288 புனித சூசையப்பர் ஆலயம், கூட்டப்புளி


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : கூட்டப்புளி

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1. புனித உபகார மாதா ஆலயம், கன்னன்குளம்
2. குழந்தை இயேசு ஆலயம், ஜெயமாதாபுரம்

குடும்பங்கள் : 2000
அன்பியங்கள் : 36

பங்குத்தந்தை : அருட்பணி ரஞ்சித் குமார் கர்டோசா
இணை பங்குத்தந்தை : அருட்பணி பிரபு

ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணி, காலை 06.45 மணிக்கு
ஆங்கில திருப்பலி : காலை 08.15 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 05.45 மணிக்கு மற்றும் மாலை 06.00 மணிக்கு

திருவிழா : சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.

வரலாறு :

தென் தமிழகத்தின் கடற்கரையோர கிராமங்களில் பிரபலமான கிராமம் தான் கூட்டப்புளி.

இப்போது கூட்டப்புளி அமைந்துள்ள இடம் பலநூறு ஆண்டுகளுக்கு முன் கடலால் சூழப்பட்டு இருந்ததாக நம்பப்படுகிறது. இன்றளவும் நமது விளையாட்டு மைதானத்தில் காணப்படும் சிப்பிகளும் பாறைகளும் அதற்கு சான்றாக வரலாறு சுட்டிகாட்டுகிறது. இவ்வூர் தோன்றிய காலகட்டம் எது என்று அறியமுற்படும்போது 1542-1543ம் ஆண்டுகளில் முத்துக்குளித்துறையில் திருமறை பரப்பு பணியாற்றிய புனித சவேரியார் மணப்பாட்டிலிருந்து கடற்கரை வழியாக பயணம் செய்யும் போது கூட்டப்புளி வந்ததாக ஏடுகள் தகவல் தருவதால் கி.பி.1542 ம் ஆண்டுக்கு முன்னரே நமது ஊர் இருந்திருக்கிறது. ஆக இவ்வூரின் வரலாறு ஏறக்குறைய 450 ஆண்டுகளுக்கு மேலானதாக கணக்கிடலாம்.

இன்னும் 1571ம் வருட தகவல் படி திருவாங்கூர் சமஸ்தான எல்கையையும் மதுரை நாயக்கர்களின் ஆட்சி எல்கையையும் குறிக்கும் இடமாக கூட்டப்புளி இருந்துள்ளது. இங்கு சுங்கச்சாவடி ஒன்றும் இருந்துள்ளதால் அப்பகுதியில் கூட்டப்புளி பிரபலமான ஊராக இருந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் 1544 முதல் 1597 வரை ஆண்ட மன்னர்களால் கடற்கரையோர மக்கள் பெரிதும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். அச்சமயத்தில் உவரிக்கு கிழக்கே உள்ள மக்களில் பகுதி பேர் மன்னார் (இலங்கை) சென்றதாகவும் மேலும் பலர் வீரபாண்டியன் பட்டினத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. இதே போல் உவரிக்கு மேற்குள்ள மக்கள் அனைவரும் அச்சமயத்தில் கூட்டப்புளி பிரபலமான ஊராக இருந்த காரணத்தால் கூட்டப்புளியில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம். எனவும் அத்தனை மக்களும் ஊரின் வடக்குப்பகுதிகளில் அமைந்திருந்த புளியந்தோப்புகளில் குடிசை அமைத்து இருந்ததால் கூட்டப்புளி என பெயர் பெற்றது எனவும் வரலாற்றால் உணரப்படுகிறது.

கூட்டப்புளியும் கிறிஸ்துவமும் :

முத்துக்குளித்துறையில் திருமறை பரவிய அக்காலகட்டம்தான் கூட்டப்புளியிலும் கிறிஸ்துவம் பரவிய காலகட்டமாக இருக்க வேண்டும்.

கி.பி 52 முதல் 57 வரை இயேசுவின் சீடரான புனித தோமையார் இந்தியாவில் இறைபணி ஆற்றிய காலகட்டத்தில் இறைப்பணிக்காக தேர்தெடுத்து பகுதிகள் மலபார் மற்றும் கார்மணல் கடற்கரை பகுதியும் தான். அதில் மலபார் பகுதிகளில் கிறிஸ்துவம் வளர்ந்த அளவில் கார்மணல் பகுதியான முத்துக்குளித்துறையில் வளரவில்லை.

அதன் பின் 15ம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த போர்ச்சிகீசியர்களால் மீண்டும் கிறிஸ்துவம் வளர்க்கப்பட்டது. கி.பி.1534 ம் ஆண்டு கோவாவை இந்தியாவின் மறைமாவட்டமாக அறிவித்து மறைபரப்பு பணியை தீவிர படுத்தியது இக்காலகட்டத்தில்தான் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்த பரவர் இன மக்கள் மன்னர்களாலும் மற்ற சமுதாயத்தாலும் சமயத்தினராலும் மும்முனை தாக்குதல் என துன்புறுத்தப்பட்டு பல்வேறு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்கள். மூன்றாண்டுகளாக நீண்ட இக்கொடுமைக்கு முடிவு கட்டும் எண்ணத்தில்தான் முத்துக்குளித்துறை பரத குலத்தலைவர்கள் 15 பேர் கொண்ட குழு (பட்டங்கட்டிமார்) கொச்சியில் இருந்த போர்ச்சுகீசிய அரசின் பிரதிநிதி ஜான் டா குரூஸ் ஐ சந்தித்து உதவுமாறு கேட்டார்கள்.

பரவர் இன மக்கள் அனைவரும் கிறிஸ்துவத்தில் இணைவார்கள் என்றால் கொடுமைக்காரர்களிடமிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் உங்களை பாதுகாப்போம் என வாக்குறுதி தந்தார் ஜான் டா குரூஸ். இதை அறிந்த அனைத்து பரவ ஊர் மக்களும் சம்மதிக்கவும் செய்தனர். இதை ஜான் டா குரூஸிடம் தெரிவிக்க சென்ற 85 பட்டங்கட்டிமார்களும் அருட்தந்தை மிக்கேல் வாஸ் என்பவரால் கொச்சியிலுள்ள மதர் ஆப் கார்ட் என்ற ஆலயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது.

அதை அடுத்து கி.பி 1536 ஆம் ஆண்டு 30 பகுதிகளின் 20000க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்களாக இணைந்தனர். அவ்வருடத்தின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆண்களுக்கும் மே முதல் அக்டோபர் வரை பெண்களுக்கும் என எல்லாருக்கும் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது.

எனவே இந்த காலகட்டத்திலோ அல்லது புனித சவேரியாரின் மறைபரப்பு பணியான கி.பி.1542 கால கட்டத்திலோ கூட்டப்புளி மக்கள் கிறிஸ்தவ மதத்தில் இணைந்திருக்கலாம்.

கூட்டப்புளியில் புனித வளனாருக்கு ஆலயம் ஒன்று எழுப்ப பட்டது அக்காலத்தில்தான். அதன் பின் 1857 ம் ஆண்டு ஆலயம் பெரிய ஆலயமாக புதுபிக்க பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதரை வணங்கி வளங்கள் பல பெற்று மகிழ்கின்றனர்.

வருடந்தோறும் சாம்பல் புதன் வாரத்தின் முன் வார ஞாயிற்றுக்கிழமையில் பாதுகாவலரின் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்திருவிழாவில் 200 ஆண்டுகளாக புனித சூசையப்பரின் தேர்பவனி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புனித சூசையப்பர் தேரானது தங்கத்தால் ஆனது ஆகும். 10 -ஆம் திருவிழாவின் போது புனித சூசையப்பரின் தங்கத்தேர் ஊரைச் சுற்றி வலம் வருகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் அதிகமாக வருகை தருவார்கள்.

2007 மே மாதம் 13 ம் தேதி 150 ஆண்டுகளைக் கடந்த பெருமை மிக்க புனித சூசையப்பர் ஆலயம் அமையப்பெற்றது இவ்வூருக்கு கிடைத்த பொக்கிஷம்.

கூட்டப்புளியின் இறை அழைத்தல்கள் :

25 அருட்பணியாளர்களையும், 60-க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளையும், தற்போது இளங்குருமடத்தில் படித்துக் கொண்டிருக்கிற 7 அருட்சகோதரர்களையும் மண்ணின் மைந்தர்களாகக் கொண்டு சிறப்புற்று விளங்குகிறது கூட்டப்புளி.

பேருந்து வழித்தடம் :

நாகர்கோவில் இருந்து கூட்டப்புளி 3F, V3, BCC,561.

கன்யாகுமரி to கூட்டப்புளி 3F, 22