766 புனித பரலோக மாதா ஆலயம், வெங்கட்ராயபுரம்

    

புனித பரலோக மாதா ஆலயம்

இடம்: வெங்கட்ராயபுரம், வெங்கட்ராயபுரம் PO, நாங்குநேரி தாலுகா, 627 118

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்

பங்குத்தந்தை: அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன்

குடும்பங்கள்: 103 வரிகள்

அன்பியங்கள்: 2

ஞாயிறு திருப்பலி காலை 09:30 மணி

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணிக்கு சிறப்பு திருப்பலி

மூன்றாவது சனிக்கிழமை மாலை 07:00 மணிக்கு சிறப்பு திருப்பலி

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி

வழித்தடம்:

காரியாண்டி-> 6கி.மீ

முனஞ்சிப்பட்டி-> 13கி.மீ

மூலக்கரைப்பட்டி-> 18கி.மீ

பேய்க்குளம்-> 8கி.மீ

சாத்தான்குளம் -> 11கி.மீ

Location map:

Our Lady Of Assumption Church

https://maps.app.goo.gl/tmgPfaiQ1gn9my3u6

வரலாறு:

1861 ஆம் ஆண்டு அருட்பணி. டேனிஷ் குஷன் என்கிற பரஞ்சோதி நாதர் (சாத்தான்குளம் பங்குத்தந்தை) அவர்கள் வெங்காட்ராயபுரம் வந்த போது, ஏற்கனவே இங்கு 8 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வந்ததாக எழுதி வைத்துள்ளார். ஆனால் இந்த 8 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக குடியேறியவர்களா...? அல்லது இங்கு வந்த பின்னர் கிறிஸ்தவம் தழுவியவர்களா...? போன்ற எந்த தகவலும் இல்லை.

1878 ஆம் ஆண்டில் புனித வாரத்தின் போது இந்தக் குடும்பங்களின் ஆன்மீகக் காரியங்களை கவனிக்க அருட்பணி. டேனிஷ் குஷன் அவர்கள் வந்த போது, இங்கு நிலவி வந்த சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கப்படாத  தீண்டாமை மற்றும் புரட்டஸ்டாந்தினர் பஞ்ச நிவாரண நிதி கொடுத்து அவர்களது நம்பிக்கையில் மாற்றும் முயற்சிகளுக்கு இடையே, அருட்தந்தை. டேனிஷ் குஷன் அனைத்து குடும்பங்களையும் சந்தித்து, உரையாடியதன் விளைவாக 1878 ஆம் ஆண்டு மே மாதத்தில் மற்ற 28 நாடார் குடும்பங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாறினர். மேலும் அவ்வேளையில் உடல்நலம் குன்றியிருந்த ஒரு பெண்மணிக்காக அருட்தந்தை அவர்கள் ஜெபித்து விட்டு சென்றார். ஆச்சரியம்!! அப்பெண்மணி பூரண சுகம் பெற்றார். இந்த புதுமை நிகழ்ந்ததால், இவர்கள் கத்தோலிக்கத்தில் முழுமையாக விசுவாசம் கொண்டு வாழ்ந்து வந்தனர்.  

சொந்தமாக நிலம் இல்லாமல் வாழ்ந்து வந்த இம்மக்களுக்காக 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 06-ம் தேதி, அருட்பணி. டேனிஷ் குஷன் அவர்கள் சுப்பராய ரெட்டியார் என்பவரிடமிருந்து, 14 ஏக்கர் 26 சென்ட் நிலம் வாங்கிக் கொடுத்து அவர்களின் வாழ்வை வளம்பெறச் செய்தார். இன்றும் இந்த நிலம் (ஆலய நிலமாக) உள்ளது.

1880 ஆம் ஆண்டு அருட்பணி. டேனிஷ் குஷன் அவர்களால் சிறிய ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயமானது இன்றும் பழைய ஆலயத்தின் பீடப் பகுதியாக உள்ளது.

1901 ஆம் ஆண்டு சில ஆதிக்க சக்திகள் இங்குள்ள மக்களை, மீண்டும் பழைய மதத்திற்கு மாறச்சொல்லி நெருக்கடிகள் கொடுத்த போது, ஊர் பெரியவர்கள் கிறிஸ்தவத்தில் உறுதியாக இருந்து, கத்தோலிக்க விசுவாசத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.

வெங்கட்ராயபுரத்தில் ஆரம்பத்தில் பதுவை புனித அந்தோனியார் ஆலயம் இருந்ததாகவும், 219 கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வந்ததாகவும் அருட்பணி. லியோன் பெஸ் அவர்கள் 1914 ஆம் ஆண்டு தாம் எழுதிய "New Madurai Mission IV" புத்தகத்தில் குறித்து வைத்துள்ளார். பின்னர் புனித பரலோக மாதா ஆலயமாக இவ்வாலயம் மாற்றம் பெற்றது. ஆனால் எந்த ஆண்டில் மாற்றம் பெற்றது என்பதைக் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

1920களில் இப்பகுதியில் ஏற்பட்ட தொற்றுநோய்கள் காரணமாக இங்குள்ள பல குடும்பங்கள் வெளியேறினார்கள்.

சோமநாதபேரி பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. கபிரியேல்நாதர் பணிக்காலத்தில், பழைய ஆலய பீடத்தை வைத்து கொண்டு, ஓலைக்கூரை மாற்றப்பட்டு, ஓடு வேயப்பட்டு சீரமைத்து விரிவாக்கம் செய்யப்பட்டு மேதகு ஆயர் ரோச் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

வெங்கட்ராயபுரமானது 1861 ஆம் ஆண்டு முதல் சாத்தான்குளம் பங்கின் கிளைப்பங்காகவும், 1924 ஆம் ஆண்டு முதல் சோமநாதபேரி பங்கின் கிளைப்பங்காகவும், 1984 ஆம் ஆண்டு முதல் நெடுங்குளம் பங்கின் கிளைப் பங்காகவும் செயல்பட்டு வருகிறது.

அருட்பணி. U. அமலதாஸ் பணிக்காலத்தில் பழைய ஆலயம் அகற்றப்படாமலேயே, இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டு, அருட்பணி.‌ அந்தோணி தாஸ் பணிக்காலத்தில் பணிகள் நிறைவு பெற்று 09.01.1994 அன்று மேதகு ஆயர் அமலநாதர் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

தற்போதைய புதிய ஆலயமானது அனைவரின் ஒத்துழைப்புடனும், அருட்பணி. ஸ்தனிஸ் ஜோசப் மைக்கேல் மற்றும் அருட்பணி. லாசர் ஆகியோரின் வழிகாட்டலில் கட்டப்பட்டு 15.08.2017 அன்று மேதகு ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பாலர் சபை

2. நற்கருணை வீரர் சபை

3. புனித அமலோற்பவ மாதா இளம் பெண்கள் சபை

4. திருக்குடும்ப சபை

5. அன்பியங்கள்

6. புனித பரலோக மாதா இளைஞர்கள் நற்பணி மன்றம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன் அவர்கள்