51 விண்ணரசி அன்னை ஆலயம், மாரனோடை

    

விண்ணரசி அன்னை ஆலயம்

இடம் : மாரனோடை, திருநாவலூர் அஞ்சல், 607204

மாவட்டம்: கள்ளக்குறிச்சி 

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விழுப்புரம்

நிலை : பங்குதளம் 

கிளைப்பங்குகள்:

1. சகாய மாதா ஆலயம், செம்மணந்தல்

2. வேளாங்கண்ணி மாதா ஆலயம், மணலூர்

3. தூய காணிக்கை மாதா ஆலயம், பாதூர்

4. குழந்தை தெரசா ஆலயம், மருதூர்

5. உலக மாதா ஆலயம், பரிக்கல்

6. வேளாங்கண்ணி மாதா ஆலயம், தேவியானந்தல்

7. குழந்தை இயேசு ஆலயம், சேந்தமங்கலம்

8. எலந்தம்பட்டு சேமகோட்டை

9. கெடிலம்

குடும்பங்கள்: தோராயமாக 1200+

அன்பியங்கள்: 44

பங்குத்தந்தை : அருட்பணி. வின்சென்ட் கபிலை, SDB

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

திங்கள் முதல் வியாழன் வரை திருப்பலி காலை 06:30 மணி

வெள்ளி, சனி திருப்பலி மாலை 07:00 மணி

மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 09:00 மணி ஜெபமாலை, திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆராதனை

மாதத்தின் 24-ம் தேதி மாலை 05:30 மணி ஜெபமாலை, தேர்பவனி, 

திருப்பலி

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி. 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. அமலதாஸ், OFM Cap (மணலூர்)

2. அருட்பணி. ஆரோக்கிய விஜய், OMI (மாரனோடை)

3. அருட்பணி. சின்னப்பராஜ், செங்கல்பட்டு மறைமாவட்டம் (மணலூர்)

4. அருட்பணி. இமானுவேல், HGN (சேந்தமங்கலம்)

5. அருட்சகோதரர். ஆரோக்கியசாமி, SJ (மணலூர்)

6. அருட்பணி. ஆரோக்கிய ராஜ், ST (தேவியானந்தல்)

7. அருட்பணி. மெசியா பரந்தாமன், குவகாத்தி மறைமாவட்டம் (சேமக்கோட்டை)

8. அருட்பணி. செல்வகுமார், SDB (மாரனோடை)

9. அருட்பணி. டேவிட் அந்தோணி, OMI (தேவியானந்தல்)

10. அருட்பணி. ஆரோக்கிய வின்சென்ட், SDB (அம்சநகர்)

11. அருட்சகோதரி. அபிலா அந்தோணி மேரி, SAB (மணலூர்)

12. அருட்சகோதரி. பாஸ்டினா மேரி, FSAG (மாரனோடை)

13. அருட்சகோதரி. ஜோசி லிடியா ஷராப்பின்மேரி, FIHM (மாரனோடை)

14. அருட்சகோதரி. ஜெனிபர் மேரி, SAT (மருதூர்)

வழித்தடம்: உளுந்தூர்பேட்டை -விழுப்புரம் வழித்தடத்தில் மாரனோடை அமைந்துள்ளது. 

Location map: https://goo.gl/maps/GZqLtVDMx8ibURFq9

வரலாறு:

இறைவன் இயேசுவின் வாழ்வு தரும் வார்த்தைகளை தேவமாதாவின் அருள் ஆசியுடன், அவரின் அன்பு சீடர்கள் உலகின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று, மக்கள் மனதில் விதைத்தனர். கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இயேசுவின் சீடர் புனித தோமையார் இந்திய மண்ணில் மறைபரப்புப் பணியை தொடங்கினார். அவருடைய அருள் பணியை பாரிஸ் அந்நிய வேதபோதக சபைக்குருக்களும், இயேசு சபை குருக்களும், சலேசிய சபை குருக்களும், கப்புச்சின் சபை குருக்களும், போர்ச்சுக்கீசிய குருக்களும் இந்திய மண்ணில் தொடர்ந்தனர்.

தமிழகத்தில், அவர்களின் தியாகம் நிறைந்த பணிவாழ்க்கையால் ஆயிரக்கணக்கான மக்களை மனந்திருப்பி, இயேசுவிடம் கொண்டு வந்து சேர்த்தனர். கி.பி. 1886 பாண்டி மிஷன் உருவானதும், அதன் பொறுப்பை ஏற்ற பாரிஸ் அந்நிய வேதபோதக சபை குருக்களின் சிறப்பான சேவையால் புதுவை - கடலூர் மறைமாவட்டம் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

புதுவை -கடலூர் மறை மாநிலத்தில் உள்ள மிகவும் தொன்மையான இருந்தை பங்கில், மரியன்னையால் சிறப்புபெற்ற மாரனோடை என்னும் கிராமம் உள்ளது. நம்பிக்கையுடன் தன்னை நாடி வருபவர்க்கு அதிசயங்களையும், அற்புதங்களையும் அள்ளித் தரும் அன்புத்தாயாய் விளங்கும் விண்ணரசி மாதா, கள்ளக்குறிச்சி மாவட்டம், மாரனோடை கிராமத்தில் குடிகொண்டிருக்கிறாள். எண்ணற்ற ஏழைகளின் ஏக்கம் தீர்க்கும் இரக்கமுள்ள தாயாய் இருந்து, இம்மண்ணின் மக்களை வழிநடத்தி வருகின்றார். 

இம் மண்ணில் அருளானந்தரின் பணிகள்:

கி.பி 1700 வரை, இயேசு சபையின் மதுரை மறைபரப்பு மையத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பெரும் நிலப்பரப்பின் வடக்கு கடைசி பணியிடமாக இருந்தை மறைகோட்டம் திருவெண்ணைநல்லூர் வரை இருந்து வந்தது. கிருஷ்ணங்குப்பம் அருகில் உள்ள கோரணப்பட்டு என்னும் ஊரில் இருந்து கொண்டு இயேசு சபையினர் பணியாற்றி வந்தனர். இயேசு சபையைச் சேர்ந்த செம்மண் புனிதர் என்று அழைக்கப்படும் புனித அருளானந்தர் கி.பி 1660 முதல் 1665 முடிய தனது மறைபரப்பு பயணங்களின் போது பலமுறை இப்பகுதிகளில் தங்கி, மறைப்பணி செய்து இருக்கின்றார். பண்ரூட்டிக்கு அருகில் உள்ள திருவதிகை (பணிக்கன் குப்பம் பங்கு), வீர சோழபுரம் (முகையூர் பங்கு), சித்தானங்கூர் (இருந்தை பங்கு) ஆகிய இடங்களில் தங்கி மறைப்பணி செய்திருக்கிறார். சித்தானங்கூரிலிருந்து செஞ்சி வழியாக தண்டரைக்குச் சென்று திரும்பும் வழியில் மீண்டும் சில நாட்கள் சித்தானங்கூரில் தங்கி, பல மக்களுக்கு திருமுழுக்கு அளித்து திருமறையில் சேர்த்தார். மீண்டும் 1679ல் புனித அருளானந்தர் சித்தானங்கூர் வந்து பணியாற்றியிருக்கிறார் என்றும் அவரது வரலாற்றுக் குறிப்பிலிருந்து அறிகிறோம். குறிப்பாக, சித்தானங்கூரின் தலைவர் ஒருவரின் மகள் பேய் பிடித்து, சித்தம் கலங்கி, உடல் நலம் கெட்டு அவதிப்பட்டு வந்தாள். புனித அருளானந்தரின் அருளாசியினால் அவள் முழு சுகம் பெற்றார். இந்த அற்புதத்தைக் கண்ட தலைவரும், அவரின் உறவினர்களும் திருமுழுக்கு பெற்று திருமறையில் சேர்ந்தனர்.

இவ்வாறாக கி.பி 1700 வரை, இயேசு சபையினரின் மிகச் சிறந்த மறைபரப்பு பணிகளால் இருந்தை (மாரனோடை) பங்கு கிறிஸ்துவ மக்கள், இறை விசுவாசத்திலும் மோட்சராக்கினி அன்னையின் பக்தியிலும் சிறந்த முறையில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்..

கி.பி.1700 க்கு பின் கோவா மிஷனின் போர்ச்சுகிசிய குருக்கள், தங்கள் பணிகளை வடதமிழகம் வரையிலும், குறிப்பாக இருந்தை பங்கு வரையிலும் செய்து வந்தனர். இவர்களுக்குப் பின் இருந்தை பங்கு கி.பி 1886 பாண்டி மிஷனில் சேர்க்கப்பட்டு, பணிக்கன்குப்பம் பங்கின் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது. பாரிஸ் அந்நிய வேதபோதக சபை குருக்களாலும், மறைமாவட்ட குருக்களாலும் இருந்தை (மாரனோடை) பங்கு மக்கள் அன்னையின் பக்தியில் வளர்க்கப்பட்டு வந்தார்கள்.

மாரனோடை பங்கின் தோற்றம்:

பாண்டி மிஷனில் இருந்தை (மாரனோடை) பங்கு இணைக்கப்பட்டபின், பணிக்கன்குப்பம் பங்கின் கிளைப்பங்காக மாறியது. பனிக்கன்குப்பத்திலிருந்து பணியாற்றிய பங்குதந்தையர்களும், உதவி தந்தையர்களும் இருந்தை, மாரனோடை பகுதிகளில் சிறந்த முறையில் மறைப்பணி

ஆற்றியிருக்கின்றார்கள். அருட்தந்தை. பியர் .M A. அடிகள் 12.03.1876 முதல் 10.08.1876 வரை பணிக்கன்குப்பம் பங்கின் உதவி குருவாக பணியாற்றியிருக்கிறார். இவர் 07.10.18766 தேதியில் அப்போது

பணிக்கன்குப்பம் பங்கு குருவாக இருந்த அருட்தந்தை இராயப்பநாதருக்கு எழுதிய கடிதத்தில் "மாரனோடை மக்கள் தங்கள் சிற்றாலயத்தின் மட்டில் மிகுந்த பற்று வைத்திருக்கிறார்கள். நீங்கள்

அங்கு போய் சில நாட்கள் தங்கியிருந்தால், அம்மக்களின் ஆன்மீகத் தேவைகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும்". என்று எழுதியிருக்கிறார். இவ்விதம் மாரனோடைக்கென்று ஒரு குரு இருந்தால் நலம் என்ற எண்ணம் 1876-லேயே எழுந்துள்ளது.

கி.பி.1893ல் பணிக்கன்குப்பம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, இருந்தை பங்கு உருவானது. முதல் பங்கு குருவாக அருட்பணி. சுரேல் நாதர் அவர்களும் மற்றும் அவருக்குப் பின் வந்த பங்கு தந்தையர்களும் இருந்தை பங்கின் கிளைப்பங்கான மாரனோடை மீது அதிக அக்கறை கொண்டு, ஆன்மீகப் பணியை சிறப்பாக செய்து மக்களை இறை நம்பிக்கையிலும் மரியன்னை பக்தியிலும் வளர்த்து வந்தனர்.

இருந்தை பங்குத்தந்தை L.M. அருள்நாதர் (1944-1956) தன்னுடைய 1945-46 மற்றும் 1948 ம் ஆண்டறிக்கைகளில் "மாரனோடை 

கிறிஸ்தவர்களை நன்கு கவனித்துக்கொள்ள வசதியாக, ஓய்வு பெற்ற ஒரு குருவையாவது எனக்கு உதவியாக கொடுத்தால் நலமாக இருக்கும். மாரனோடையில் இருக்கும் 1240 கிறிஸ்தவர்களும், கவனிப்பாரற்று வெகு தொலைவில் இருப்பதால், மாரனோடையில் குருக்கள் இல்லம் ஒன்று கட்டி கொடுத்தால் அங்கு அடிக்கடி தங்கி சிறப்பாக ஆன்மீகப் பணியாற்ற முடியும்." என்று ஆயருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். இவருக்கு பின் வந்த இருந்தை பங்கு குருக்களும் மாரனோடையை தனி பங்காக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றனர்.

இவ்வாறாக மாரனோடையை தனிப்பங்காக உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சிறிது சிறிதாக வளர்ந்து இறுதி வடிவம் பெற்றது. பாண்டி -கடலூர் உயர் மறைமாநில பேராயர் மைக்கேல் அகஸ்டின், அவர்களால், மாரனோடையும் அதனோடு 13 கிறிஸ்தவ கிராமங்களும் இருந்தை பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய பங்காக 07.10.1996ல் உருவாக்கப்பட்டு, தமிழக சலேசிய மாநில தலைவர் அருட்பணி கமிலஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அருட்பணி செபஸ்டின் ச.ச முதல் பங்கு குருவாக மாரனோடையில் பணிபுரிய ஆரம்பித்தார். இவருடைய பணிக்காலத்திலே ஆன்மீகம், கல்வி, சமூகப் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டு அன்னைக்கு பெருமை சேர்க்கப்பட்டன. இவருக்கு பின் வந்த அனைத்து சலேசியர்களும் தொன்போஸ்கோவின் அடிச்சுவட்டில் அன்னையின் பகழை பரப்ப சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

மாரனோடை மாதா கோவில் வரலாறு:

பாண்டி மறைமாவட்டத்தின் இருந்தை பங்கு குருக்களால், மாரனோடை விண்ணரசி மாதாவின் திருத்தல வளர்ச்சிக்காக பல கட்டங்களில் பலரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு…

கூரைக் குடிசைக் கோவில் : 

18-ம் நுாற்றாண்டின் தொடக்கத்திலேயே அன்னையின் கூரைக் குடிசைக் கோவில் ஏரிக்கரை ஓரத்தில் கட்டப்பட்டது.

சிற்றாலயம்: 

சேந்தமங்கலம் துரைசாமி அவர்கள் (ஆண் குழந்தை பாக்கியம் கிடைத்ததற்கு நன்றியாக) குடும்பத்தினரால் தானமாக கொடுக்கப்பட்ட அயன் புஞ்சை சர்வே எண் 82/1ல் உள்ள 0.45 ஏக்கரின் தெற்கு ஓரத்தில் கி.பி 1921ல் அருட்தந்தை மரியதோமினிக் அவர்களால் நாட்டு ஓடுகளால் வேயப்பட்ட கூரையுடன் சிறிய கல் கட்டிடம் கட்டப்பட்டது.

அன்னையின் கெபி: 

1985ல்அன்னையின் சிற்றாலயம் இடிந்து விழுந்தது. அருட்தந்தை அந்தோணி அடிகள் அன்னையின் சுரூபத்தை எடுத்து ஒரு சிறு மேடை கட்டி அதில் வைத்து வழிபாடு நடத்தி வந்தார். அவருக்கு பின் வந்த அருட்தந்தை தோமினிக் சாவியோ அம்மேடைக்கு விதானம் அமைத்து ஒரு சிறு கெபியாக கட்டினார். இதுவே மக்கள் வழிபடும் மாதா கெபியாக விளங்கியது.

விமான வடிவ கோவில்: 

அருட்தந்தை சாலர் அவர்களால் 1936ல் போடப்பட்ட அடித்தளத்திலேயே, விமான வடிவ கோவில் ஒன்று அருட்தந்தை மாசிலாமணி அவர்களின் முயற்சியால் 1973 கட்டி முடிக்கப்பட்டது. கோயிலுக்கு அருகில் இருந்த ஒதியமரத்தில் அதுவரை கட்டப்பட்டு இருந்த ஆலய மணியானது, புதிய ஆலயத்தின் மணிக்கூண்டில் வைக்கப்பட்டது.

அன்னையின் அழகிய புதிய ஆலயம்: 

சலேசியர்கள் மாரனோடையில் பொறுப்பேற்ற பின், பழைய விமான வடிவ ஆலயத்திற்குப் பதிலாக புதிய அழகிய பங்கு ஆலயம் கட்ட, முதல் பங்கு குரு அருட்தந்தை செபஸ்டின் காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது

பணியைத் தொடர்ந்த சலேசிய குருக்களின் பெரு முயற்சியால், குறிப்பாக அருட்பணி. பாப்புராஜ் (பங்குத்தந்தை), அருட்பணி. போஸ்கோ (இல்லத்தந்தை) ஆகியோரின் வழிகாட்டலில் அன்னைக்கு ஓர் அழகிய ஆலயம் கட்டப்பட்டு, 11.02.2013 அன்று புதுவை -கடலூர் பேராயர் மேதகு அனந்தராயர் முன்னிலையில், அருட்பணி. ஜெயபாலன், ச.ச (சலேசிய சபை மாநிலத் தலைவர்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மோட்சராக்கினி மாதா பக்தி வளர்ந்த விதம்:

மாரனோடை மோட்ச இராக்கினி அன்னையின் பெருமைமிகு வரலாறும், அவள் குடியிருக்கும் கோவிலின் வரலாறும், ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேலானது. 18ம் நுாற்றாண்டில் தொடக்கத்திலேயே இம்மண்ணில் வாழ்ந்த மக்கள் இயேசு சபையினரின் அன்பு அரவணைப்பில் வாழ்ந்தனர். கிறிஸ்தவ விசுவாசத்திலும், மரியன்னையின் பக்தியிலும் சிறந்து விளங்கினர்.

அன்னைக்கென்று ஒரு சிறிய குடிசைக் கோயிலைக் கட்டினர். அன்னையின் அற்புதச் சுரூபத்தை வைத்து வணங்கி வந்தனர். தங்களின் சிற்றாலயத்திற்கு மோட்சஇராக்கினி மாதா கோவில் எனும்

பெயர் வைத்து அன்னைக்கு விழா எடுத்து மகிழ்ந்தனர். பல சமயங்களில் இம்மக்கள் ஆயன் இல்லா ஆடுகளைப் போன்று தவித்தாலும் மரியன்னையின் பக்தியில் மட்டும் இவர்கள் சிறந்து விளங்கினர். 

இக்குடிசைக் கோவிலில் குடிகொண்டுள்ள இரக்கமுள்ள மோட்சராக்கினி அன்னையின் அருளால் அநேக அற்புதங்கள் இங்கு நடந்தன. அவளை நம்பிவந்தோர் நலம் பெற்றுத் திரும்பினர். மரியன்னையின் புகழ் எங்கும் பரவியது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, பிற மத சகோதர சகோதரிகளும் அன்னையின் அருளைத்தேடி வர ஆரம்பித்தனர். 

மோட்சராக்கினி அன்னையின் அற்புத சுரூபம்:

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறிகொள்ளைகள் வழக்கமாக நடைபெற்ற காலம் அது. சாலைகளில் வரும் வண்டிகளையும, வழிப்போக்கர்களையும், வழிமறித்து, கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், கொள்ளைப் பொருட்களுடன் கெடிலம் ஆற்றின் கரைகளில் காணப்பட்ட அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மறைந்து கொள்வது வழக்கம். பொன்னிறமாக ஒளிவீசும் அன்னையின் அற்புதச் சுரூபம் இப்படிப்பட்ட கொள்ளையர்களின் கண்களில் பட்டது. பொன்முலாம் பூசப்பட்ட அன்னையின் சுரூபத்தை, தங்கச் சிலையென்று எண்ணிய கள்வர்கள் ஒரு நாள் திருடிச் சென்று விட்டனர். அன்னையின் அற்புத சுரூபம் காணாமல் போனதை அறிந்த மக்கள் மனம் பதைத்து எட்டுத்திக்கிலும் தேடி அலைந்தனர். சுரூபம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்வரின் வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்தது. ஆனால் அன்னையின் சுரூபத்திற்கு தீங்கு எதுவும் நிகழவில்லை. எனவே சுரூபத்தை வைக்கோல் போரில் பொதிந்து வைத்தனர். அந்த வைக்கோல் போரும் பற்றி எரியவே அச்சமும், ஆத்திரமும் அடைந்த கொள்ளையர்கள் சுருபத்தை உடைத்து உருமாற்றிட முயற்சித்த போது ஏமாற்றமே அவர்களுக்கு மிஞ்சியது. அன்னையின் சுரூபமானது தங்கச் சிலை அல்ல, தங்கமுலாம் பூசப்பட்ட மரசுரூபம் தான் என்பதை அறிந்தவுடன் ஆத்திரமுற்று அருகிலுள்ள கெடிலம் ஆற்றில் சுரூபத்தை வீசி எறிந்தனர். 

சில நாட்கள் கடந்தன. ஆற்றில் வெள்ளம் வடிந்தபின் ஆற்று மணலில் கிடந்த அன்னையின் சுரூபத்தை ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கண்டு ஊருக்குள் ஓடி வந்து சொன்னார்கள். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆற்றங்கரைக்கு ஓடி வந்தனர். மேளதாளத்துடன் ஆடம்பரமாக ஆலயத்திற்கு அன்னையின் சுரூபத்தை எடுத்து வந்தனர். செய்தியறிந்து மகிழ்ந்த அருட்தந்தை மரிய தோமினிக் அவர்கள் மாரனோடைக்கு வந்து திருப்பலி நிறைவேற்றி இறைவனுக்கு நன்றி கூறினார். இந்த அற்புத செய்தி எங்கும் பரவியது. மக்கள் தங்கள் மனக்குறைகள் நீங்க மோட்ச இராக்கினி அன்னையை தேடி ஓடி வந்தனர். அன்னையும் தன் ஆசீரை அவர்கள்மேல் அபரிமிதமாகப் பொழிந்து வந்தார்.

மக்களின் விசுவாசம் நாளுக்கு நாள் உறுதிப்படுவதையும், அன்னையின் பால் அவர்கள் கொண்ட பக்தி பெருகிவருவதையும், கண்டு மகிழ்ந்த பங்குத்தந்தை மரிய தோமினிக் அடிகள், குடிசை கோவிலுக்குப் பதிலாக ஒரு உறுதியான கல்கட்டிடம் ஒன்றைக் கட்ட விரும்பி, பேராயரின் அனுமதியையும், பொருளுதவியையும், கேட்டு விண்ணப்பித்து ஆலயத்தை கட்டி முடித்தார்.

மோட்சராக்கினி அன்னையிடம் திருப்பயணம்:

போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்த அக்காலத்தில், மாரனோடை மோட்சஇராக்கினி மாதா திருவிழாவிற்கு பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர். நடைப்பயணமாக நம்பிக்கையோடு வந்தவர்கள் அநேகர். மாட்டு வண்டிகளில் குடும்பம் குடும்பமாக கூடிவந்தவர்கள் ஏராளம். வரும்போது தங்களுடன் தாங்கள் தங்குவதற்குத் தேவையான உணவு பொருட்களையும், நன்றி காணிக்கைகளையும் கொண்டு வருவர். சில நாட்கள் தங்கியிருந்து அன்னையின் விழாவை சிறப்பிப்பார்கள். இறுதி நாளில் வான வேடிக்கைகளோடும், மேளதாளங்களோடும், கிராமிய ஆடல் பாடல்களோடும் நடத்தப்படும் அன்னையின் ஆடம்பரத் தேர்பவனியில் கலந்து கொண்டு அன்னையின் ஆசீரைப் பெற்று மன நிறைவுடன் வீடு திரும்புவர்.

திருவிழா நவநாட்களில் குருக்கள் மாரனோடையில் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றியும், மறையுரையாற்றியும், திருவருட்சாதனங்களை நிறைவேற்றியும், மக்களின் விசுவாச வாழ்வுக்கு உரமிட்டு, கிறிஸ்த்துவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வழிகாட்டி, மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்ற இந்த விழாக்காலத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வர். குருக்கள் மிகக் குறைவாக இருந்த அந்த காலத்தில் இந்தத் திருவிழா நாட்கள் தான் மக்கள் தங்கள் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருந்தன.

இன்றும் மோட்சராக்கினி மாதா திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னையின் ஆசீர் பெற விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையைத் தேடி வருகின்றனர். பல ஊர்களிலிருந்து, குறிப்பாக எறையூர் பகுதிகளிலிருந்து மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்கள், மோட்டார் வண்டிகளிலும் குடும்பம் குடும்பமாக வந்து அன்னையின் ஆசீரை பெற்றுச் செல்கின்றனர்.

எறையூர், விரியூர் அத்திப்பாக்கம், முகையூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த ஆதி கிறித்துவர்கள் சமூக, அரசியல், மற்றும் மறைபரப்பு பணிகளின் காரணங்களால் புலம்பெயர்ந்து இருந்தை, மாரனோடை, பகுதிகளில் குடியேறியவர்கள் என்பதை ஆயர் இல்லத்தில் உள்ள வரலாற்று குறிப்புகள் நமக்கு சொல்கின்றன. மேலூம் மேற்சொன்ன ஊர்களில் உள்ள மக்களோடு இங்குள்ளோர் வைத்துள்ள திருமண உறவுகள் என்றும் தொடரும் தொடர்கதையாகத் தொடர்வதைக் காணும் பொழுது மேற்சொன்ன "புலப்பெயர்ச்சி" உண்மைதான் என்பதை உணரமுடிகிறது.

மேற்சொன்ன ஊர்களிலிருந்துதான் இன்றும் அதிகமான மக்கள் கூட்டம் அன்னையின் விழாவிற்கு வந்து சிறப்பிப்பது, வாழையடி வாழையாகத் தொடர்ந்து வருவதை இன்றும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

பழுத்த மரத்தை நாடி வரும் பறவைகள் போல நம்பிக்கையோடு அன்னையை நாடி வருபவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. மனமுருகி, மடிப்பிச்சை ஏந்தி, கண்ணீர் சிந்தி, அவளின் கருணையை பெற மன்டியிட்டு மன்றாடுவோர் ஏராளம். பல்வகை வேண்டுதல்களுடன் பரமனின் தாயை தேடி வருபவர்கள் பலர். அன்னையின் ஆசீர் பெற்று நன்றி கூற நாடி வருபவர்கள் பலர்.

பங்கின் கெபிகள்:

1. புனித அந்தோணியார் கெபி

2. சகாயமாதா கெபி

3. லூர்து மாதா கெபி

பங்கின் கல்விக்கூடம்:

ஆர். சி தொடக்கப்பள்ளி 2025-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

பங்கில் உள்ள கன்னியர் இல்லம்:

SMA Sisters Convent

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. பிரான்சிஸ் செபஸ்டின், SDB (1996-2002)

2. அருட்பணி. ஜேசுதாஸ் பெரியநாயகம், SDB (2002-2003)

3. அருட்பணி. ஜான் கிறிஸ்டி, SDB (2003-2004)

4. அருட்பணி.ஜெரால்ட் மிராண்டா, SDB (2004-2006)

5. அருட்பணி. அருளானந்தம், SDB (2006-2008)

6. அருட்பணி. மரியசெல்வம், SDB (2008-2009)

7. அருட்பணி. பாப்புராஜ், SDB (2009-2013)

8. அருட்பணி. ஜாய் குரியன், SDB (2013-2016)

9. அருட்பணி. லூயிஸ் இருதயசாமி, SDB (2016-2019)

10. அருட்பணி. டிசோசா மோசஸ், SDB (2019-2023)

11. அருட்பணி. வின்சென்ட் கபிலை, SDB (2023---)

ஆலய வரலாறு: ஆலய அர்ச்சிப்பு விழா மலர் 2013

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: திரு. பாஸ்கர்