775 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்

  

புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: சூசைபுரம் (வன்னியூர்)

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: திரித்துவபுரம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: 

உயிர்த்த இயேசு ஆலயம், தோட்டச்சாணி

பங்குத்தந்தை: அருட்பணி. ஜெகன் சில்வெஸ்டர்

தொடர்புக்கு: +91 80564 32816

குடும்பங்கள்: 263

அன்பியங்கள்: 11

ஞாயிறு காலை 06:30 மணி ஜெபமாலை 07:00 மணி திருப்பலி

புதன் மாலை 05:30 மணி ஜெபமாலை 06:00 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி

வெள்ளி மாலை 05:30 மணி ஜெபமாலை 06:00 மணி திருப்பலி

சனி காலை 06:00 மணி ஜெபமாலை 06:30 மணி சிறார் திருப்பலி

திருவிழா: மே மாதம் 01-ம் தேதி நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. சூசைய்யன், SAC

2. அருட்சகோதரி. ஸ்டெல்லா, FMM

3. அருட்சகோதரி.‌ மரிய புஷ்பம், SAT

4. அருட்சகோதரி. ஆஞ்சலின் பபியோலா ராணி, SAT

Location map: https://g.co/kgs/qXx9BL

வரலாறு:

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு கேரளா என இரு மாநில எல்லைகள் இணையும் களியக்காவிளை யிலிருந்து மருதங்கோடு செல்லும் சாலையில் சுமார் 2கி.மீ தொலைவில் சூசைபுரம்  அமைந்துள்ளது. சூசைபுரத்தின் வடக்கே மண்ணரிப்பு, கிழக்கே கக்கோட்டுவிளை, தெற்கே ஒற்றாமரம், வடக்கே வன்னியூர் ஆகிய ஊர்கள் எல்லைகளாக அமைந்துள்ளன. முற்காலத்தில் பனைமரங்களும், தென்னை மரங்களும், மாமரங்களும், நீர் வளமும் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சும் பசுஞ்சோலையாக விளங்கியது. இங்கு பல சமய, சபை மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆலய தோற்றம்:

1932 ஆம் ஆண்டிலேயே சூசைபுரத்திலிருந்து நான்குபேர் திருமுழுக்கு பெற்றுள்ளனர் என்று திரித்துவபுரம் ஆலய பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. திருமுழுக்கு பெற்றவர்களின் இடம் மீனச்சல் எனவும் குறித்து வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் விசுவாசத்தின் அடிப்படையில் இவ்வூரில் வரவுவிளை -ஆலம்பாறை என்ற இடத்தில் ஒரு சிறிய ஆலயமானது, தற்போது இருக்கும் ஆலயத்தின் பின்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. பிறகு அது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்போது முதல் 2012 ஆம் ஆண்டு வரை திரித்துவபுரத்தில் இருந்து அருட்பணியாளர்கள் இங்கு வந்து மக்களின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றி வந்துள்ளனர்.

தொடக்க காலத்தில் சூசைபுரம், வன்னியூர் என்றே அழைக்கப்பட்டு வந்தது.‌ காரணம் மீனச்சல் என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் நாயர் சமூகத்தின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. அந்தக் காலத்தில் நகரப் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் கட்டவோ, வழிபாடுகள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த போதும், சாலையில் மறுபக்கத்தில் உள்ள வன்னியூர் என்ற கிராமத்தின் பெயராலேயே இவ்வாலயம் விளங்கியது.

பங்குப்பணியாளர்களும் பணிகளும்:

1933-ல் திரித்துவபுரம் பங்குத்தந்தை அருட்பணி. மைக்கேல் குரூஸ் அவர்களால் வரவுவிளை -ஆலம்பாறையில் முதன் முதலில் சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது.

பின்னர் அருட்பணி. தனிஸ்லாஸ் மரியா பணிக்காலத்தில் சிறிய ஓலைக் குடிசை ஆலயம் கட்டப்பட்டு, நான்கு குடும்பங்களின் ஒத்துழைப்பால் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.‌

அருட்பணி. F. வர்க்கீஸ் பணிக்காலத்தில் 07.09.1945 அன்று நிலம் வாங்கப்பட்டு, பத்திரப் பதிவு செய்யப்பட்டு, அதில் பெரிய அளவிலான ஓலைகொட்டகை ஆலயம் கட்டப்பட்டது. சில சமூக விரோதிகளால் ஆலயம் தீயிட்டு கொளுத்தப்பட்ட போதும், வழிபாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.

1947 ஆம் ஆண்டு சூசைபுரத்தில் மறைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டு கோட்டார் மறைமாவட்டமானது நான்கு மறைவட்டங்களாக பிரிக்கப்பட்டு, திரித்துவபுரம் ஒரு மறைவட்டமானது. எனவே பங்குப்பணியாளர் சின்னாண்டவர் (Vicar Forane) நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அருட்பணி. மேரி எப்ரேம் கோமஸ் (1949-1971) பணிக்காலத்தில் 50*20 அடி அளவில் ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. 

1971 ஆம் ஆண்டில் இணை பங்குப்பணியாளராக பணிபுரிந்த அருட்பணி.‌ எப்பப்பிரஸ் அவர்கள் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, உயிர்ப்பு பெருவிழா தினங்களில் இங்குள்ள மக்கள் நடந்து வந்து திரித்துவபுரம் ஆலயத்திற்கு சென்றுவரும் சிரமத்த்தைக் கண்டு, சூசைபுரத்தை பங்காக மாற்ற முயற்சித்தார். அதனடிப்படையில் 1971 ஆம் ஆண்டு ஆலயத்தின் அருகில் மக்களின் ஒத்துழைப்புடன் பங்குப் பணியாளர் இல்லம் ஒன்றைக் கட்டினார்.‌ அப்போது தான் அருட்பணி. எப்பப்பிரஸ் அவர்கள் வன்னியூர் என்ற பெயரை "சூசைபுரம்" என்று மாற்றம் செய்தார். 

காலப்போக்கில் ஓடு வேய்ந்த ஆலயத்தில் விரிசல் ஏற்பட்டதாலும், இடப்பற்றாக்குறை காரணமாகவும் அருட்பணி. ஏசுதாசன் தாமஸ் பணிக்காலத்தில் ஆலயம் கட்டப்பட்டு, 1984 ஆம் ஆண்டு கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. யூஜின் குழந்தை (1989-1994) பணிக்காலத்தில் மக்களின் ஆன்மீக வாழ்வை மேம்படுத்த அருட்சகோதரி. குரோணிதாஸ், அருட்சகோதரி. அருள்சீலி மற்றும் இவர்களுக்கு உதவியாக ரெத்தினம் என்ற வேதியரையும் இங்குள்ள பங்குப் பணியாளர் இல்லத்தில் தங்க வைத்தார். ஆலயத்தின் முன்புறம் புனித சூசையப்பர் குருசடி கட்டப் பட்டது.

1994 ல் பொறுப்பேற்ற அருட்பணி. இராபர்ட் அவர்களால் ஆலய ஓட்டுக் கூரை மாற்றப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

அருட்பணி. ஜார்ஜ் (2002-2004) பணிக்காலத்தில் முதன் முறையாக குருத்தோலை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டது‌.  ‌

அருட்பணி. டோமினிக் சாவியோ (2004-2009) பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் உள்ள கிணறு அமைக்கப்பட்டதுடன், ஆலயத்தின் தரைத்தளம் மார்பிளாக மாற்றப் பட்டது. ஆலயத்தின் உட்புறம் இடப்பற்றாக்குறை இருந்ததால் ஆலய பீடத்தில் இருந்த சுவர் அகற்றப்பட்டு, சற்று விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய பீடம் அமைக்கப்பட்டது.

கிறிஸ்தவ வாழ்வும் பணியும்:

திருப்பலி நிறைவேற்றுவதற்காக திரித்துவபுரத்திலிருந்து அருட்பணியாளர்கள் முற்காலங்களில் நடந்து வந்திருக்கிறார்கள். அதன்பிறகு இருசக்கர வாகனங்களில் வந்திருக்கிறார்கள். அவர்கள் வேறு ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றிய பிறகு தான் சூசைபுரம் ஆலயத்திற்கு திருப்பலி நிறைவேற்ற வர வேண்டும். ஆகவே காலதாமதம் ஏற்படாமல் வருவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களை எண்ணிப் பாருங்கள்....!!! அதனையும் தாண்டி சிலநாட்கள் காலதாமதம் ஏற்படும் போது, இங்கு திருப்பலிக்காக காத்திருக்கும் மக்கள் சண்டையிடும் சூழல்களும் வந்துள்ளது. இவ்வாறாக அன்றைய அருட்பணியாளர்கள் கிறிஸ்தவத்தை வளர்க்க மேற்கொண்ட சிரமங்கள் எண்ணிலடங்கா!!!!

அருட்பணி. அருள்ஒளி அவர்கள் திருத்தொண்டராக சூசை புரத்தில் தங்கி செய்த பணிகள் ஏராளம் ஏராளம். அவர் அருட்பணியாளராக ஆன பிறகும் தொடர்ந்து பல மாதங்கள் இங்கு பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் தான் ஆலய இறைமக்களின் படைப்புகளோடு "மொட்டுகள்" என்ற தொகுப்பு இதழ் வெளியிடப் பட்டது.

அருட்பணி. N. மார்ட்டின் அவர்கள் இணை பங்குப்பணியாளராக இருந்து பணி செய்ததுடன், தனிப் பங்காக உருவான போது முதல் பங்குத்தந்தையாகவும் பொறுப்பேற்று வழிநடத்தினார். 

அருட்சகோதரி. ஜூலி அவர்களின் முயற்சியால் வழிபாட்டுக் குழு, பாடகற்குழு, வாசகர்குழு என மூன்று குழுக்கள் உருவாக்கப் பட்டது.

சூசைபுரம் தனிப்பங்கு:

அருட்பணி.‌ K. மரியதாஸ் அடிகளார் அவர்கள் திரித்துவபுரம் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது 07.03.2012 அன்று சூசைபுரம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் தலைமையில் தொடக்க விழாவும் நடைபெற்றது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. N. மார்ட்டின் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். 

சூசைபுரம் பங்கின் ஆறாம் அன்பியத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தோட்டச்சாணி -உயிர்த்த இயேசு ஆலயமானது, பரக்குன்று பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 07.03.2012 அன்று முதல் சூசைபுரத்தின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.

பாலர் பள்ளி:

அருட்பணி. M. அந்தோணி முத்து பணிக்காலத்தில் 05.06.2000 அன்று, முதன்மைப் பணியாளர் அருட்பணி. ஹிலேரியஸ் அவர்களால் பாலர் பள்ளி தொடங்கி வைக்கப்பட்டு, இன்றுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அருட்சகோதரிகளின் நற்செய்திப்பணி:

திரித்துவபுரத்தின் கிளைப் பங்காக சூசைபுரம் இருந்தபோது, அருட்சகோதரிகள் திருப்பலியிலும், மறைக்கல்வி கற்பிப்பதற்கும், இல்ல சந்திப்பு மற்றும் அமைப்பு கூட்டங்களை வழிநடத்தவும் வழிபாடுகளில் உதவி செய்வதற்காகவும் இங்கு வந்து உதவி செய்து வந்தனர். 

தனிப் பங்காக உயர்த்தப்பட்ட பின்னர் அருட்பணி. N. மார்ட்டின் பணிக்காலத்தில் அருட்சகோதரி. எமறன்ஸியானா மற்றும் அருட்சகோதரி. செல்வி ஆகிய இருவரும் மக்களின் ஆன்மீக வாழ்விற்காக, 06.08.2014 முதல் மூன்றாண்டுகள் இங்கு தங்கியிருந்து ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கது. 

பங்கின் செயல்பாடுகள்:

நுழைவாயில்:

அருட்பணி. K. மரியதாஸ் மற்றும் இணைப் பங்குப் பணியாளர் அருட்பணி. N. மார்ட்டின் ஆகியோரின் வழிகாட்டலில் 27.04.2010 அன்று நுழைவாயில் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டது.

புனித சூசையப்பர் குருசடி:

ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த பழைய குருசடி அகற்றப் பட்டு, மூன்றடுக்கு கொண்ட புதிய குருசடி கட்டப்பட்டு, 19.03.2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கொடிமரம்:

அருட்பணி. N. மார்ட்டின் பணிக்காலத்தில் புதிய கொடிமரம் வைக்கப்பட்டு 26.04.2012 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்குப் பணியாளர் இல்லம்:

அருட்பணி. N. மார்ட்டின் பணிக்காலத்தில் பழைய பங்குப் பணியாளர் இல்லம் அகற்றப்பட்டு, முதல் மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு 19.03.2014 அன்று தொழிலதிபர் F. M. செல்வராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேல்மாடி கட்டி முடிக்கப்பட்டு 19.03.2017 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

கலையரங்கம் மற்றும் சுற்றுச்சுவர்:

அருட்பணி. N. மார்ட்டின் பணிக்காலத்தில் புனித சூசையப்பர் கலையரங்கம் கட்டப்பட்டு, 27.04.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தற்போதைய கலையரங்கத்தின் மேற்கு பகுதியில் முத்தமிழ் மன்றத்தால் மேடைபோன்ற அமைப்பு கட்டப்பட்டிருந்தது. 

சமூக நலக்கூடம்:

அருட்பணி. N. மார்ட்டின் பணிக்காலத்தில் புனித சூசையப்பர் சமூக நலக்கூடத்திற்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் வறுவேல் அவர்களால் 01.01.2016 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணி. ஜோசப் வேல்ஸ் ராஜா பணிக்காலத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது. அருட்பணி. டென்சிங் பணிக்காலத்தில் பணிகள் நிறைவு பெற்று குருகுல முதல்வர் பேரருட்பணி. இயேசு ரெத்தினம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. ஜெகன் சில்வெஸ்டர் அவர்களின் முயற்சியால் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக, 27இலட்சம் ரூபாய் செலவில் 26 சென்ட் நிலம் 20.03.2020 ல் வாங்கப்பட்டது. மேலும் ஜெனரேட்டர் ஒன்று வாங்கப்பட்டது. 

ஆலயப் பணியாளர்கள்:

முதல் உபதேசியாராக திரு. தானியேல் அவர்களும், இரண்டாவது உபதேசியாராக திரு. மனாஸ் அவர்களும், தொடர்ந்து திரு. ஏனோஸ் என்பவரும் பணியாற்றினார்கள். தற்போது திரு. பிரான்சிஸ் அவர்கள் பணியாற்றி வருகின்றார்.

 பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மறைக்கல்வி

2. வழிபாட்டு குழு

3. பங்கு அருட்பணிப் பேரவை

4. பீடச்சிறார்

5. பாடகற்குழு

6. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

7. பெண்கள் இயக்கம்

8. இளைஞர் இயக்கம் (ஆண்கள்/பெண்கள்)

9. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் (ஆண்கள்/பெண்கள்)

10. சிறுவழி இயக்கம்

11. சிறார் இயக்கம்

12. கத்தோலிக்க சேவா சங்கம்

3. மரியாயின் சேனை

14. கோல்பிங் இயக்கம்

15. நிதிக்குழு

16. தணிக்கைக்குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. N. மார்ட்டின் (2012-2017)

2. அருட்பணி. ஜோசப் வேல்ஸ் ராஜா(2017-2018)

3. அருட்பணி. டென்சிங்(2018-2019)

4. அருட்பணி. ஜெகன் சில்வெஸ்டர் (2019...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குப் பணியாளர் அருட்பணி. ஜெகன் சில்வெஸ்டர் அவர்கள்.