223 இயேசுவின் திரு இருதய ஆலயம், இருதயபுரம்

   

இயேசுவின் திரு இருதய ஆலயம்

இடம் : இருதயபுரம்

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம்: முளகுமூடு

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு: புனித ஆரோபண அன்னை ஆலயம், மருதூர்குறிச்சி

பங்குத்தந்தை: அருட்பணி. வனிஷ் மைக்கேல் ராஜ் 

குடும்பங்கள் : 175

அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி: காலை 07.00 மணிக்கு 

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருப்பலி: மாலை 06.30 மணிக்கு 

சனிக்கிழமை: காலை 06.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற திருப்பலி 

திருவிழா: ஜூன் மாதத்தில் இயேசுவின் திருஇருதய திருநாளை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. புனிதா, Holy Cross

2. அருட்சகோதரி.‌ ஜெயா, Holy Cross

வரலாறு :

இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இருதயபுரம் தலத்திருச்சபை தொன்மையும், தனித்தன்மையும் வாய்ந்தது ஆகும். 

முன்னாளில் இப்பகுதி முண்டவிளாகம் என்று அழைக்கப்பட்டது. இயேசுவின் திருத்தூதர் தூய தோமையார் தூவிய நற்செய்தி விதைகள் இப்பகுதியில் விழுந்திருக்கின்றன. எனினும் விழுந்த விதைகள் விரைவாக வேர் பிடித்திடவில்லை. பின்னாளில் கிறிஸ்தவ மறைப்பரப்பாளர்கள் இங்கு வந்து கிறிஸ்தவ மறையை போதித்திருக்கிறார்கள். இதன் விளைவாக ஒரு சில குடும்பங்கள் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.

இப்பகுதியை சார்ந்த திரு K. மிக்கேல் நாடார் என்பவர் கிறிஸ்தவ மறையில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவராக இருந்தார். முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் வழிபாட்டுக்கு சென்று வந்த இவர், தங்கள் பகுதியிலும் மக்கள் கிறிஸ்துவை அறிய வேண்டும் என்றும், ஆலயம் அமைத்து வழிபாடு நடத்த வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

அப்போது முளகுமூடு அருட்சகோதரிகள் இல்லத்திலிருந்து மறைப்பரப்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அருட்சகோதரிகளிடம் தம் ஆசையை திரு. K. மிக்கேல் நாடார் அவர்கள் வெளிப்படுத்திய போது, அதை மனமுவந்து அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

1950-ல் அருட்சகோதரி மெற்றில்டா, அருட்சகோதரி கேதரின், அருட்சகோதரி அம்புறோஸ் ஆகியோர் முளகுமூட்டில் இருந்து முண்டவிளாகத்திற்கு வந்து மக்களை வீடுகளில் சென்று சந்தித்து, கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தனர். மேலும் குழந்தைகளை கூட்டிச்சேர்த்து மறைக்கல்வி கற்றுக்கொடுத்தனர். அவர்களின் மறைபரப்பு பணிக்கு பக்கபலமாக இருந்த திரு. K. மிக்கேல் நாடார் 1950-ல் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் சிறு குடிசை ஆலயம் அமைத்து உதவினார். மறைக்கல்வியில் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டினர். இவ்வாறு கத்தோலிக்க திருச்சபை இம்மண்ணில் வளர்ச்சியை நோக்கி பயணம் செய்தது. 

வளர்ந்து வரும் இச்சிறு திருச்சபைக்கு ஆலயம் அவசியம் என்று அனைவரும் உணர்ந்தார்கள். 1967-ஆம் ஆண்டு திரு. K. மிக்கேல் நாடார் தமக்கு சொந்தமான இடத்தில், சொந்த நிதியில் ஆலயம் அமைத்து மக்கள் யாவரும் இணைந்து வழிபட வகை செய்தார். 10-05-1970 அன்று ஆலயக் கட்டுமானப் பணி நிறைவு பெற்று,  அந்நாளைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்த ஆலயத்தின் பெயராலே, முண்டவிளாகம் என்ற பெயரை மாற்றி "இருதயபுரம்" என்று மேதகு ஆயர் பெயரிட்டார். அந்த நாளில் சுமார் 70 க்கும் மேற்பட்டவர்கள் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாகி இருதயபுரம் தலத்திருச்சபை, வெள்ளிகோடு தூய வியாகுல அன்னை பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது. வெள்ளிகோடு பங்கின் முதல் பங்குதந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தை. R. சவரிநாதன் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலால், இருதயபுரம் தலத்திருச்சபை பல்வேறு வளர்ச்சிகளை கண்டு வந்தது.

இயேசுவின் திருஇருதய ஆலயம் புதிதாக கட்டப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டகால எண்ணம் ஆகும். இந்த எண்ணம் நிறைவேறும் வகையில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 26-12-2007 அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

பங்கு மக்களின் வளர்ச்சியும் எழுச்சியும் தடைசெய்யமுடியாத விதத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இயேசுவின் திருஇருதய ஆலயம் புதிய பங்காக உயர்த்தப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அதன் அடிப்படையில் 09-03-2014 அன்று அன்றைய கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் பங்கு அருட்பணியாளர் இல்லம் அர்ச்சிக்கப்பட்ட ஓர் ஆண்டிற்குள்ளாக மக்களின் வேண்டுதலுக்கேற்ப, 03.11.2014 அன்று தனிப்பங்காக அதே ஆயரால் உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஜெனித்சேகர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 

பங்குமக்களின் தளரா ஈடுபாட்டோடும், திருஇருதய ஆண்டவரின் அருளினாலும் இப்பங்கு சமூகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழித்துறை மறைமாவட்ட தலைமையின் கீழும், பங்குத்தந்தை அருட்பணி. வனிஷ் மைக்கேல் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பான சமூகமாக உருவாகி வருகின்றது.

பங்கின் குருசடிகள்:

1. தூய மிக்கேல் அதிதூதர் குருசடி

2. புனித தேவசகாயம் குருசடி

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. கத்தோலிக்க சேவா சங்கம்

3. இயேசுவின் திரு இருதய சபை

4. பாலர் சபை

5. சிறார் இயக்கம்

6. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

7. இளைஞர் இயக்கம்

8. பாடகற்குழு

9. பீடச்சிறார்

10. திருவழிபாட்டுக் குழு

11. பங்குப் பேரவை

12. மறைக்கல்வி

13. அன்பிய ஒருங்கிணையம்

14. திருத்தூதுக் கழக ஒருங்கிணையம்.

15. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. ஜெனித் சேகர் (2014 நவம்பர்-2016)

2. அருட்பணி. மேரி ஜான் (2016-2019)

3. அருட்பணி. வனிஷ் மைக்கேல் ராஜ் (2019 முதல்....)

வழித்தடம் : 

நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், வெள்ளிகோடு சந்திப்பிலிருந்து இடது புறமாக 1 கி.மீ உள்ளேயும் மற்றும் குழிக்கோடு சந்திப்பிலிருந்து வலப்புறமாக 1கி.மீ உள்ளே சென்றால், இருதயபுரம் ஆலயத்தை அடையலாம்.

Location map: https://maps.app.goo.gl/WBmbSTKEtMNe7NaJA

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. வனிஷ் மைக்கேல் ராஜ்.