59 புனித சவேரியார் ஆலயம் செந்தறை

       

புனித சவேரியார் ஆலயம்

இடம் : செந்தறை 

மாவட்டம்: கன்னியாகுமரி 

மறைமாவட்டம்: குழித்துறை 

மறைவட்டம் : மாத்திரவிளை 

நிலை : பங்குத்தளம் 

குடும்பங்கள் : 300

அன்பியங்கள் : 9

பங்குத்தந்தை: அருட்பணி. தானியேல் ஆசீர்வாதம், CPPS

சிறப்பு நிகழ்வுகள் :

மாதத்தில் முதல் வியாழன் மாலை 06:30 மணிக்கு கெபியில் வைத்து சிறப்பு திருப்பலி 

மாதத்தின் மூன்றாவது புதன் மாலை 06:30 மணிக்கு தேரிவிளை வேளையம்மாள் குருசடியில் நவநாள், சிறப்பு திருப்பலி

மாதத்தின் மூன்றாவது வியாழன் மாலை 06.30 மணிக்கு கிறிஸ்து அரசர் சிற்றாலயத்தில் புனித யூதா ததேயு நவநாள் திருப்பலி.

திருவிழா: ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையில் பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. றசல்ராஜ், OCD

2. அருட்பணி. கிறிஸ்டோபர், OCD

3. அருட்பணி. சந்திரசேகர், குழித்துறை மறைமாவட்டம்

1. அருட்சகோதரி. பிறேமா 

2. அருட்சகோதரி. மார்த்தா.

Location map:https://g.co/kgs/rYaLZX

வழித்தடம்: கருங்கல் - தேங்காய்பட்டணம் சாலையில் செந்தறை அமைந்துள்ளது. 

பேருந்துகள் :

மார்த்தாண்டம் > 87B

நாகர்கோவில் > 309, 7G

நாகர்கோவில் -தேங்காய்பட்டணம் > 9

குளச்சல் -தேங்காப்பட்டணம் > 9

மற்றும் மினிபஸ் கருங்கல் -தேங்காய்பட்டணம். 

வரலாறு: 

புதுக்கடை பங்கின் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. வர்க்கீஸ் அவர்கள் 1925 ஆம் ஆண்டுவாக்கில் செந்தறையில் ஒரு கூடாரம் அமைத்து, கிறிஸ்தவ நாடகங்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னாளில் கிறிஸ்தவ ஆலயம் இப் பகுதியில் உருவாக காரணமாக இருந்தார். 1927 ஆம் ஆண்டு மிடாலம் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. எப்ரேம் கோமஸ் காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஓலைக்கூரை ஒன்று அமைத்து, காலையில் ஓராசிரியர் பள்ளிக்கூடமாகவும் மாலையில் ஜெப வழிபாடும் நடந்து வந்ததாக கூறப் படுகின்றது. 

1948 முதல் இனையம் பங்கின் கிளையாக செயல்பட்டு வந்த செந்தறையில் அருட்பணி. ஜான் பெர்னாண்டஸ் அவர்கள் மாதம் ஒரு திருப்பலி நிறைவேற்றி உள்ளார். 1956 ஆம் ஆண்டு பூட்டேற்றி தனிப்பங்கான பின்னர், அதன் கிளைப்பங்காக செந்தறை அங்கீகரிக்கப் பட்டு, அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. வென்சஸ்லாஸ் அவர்களால் வாரம் ஒரு திருப்பலி நிறைவேற்றப் பட்டு வந்தது. இவருடைய பணிக்காலத்தில் பலர் கிறிஸ்தவர்களாகினர். 1976 ஆம் ஆண்டு அருட்பணி. வெனான்சியுஸ் பணிக்காலத்தில் பழைய ஆலயம் அகற்றப்பட்டு, ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட ஆலயம் கட்டப்பட்டு அப்போதைய ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 1981 இல் அருட்பணி. ஜூலியஸ் அவர்களின் பணிக்காலத்தில் பல்வேறு மக்களையும் சந்தித்து பக்குவப்படுத்தி திருமுழுக்கு கொடுத்து செந்தறையில் கிறிஸ்துவின் பணியில் எழுச்சியை ஏற்படுத்தினார். இக்கால கட்டத்தில் புனித சவேரியார் ஆங்கிலப் பள்ளியையும் ஆரம்பித்தார். 

27-05-1992 ல் கார்மல் சபை அருட்சகோதரிகள் இல்லம் கட்டப்பட்டு, புனித சவேரியார் ஆங்கிலப் பள்ளி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு தற்போது ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்து கல்வி பணியிலும் சிறந்து விளங்குகின்றது. 

புதிய ஆலயம் :

2001 முதல் 2003 வரை பணி செய்த அருட்பணி. சூசை அவர்களின் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு, அதற்கு முன்னோடியாக பங்குப்பணியாளர் இல்லத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. 2003 முதல் 2006 வரை பணிசெய்த அருட்பணி. ஜெயக்குமார் பணிக்காலத்தில் புதிய ஆலய கட்டுமானப் பணிக்கான வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டு மாதத் தவணையில் தொகைகள் சேகரிக்கப் பட்டு வந்தது. 2006 ல் பொறுப்பேற்ற அருட்பணி. ஜோசப் ஜெயசீலன் பணிக்காலத்தில் 18-02-2007 ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, 2008 ல் பணிசெய்த அருட்பணி. அந்தோணி M. முத்து பணிக்காலத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பமானது. 2009 முதல் 2013 வரை பணிசெய்த அருட்பணி. சேம் F மேத்யூ அவர்கள் பணிக்காலத்தில், பாதியளவு மட்டுமே நிறைவு பெற்றிருந்த ஆலயப் பணிகளை, தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகளை முழுவதும் நிறைவு செய்து 08-05-2011 ல் அப்போதைய கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. இத்துடன் அழகிய மாதா கெபியும் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்பணி. சேம் மேத்யூ அவர்களின் பணிக்காலத்தில் செந்தறையை தனிப்பங்காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, இக்காலகட்டத்தில் பங்குப்பணியாளர் இல்லம் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இத்துடன் கொடிமரப்பணிகளும் நிறைவடைந்து, மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

20-08-2013 அன்று செந்தறை தனிப்பங்காக உதயமானது. தனிப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஒய்ஸ்லின் சேவியர் அவர்கள் பணியேற்று சிறப்பாக பணியாற்றினார். அவர்கள் ஆண்டிற்கு ஒரு வீட்டு திட்டம் என்ற ஒரு சிறப்பான திட்டத்தை பங்கில் துவங்கினார்கள். அதன் பிறகு வந்த அருட்பணி. அருள் யூஜின் ராய் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு உட்பட்ட இனயம் தேரிவிளையில், ஒரு குடும்பம் ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கிய  இரண்டு செண்ட் நிலத்தில், 2020 அக்டோபர் 31 ஆம் தேதி அன்னைக்கு ஒரு குருசடி  கட்டப்பட்டு திறக்கப்பட்டது. பின்பு இந்த  குருசடியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் குருசடியின் அருகில் 4 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. அதன் பின்  வந்த அருட்பணி. தானியல் ஆசீர்வாதம் அவர்கள் பங்கை சிறப்பாக ஆன்மீக வழியில் நடத்தி செல்கிறார்கள். 

வேளையம்மாள் குருசடி, தேரிவிளை:

தேரிவிளையில் அமைந்துள்ள வேளையம்மாள் (வேளாங்கண்ணி மாதா) குருசடியில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்று வருகின்றன. மாதத்தின் மூன்றாவது புதன் இந்த குருசடியில் நடைபெறும் நவநாள் சிறப்பு திருப்பலியில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று ஜெபித்து இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.

கிறிஸ்து அரசர் சிற்றாலயம், பொத்தையான் விளை:

இங்கு மாதத்தின் மூன்றாவது வியாழன் மாலை 6 மணி ஜெபமாலை மற்றும் மாலை 6:30 மணி புனித யூதாதேயூ நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது 

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பாலர் சபை

2. சிறார் இயக்கம்

3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

4. இளையோர் இயக்கம்

5. கத்தோலிக்க சேவா சங்கம்

6. மரியாயின் சேனை

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. பங்கு அருட்பணிப் பேரவை

9. நிதிக்குழு

10. தணிக்கைக் குழு

11. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

12. அன்பிய ஒருங்கிணையம்

13. பக்த சபைகள் ஒருங்கிணையம்

14. மறைக்கல்வி

15. விவிலியப் பணிக்குழு

16. திருவழிபாட்டுக்குழு

17. கைகள் இயக்கம்

18. பாடகற்குழு 

19. பீடச் சிறார்

20. வாழைத்தோட்ட விவசாயிகள் சங்கம்

21.குடும்ப நலப்பணிக்குழு

பூட்டேற்றிப்பங்கின் கிளைப்பங்காக செயல்பட்ட போது செந்தறையில் இறைப்பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி.‌ C. F. வென்சஸ்லாஸ் (1956-1967)

2. அருட்பணி. D. செபஸ்தியான் (1967-1973)

3. அருட்பணி.‌ வின்சென்ட் ரொட்ரிகோ (1973-1974)

4. அருட்பணி. M. மத்தியாஸ் (1974-1976)

5. அருட்பணி. V. வெனான்சியுஸ் (1976-1981)

6. அருட்பணி. S. M. ஜூலியஸ் (1981-1986)

7. அருட்பணி. R. அந்தோனி (1986-1989)

8. அருட்பணி. R. மரிய அற்புதம் (1989-1994)

9. அருட்பணி.‌ S.  வின்சென்ட் ராஜ் (1994-1997)

10. அருட்பணி.‌ R. லாரன்ஸ் (1997 May -November)

11. அருட்பணி.‌ S. லாரன்ஸ் (1997-2001)

12. அருட்பணி. M. சூசை (2001-2003)

13. அருட்பணி. M. ஜெயக்குமார் (2003-2006)

14. அருட்பணி. ஜோசப் ஜெயசீலன் (2006-2008)

15. அருட்பணி.‌ அந்தோணி M. முத்து (2008-2009)

16. அருட்பணி. சேம் F. மேத்யூ (2009-2013)

17. அருட்பணி. டென்சிங் (2013 ஜூன் -ஆகஸ்ட்)

தனிப்பங்கான பின்னர் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. ஒய்சிலின் சேவியர் (2013-2017) 

2. அருட்பணி. அருள் யூஜின் ராய் ( 2017-2022) 

3. அருட்பணி.‌ விஜின் (2022 ஜூன் மாதம்)

4. அருட்பணி. தானியேல் ஆசீர்வாதம் (2022 ஜூலை முதல்...)

(ஆலய வரலாறு பங்கின் விழா மலரிலிருந்து எடுக்கப்பட்டது)