950 அற்புத குழந்தை இயேசு திருத்தலம், கவிராயபுரம்

    

அற்புத குழந்தை இயேசு திருத்தலம்

இடம்: கவிராயபுரம்

முகவரி: கவிராயபுரம், சிலுக்குவார்பட்டி அஞ்சல், நிலக்கோட்டை தாலுகா, திண்டுக்கல் மாவட்டம், 624215

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: வத்தலக்குண்டு

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித பேதுரு சிற்றாலயம், ராயபிள்ளைபட்டி

திருத்தல அதிபர் பங்குத்தந்தை அருட்பணி.‌ P. S. இஞ்ஞாசி அற்புதராஜ் 

கைப்பேசி எண்: +91 6374 698 098

குடும்பங்கள்: 186

அன்பியங்கள்: 7

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 05:00 மணி திருப்பலி. காலை 11:00 மணி திருப்பலி நற்கருணை ஆசீர். மாலை 06:00 மணி திருப்பலி

நாள்தோறும் மாலை 06:30 மணி திருப்பலி

வியாழன், வெள்ளி, சனி காலை 11:00 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர் 

திருவிழா: ஜனவரி மாதம் திருக்காட்சி பெருவிழா தினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 15, 16 தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. அருளானந்தம், மதுரை உயர் மறைமாவட்டம்

2. அருட்பணி. ஜெர்மன் சேசுராஜா, OMI

3. அருட்சகோதரி.‌ ராபர்ட் மேரி

4. அருட்சகோதரி.‌ மார்கிரேட் இன்பசீலி

5. அருட்சகோதரி.‌ மெர்ஸி ஆஞ்சலா மேரி

6. அருட்சகோதரி. சகாய ஆஞ்சலா

7. அருட்சகோதரி. ரெஜினா

8. அருட்சகோதரி.‌ மரிய ஜெபமணி

9. அருட்சகோதரர். S. ஜான்பீட்டர்

வழித்தடம்:

திண்டுக்கல் -கொடை ரோடு -கவிராயபுரம்

மதுரை -நிலக்கோட்டை -கவிராயபுரம் 

Location map: Infant Jesus Church, Kavirayapuram

https://maps.app.goo.gl/Y3zshv9qGcugSxz99

வரலாறு:

மதுரை உயர் மறைமாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, நிலக்கோட்டையிலிருந்து வடகிழக்கில் 2கி.மீ. தூரத்திலிருக்கும் ஒரு சிறிய கிராமம் கவிராயபுரம். இக்கிராமத்தில் வாழும் கிறிஸ்தவ மக்களின் முன்னோர்கள், தங்களது விசுவாசத்தைக் காத்துக்கொள்ள இருமுறை தங்களது வாழ்விடங்களையும், உடமைகளையும் இழந்தார்கள். அவர்களது ஆழ்ந்த அசைக்க முடியாத விசுவாசத்தின் பரிசுதான் (மத். 19:29) குழந்தை இயேசு இக்கிராமத்தில் செய்யும் அற்புதங்களும், அருளடையாளங்களும் என்று கூறினால் மிகையாகாது.

18ம் நூற்றாண்டில் கவிராயபுரம், நாயக்க மன்னர்களுக்குப் பாத்தியப்பட்ட நிலக்கோட்டை ஜமீனுக்கு உட்பட்ட கிராமமாக இருந்தது. கூலப்ப நாயக்கர் என்பவர் நிலக்கோட்டை ஜமீன்தாரராக இருந்தார். அவரது ஜமீன் அரசவைக் கவிஞராகிய சுப்ரதுபக் கவிராயர் வாழ்ந்த ஊர். அவரது பெயரால் கவிராயபுரம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. 

1770 ஆம் ஆண்டு காவிரிக்கரையிலிருந்து குடி பெயர்ந்த கிறிஸ்தவர்கள் இக்கிராமத்தில் குடியேறியதாக அறிய முடிகிறது.

1854-ல் அருட்தந்தை பார்த்தியு அவர்கள் சிலுக்குவார்பட்டியில் பங்குத்தந்தையாக இருந்தபோது, புனித அந்தோணியாரை பாதுகாவலராக கொண்டு சிற்றாலயம் ஒன்றைக் கவிராயபுரத்தில் கட்டினார். மக்களின் எண்ணிக்கை பெருகியதால், 1952-ல் அருள்தந்தை எர்னஸ்ட் கூலாஸ் அவர்கள் சிலுக்குவார்பட்டி பங்குத்தந்தையாக இருந்தபோது, புனித அந்தோனியார் சிற்றாலயத்தை மக்களின் வசதிக்காக விரிவான ஆலயமாகக் கட்டினார். கால ஓட்டத்தில் இந்த ஆலயம் மக்களுக்குப் போதுமானதாக இல்லாததால் உள்ளூர் மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய ஆலயம் ஒன்று கட்டுவதற்காகப் பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களால் 28.04.1979-ல் அருள்தந்தை வேதமாணிக்கம் அவர்கள் சிலுக்குவார்பட்டி பங்குத்தந்தையாக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலய வேலைகள் முற்றுப்பெறும் முன்னரே 1981ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் குழந்தை இயேசு ஆலயம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

1982ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழந்தை இயேசு சுரூபம் வாங்கப்பெற்றது. ஆனால் அது பொதிந்து வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவ்வருடம் நவம்பர் மாதத்தில் நீண்ட நாட்களாக நோயினால் துன்புற்று வந்த திரு. சௌந்தரராஜன் அவர்களுக்கு அற்புத குழந்தை இயேசு காட்சி தந்தார். அவரது நீண்ட நாள் நோய் குணமடைந்து நலம் பெற்றார். அன்று முதல் குழந்தை இயேசுவின் சுரூபம் பக்தர்களின் வேண்டுதலுக்காகப் பீடத்தில் நிறுவப்பட்டது. அன்று முதல் அற்புத குழந்தை இயேசு திருத்தலம் என்று மக்களால் அழைக்கப்பட்டது.

ஆலய வேலைகள் முற்றுப் பெற்ற பின் 14.10.1984-ல் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர், மேதகு ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்ட தினமாகிய அக்டோபர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் குழந்தை இயேசுவின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

13.02.1985-ல் அருட்தந்தை வேதமாணிக்கம் அவர்களால் குழந்தை இயேசுவின் நவநாள் துவங்கப்பட்டது. அன்று முதல் வெள்ளிக்கிழமை தோறும் குழந்தை இயேசுவின் நவநாள் நடைபெற்று வருகிறது. நவநாள் திருப்பலியிலும், குணமளிக்கும் வழிபாட்டிலும் கலந்து கொண்டு ஏராளமான மக்கள் குழந்தை வரம், திருமண வரம், வேலை வாய்ப்பு, உடல் உள்ள சுகம் பெற்று ஆயிரக்கணக்கான சாட்சியங்கள் கூறி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருத்தலத்தில் அநேக நன்மைகள் நிறைந்தபடியால் திருத்தலத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் 14.10.2019 -ல் மதுரை பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்களால் புதிய திருத்தலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி அடிக்கல் நாட்டப்பட்டது. 

பங்குத்தந்தை அருட்பணி.‌ இஞ்ஞாசி அற்புதராஜ் அவர்களின் வழிகாட்டலில், கவிராயபுரம் பங்கு இறைமக்கள், திருப்பயணிகள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் வானுயர்ந்த கோபுரத்துடன் அழகுற கட்டி முடிக்கப்பட்ட திருத்தலமானது, 15.01.2024 அன்று மதுரை பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி மற்றும் திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கியராஜ், பாளை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜூடு‌ பால்ராஜ் மற்றும் அருட்தந்தையர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அன்றைய தினமே தமிழக ஆயர் பேரவைத் தலைவரும், சென்னை - மயிலைப் பேராயருமான மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் திருத்தலத் திருவிழாவானது வெகு சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. 

திருப்பயணிகள் தங்குவதற்கு தேவையான அறை வசதிகள் உள்ளன.

பங்கின் கெபி:

தூய லூர்து அன்னை கெபி

அப்போஸ்தலிக் கார்மல் சபை அருட்சகோதரிகள் பங்கில் சிறப்புற பணியாற்றி வருகின்றனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. அன்பியங்கள்

2. மறைக்கல்வி

3. இளையோர் அமைப்பு

4. மரியாயின் சேனை

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev. Fr. V.M. Savarimuthu (1988-1991)

2. Rev. Fr. Francis Britto (1991-1992)

3. Rev. Fr. Francis Xavier (1992-1993)

4. Rev. Fr. Kulanthaisamy (1993-1996)

5. Rev. Fr. K.S. Arulanantham (1996-1998)

6. Rev. Fr. Fathimanathan (1998-2002)

7. Rev. Fr. Lurduraj (2002-2005)

8. Rev. Fr. Xavierraj (2005-2008)

9. Rev. Fr. Angel (2008-2009)

10. Rev. Fr. Jeganathan (2009-2010)

11. Rev. Fr. A. Xavier (2010-2015)

12. Rev. Dr. Lucas M. Gnanam (2015-2018)

13. Rev. Fr. Ignaci Arputharaj (2018----)

அற்புதக் குழந்தை இயேசுவைத் தேடி வரும் அனைவரும் குறைகள் நீங்கிச் செல்கின்றனர். நீங்களும் கவிராயபுரம் வாருங்கள் அற்புதக் குழந்தை இயேசுவின் அருள் பெற்றுச் செல்லுங்கள். கண்டிப்பாக கேட்ட வரம் தருவார் கவிராயபுரம் அற்புத குழந்தை இயேசு. "என்னை நீ மகிமை செய்யச் செய்ய உன்னை நான் மென்மேலும் ஆசீர்வதிப்பேன்."

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. இஞ்ஞாசி அற்புதராஜ் அவர்கள்.