தூய வியாகுல அன்னை, மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை இரட்டைத் திருத்தலம்
இடம்: தேவசகாயம் மவுண்ட், ஆரல்வாய்மொழி
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: கோட்டார்
மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்
நிலை: திருத்தலம்
Contact no: 94452 16357
பங்குத்தந்தை: அருட்பணி. மிக்கேல் ஜார்ஜ் பிரைட்
திருத்தல அதிபர்: அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (மறைவட்ட முதல்வர்)
உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஆன்றனி பெர்டிக் புரூணோ
குடும்பங்கள்: 600
அன்பியங்கள்: 16
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு முதல் திருப்பலி காலை 05:00 மணி, இரண்டாம் திருப்பலி காலை 07:00 மணி, மூன்றாம் திருப்பலி மாலை 05:30 மணி
திங்கள் முதல் சனி வரை காலை 06:00 மணிக்கு திருப்பலி
திங்கள் முதல் வியாழன் வரை மாலை 06:00 மணிக்கு திருப்பலி
வெள்ளி காலை 11:00 மணிக்கு மறைசாட்சி நவநாள், சிறப்பு குணமளிக்கும் திருப்பலி
வெள்ளி மற்றும் சனி மாலை 07:00 மணிக்கு திருப்பலி
முதல் செவ்வாய் மாலை 07:00 மணிக்கு திருப்பலி, புனித அந்தோனியார் சாவடி
கடைசி சனி காலை 10:00 மணி முதல் நண்பகல் 01:00 மணிவரை நற்செய்தி கொண்டாட்டம்.
சிறப்பு வழிபாடு 'மலைவலம்':
1752-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் நாள் இறைவனுக்காக இறந்த மறைசாட்சி தேவசகாயத்தின் இறப்பு நாளை சிறப்பு நாளாகக் கொண்டாடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி மாலையில், மலையைச் சுற்றி அவர் பட்ட 14 பாடுகளையும் இயேசுவின் பாடுகளோடு நினைவு கூர்ந்து ஜெபிக்கப்படுகிறது. இயேசுவின் பாடுகளின் 14 நிலைகளோடு மறைசாட்சி தேவசகாயத்தின் பாடுகளைத் தியானித்தபின் அவர் இறந்த இடம், சுடப்பட்ட இடம் போன்ற இடங்களில் ஜெபித்துவிட்டு, முட்டூன்றிய இடத்தில் இறுதியாக அனைவருடைய விண்ணப்பங்களையும் இறைப்பாதம் சேர்க்க ஜெபித்துவிட்டு, அனைவருக்கும் இறுதி ஆசீர் அருட்பணியாளரால் கொடுக்கப்படுகிறது. இந்த மலைவலத்தில் மறைசாட்சி தேவசகாயத்தின் திரு உருவம் தாங்கிய சப்பரம் மக்களால் சுமந்து செல்லப்படுகிறது.
திருவிழாக்கள்:
ஜனவரி 12 முதல் 14-ஆம் தேதி வரை மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருவிழா
தவக்காலத்தின் முதல் வெள்ளி தூய வியாகுல அன்னையின் திருவிழா கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் நடைபெறும்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. Rev.Fr. குருசுமிக்கேல்
2. Rev.Fr. ஜேசுதாசன்
3. Rev.Fr. அருள் நிர்மல்
4. Rev.Fr. சகாய பெலிக்ஸ்
5. Rev.Fr. S. அன்பின் தேவசகாயம்
6. Rev.Sr. கோஸ்மாஸ், SAT
வழித்தடம்: நாகர்கோவில் -ஆரல்வாய்மொழி
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, தடம் எண் 15V பேருந்து. இறங்குமிடம் தேவசகாயம் மவுண்ட்.
Location map: Devasahayam Mount
https://maps.app.goo.gl/4ayDvnbQ5BRqiYQH9
வரலாறு:
அருளாளர் தேவசகாயம் பிள்ளை இயேசுவுக்கு சாட்சியாக வாழ்ந்து, உயிர் துறந்த புண்ணிய பூமியாம் ஆரல்வாய்மொழி (தேவசகாயம் மவுண்ட்) திருத்தல வரலாற்றைக் காண்போம்...
திருத்தல வரலாறை தெரிந்து கொள்வதற்கு முன்னர், அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
பிறப்பு :
மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 23ம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமஸ்கிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். வளர்ந்ததும், வில் வித்தை, வர்ம கலைகள், போருக்கான ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.
அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள் சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது.
மனமாற்றம் :
1741ம் ஆண்டு, குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு கடற்படைத் தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த "பெனடிக்டஸ் டி லெனோய்" (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறை பிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இன்றும் குளச்சல் பகுதியில் இருக்கிறது.
நாளடைவில் இந்த "பெனடிக்டஸ் டி லெனோய்" நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதைக் கண்ட அவர் நலம் விசாரித்தார். அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால்நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசமடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லி, "பெனடிக்டஸ் டி லெனோய்" அவருக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தினார். நாளடைவில் கிறிஸ்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவராக நீலகண்ட பிள்ளை விருப்பம் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த "ஜியோவன்னி பட்டிஸ்டா புட்டரி" (Rev. Father: Giovanni Battista Buttari) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள் தருகின்ற "இலாசரஸ்" (Lazarus) என்னும் பெயரைச் சூட்டினார்.
கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறிஸ்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆனார்.
இறப்பு :
இவர் இந்து சமய பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராகப் பல பொய் குற்றச்சாட்டுகள் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தார்கள். மேலும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். கிறிஸ்துவுக்காகத் தனது உயிரையும் கொடுக்க சித்தமான தேவசகாயம், தமது கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா, அவரை மரண தண்டனைக்காகச் சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம்பூ மாலை அணிவிக்கப்பட்டு, எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து, அவரைக் கேவலப்படுத்தும்படியாகவும், கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும், அவரை ஊர் ஊராக அழைத்துச் சென்றார்கள்.
1752 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 14ம் நாள், தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாகத் தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டில் எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்தனர்.
மறைசாட்சி பட்டம் அளிக்கும் விழா :
2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 2ம் நாள், தேவசகாயம் பிள்ளை அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மை ஆலயத்தை அடுத்துள்ள கார்மேல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின்போது தேவசகாயம் பிள்ளை "மறைச்சாட்சி" (martyr) என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு "முக்திப்பேறு பெற்றவர்" (Blessed) என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்ட அறிக்கையைத் திருத்தந்தையின் பிரதிநிதியாகச் செயல்பட்ட கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ வாசித்தளித்தார்.
கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ, இச்சிறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்குவதற்காக உரோமிலிருந்து கோட்டாருக்கு வருகை தந்தார். அந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்தும், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும், பல கத்தோலிக்க சமயத் தலைவர்களும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும், கலந்துகொண்டனர். தேவசகாயம் பிள்ளை பக்தி, கிறிஸ்தவர் அல்லாத பிற சமயத்தினர் நடுவிலும் நீண்ட காலமாக இருந்து வருவதைத் தொடர்ந்து பல சமயத்தினர் சிறப்பு விழாவில் பங்கேற்றனர்.
அருளாளர் தேவசகாயம் பிள்ளைக்கு மறைசாட்சி பட்டம் அளிக்கும் நிகழ்வை முன்னிட்டு, கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மை பேராலயத்தில் இவருடைய கல்லறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ம் நாள், அக்கல்லறையைச் சந்தித்து அங்கு இறைவேண்டல் நிகழ்த்திட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
புனிதர் பட்டம்:
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் தேவசகாயம் பிள்ளையை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் தெரிவித்து, அதிகாரப் பூர்வமான ஆவணத்தில் 21.02.2020 அன்று கையெழுத்திட்டார்.
அருளாளர் தேவசகாயம் பிள்ளைக்கு 15.05.2022 அன்று புனிதர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.
திருத்தல வரலாறு:
1752 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி ஆரல்வாய்மொழியில் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் தியாகத்தால் கிறிஸ்தவ நம்பிக்கையின் விதை விதைக்கப்பட்டது. பின்னர் ஆரல்வாய்மொழியானது "தேவசகாயம் மலை" என்று பெயரிடப்பட்டது. புனித வியாகுல அன்னை சிற்றாலயம் 1820 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இறைவனின் வல்லமையால் தேவசகாயம் மவுண்ட் ஆலயம் வளர்ச்சி பெறத் துவங்கியது. 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி இராஜாவூர் பங்கின் கிளைப் பங்காக ஆனது. இராஜாவூர் பங்குத்தந்தையர்கள் தேவசகாயம் மவுண்ட் ஆலயத்தின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி பணியாற்றினர். குறிப்பாக அருட்பணி. பயஸ் ஏ. மோரிஸ் அவர்களும், அவரைத் தொடர்ந்து அருட்பணி. பீட்டர் கிறிஸ்டியன், அருட்பணி. ஆன்றனி D.C, அருட்பணி. லாரன்ஸ் பெர்னாண்டஸ் (1936-1940), அருட்பணி. இக்னேஷியஸ் மரியா (1941-1944), அருட்பணி. அம்புரோஸ் (1947-1951), அருட்பணி. அகஸ்டின் பெர்னாண்டோ (1957-1960), மற்றும் அருட்பணி. சி.எம். ஹிலாரி (1960) ஆகியோர் தேவசகாயம் மவுண்ட் மீது சிறப்புக் கவனம் செலுத்தி பணியாற்றினர்.
அருட்பணி. ஹிலாரி அவர்கள் தேவசகாயம் மவுண்ட் ஆலயத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டினார். மேலும் தேவசகாயம் மவுண்ட் வியாகுல அன்னை ஆலயத்தை, வியாகுல அன்னை மற்றும் அருளாளர் தேவசகாயம் பிள்ளை இரட்டைத் திருத்தலமாக மாற்றினார். அவரது முயற்சியால் திருச்சி புனித அன்னாள் சகோதரிகள் தங்கள் பணியை இங்கு தொடங்கினர்.
19.05.1965 அன்று தேவசகாயம் மவுண்ட் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. மேரி ஜார்ஜ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்.
புதிய ஆலயமானது 15 செப்டம்பர் 1975 இல் கட்டப்பட்டது.
புனித லூர்து அன்னை கெபியின் அடிக்கல் நாட்டும் விழா:
தேவசகாயம் மலையில் மிகவும் பழைமையான வரம் பல வாரி வழங்கும் புனித லூர்து அன்னை கெபி அமைந்திருந்தது. இந்த கெபியின் முன்புறம் அமைந்துள்ள இரண்டு கல்தூண்கள் மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் மனைவி ஞானப்பூ நினைவாக வடக்கன்குளத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டதும், இந்த கெபியின் தனிச்சிறப்பாகும். மக்களும், திருப்பயணிகளும் அதிகமாக அமர்ந்து ஜெபிக்க விரும்பும் இடமும் இதுவே. நாணயங்களும் இக்கெபியின் பீடத்தில் பதித்து நம்பிக்கையோடு மக்கள் வேண்டுதல்களை ஒப்புக்கொடுப்பதும் இந்த இடத்தின் தனிச்சிறப்பாகும். பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த கெபி தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. எனவே சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனவே பழைமை மாறாமல், புனிதம் சிதையாமல் இந்த கெபியை புதுப்பிக்க 24.12.2021அன்று அடிக்கல் இடப்பட்டது. அடிக்கல் இட பல நல்ல உள்ளங்கள் வருகை புரிந்தனர். பங்குத்தந்தை அருட்பணி. மிக்கேல் ஜார்ஜ் பிரைட், இணைப் பங்குத்தந்தை அருட்பணி. புருனோ, திருத்தல அதிபர் அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் அவர்களும், அன்னாள் அருட்சகோதரிகள், ஆரோக்கியநகர் அருட்பணியாளர்கள், பிறசபை அருட்சகோதரிகளும் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கூடம்:
கல்வியின் வளர்ச்சிக்காக பகுதி நேரப் பள்ளி கட்டப்பட்டு 1896 ஆம் ஆண்டு முதல் வகுப்பு மற்றும் 1938 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பு தொடங்கப்பட்டு, முதல் வகுப்புக்கு காலை நேரத்திலும், இரண்டாம் வகுப்புக்கு நண்பகலிலும் வகுப்புகள் எடுக்கப்பட்டன. 1960 இல் முழு நேரப் பள்ளியாக மாறியது. பின்னர் 1962 ஆம் ஆண்டில் அது ஐந்தாம் வகுப்புடன் தொடர்ந்தது மற்றும் 1983 ஆம் ஆண்டில் இது R.C நடுநிலைப் பள்ளியாக ஆனது.
தேவசகாயம் மவுண்ட் திருத்தல தனிச் சிறப்புகள்:
1. ஆலயம்:
வளம் தந்து வாழ்வளிக்கும் வியாகுல அன்னையின் இரட்டைத் திருத்தலமானது அமர்ந்து ஜெபித்து, சுமைகளை இறக்கி, அன்னையின் ஆசீரை இரட்டிப்பாக எடுத்துச் செல்லும் அருள் களஞ்சியமாக உள்ளது.
2. பழைய கோவில்:
இறைபக்தி வளர, தேவசகாயம் மவுண்ட் -ல் உருவான முதல் சிற்றாலயம் இது. 1820-ல் கட்டப்பட்டு 200 ஆண்டுகளைத் தாண்டி நிற்கிறது. அமைதியை அளிக்கும் ஆற்றல் மிக்க இடமாக இச்சிற்றாலம் விளங்குகிறது. மாதத்தின் முதல் புதன்கிழமை இங்கு சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
3. அருங்காட்சியகம்:
இறைவனுக்காக இறந்து, இறந்த பின்பும் இறைபணி ஆற்றி வரும் மறைசாட்சி தேவசகாயத்தின் அருங்காட்சியகத்தில், அவர் ஆற்றும் பணிகள் புதுமைகள் வாயிலாகக் கணக்கிடைக்கின்றது. வாருங்கள், வாசிப்போம், பார்ப்போம், விசுவாசத்தில் உறுதி அடைவோம்.
4. சிலுவைப்பாதை:
மலையேறி தன் சிலுவையைச் சுமந்து உலக மீட்பிற்காக இறந்த இயேசுவின் அனுபவத்தை காற்றாடி மலையிலும் (தேவசகாயம் மவுண்ட்) அனுபவிக்கலாம். 14 சிலுவைப் பாடுகளின் நிலைகளும் நம்மை கல்வாரி அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் வாய்க்காலாக அமைந்துள்ளது. அனுபவம் பெற புறப்பட்டு விட்டீர்களா...?
5. தேவா சதுக்கம்:
தான் இறக்கும் முன் அன்னை மாமரியிடம் ஜெபிப்பதற்காக மண்டியிட்டட இடம். உண்மை பக்தனின் முட்டுத் தடங்களும் காலின் தடமும் பதிந்த இடம் இது. உடல் நோயால் வருந்துபவர் இவ்விடம் வந்து ஜெபித்து உடல் நிலம் பெற்று செல்கின்றனர்.
6. மணியடிச்சான் பாறை:
இறைசாட்சியான மறைசாட்சியின் மரணம் அவரைச் சுட்ட வீரர்களைத் தவிர யாரும் அறியாத சூழலில், உலகமே அறியும் அளவுக்கு பாறையிலிருந்து விழுந்த கல்துண்டு மணியடித்துப் பறைசாற்றியது. 250 ஆண்டுகளைக் கடந்தும் அந்த பாறையானது மறைசாட்சி தேவசகாயத்தின் இறப்பினை இன்றளவும் தனது மணியொலியால் உரக்கக் கூறிக் கொண்டிருக்கிறது.
7. கற்சிலுவை: (சுடப்பட்ட இடம் ):
இயேசுவின் மேல் கொண்ட தன் விசுவாசத்தைப் பாதுகாக்க துப்பாக்கி குண்டுகள் துளைக்க வீரமரணம் அடைந்த இடத்தில் அதன் நினைவாக கற்சிலுவை வைக்கப்பட்டு, மக்களின் வேண்டுதல்களுக்கு கனிவாய் செவிசாய்க்கும் இடமாக உள்ளது. தங்கள் நேர்ச்சைக் கடன்களை செலுத்தும் இடமாகவும் உள்ளது.
8. மரச் சிலுவை (இறந்த இடம்):
மறைசாட்சி தேவசகாயம் தன் இன்னுயிரை இறைவன் கரத்தில் ஒப்படைத்த இடத்தில் தான் இம்மரச் சிலுவை உள்ளது. அவரின் உடல் வெயில் படாமலிருக்க நிழல் தந்த ஆலமரக்கிளை மஞ்சள் நிறமாக மாறி இச்சிலுவையில் மேலே காட்சியளிக்கிறது. முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்க மக்கள் இவ்விடத்தில் பக்தியோடு ஜெபிப்பது வழக்கம்.
9. லூர்து அன்னை கெபி:
பல வருடங்களுக்கு முன்னால் கற்களால் கட்டப்பட்ட லூர்தன்னை கெபியானது தற்போது புது வடிவம் பெற்று பழைமை மாறாமல் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. (மனதில் உள்ள கருத்துக்கள் நிறைவேற நாணயத்தை சுவரில் ஒட்டி அது விழாமல் ஒட்டி விட்டால் கருத்துக்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஜெபிக்கும் இடமும் இங்குள்ளது).
10. ஜெபமாலை பூங்கா:
"அம்மா தந்த ஜெபமாலை, ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை" வாழ்வின் எல்லா நாட்களும் சுப நாட்களாக அமைய அன்னையின் ஆசீரை ஆர்வமாய் பெற்றுச் செல்ல ஜெபமாலை பூங்கா, லூர்தன்னை கெபி அருகிலேயே உள்ளது. இதில் தேவ இரகசியங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
11. கண்ணீர் பாறை:
மறைசாட்சி இறந்த துக்கத்தை கண்ணீர் சிந்தி வெளிப்படுத்தியது. அதனால் தான் கண்ணீர் பாறை என்ற காரணப் பெயர் பெற்றது. லூர்து அன்னை கெபியின் பின்புறம் அமைந்துள்ள கண்ணீர் பாறை. இதிலிருந்து சுரக்கும் நீர் குணப்படுத்தும் ஆற்றலுள்ளதாக நம்பிக்கையோடு வேண்டிய பலர் சான்று பகர்கின்றனர்.
12. ஊமைப் பாறை:
மறைசாட்சியின் இறப்பை அறிவித்தவற்றில் ஊமைப் பாறையும் ஒன்று. இறப்பை அறிவித்த பின் அமைதியாக, யாரும் கண்டுகொள்ளாத நிலையில் ஊமையாக 13-ம் ஸ்தலம் இருக்கும் இடத்தில் இது காணக்கிடைக்கிறது.
13. மஞ்சள் நிற ஆலமரக்கிளை:
மறைசாட்சியின் இறந்த உடல் கூட வெயிலில் தாக்கப்படக் கூடாது என்று ஆலமரம் தன் கிளைகளில் ஒன்றை மஞ்சளாக்கி இதமாக அவர் இறைவனில் இளைப்பாற நிழல் தந்தது. கம்புச் சிலுவையின் மேல் பகுதியில் உள்ள மரத்தின் கிளைகளில் இந்த இலைகள் காணப்படுகின்றன.
14. கொடிமரம் (ஒற்றைக்கல்):
கற்பாறையின் மேல் வீற்றிருக்கும் வியாகுல அன்னைக்கு ஒரே கல்லாலான கொடிமரம் இவ்விடத்திற்கு ஏற்றத்தை தருகிறது. வியாகுல அன்னையின் திருவிழாவின் தொடக்க நாளில் இதில் கொடிற்றப்படுகிறது.
15. சிறைச்சாலை:
வியாகுல அன்னை ஆலயத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் இச்சிறைச்சாலை அமைந்துள்ளது. தம் மரணம் மிக அருகில் இருப்பதை உணர்ந்து ஜெபித்த புனிதமான இடம் இந்தச் சிறைச்சாலை. மறைசாட்சி தேவசகாயம் கால்பதித்து அவரது இரத்தத் துளிகளால் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்ட இந்த சிறைச்சாலை ஆண்டவர் மீது அவர் கொண்டிருந்த ஆழமான அன்பை நமக்குச் சொல்லித் தருகிறது. இங்கு வந்து விசுவாச பலம் பெறுங்கள்.
16. அருளிக்கம்:
காலம் கடந்தும் அழியாமல் வாழும் மறைசாட்சி தேவசகாயத்தின் அருளிக்கமானது, வியாகுல அன்னையின் ஆலயத்தினுள் மிகப்பெரும் வணக்கத்தோடு கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. மறைசாட்சியின் ஸ்பரிஸம் தொட்டு ஜெபிக்க ஆவல் உள்ளவர்கள் இந்த அருளிக்கத்தை நம்பிக்கையோடு முத்திசெய்வது உண்டு.
17. புனித அந்தோணியார் சாவடி:
கோடி அற்புதர் அந்தோணியாரின் திருஉருவம் தாங்கி நிற்கும் புனித அந்தோணியார் சாவடி, அனைவருக்கும் அடைக்கலமாகத் திகழ்கிறது. அந்தோணியாரிடம் ஜெபித்து அடையாமல் போனது எதுவும் இல்லை, எனும் நம்பிக்கையோடு வலுசேர்க்கிறது இவ்விடம். நோயாளிகள் இவ்விடம் தங்கி சுகம் பெற்றுச் செல்லுகிறார்கள். மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 7 மணிக்கு இச்சாவாடியில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
18. பாடுகளின் சுவர்:
இயேசுவின் பாடுகளை 14 நிலைகளில் நாம் தியானிப்பது போல மறைசாட்சி தேவசகாயம் அனுபவித்த, பதினான்கு பாடுகளும் கற்களில் பொறிக்கப்பட்டு முட்டூன்றி ஜெபித்த இடத்தின் அருகே உள்ள சுவரில் பாதிக்கப்பட்டு, அச்சுவர் "பாடுகளின் சுவர்" என்று அழைக்கப்படுகிறது. மறைசாட்சியின் 14 பாடுகளைத் தியானித்து இறை விருப்பத்தின்படி வாழ சக்தி கிடைக்க நம்மையே முழுமையாக இறைவனிடம் கையளிக்க, அருள் பெற்றுத்தரும் இடமாகவும் இது அமைந்துள்ளது.
19. சிவப்பு சிலுவை:
சிலுவையின்றி மீட்பில்லை, கேப்டன் வாயில் நுழைந்த உடன் நம்மை எதிர்கொள்வது செஞ்சிலுவை மறைசாட்சி தேவசகாயத்தின் 300 வது பிறந்தநாளை முன்னிட்டு அதன் நினைவாக உருவாக்கப்பட்டது தான் இந்த சிவப்புக் கல்லாலான சிலுவை. காற்றாடி மலைக்கு வரும் அத்தனை பக்தர்களையும், அனைத்து மத, இன மக்களையும் கரங்கள் விரித்து அழைப்பது போல் காட்சி அளிக்கிறது இச்சிலுவை.
20. ஆராதனை ஆலயம்:
அனைவரும் ஏங்கித் தேடுகின்ற அமைதியை வாரி வழங்கும் ஆராதனை ஆலயம் இக்காற்றாடி மலையின் சிறப்பு. 24 மணி நேரமும் உனக்காக நான் இருக்கிறேன் என்று காத்து கிடந்து தன்னை நாடி வரும் அனைத்து உள்ளங்களுக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும், நிம்மதியையும் குறையா அமுத சுரபி போல் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருப்பது தான் இயேசுவின் நற்கருணை பிரசன்னம். புனித தேவசகாயத்தை நாடி வருபவர்கள் இயேசுவின் உயிருள்ள பிரசன்னத்தை அனுபவிக்காமல் செல்வதில்லை.
"சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.
அன்னையின் 7 வியாகுலங்கள்:
1. சிமியோனின் இறைவாக்கு
2. எகிப்துக்கு ஓடிப்போனது
3. காணாமற்போன இயேசுவை மூன்று நாட்களாய் தேடியது.
4. கல்வாரிக்கு சிலுவை சுமந்து கொண்டு போன இயேசுவை சந்தித்தது.
5. மரியாள் சிலுவையடியில் நின்றது.
6. இயேசுவை சிலுவையில் இருந்து இறக்கி மடியில் வைத்திருந்தது.
7. இயேசுவை அடக்கம் செய்தது.
மீட்பின் பணியில் மரியாள் இயேசுவுடன் ஒத்துழைத்தாள். மாதா சிலுவை அடியில் நிற்கையில் துயர வாள் அவரது உள்ளத்தை ஊடுருவியது. மேலான வாழ்வை நாம் பெற மாதா, இயேசுவுடன் ஒத்துழைத்தமையால் நம் அன்னையாகிறாள்.
புனித வியாகுல அன்னை ஜெபமாலை...
அன்னை மரியா தமது திருமகனின் பாடுகள் நியமித்தமாக அனுபவித்த ஏழு வியாகுலங்களைத் தியானிப்போமாக.
முதல் துயரம்:
இந்த முதல் மறைபொருளிலே அன்னை மரியாவுக்கு, சிமியோன் சொன்ன இறைவாக்கினால் தமது மகனுடைய மரணத்தையும் மனிதருடைய அழிவையும் அறிந்து அவர் தமது இதயத்தில் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டார் என்று தியானிப்போமாக. - 1 பர. 7 அருள். 1 திரி.
இரண்டாம் துயரம்:
இந்த இரண்டாம் மறைபொருளிலே அன்னை மரியா, தமது மகனை ஏரோது கொல்லத் தேடுகிறான் என்பதை அறிந்து, அவரை சுமந்து கொண்டு எகிப்து நாட்டுக்கு ஓடிப்போய் ஏழு ஆண்டுகளாக மிகவும் துக்கம் அனுபவித்தாரென்று தியானிப்போமாக.- 1 பர. 7 அருள். 1 திரி.
மூன்றாம் துயரம்:
இந்த மூன்றாம் மறைபொருளிலே அன்னை மரியா, தமது திருமகனோடு தேவாலயத்துக்குப் போனவிடத்தில் மூன்று நாள்கள் அவரைத் தேடியும் காணாததால், தமது ஆத்துமத்திலே மிகுந்த வியாகுலப்பட்டாரென்று தியானிப்போமாக. - 1 பர. 7 அருள். 1 திரி.
நான்காம் துயரம்:
இந்த நான்காம் மறைபொருளிலே அன்னை மரியா, தமது திருமகன் கல்வாரி மலையில் மரணம் அடையச் சிலுவை சுமந்து போகையில், அவரை எதிர் கொண்டு சந்தித்த போது வாக்குக்கெட்டாத வியாகுலம் அனுபவித்தாரென்று தியானிப்போமாக. - 1 பர. 7 அருள். 1 திரி.
ஐந்தாம் துயரம்:
இந்த ஐந்தாம் மறைபொருளிலே அன்னை மரியா, தமது திருமகன் சிலுவையில் அறையுண்டு, அவர் அனைவராலும் கைவிடப்பட்டு ஓர் ஆறுதலும் இல்லாமல் மரணமடைகிறதைக் கண்டு, துக்கத்தில் அமிழ்ந்தி எல்லையில்லா வியாகுலப்பட்டாரென்று தியானிப்போமாக. - 1 பர. 7 அருள். 1 திரி.
ஆறாம் துயரம்:
இந்த ஆறாம் மறைபொருளிலே அன்னை மரியா, தமது திருமகனுடைய திருவுடலைச் சிலுவையினின்று இறக்கி தமது மடிமேல் வைத்து, அதிலுள்ள காயங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் சொல்ல இயலாத வியாகுலம் அனுபவித்தாரென்று தியானிப்போமாக. - 1 பர. 7 அருள். 1 திரி.
ஏழாம் துயரம்:
இந்த ஏழாம் மறைபொருளிலே அன்னை மரியா, தமது திருமகனுடைய உடலைக் கல்லறையில் அடக்கம் செய்த பின்பு அவருடைய மரணத்தையும், திருப்பாடுகளையும், தமது தனிமையையும் நினைத்து மட்டில்லா துயரம் அனுபவித்தாரென்று தியானிப்போமாக. - 1 பர. 7 அருள். 1 திரி.
கண்ணீர் அஞ்சலி
மிகவும் வியாகுலம் நிறைந்த அன்னையே, உமது திருமகனுடைய வாழ்விலும், சாவிலும் நீர் அழுத கண்ணீரைப் பார்த்து நாங்கள் செய்த பாவங்களுக்காக மானஸ்தாபமாய் இருந்து உமக்கு ஆறுதல் வருமளவும் நாங்கள் மனம் வருந்தி அழ உம்மை மன்றாடுகிறோம்.-3 அருள்
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:
1. பங்குப்பேரவை
2. மறைக்கல்வி
3. சிறார் இயக்கம்
4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
5. இளையோர் இயக்கம்
6. மரியாயின் சேனை
7. புனித வின்சென்ட் தே பவுல் சபை
8. திருவழிபாட்டுக் குழு
9. பாடகற் குழு
10. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்
11. தொழிலாளர் இயக்கம்
12. கத்தோலிக்க சங்கம்
13. சிறுசேமிப்பு குழு
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. Rev.Fr. V. Mary George
(19.05.1961-06.12.1971)
2. Rev.Fr. A.P. Stephen
(06.12.1971-08.10.1975)
3. Rev.Fr. S. Servacius
(08.10.1975-03.01.1976)
4. Rev.Fr. A. Joseph Raj
(03.01.1976-25.05.1978)
5. Rev.Fr. S. Joseph
(25.05.1978-30.05.1982)
6. Rev.Fr. V. Maria James
(30.05.1982-13.05.1987)
7. Rev.Fr. R. Lawrence
(13.05.1987-20.05.1989)
8. Rev.Fr. S.M. Charles Boromio (20.05.1989-08.06.1992)
9. Rev.Fr. George Ponniah
(08.06.1992-12.06.1998)
10.Rev.Fr. J.R. Patric Xavier
(12.06.1998-25.06.2001)
11. Rev.Fr. M. David Micheal
(25.06.2001-18.08.2001)
12. Rev.Fr. R. Lawrence
(18.08.2001-16.05.2002)
13. Rev.Fr. A. Antonydhas Stalin (16.05.2002-12.03.2004)
14. Rev.Fr. Yesudasan Thomas (12.03.2004-21.05.2004)
15. Rev.Fr. George Ponnaiah
(21.05.2004-26.06.2005)
16. Rev.Fr. M. Devasahayam
(26.06.2005-23.05.2010)
17. Rev.Fr. Perpetual Antony
(23.05.2010-24.06.2015)
18. Rev.Fr. A. Stephen
(24.06.2015-19.08.2020)
19. Rev.Fr. A. Michael George Bright (19.08.2020 ...)
பங்கில் பணியாற்றிய உதவிப் பங்குத்தந்தையர்கள்
1. Rev.Fr. J. Francis De Sales (07.12.1989-09.03.1990)
2. Rev.Fr. A. Gabriel (11.05.1999-25.05.2001)
3. Rev.Fr. Yesudasan Thomas (17.08.2003-12.03.2004)
4. Rev.Fr.Gnanaraj (June 2012-May 2013)
5. Rev.Fr. Antony Dhas (June 2013-May 2014)
6. Rev.Fr. Britto Raj (June 2014-May 2015)
7. Rev.Fr. Benhar (04.10.2014-04.02.2015)
8. Rev.Fr. Benjamine (05.02.2015-10.06.2015)
9. Rev.Fr. John Sibi (10.06.2015-05.12.2015)
10. Rev.Fr. Ravi Godson Kennady (05.12.2015-10.10.2017)
11. Rev.Fr. A. Michael George Bright (12.10.2017-30.03.2018)
12. Rev.Fr. Gnana Sekaran (03.05.2018-18.05.2019)
13. Rev.Fr. Maria Joseph Sibu (09.05.2019-19.08.2020)
அன்பர்களே வியாகுல அன்னையின் வழியாகவும் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வழியாகவும் எண்ணற்ற புதுமைகள் நாள்தோறும் நடந்து வருகின்றன. இங்கு வந்து செல்லும் விசுவாசிகளே இதற்கு சாட்சி.
தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் வந்து ஜெபித்து இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.
அருளாளர் தேவசகாயம் இரத்தம் சிந்திய இந்த திருத்தலத்திற்கு ஏராளமான மக்கள் வந்து சிலுவைப்பாதை நடத்தியும், அன்னையின் ஏழு வியாகுலங்களை தியானித்தும், திருப்பலியில் பங்கேற்றும் வருகின்றனர்.
தேவசகாயம் மவுண்ட் திருத்தலத்தை நாடி வாருங்கள்... சிலுவை நாயகராம் கிறிஸ்து இயேசுவின் ஒளியை தரிசித்து ஆசி பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. Michael George Bright மற்றும் அருட்சகோதரி. சகாய செல்வி, SAT
திருத்தல புகைப்படங்கள்: திரு. ஆன்றனி ராஜ் (மாதா டிவி)