361 அற்புத மாதா ஆலயம், கீழ்நாத்தூர்


அற்புத மாதா ஆலயம்.

இடம்: கீழ்நாத்தூர் அல்லது கீழ்அருணை, திருவண்ணாமலை.

மறைமாவட்டம்: வேலூர் மறைவட்டம்

நிலை: பங்கு
கிளைப்பங்கு: தேவனேந்தல்

பங்குத்தந்தை : அருட்பணி. மெ.கி. பிரசாத் மஊச

குடும்பங்கள்: 150
அன்பியங்கள்: 10

ஞாயிறு திருப்பலி: காலை 07.30 மற்றும் மாலை 06.30 மணி

வார நாட்கள் செபமாலை மற்றும் திருப்பலி:

திங்கள்: காலை 06.30 மணி
வார நாட்கள்: மாலை 06.30

சனிக்கிழமை மாலை 06.30 மணி திருப்பலி மற்றும் அற்புத மாதா நவநாள்.

மாதத்தின் முதல் வெள்ளி:
மாலை 06.30 மணி திருப்பலி மற்றும் திவ்ய நற்கருணை ஆராதனை

மாதத்தின் முதல் சனி:
மாலை 06.30 மணி திருப்பலி, நோயாளிகளுக்கான அற்புத மாதா
சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருஎண்ணெய் மந்திருப்பு.

பாதுகாவலர்கள்: அற்புத மாதா மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார்

மண்ணின் மைந்தர்கள்:
அருட்தந்தை. லூயிஸ் குமார் SHS
அருட்சோதரி. விண்ணரசி CSST.

திருவிழா: ஜுலை மாதம் கடைசி ஞாயிறு.

அமைவிடம்: திருவண்ணாமலை - பள்ளிகொண்டாபட்டு சாலையில் அமைந்துள்ளது.

வரலாறு:

திருவண்ணாமலையில் அமைந்துள்ள கீழ்அருணை அல்லது கீழ்நாத்தூர் வடஆற்காடு பகுதியின் மிகவும் பழைமை வாய்ந்த மக்கள் குடியேற்றம் அமைந்த இடமாகும்.

கிபி 1606 ம் ஆண்டு இயேசு சபை மறைப்பணியாளர் இராபர்ட் தி நொபிலி, புனித பிரான்சிஸ் சவேரியாரின் அடிச்சுவடுகளைத் தழுவி புதிய மதுரா மிஷன் மறைப்பணித் தளத்தை திருச்சிராப்பள்ளியை தலைமைப்பீடமாகக் கொண்டு ஆரம்பித்தார். 18 வது நூற்றாண்டுகளில் வடஆற்காடு மாவட்டத்தின் மிகவும் முதன்மையான மிஷன் ரோமன் கத்தோலிக்க மிஷன் ஆகும்.

பாண்டிச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு ஃபிளாவியோபோலிஷ் ஆயரின் கண்காணிப்பின் கீழ் செயல்பட்டது. அதன் பின்னரே பல கிறித்தவ மிஷனரிகள் குறிப்பாக லூத்தரன் மிஷினரிகள் திருவண்ணாமலையில் தங்கள் பாதம் பதித்துள்ளனர்.

கி.பி 1676 ஆம் ஆண்டுகளில் அருட்தந்தை ஆண்ட்ரு பெரேரா ( Fr. Andrew Freire ) வேட்டவலம் பகுதியில் ஏறத்தாழ 60 கிறித்தவர்களைக் கொண்டு திருஅவையை ஆரம்பித்தார். அதன்பின் அவர் செங்கம் சென்று அங்கே ஏறத்தாழ 1100 கிறித்தவர்களைக் கொண்டு சபையை கட்டியெழுப்பினார்.

கி.பி 1681 மற்றும் 82 களில் புனித அருளானந்தர் ( St. John de Britto) மற்றும் வீரமாமுனிவர் ( Constatine Joseph Beschi ) இவர்களின் அயராத உழைப்பினால் செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் கிறித்தவம் பரவ ஆரம்பித்தது. புனித அருளானந்தர் ( St. John de Britto) செஞ்சியில் பங்குத்தந்தையாக பணியாற்றியதற்கான கல்வெட்டுக்கள் இன்றும் செஞ்சி ஆலயத்தில் காணக்கிடக்கிறது. இக்காலகட்டத்தில் அத்திப்பாக்கம் மிஷன் மதுரை மிஷனின் அங்கமாக இருந்து வந்துள்ளது.

கி.பி. 1691 ல் அருட்தந்தை பிரான்சிஸ் லேனிஸ், புனித அருளானந்தரின் சீடராக இருந்தவர். செங்கம் தாலுகாவிற்கு உட்பட்ட கொரட்டாம்பட்டு பணித்தளத்தை உருவாக்கினார். பின்னர் 1740 களில் அருட்தந்தை ஜோசஃப் டிரம்ப்ளே அத்திப்பாக்கம் மற்றும் கொரட்டாம்பட்டு பணிமையங்களின் பொறுப்பேற்று செயலாற்றினார்.

கி.பி 1773 இல் இயேசு சபை முடக்கப்பட்டதற்குப் பின் 1776 களில் பாரிஸ் வேதபோதக சபையினர் ( MEP Fathers ( Missions Etrange’res de Paris) பாண்டிச்சேரி மிஷன் பொறுப்பேற்றனர்.

கி.பி. 1854 ல் பாண்டிச்சேரி மறைமாவட்டத்தில் அத்திப்பாக்கம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு அருட்தந்தை பியர் ( Fr. Pier) முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். கி.பி. 1870 களில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அத்திப்பாக்கம் 5318 கிறித்தவர்களைக் கொண்டிருந்தது. கீழ்நாத்தூர் அதன் மறைபரப்புத் தளமாக இருந்து வந்துள்ளது பாரம்பரியம் மூலம் அறியப்படுகிறது.

அதன்பின்னர் வேட்டவலம் பாண்டிச்சேரி உயர் மறைமாவட்டத்தின் தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது கீழ்நாத்தூர் அதன் கிளைப்பங்காக ஆனது. அருட்தந்தை .S தாராஸ் MEP அவர்களின் முயற்சியால் கி.பி. 1930 ல் கெங்கப்பட்டு பாண்டிச்சேரி மறைமாவட்டத்தில், வேட்டவலம் பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை அமலதாஸ் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இப்பங்கானது திருவண்ணாமலை தாலுகாவைச் சார்ந்த பல தூரமான கிராமங்களை கிளைப்பங்காக கொண்டிருந்தது. அவற்றில் கீழ்அருணை என அழைக்கப்படும் கீழ்நாத்தூர் கிராமமும் ஒன்று.

இயேசு சபையினர் பாதம் பதித்த இங்கு புனித பிரான்சிஸ் சவேரியார் -க்கு சிற்றாலயம் ஏற்கனவே கட்டப்பட்டு ஆண்டுதோறும் டிசம்பர் 03 ஆம் தேதி விழா எடுக்கப்பட்டு, புனித பிரான்சிஸ் சவேரியார் திருஉருவம் தாங்கிய தேர் பவனியும் நடைபெற்றதாக பாரம்பரியம் மூலம் அறியப்படுகிறது.

இயேசு சபை துறவிகளுக்கே உரித்தான தனிவரத்தின்படி, இங்கே சிற்றாலய வளாகத்தில் புனித சேவியர் மணல் பள்ளி ( தொடக்கப்பள்ளி) ஒன்று நடந்து வந்துள்ளது. 1996 இல் இப்பங்கில் இருந்த பள்ளியானது புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

கி.பி 1969 இல் சில பங்குகள் பாண்டிச்சேரி உயர் மறை மாவட்டத்திலிருந்து, 1952 ல் சென்னை - மயிலை உயர் மறை மாவட்டத்திலிருந்து பிரிந்த வேலூர் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டன. அப்போது கெங்கப்பட்டு பங்கும் வேலூர் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. அருட்தந்தை A.T. தாமஸ் பொறுப்பேற்று பங்கை வழிநடத்தினார். கீழ்நாத்தூர் கெங்கப்பட்டு பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்தது.

கி.பி 1972 இல் திருவண்ணாமலை புதிய பங்காகவும், மறைக்கோட்ட தலைமைப்பீடமாகவும் உயர்த்தப்பட்டு இத்தாலி நாட்டு சலேசிய மறைப்போதகர் அருட்தந்தை பிரடெரிக் கப்பியாகி ( Rev. Fr. Frederick Capiaghi SDB) முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார். கீழ்நாத்தூர் அதன் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.

கிபி 1974 இல் அருட்தந்தை பிரடெரிக் கப்பியாகி சச அவர்களின் பெருமுயற்சியால் கீழ்நாத்தூரில் புதிய ஆலயம் கட்டப்பட்டு வேலூர் மறைமாட்ட ஆயர் மேதகு ஆர். அந்தோணிமுத்து அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. கி.பி 1984 இல் புனித தெரசாவின் கார்மேல் சபை துறவற அருட்கன்னியர்கள் இல்லத்தையும் அதன்பின் கிறித்தவ மக்களுக்கான குடியிருப்பு வீடுகளையும் கட்டி அற்புத மாதா நகரை உருவாக்கினார்.

புனித அற்புத மாதாவை பாதுகாவலியாகவும், புனித பிரான்சிஸ் சவேரியாரை துணைப் பாதுகாவலராகவும் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் கடைசி ஞாயிறு அன்று அன்னைக்கு விழாவும் தேர்பவனியும் நடைபெறுகிறது.

நீண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாச வரலாற்றையும், திருவண்ணாமலையின் மூத்த கிறித்தவ குடியுமான கீழ்அருணை எனப்படும் கீழ்நாத்தூர் மேதகு பேராயர் A.M. சின்னப்பா சச, அவர்கள் கி.பி. 2001 இல் திருவண்ணாமலை தூய உலக மாதா ( Regina Mundi) பங்கிலிருந்து பிரித்து தனிப்பங்காக உயர்த்தினார். அருட்தந்தை ஜேம்ஸ் வின்சென்ட் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

கி.பி 2002 இல் பாரிஸ் வேதபோதக சபையினர் (MEP Fathers (Missions Etrange'res de Paris) அளித்த பொருளுதவியுடன் குருக்கள் இல்லத்தை கட்டினார்.

கி.பி 2006 வரை அருட்தந்தை. பன்னீர்செல்வம் மற்றும் அருட்தந்தை இருதயசாமி இப்பங்கை ஆன்மீகத்திலும், கல்வியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண உழைத்தனர்.

கி.பி. 2006 ல் வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சௌந்தரராஜு சச அவர்கள் இப்பங்கை மரியின் ஊழியர் துறவற சபையினர் பொறுப்பில் ஒப்படைத்தார். செர்வைட்ஸ் (SERVITES) எனப்படும் மரியின் ஊழியர் சபைத் துறவிகள் இப்பங்கை ஆன்மீக, பொருளாதார, கல்வி வளர்ச்சியிலும் வழிநடத்தி வருகின்றனர். அருட்தந்தை பெலிக்ஸ் மஊச முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து அருட்தந்தை ஆதாம் மஊச ( கி.பி 2007 முதல் 2016 வரை), தற்போது அருட்தந்தை பிரசாத் மஊச இப்பங்கை வழிநடத்தி வருகின்றார்.

அன்னை மரியாளின் பக்தியையும் அவளின் சீடத்துவத்தையும் குறிப்பாக வியாகுல அன்னையின் பக்தியை பரப்பி வருகின்றனர். குறிப்பாக வியாகுல அன்னையின் மீதுள்ள ஆன்மீகப் புரிதலையும் அன்னையின் உடனிருப்பையும் உணர்த்தும் வண்ணம் வழிபாடுகளிலும் மற்ற ஆன்மீக நிகழ்வுகளிலும் மக்களை வழிநடத்துகின்றனர். வியாகுல அன்னை செபமாலையையும், (VIA MATRIX Mater Dolorosa ) அன்னையின் துயரப்பாதையை தவக்காலத்தின் கடைசி வெள்ளி அதாவது புனித வெள்ளிக்கு முந்தைய வெள்ளியன்று வழிநடத்தியும் வருகின்றனர்.

தல வரலாறு மூலம்:
John Henry Garstin (Collector of South Arcot), Manual of the South Arcot
District, Lawrence Asylum Press, Madras, 1878.

வேலூர் மறைமாவட்ட வெள்ளிவிழா மலர், ஆயர் இல்லம், வேலூர்.
எழுத்து : அருட்பணி. மெ.கி. பிரசாத் மஊச.