284 அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம், சொக்கன்குடியிருப்பு


அதிசய மணல்மாதா திருத்தலம்

இடம் : சொக்கன்குடியிருப்பு

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : திருத்தலம்
பங்கு : தூய யாகப்பர் தனிஸ்லாஸ் ஆலயம், சொக்கன்குடியிருப்பு

பங்குத்தந்தை : அருட்பணி மைக்கேல் ஜெகதீஷ்

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

சனிக்கிழமை : இரவு 08.00 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் சனி இரவு 07.00 மணிக்கு சப்பரபவனி தொடர்ந்து திருப்பலி, அசனவிருந்து.

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் பத்து நாட்கள்.

வரலாறு :

அதிசய மணல் மாதா திருத்தலம் தமிழ் நாட்டின் தென் மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் தேரியோரக்கரையில் அமைந்துள்ளது. இது தூத்துக்குடி மாவட்டத்தின் பங்குகளில் ஒன்றான சொக்கன்குடியிருப்போடு இணைந்துள்ளது.

புனித தோமையாரின் வருகை:

இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தோமையார் கி.பி 52ம் ஆண்டில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க இந்தியா வந்தார். இவர் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியான கேரள மாநிலத்தில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அறிவித்து மக்களை மனம் மாற்றினார்.

மானவீர நாட்டில் கிறிஸ்தவம்:

இன்றைய தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் தென் பகுதி அன்று "மானவீரநாடு" என்று அழைக்கப்பட்டது. மானவீர நாட்டை "கந்தப்பராசா" என்ற பாண்டிய இளவரசன் ஆண்டு வந்தான். இவரது மனைவி மற்றும் மகள் இருவரும் தீய ஆவியால் பாதிக்கப்பட்டு கடும் வேதனை அடைந்தார்கள். பல்வேறு பூசாரிகள் வந்து முயற்சி செய்தும் அவர்களை குணமாக்க முடியவில்லை. இந்நிலையில் இளவரசன் புனித தோமையார் கேரளாவில் செய்த அற்புதங்களைப் பற்றி கேள்விப்பட்டு தோமையாரைத் தனது இல்லத்துக்கு அழைத்து வர முடிவு செய்தான். எனவே புதிதாக ஒரு மாட்டு வண்டி செய்து தானே நேரில் சென்று புனித தோமையாரைக் கண்டு மானவீர நாட்டிற்கு அழைத்து வருகின்றான். இளவரசனின் வீட்டிற்கு வந்த புனித தோமையார் இறைவனை வேண்டி அவரது மனைவியையும் மகளையும் தீய ஆவியின் பிடியிலிருந்து குணமாக்கினார். இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்ட இளவரசனின் குடும்பமும் மக்களும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்று, புனிதரின் திருக்கரத்தால் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

கணக்கன்குடியிருப்பில் மாதா கோவில்:

மானவீரநாட்டின் தென்கிழக்கெல்லை நகரமாக கணக்கன்குடியிருப்பு திகழ்ந்தது. மானவீரநாட்டில் ஒளிர்ந்த ஞானஒளி இங்கும் ஒளிர்ந்தது. மக்கள் கிறிஸ்துவின் போதனையை ஏற்று திருமுழுக்கு பெற்றனர். மாதாவின் மீதும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீதும் அளவுகடந்த பக்தி கொண்டு வாழ்ந்து வந்தனர். அன்னை மரியாள் இங்கு வாழ்ந்த உத்தம கிறிஸ்தவர் ஒருவருக்கு கனவில் தோன்றி இறைவனை மகிமைப்படுத்த தனக்கு ஆலயம் ஓன்று அமைக்க வேண்டும் என்று கூறி ஆலயம் கட்டப்பட வேண்டிய இடத்தையும் சுட்டிக் கட்டியிருக்கிறார்கள். பக்தரும் தன் சக்திக்கு ஏற்ப அழகிய சிறிய ஆலயத்தைக் கட்டி முடித்தார்.

இவ்வாலயம் பழங்கால தமிழ் கட்டிட அமைப்பு முறையில் சின்னஞ்சிறு சுடு செங்கற்கள் மற்றும் கலவை சேர்ந்த சுண்ணாம்பு சுதை காறைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள மாதா சுரூபம் சந்தன மரமும், யானை தந்தமும் இணைத்து பழங்கால அமைப்பில் அழகுடனும் உயரத்தில் சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாதா சுரூபத்தை வடிவமைத்து ஆலயத்தை அர்ச்சித்தவர், மேதகு ஆயர். ஜியோவான்னி மரிஞ்ஞோலி ஆவார். இவர் கி.பி. 1339-ல் திருத்தந்தையின் தூதராக, தென்னிந்திய கிறிஸ்தவர்களை சந்திக்க வந்தபோது திருநிலைப் படுத்திய சுரூபம்தான் இன்று அதிசய மணல் மாதாவாக போற்றப்படுகின்றது.

புனித சவேரியாரின் வருகை:

கடற்கரைக் கிராம மக்களைச் சந்தித்து அவர்களை கிறிஸ்துவ நெறியில் திடப்படுத்தும் நோக்கத்தோடு இந்தியா வந்த புனித சவேரியார் கணக்கன்குடியிருப்பு புனித பரலோக அன்னையின் புகழைப்பற்றி கேள்விப்பட்டு இங்கு அடிக்கடி வந்து அன்னையை தரிசித்துச் செல்வது வழக்கமாக இருந்தது. அவ்விதம் வரும்போது கி.பி. 1578-ம் ஆண்டின் முதல் வாரத்தில் ஒரு நாள் அன்னையின் ஆலயத்தில் ஒருவன் இறந்து கிடப்பதைக் கண்டு உள்ளம் உருகினார். பரலோக அன்னையிடம் மன்றாடி இறைவல்லமையால் அம்மனிதனை உயிர்பெற்று எழச்செய்தார். இவ்வதிசயத்தைக் கண்ட மக்கள் அன்னையின் மரியாவின் மகிமையையும், இறைவனின் கருணையும் போற்றிப் புகழ்ந்தார்கள். உயிர் பெற்ற அந்த இளைஞனை அவ்வாண்டு மணப்பாட்டில் நடந்த குருக்கள் மாநாடு வரை புனிதர் தன் கூடவே வைத்திருந்தார். [ இந்த அதிசய நிகழ்வைத்தான் அருட்திரு. டேனிஷ்குஷன் தமது மதுராவில் 50 ஆண்டு என்ற நூலில் எழுதியுள்ளார்.]

சேசுமரியாயி:

கணக்கன்குடியிருப்பில் வாழ்ந்து வந்த ஒரு உத்தமக் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவள் சேசுமரியாயி. இவள் தந்தை பனைத்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். அக்குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்தாலும் இறைபக்தியிலும், நற்பண்புகளிலும் சிறந்து விளங்கியது.

சேசுமரியாயி சிறுவயது முதலே மாதாவின் மீது அளவு கடந்த பக்தி கொண்டு விளங்கினாள். தன் அன்னைக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மாதாவின் ஆலயத்தில்தான் இருப்பாள். திடீரென்று ஒருநாள் பனைத்தொழிலில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சேசுமரியாயியின் தந்தை இறந்தார். தலைவரை இழந்த குடும்பம் மிகுந்த வறுமையில் வாடியது. ஆயினும் சேசுமரியாயியின் தாய் கூலி வேலை செய்து தன் மகளை கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தார்.

சேசுமரியாயி வாலிப வயதில் பேரழகு மிக்கவளாய் திகழ்ந்தாள். பல இளைஞர்கள் அவளை அடைய முயன்று தோற்றனர். இவர்களில் அந்த ஊரைச் சார்ந்த பெருந்தனக்காரர் மகனும் ஒருவர். சேசுமரியாயி பக்தியிலும், நல்லொழுக்கத்திலும் கற்பின் கன்னியாக விளங்கியமையால் அவளை யாரும் நெருங்க முடியவில்லை. சேசுமரியாயியின் தாய் தன் மகள் விரும்பியபடி தனது உறவினர் சூசைமுத்துவிற்கு அவளை மணமுடித்து வைத்தாள். பெருந்தனக்காரர் மகன் தனக்கு கிடைக்காத சேசுமரியாயியை வாழவிட மாட்டேன் என வஞ்சினம் கூறினான். தம்பதிகள் சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். ஓராண்டு கழிந்தது, பெருந்தனக்காரர் மகன் தந்திரகமாக சூசைமுத்துவை கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்து விட்டதாக ஊரை நம்பவைத்து விட்டான்.

சேசுமரியாயி அழுது புலம்பினாள். மகளின் துயரைக் காண சகிக்காமல் தாயும் இறந்தாள். சோதனை மேல் சோதனையால் சூழப்பட்ட சேசுமரியாயி மாதாவின் காலடியில் தஞ்சமடைந்தாள்.

ஊரில் உள்ள மக்கள் யாவரும் அவளை துரதிஷ்டக்காரி, அவள் முகத்தில் விழிப்பதே பாவம் என்று ஒதுக்கி வைத்தார்கள். ஆதரவற்ற அனாதைக் கைம்பெண்ணான சேசுமரியாயி ஒருவாய் சோற்றுக்கும் வழியின்றி மிகவும் தவித்தாள். துன்பக் கடலில் மூழ்கித் தவித்தவளுக்கு அன்னை மரியாளின் பாதம் ஓன்று தான் ஆறுதல் அளித்தது. தன் கஷ்டத்தையெல்லாம் அன்னையிடம் சொல்லி அழுது புலம்புவாள். அன்னை மரியாள் அந்த பெண்ணின் பொருட்டு அற்புதம் ஒன்று நிகழ்த்த சித்தமானாள்.

கணக்கன்குடியிருப்பின் வடபுறத்தில் 'புத்தன்தருவை' என்னும் குளம் உள்ளது. சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தில் எல்லா பருவ காலங்களிலும் தண்ணீர் வற்றாது. இது இப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு ஜீவக்குளமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் இக்குளம் தான் பறவைகளின் சரணாலயமாக இருந்தது. இன்றுள்ள மூன்றடைப்பு, கூந்தன்குளம் போன்றவை இப்பகுதியின் அழிவிற்குப்பின் உருவானவையாகும். இங்கு பெரும் அளவில் வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கின. குறிப்பாக நாரை என்னும் கொக்கு இனங்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வாழ்ந்ததால் இக்குளத்திற்கு 'நாரைக்குளம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்திருத்தலம் வந்து தங்கிச் சென்ற புனித சவேரியாரும் 01-05-1552 -ல் தான் எழுதிய மடலில் கணக்கன்குடியிருப்பை 'நாரையூர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சேசுமரியாயியின் இடைவிடாத மன்றாட்டுகளினால் மனம் கனிந்த அன்னை மரியாள் கனவில் தோன்றி, "மகளே அஞ்சாதே! ஓருயிர் ஜீவனுக்கும் உணவளிக்கும் இறைவன் உன்னை மட்டும் கைவிடுவாரோ? இறைவல்லமையின் மகிமையை காலையில் காண்பாய்." என்று கூறி மறைந்தாள்.

சேசுமரியாயியின் வீட்டின் முன்பு பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் நாரைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அப்பறவைகள் இடும் கழிவுகளையெல்லாம் அவள் தினந்தோறும் காலை மற்றும் மாலையில் பொறுமையோடு பெருக்கி சுத்தம் செய்வது வழக்கமாய் இருந்தது. அன்றும் காலையில் வழக்கம் போல கழிவுகளை சுத்தம் செய்ய வந்தவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆலமரத்தடியில் பறவைகளின் எச்சங்களுடன் ஏராளமான மீன்களும் சிதறிக் கிடந்தன. இவ்வதிசயத்தைக் கண்ட சேசுமரியாயி இரவில் தான் கண்ட காட்சியை நினைத்து, இது அன்னை மரியாளின் திருவிளையாடல் என்று உணர்ந்து அந்த மீன்களையெல்லாம் சேகரித்து சமைத்து உண்டு வந்தாள்.

அன்றிலிருந்து நாரைகள் குளத்தில் மீன்களைப் பிடித்து உண்டுகளித்து, இரவில் மரத்தில் தங்க வரும்போது மீன்களை எடுத்து வந்து சேசுமரியாயியின் வீட்டில் போடுவதை வழக்கமாகக் கொண்டன. நாளடைவில் சேசுமரியாயி கிடைக்கும் மீன்களில் தனது உணவிற்குப் போக மீதத்தை விற்று வந்தாள். இதன்மூலம் அவளின் வயிற்றுப் பசி தீர்ந்ததோடு, வறுமையும் நீங்கியது.

இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட பெருந்தனக்காரர் மகன் சேசுமரியாயியிக்கு பறவைகள் மீன் தரவில்லை, யாரோ கள்ளபுருஷன் இரவில் வந்து தங்கிவிட்டு மீன்களைக் கொடுத்துவிட்டுச் செல்கிறான். இப்படிப்பட்ட விபச்சாரிகளை ஊரில் வைக்கக் கூடாது என்று மக்களைத் தூண்டி விட்டான். ஊர் மக்கள் அனைவரும் அவளை விபச்சாரி என்று பழி சுமத்தி மன்னன் துறவிப்பாண்டியன் முன் கொண்டு நிறுத்தினார்கள்.

துறவிப்பாண்டியன்:

அக்காலத்தில் 1798-ம் ஆண்டளவில் மானவீர நாட்டின் தென் பகுதிகளில் ஒன்றான கணக்கன்குடியிருப்பை துறவிப் பாண்டியன் என்னும் பாண்டிய அரசைச் சார்ந்த மன்னன் அரசூரிலிருந்து கண்காணித்து வந்தான். இவன் சிறந்த பக்திமான், பற்றற்றவன். எனவே தான் இவன் துறவிப் பாண்டியன் என அழைக்கப்பட்டான். வழக்குகளைப் பாகுபாடின்றி நடத்த வேண்டுமென்று கண்ணைக் கட்டிக்கொண்டு நீதி வழங்கும் வழக்கமுள்ளவன். இருப்பினும் விதி வசத்தால் தவறிழைத்தான். தன்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ள சேசுமரியாயியை விசாரித்தான். ஊராரும், பெருந்தனக்காரர் மகனும் அவளுக்கு எதிராக சாட்சியளித்தனர்.

சேசுமரியாயி தான் குற்றமற்றவள், பரிசுத்தமானவள், அன்னை மரியாளின் பக்தை, மாதாவின் கருணையால் தன் வீட்டின் முற்றத்திலுள்ள ஆலமரத்தில் குடியிருக்கும் நாரைகள் தான் மீன்களைக் கொண்டு வந்து போடுகின்றன என்றும், வேறு யாருடைய தொடர்போ, கெட்ட நடத்தையோ தனக்கு இல்லைஎன்றும் வாதாடினாள். வேண்டுமானால் மன்னர் தன் வீட்டிற்கு வந்து உண்மையைக் கண்டுகொள்ளலாம் என்றும் கூறினாள். அவளின் கூக்குரல் அவையோரை எட்டவில்லை. பொய்யர்களின் பேரிரைச்சலே எங்கும் எதிரொலித்தது. மன்னன் சூழ்நிலையின் கைதியானான். சேசுமரியாயை அக்கால வழக்கப்படி நடைவிளக்கெரித்து கொலைசெய்ய உத்தரவிட்டான்.

நடைவிளக்கெரித்தல் :

நடைவிளக்கெரித்தல் என்பது அக்காலத்தில் விபச்சாரக் குற்றத்திற்கு அளிக்கும் கொடூரமான தண்டனையாகும். அதாவது குற்றவாளி தலையை மொட்டை அடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுத்தில் எருக்குமாலை, செருப்புமாலை அணிவித்து, சிறிய அளவில் சிலுவை வடிவம் செய்து தோளில் வைத்து, தலையில் முள்முடி வைத்து இறுதியில் உச்சியில் சிறிய துளையிட்டு எண்ணெய் ஊற்றி தீ வைத்து எறிந்த நிலையில் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். தீ மெல்ல மெல்ல பரவி பெருந்தீயாக மாற குற்றவாளி துடிதுடித்து சாவான்.

மன்னன் ஆலோசனைப்படி சேசுமரியாயிக்கு இந்த கொடிய தண்டனை வழங்கப்பட்டது. நெருப்பின் வெம்மை தாங்க முடியாமல் சேசுமரியாயி, இறுதியில் சாபமிடத் துணிந்தாள். மாதாவே நீயே சாட்சி, மாசற்ற என்னை மானபங்கப் படுத்திய கணக்கன்குடியிருப்பு அழியட்டும். மண்மாரி பொழியட்டும். மண்மேடாய் குவியட்டும். ஒருவர் கூட உயிர் தப்பாது செத்தொழியட்டும் என்றபடி உயிர்விட்டாள்.

அபலையின் சாபம் அகிலத்தை அதிரவைத்து, பெரும் சூறாவளி வீசியது; மண்மாரி பொழிந்தது. ஊர் முழுவதும் அழிந்தது. அத்தோடு அன்னையின் ஆலயமும் மண்ணுக்குள் புதைந்து மறைந்து போனது. கணக்கன்குடியிருப்பின் அப்பகுதி கொடிய விலங்குகள் வாழும் வனாந்திரமாக மாறிப்போனது.

ஆலயம் வெளிப்படுதல்:

கி.பி. 1798-ம் ஆண்டில் ஒருநாள் அன்னை மரியாள் தம்மை இந்த உலகத்திற்கு மீண்டும் வெளிப்படுத்த சித்தமாகி மனங்கனிந்த பொன்னான நாள். இப்பகுதியில் வற்றாத ஜீவ நீரை வழங்கிவரும் தருவைகளில் ஒன்றான 'புத்தன்தருவை' எனப்படும் பெரிய தருவை குளத்தைச் சுற்றிலும் அழகிய பசுமையான புல் தரைகளும் வயல்வெளிகளும் சூழ்ந்திருந்தன. ஆனால் தருவையின் தென்புறப் பகுதிகள் மட்டும் (முன்பு சாபத்தால் அழிந்த கணக்கன்குடியிருப்பு பகுதி) இயற்கைக்கு முரணாக முட்புதர்களடர்ந்த தேரிக்காடுகளாய், பனை மரங்கள் நிறைந்து ஆலமரங்கள், அத்திமரங்கள் சூழ பசுஞ்சோலையாகக் காட்சியளித்தது. இக்காடுகளில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அத்தி, ஆல மர நிழலில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கமாக இருந்தது. அன்றும் ஆடு மேய்ப்பவன் ஒருவன் தன் ஆடுகளுக்கு தண்ணீர் வைக்க தருவையை நோக்கி ஆடுகளை ஓட்டிச் சென்றான். செல்லும் வழியில் ஏதோ கால்களில் தட்டுப்பட, அவன் இடறி கீழே விழுந்தான்.

இது ஏதோ மரத்தின் வேராக இருக்கக் கூடும் என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, தன் கடமையில் கண்ணாயினான். அன்று இரவில் அன்னை மரியாள் அவனுக்கு கனவில் தோன்றி, "தேரியில் உனது கால்களைத் தடுத்தது நான்தான். அவ்விடத்தைத் தோண்டிப்பார்" என்று கூறி மறைந்தாள். விடிந்ததும் தான் கண்ட கனவு பற்றி சிந்தித்த அம்மனிதன் முதல் நாள் தடுக்கி விழுந்த இடத்துக்கு வந்தான். மணலை அகழ்ந்துப் பார்த்தான். அங்கு ஆலய முகப்பு சிலுவையைக் கண்டு மிகவும் வியப்புற்றான். உடனே காலம் தாழ்த்தாது சொக்கன்குடியிருப்புக்கு வந்து தான் கனவில் கண்ட காட்சி பற்றியும், பின்னர் நடந்தவை அனைத்தையும் அங்குள்ள மக்களிடம் உரைத்தான். அந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

அக்காலம் சொக்கன்குடியிருப்பு, வடக்கன்குளம் பங்கோடு இணைந்திருந்தது. வடக்கன்குளம் பங்குத்தந்தை சொக்கன்குடியிருப்பைக் கண்காணித்து வந்தார். ஆகவே தேரியில் கண்ட அதிசயச் செய்தி வடக்கன்குளம் பங்குத்தந்தைக்கும் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் பங்குத்தந்தை தலைமையில் சொக்கன்குடியிருப்பு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். பல வாரங்கள் அயராது பாடுபட்டு அன்னையின் ஆலயத்தை வெளிக்கொணர்ந்தனர். மணல் முழுவதையும் அப்புறப்படுத்திவிட்டு, ஆலயக் கதவைத் திறந்து பார்த்தபோது, அதிசயத்திலும் அதிசயம்! புராதின அமைப்புப்படி பீடம், பீடத்தில் புனித பரலோக அன்னையின் அற்புதச் சுரூபம் மக்களைப் பார்த்து புன்னகைத்தது. அப்புன்னகையும் விளக்கொளியும் ஆலயத்தைப் பிரகாசிக்க வைத்தது. இவ்வதிசயத்தைக் கண்ட மக்கள் புனித பரலோக அன்னையை 'அதிசய மாதா' என்று அழைத்து மகிழ்ந்தனர். மேலும் தேரிக்காட்டுக்குள்ளிருந்ததால் 'காட்டுமாதா' என்றும் மணலுக்குள்ளிருந்து கிடைத்ததால் 'மணல்மாதா' என்றும், அதிசயங்கள் பல நடத்தி வருவதால் 'அதிசய மணல்மாதா' என்றும் போற்றுகின்றனர்.

இவ்வாலயம் தோண்டியெடுக்கப்பட்டு 219 ஆண்டுகள் (1798-2019) ஆகின்றது. ஆலய சிறப்பையும், அன்னையின் மகிமையும் கண்டு தமிழக அரசு 2012-ம் ஆண்டு இந்த ஆலயத்தை தமிழக அரசின் சுற்றுலாத்தலமாக அறிவித்து ஆலயத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

இத்த திருத்தலத்தில் திருப்பயணிகளாக வருபவர்கள் சனிக்கிழமை இங்கு தங்கி இருந்து அனைத்து வழிபாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு, ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலியையும் சிறப்பித்து விட்டு தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள்.