற்போதைய ஆலயம் இருக்கும் பகுதியில் முதலில் பனை ஓலையால் ஆன ஆலயமும், பின்னர் தென்னை ஓலை வேய்ந்த சற்றுப் பெரிய ஆலயமும் அமைக்கப்பட்டு வழிபாடுகள் மற்றும் மறைக்கல்வி நடத்தப்பட்டு வந்தன. 

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பாகுபாடின்றி ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டனர். இவ்வாறாக கிறிஸ்தவ வளர்ச்சி நீண்டு கொண்டே சென்றது. 

வேங்கோடு ஆலயத்தின் பங்குத்தந்தையாக அருட்தந்தை. பீட்டர் கிறிஸ்டியன் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் 1950 லிருந்து விழுந்தயம்பலம் ஆலயத்திற்கு தவறாமல் வந்து, வழிபாடுகள் நடத்தத் தொடங்கினார். இவருக்கு திருச்சபையின் பாலும், இயேசு கிறிஸ்துவின் பாலும் உள்ள பற்றுதலால், தமது குடும்பத்தில் தமக்குரிய  நிலங்களை விற்றுக் கிடைத்த பணத்தில் இந்தப் பங்கில் செலவு செய்தார். குருக்கள் இல்லம் (1954-1956) கட்டினார். அப்போதைய கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி சே. ச அவர்களால் இல்லம் அர்ச்சிக்கப்பட்டு, திருப்பலி நிறைவேற்றி வந்தார். 

மேலும் தமது சொந்த முயற்சியில், மக்களிடம் பனைமரத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு, மக்களின் ஒத்துழைப்புடன் ஓட்டுக்கூரை ஆலயமும் அதன் உயர்ந்த கோபுரமும் கட்டப்பட்டு 24.01.1957 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி சே. ச அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்தந்தை. பீட்டர் கிறிஸ்டியன் அவர்களுக்கு புனித அந்தோணியார் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக புனித ஜார்ஜியார் குருசடி, புனித அந்தோணியார் குருசடியாக மாற்றப்பட்டு,  மூன்றடுக்குகள் கொண்ட குருசடியாக கட்டப்பட்டது. 

படுவூர் என்ற ஊரிலிருந்து திருமணம் செய்து கொள்ளாமல் அர்ப்பணத்துடன் வாழ்ந்த இரு சகோதரிகளை வரவழைத்து மறைக்கல்வி வகுப்பை நடத்தி வந்ததுடன், மறைக்கல்விக்கு வராத குழந்தைகளை இல்லங்களுக்குச் சென்று அழைத்து வந்து கற்பித்தார்கள். மேலும் கம்பிளார் ஊரில் புனித சூசையப்பர் ஆலயம் 26.07.1964 இல் கட்டப்பட்டு, வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தின் கிளைப் பங்காக செயல்படத் தொடங்கியது. 

மேலும் அருட்தந்தை. பீட்டர் கிறிஸ்டியன் அவர்களின் இறுதிக்காலத்தில் விழுந்தயம்பலத்தில் நாள்தோறும் திருப்பலியும், எல்லா விழாக்களும் நடத்தப்பட்டு வந்தன. அருட்தந்தைக்கு திருப்பலி நிறைவேற்ற இயலாத நிலையில் மீண்டும் வேங்கோட்டின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. அதன்பிறகு ஓரிரு குருக்களின் பணிக்காலத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

1971 ஆம் ஆண்டு வேங்கோடு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தை. R. லாரன்ஸ் அவர்கள் மறைக்கல்வி மன்றம் ஆரம்பித்து, மறைக்கல்விக்கு மறுமலர்ச்சி ஊட்டினார்கள். தேன்கூடு இயக்கத்தை ஆரம்பித்து, வீடுவீடாகச் சென்று மக்களை ஒன்று திரட்டியதன் பயனாக கிறிஸ்தவ மக்கள் வாழ்வில் பிரகாசத்தை உருவாக்கினார்.  அருட்தந்தையின் முயற்சியாலும், தேன்கூடு இயக்கத்தினரால் புனித அந்தோணியார் கலையரங்கம் கட்டப்பட்டது. ஆலய வளாகத்தில் மண்டிக் கிடந்த காடுகள் அழிக்கப்பட்டு, தென்னை மரங்கள் நடப்பட்டன. புனித அந்தோணியார் நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் திருப்பலி வைத்து பக்தி முயற்சியை வளர்த்தார். ஆலய வளாகத்தில் வானளாவ உயர்ந்து நின்ற சவுக்கு மரத்தை ஆலய கொடிமரமாக மாற்றினார். இவ்வாறு பங்கு வளர்ச்சியில் பங்கு மக்களை ஈடுபடுத்திய பெருமை அருட்தந்தை. R. லாரன்ஸ் அடிகளாரையே சாரும்.

1974 அம் ஆண்டு மே மாதம் வேங்கோட்டின் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தை. A. M. ஹிலாரி அவர்கள், விழுந்தயம்பலத்தில் பெரியோர்களை ஒருங்கிணைத்தார். நான்கு கடைகள் அமைத்து பொருளாதாரத்திற்கு உதவினார். 

1980 ல் பொறுப்பேற்ற அருட்தந்தை. M. அருள்சுவாமி அவர்கள் சிறப்பாக திருவழிபாடுகளை நடத்த உதவியதோடு, விழுந்தயம்பலம் புதிய பங்காக மலர பெரிதும் உழைத்தார். 

தனிப்பங்கு:

13.11.1984 அன்று விழுந்தயம்பலம் புனித அந்தோனியார் ஆலயமானது தனிப்பங்காக மேதகு ஆயர் M. ஆரோக்கியசாமி அவர்களால் உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை. G. மரிய ஆரோக்கியம் அவர்கள் பொறுப்பேற்று வழி நடத்தினார்கள். 

மறைக்கல்வியை ஒழுங்குபடுத்தி, இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். ஆலயத்தின் பழைய பீடம் இடிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் புதிய பீடம் கட்டப்பட்டது. கலையரங்கம் அமைக்கப்பட்டது. இளைஞர்கள் ஒரு நூலகம் வைத்து மக்களுக்கு தொண்டு செய்து வந்தனர். 

இடையில் ஏற்பட்ட சில சமூக காரணங்களால் சோர்வுற்றிருந்த மக்களை தட்டியெழுப்பியவர், 1989 இல் பொறுப்பேற்ற அருட்தந்தை J. லூக்காஸ் அடிகளார் ஆவார். இவரது பார்வை முழுவதும் இளைஞர் சமுதாயத்தை தட்டியெழுப்பி, அவர்களை ஆலய வளர்ச்சிக்கு முழு ஈடுபாடு காட்ட உதவினார். 

ஆலய வளாகத்தில் கன்னியர்மடம் ஒன்றை கட்டியெழுப்பி, தூய கார்மல் ஆருட்சகோதரிகளை வரவழைத்து (16.07.1990) பணி செய்ய வைத்தார். வணிக வளாகத்தில் இருந்த பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிய கான்கிரீட் கடைகள் கட்டப்பட்டன. பழுதடைந்த பழைய பங்குத்தந்தை இல்லம் அகற்றப்பட்டு, ஆலயத்தின் பின்புறம் பழைய இல்லம் இருந்த இடத்திலேயே புதிதாக பங்குத்தந்தை இல்லம் கட்டினார். இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுத்தார். ஆலய தென்பகுதியில் மண் மதிற்சுவர் மாற்றப்பட்டு, கல்சுவர் எழுப்பினார். 

கிளைப்பங்கான கம்பிளாரில் கன்னியர்மடம் கட்டப்பட்டு (01.05.1993) அருட்சகோதரிகளை வரவழைத்து பணியாற்றச் செய்தார். 

விழுந்தயம்பலத்தின் ஒருபகுதியாக இருந்த மாதாபுரம் ஊரில் புனித காணிக்கை மாதா ஆலயம் கட்டப்பட்டு, 23.12.1994 அன்று மேதகு ஆயர் A. லியோன் தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, வழிபாடுகள் நடத்தத் தொடங்கினார். 

1995 ல் பொறுப்பேற்ற அருட்தந்தை. A. மரியதாஸ் அவர்கள் ஆன்மீகப் பாதையில் மக்களை சிறப்பாக வழி நடத்தினார். மாதாபுரம் கிளைப் பங்காக உயர்த்தப்பட்டது

1996 இல் பொறுப்பேற்ற அருட்தந்தை S. அருளப்பன் அவர்கள் ஆலய கோபுரம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்று தீர்மானம் செய்து, அதற்கான திட்டங்களைத் தீட்டி ஆலய மாதிரி படம் வரைந்து ஆயரின் ஒப்புதல் பெற்றார். புனித அந்தோணியார் பாலர் பள்ளி ஒன்றை நிறுவினார். தையல் பயிற்சி நிலையம் தொடங்கினார். பங்கு ஏழு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பங்குப்பேரவையை அமைத்தார். 

1998 இல் பொறுப்பேற்ற அருட்தந்தை I. அருள் ஜோசப் அவர்கள் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தியதுடன், கிடைத்த நிதியுதவியைக் கொண்டு புதிய ஆலயத்திற்கு 29.10.2000 அன்று பேரருட்பணி. ஜான் குழந்தை அவர்களால் அடிக்கல் போடப்பட்டது. குடும்பக் கையேடு உருவாக்கப்பட்டு ஆலயத்தின் வளர்ச்சிக்கு வழி காட்டினார். 

2001 இல் பொறுப்பேற்ற அருட்தந்தை. P பென்சிகர் அவர்கள், ஆலய கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டார். ஏழு தொகுதிகள் என இருந்ததை ஏழு அன்பியங்களாக உருமாற்றினார். 

2002 இல் பொறுப்பேற்ற  பேரருட்பணி. V. மரியதாசன் அவர்கள் ஆலயப் பணிகளை துரிதப் படுத்தியதுடன், மக்களை ஒருங்கிணைக்க சீரிய முயற்சிகளை மேற்கொண்டார். அருட்தந்தையின் அயராத முயற்சியினால் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 16.01.2004 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. மேலும் பக்த சபைகளை வலுவூட்டினார். 

தொடர்ந்து பணிபுரிந்த அருட்தந்தையர்களின் பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. 

 2017 -ம் ஆண்டில் கல்லால் ஆன அழகிய கொடி மரம் வைக்கப்பட்டது. 2018 -ம் ஆண்டு ஜனவரியில் மக்களின் ஜெப தேவைக்காக அழகிய மாதா கெபியும் கட்டப்பட்டது. 2020 -ஆம் ஆண்டில் பங்குத்தந்தை இல்லம் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது விழுந்தயம்பலம் இறைசமூகம். 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்குப்பேரவை
2. மறைக்கல்வி
3. அன்பிய ஒருங்கிணையம்
4. புனித பிரான்சிஸ் சேவியர் இளைஞர் இயக்கம் 
5. மரியாயின்சேனை
6. அடித்தள முழுவளர்ச்சி சங்கம் 
7. புனித வின்சென்ட் தே பவுல் சபை 
8. பாலர்சபை 
9. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் (Y.C.S) 
10. பாடகற்குழு 
11. திருவழிபாட்டுக்குழு
12. கைகள் இயக்கம் 
13. புனித கார்மல் தோழமை சகோதரிகள்
14. பெண்கள் இயக்கம்.

பங்கின் இல்லங்கள்:

1. புனித கார்மல் அருட்சகோதரிகள் இல்லம் 
2. பங்குத்தந்தை இல்லம். 

வேங்கோடு பங்கின் கிளைப் பங்காக இருந்த போது பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :

1. அருட்பணி. வர்கீஸ் 
2. அருட்பணி. பீட்டர் லாசர் கிறிஸ்டியன் (1950)
3. அருட்பணி. R. லாரன்ஸ் (1971-1974)
4. அருட்பணி. A. M. ஹிலரி (1974-1980)
5. அருட்பணி. M. அருள்சுவாமி (1980-1984)

தனிப்பங்கான பின்னர் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. மரிய ஆரோக்கியம் (13.11.1984 - 07.11.1989)
2. அருட்பணி. லூக்காஸ் (07.11.1989 - 01.05.1995)
3. அருட்பணி. மரியதாஸ் (01.05.1995 - 11.05.1996)
4. அருட்பணி. அருளப்பன் (11.05.1996 - 21.05.1998)
5. அருட்பணி. அருள் ஜோ (21.05.1998 - 25.01.2001)
6. அருட்பணி. பென்சிகர் (25.01.2001 - 19.06.2002)
7. அருட்பணி. மரியதாசன் (19.06.2002 - 31.05.2005)
8. அருட்பணி. கபிரியேல் (31.05.2005 - 22.05.2007)
9. அருட்பணி. சேவியர் பெனடிக்ட் (22.05.2007 - 27.06.2012)
10. அருட்பணி. பெனடிக்ட் M. D ஆனலின் (27.06.2012 - 07.06.2013)
11. அருட்பணி. ஜெயபிரகாஷ் (07.06.2013 - 22.05.2014)
12. அருட்பணி. சேகர் மைக்கேல் (22.05.2014 - 21.05.2016)
13. அருட்பணி. சார்லஸ் விஜூ (21.05.2016-22.01.2024)
14.  அருட்பணி. பிரைட் சிம்சராஜ் (22.01.2024 ---)

பதிவு : தூய காணிக்கை மாதா ஆலயம் மாதாபுரம், குமரி மாவட்டம்.