இடம் : பாலவாக்கம், எண் 38, எம்.ஜி.ஆர் சாலை, சென்னை 600041
மாவட்டம் : காஞ்சிபுரம்
மறைமாவட்டம் : செங்கற்பட்டு
மறைவட்டம்: பாலவாக்கம்
நிலை : திருத்தலம்
தொடர்புக்கு : 044 2449 3684
அதிபர்& பங்குத்தந்தை : அருள்பணி. லியோ டோமினிக்
உதவிப் பங்குத்தந்தையர்கள்:
அருள்பணி. சகாயராஜ்
அருள்பணி. ஜெகன், Valentine Mission
குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 18
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு:
காலை 06:00 மணி (தமிழ்)
காலை 07:15 மணி (தமிழ்)
காலை 07:15 மணி மறைக்கல்வி திருப்பலி
காலை 09:30 மணி திருப்பலி (ஆங்கிலம்)
காலை 11:00 மணி திருப்பலி (தமிழ்)
மாலை 06:00 மணி திருப்பலி (தமிழ்)
வெள்ளிக்கிழமை:
காலை 06:30 மணி திருப்பலி
காலை 11:00 மணி ஆராதனை திருப்பலி (முதல் வெள்ளிக்கிழமை)
பிற்பகல் 03:00 மணி இரக்கத்தின் ஆண்டவர் நவநாள், திருப்பலி
மாலை 06:30 மணி தமிழ் திருப்பலி -திருஇருதய ஆண்டவர் நவநாள்
சனிக்கிழமை:
காலை 06:30 மணி தமிழ் திருப்பலி
காலை 11:00 மணி ஆராதனை திருப்பலி (முதல் சனிக்கிழமை)
மாலை 06:30 மணி இடைவிடா சகாய மாதா நவநாள் செபம், திருப்பலி
மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை:
காலை 06:00 மணி ஆராதனை திருப்பலி
காலை 07:15 ஆங்கிலத் திருப்பலி
காலை 08:30 மணி தமிழ் திருப்பலி
காலை 09:30 மணி தெலுங்கு திருப்பலி
காலை 11:00 மணி தமிழ் திருப்பலி, எண்ணெய் மந்திரிப்பு, ஆராதனை, தேர்பவனி, கொடியேற்றம்
பிற்பகல் 01:30 மணி தமிழ் திருப்பலி
பிற்பகல் 03:00 மணி தமிழ் திருப்பலி
மாலை 04:00 மணி மலையாள திருப்பலி
மாலை 06:15 மணி தமிழ் திருப்பலி, எண்ணெய் மந்திரிப்பு, ஆராதனை, தேர்பவனி
பிற செவ்வாய்கிழமை:
காலை 06:00 மணி தமிழ் திருப்பலி
காலை 11:00 மணி தமிழ் திருப்பலி, நற்கருணை ஆசீர்
பிற்பகல் 03:00 மணி தமிழ் திருப்பலி
மாலை 06:30 மணி தமிழ் திருப்பலி, நற்கருணை ஆசீர்
வாரநாட்களில்:
காலை 06:30 மணி தமிழ் திருப்பலி
மாலை 06:30 மணி தமிழ் திருப்பலி
திருவிழா:
ஜூன் 10-ம் தேதி கொடியேற்றம்
11-ம் தேதி நற்கருணை விழா
12-ம் தேதி திருவிழா திருப்பலி, தேர்பவனி
13-ம் தேதி கொடியிறக்க விழா.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருள்பணி. கபிரியேல்
2. அருள்பணி. புகழ், SJ
வழித்தடம்:
99 தாம்பரம் -பாரிமுனை
109 கோவளம் -பாரிமுனை
588 மாமல்லபுரம் -பாரிமுனை
இறங்குமிடம் : பாலவாக்கம் திருத்தலம்.
கிழக்குகடற்கரை சாலை (ECR Road)
Location map : Seashore St. Anthony's Shrine No. 38, MGR Salai, Sakthimoorthiamman Nagar, Palavakkam, Chennai, Tamil Nadu 600041, 044 2449 3684
https://maps.app.goo.gl/S2m4mq6xEcCNzAwp6
திருத்தல வரலாறு:
"கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!"
திருப்பாடல்கள் 67:5
வங்கக்கடலின் அருகாமையில் அமைந்திருக்கும் சென்னை மாநகரின், வளம்குன்றாத நீர்ச்சோலையாம் பாலவாக்கம் ஊரில் எண் 38, எம்.ஜி.ஆர் சாலையில் வானுயர அமைந்துள்ள பாலவாக்கம் கடற்கரை புனித அந்தோணியார் திருத்தல வரலாற்றைக் காண்போம்......
சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் அங்கம்:
09.01.1606 அன்று திருத்தந்தை அவர்களால் இந்தியாவின் மூன்றாவது மறைமாவட்டமாக, சென்னை -மயிலாப்பூர் மறைமாவட்டம் அறிவிக்கப்பட்டது. இத்தகைய பழம்பெருமை வாய்ந்த சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தின் அதிகாரப்பூர்வ அங்கமாக கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, ஈஞ்சம்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி, வெட்டுவான்கேணி புனித சுவக்கீன் அன்னாள் ஆலயம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
கொட்டிவாக்கத்தில் நடந்த இறைவழிபாட்டு கொண்டாட்டங்கள்:
1985 -ஆம் ஆண்டு வெட்டுவான்கேணி புனித சுவக்கீன் அன்னாள் ஆலய பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. C. V. தாமஸ் அடிகளார் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். வெட்டுவான்கேணியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுவாமிநாத நகரில், தற்போதுள்ள கன்னியர் இல்லம், அந்தோணியார் மெட்ரிகுலேசன் பள்ளி அமைந்துள்ள இடத்தை திரு. சுவாமிநாதன் என்பவர் ஆலய காரியங்களுக்காக தானமாகக் கொடுத்தார்.
இந்த இடத்தில், இப்பகுதி மக்களின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்ற அருள்பணி. C. V. தாமஸ் அடிகளாரின் முயற்சியில் சேவா மிஷனரி அருட்சகோதரிகளைக் கொண்ட கன்னியர் இல்லம் அமைக்கப் பட்டது. அந்நாட்களில் இப்பகுதியில் உள்ள இறைமக்களுக்காக இந்த கன்னியர் இல்லத்தில் வெட்டுவான்கேணி பங்குத்தந்தை மற்றும் சத்யநிலையம் சேசு சபை அருள்பணியாளர்களால் திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
அருள்பணி. C. V. தாமஸ் அடிகளாரைத் தொடர்ந்து, அருள்பணி. சாக்கோ அடிகளாரும், அவரைத் தொடர்ந்து அருள்பணி. ஜார்ஜ் பாலக்காட்டு குன்னேல் அவர்களும் பங்குத்தந்தையர்களாக சிறப்புற பணியாற்றினர். இங்கு பணியாற்றிய அருள்சகோதரிகள் பல குடும்பங்களுக்கும் சென்று செபித்து வந்தனர்.
பல்கலை நகரில் புனித அந்தோணியார் குடிசை ஆலயம்:
அந்நாட்களில் சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பாலவாக்கம் பல்கலைநகர் என்னுமிடத்தில் குடியிருப்புகள் அளிக்கப்பட்டது. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த பல குடுங்களும் ஒற்றுமையாக வசித்து வந்தனர். இப்பகுதியில் குடியிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இணைந்து பல்கலை நகரில் ஒரு இடத்தை தெரிவு செய்து, 1997 ஆம் ஆண்டில் ஒரு குடிசை ஆலயத்தை அமைத்து, அருள்பணி. ஜார்ஜ் பாலக்காட்டு குன்னேல் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, தொடர்ந்து அவரால் இங்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. சுமார் நான்கு கிரவுண்ட் நிலத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்தது இப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாளில் துவக்கப்பட்ட இவ்வாலயமானது, பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்க்கின்ற இடமாக சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்று வந்தன. செவ்வாய்கிழமைகள் சிறப்பு நாளாக அனுசரிக்கப்பட்டன. இறைமக்கள் மலர்களையும், ரொட்டித்துண்டுகளையும், மலர்மாலைகளையும் கொண்டு வந்து காணிக்கை செலுத்தினர். புனித அந்தோணியாரின் பரிந்துரையால் மிகுந்த ஆசீர்வாதங்களைப் பெற்ற இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
ஆனால்..! இந்த மகிழ்ச்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. மூன்றே வாரங்களில் இந்த குடிசை ஆலயம் தகர்க்கப்பட்டு, மிகுந்த பதட்டத்தை உருவாக்கியது. இந்த நிகழ்வைப்பற்றி அப்போதைய சென்னை -மயிலை பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களிடத்திலும், சிறுபான்மை ஆணையத்தலைவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களிடத்திலும், தமிழக முதல்வர், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் தெரிவிக்கப்பட்டு ஆலயத்திற்கான நிலம் ஒதுக்கித்தர கோரிக்கை விடுக்கப் பட்டது. இவ்வாறு ஆலயம் அமைப்பதற்கான தேடல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது....
பாலவாக்கத்தில் கடற்கரை புனித அந்தோணியார் ஆலயம்:
அந்நாட்களில்! எண் 38, எம்.ஜி.ஆர் சாலை பாலவாக்கத்தில் திரு. சுகுமார் -திருமதி. ஜெயந்தி சுகுமார் தம்பதியினர் வசித்து வந்தனர். பிற சமயத்தை சார்ந்த இவர்கள் கிறிஸ்துவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, 1994 ஆம் ஆண்டு கிறிஸ்தவம் தழுவினர். இயேசுவின் மீது மிகுந்த விசுவாசம் கொண்ட திருமதி. ஜெயந்தி சுகுமார் அவர்கள், தமது கனவில் இந்த இடத்தை வானதூதர்கள் புடைசூழ நிற்பது போல கண்டதாகவும், தங்களது இந்த இடத்தில் இறைப்பிரசன்னம் மிளிர வேண்டும் என விரும்பி, தியான மையம் அமைக்க விருப்பம் கொண்டு அருள்பணியாளர்களை அணுகியதாகவும் சொல்லப்படுகிறது.
இவ்வேளையில் திருமதி. ஜெயந்தி சுகுமார் இறந்து போகவே, தமது மனைவியின் விருப்பப்படி இவ்விடத்தில் தியான மையம் அமைக்க வேண்டி திரு. சுகுமார் அவர்கள், பெசன்ட்நகர் பங்குத்தந்தை அருள்பணி. லாரன்ஸ் ராஜ் அடிகளாரிடம் கோரிக்கை வைத்தார். ஆகவே அருட்தந்தை அவர்கள் பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் மற்றும் திரு. சுகுமார் அவர்களிடமும் இவ்விடத்தில் ஆலயம் அமைக்க அனுமதி பெற்று, இடத்திற்கான உரிய தொகை கொடுத்து பத்திரப்பதிவு செய்தார்.
புனிதரின் சாட்சியாக கிடைக்கப்பெற்ற இவ்விடத்தில் கி.பி 2000 ஆம் ஆண்டில் பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்கள் அடிக்கல் நாட்டி, ஆலயம் கட்டுகிற பொறுப்பை அருள்பணி. லாரன்ஸ் ராஜ் அடிகளாரிடம் ஒப்படைத்தார். ஆலய கட்டுமானப் பணிகள் சிறப்புற நடைபெற்று வந்தன. கீழ்க்கோவில் 2000 -ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணிகள் நிறைவு பெற்றது. இங்கு தான் முதன்முதலாக திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தன. பல்கலைநகர் ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனித அந்தோணியார் சுரூபம் இங்கு நிறுவப்பட்டது. ஆலய கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன... மக்களின் நிதியுதவி மற்றும் நன்கொடைகளால் மேல்த்தள ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றன.
பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் பாலவாக்கம்....
சின்ன நீலாங்கரை, கசூரா கார்டன், பாலவாக்கம், கொட்டிவாக்கம் முதலிய பகுதிகளை உள்ளடக்கிய பாலவாக்கம் பங்காக 2001-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. A. L. ஆண்டனி செபாஸ்டின் அவர்கள் பணிப்பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார். 13 அன்பியங்கள் உருவாக்கப்பட்டதுடன் பங்குப்பேரவை மற்றும் இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. 2001 -ஆம் ஆண்டு புனிதரின் ஆண்டுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுமார் 3கி.மீ தூரத்தில் கொட்டிவாக்கம் சீனிவாசபுரத்திலிருந்து தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.
மேல்கோவில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்தது. பங்கின் வளர்ச்சியில் கொட்டிவாக்கம் அருள்சகோதரிகளின் பங்களிப்பு சிறப்புக்குரியது. மக்களின் முழு ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று 02.04.2002 அன்று புதிய திருப்பலி பீடத்தில் புனித தீமோத்தேயு -வின் திருப்பண்டம் வைக்கப்பட்டு ஆலயம் புனிதப்படுத்தப் பட்டது.
2003 -ஆம் ஆண்டு சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்திலிருந்துபிரிக்கப்பட்டு, புதிதாக செங்கற்பட்டு மறைமாவட்டம் உதயமானபோது பாலவாக்கம் அதன்கீழ் வந்தது.
2003 -ம் ஆண்டு அருள்பணி. லூயிஸ் ராயர் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்.
2004 -ம் ஆண்டில் அருள்பணி. சிரில் ராஜ் பொறுப்பேற்று 2005 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சாலையின் முகப்பில் ஆலய நுழைவுவாயில் அமைத்தார்.
100 அடி உயர நற்கருணை கோபுரம் அமைக்கப்பட்டு, 25.02.2006 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. நல்லாயன் நிலையம், கணிணி மையம் அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தில் சிலுவைப்பாதை நிலைகள் அமைக்கப்பட்டது. திருத்தல திருவிழாக்கள் கடற்கரையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டன. மேலும் அருள்பணி. டோமினிக் சாவியோ மற்றும் அருள்பணி. ஸ்டீபன் ஆகியோர் உதவிப் பங்குத்தந்தையர்களாக சிறப்பாக பணியாற்றினர்.
திருத்தலமாக உயர்த்தப்படல்:
2008-ம் ஆண்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட ஆலயத்தின் இருமருங்கிலும் புனித அந்தோணியாரின் திருப்பண்ட காட்சி கோவில், மாதா காட்சி கோவில் ஆகியன அமைக்கப்பட்டன. பங்குத்தந்தை இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
கீழேயுள்ள ஹால் சிற்றாலயமாக மாற்றப்பட்டு, பேராயர் சின்னப்பா ஆண்டகையால் 13.06.2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.
விரிவுபடுத்தப்பட்ட ஆலயமானது செங்கற்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் 06.01.2009 அன்று ஆசீர்வதிக்கப்பட்டு, மறைமாவட்ட திருத்தலமாக அறிவிக்கப் பட்டது.
2009 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. இயேசு அந்தோணி அவர்கள் சிறப்பாக பணியாற்றினார். ஆலயத்தை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டது. புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு நிகழ்வுகள் பதிக்கப்பட்ட கொடிமரம் நிறுவப்பட்டது. உலகிலுள்ள அனைத்து தேவ அன்னையின் சுரூபங்கள், விளக்கப்படங்கள் அடங்கிய அழகிய மாதா காட்சியகம் அமைத்து திருத்தலத்தை மெருகூட்டினார். அவருக்கு துணையாக உதவிப் பங்குத்தந்தையர்களாக அருள்பணி. A. D.மைக்கேல், அருள்பணி. சகாயராஜ், அருள்பணி. பால்ராஜ் ஆகியோர் பணியாற்றினர்.
2014-ம் ஆண்டு முதல் அருள்பணி. ஜான் சுரேஷ் அவர்கள் சிறப்புற பணியாற்றினார். உதவிப் பங்குத்தந்தையர்களாக அருள்பணி. தாமஸ், அருள்பணி. சுரேஷ் தாமஸ், அருள்பணி. பிரதீப், அருள்பணி. டேவிட்நேசன், அருள்பணி. அமுல்ராஜ், அருள்பணி. ஜோ தினேஷ், அருள்பணி. பர்ணபாஸ், அருள்பணி. ஜீவா ஆகியோர் சிறப்புற பணியாற்றி திருத்தல வளர்ச்சிக்கு உதவி புரிந்தனர்.
2018-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்ற அருள்பணி. லியோ டோமினிக் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து திருத்தல வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றார். இவரது பணிக்காலம் சவால் நிறைந்ததாக உள்ளது. உலகம் முழுவதும் Covid 19 வைரஸ் தொற்றின் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு மிகுந்த சிரமத்தில் இருப்பினும், தினமும் Online வழியாக வழிபாடுகளை சிறப்பாக நடத்தியும், பாலவாக்கம் பங்கு மக்களுக்கு மட்டுமின்றி, பிற மக்களுக்கும் அவ்வப்போது மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என உதவிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருத்தலத்தின் சார்பாக நேரில் சென்று உதவிகள் வழங்கினார். மேலும் திருத்தலத்தில் புதிதாக Sound System அமைக்கும் பணிகளை செய்து வருகின்றார். எதிர்காலத் திட்டமாக Lift அமைக்கும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, பாலவாக்கம் திருத்தல வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றார். உதவிப் பங்குத்தந்தையர்களாக அருள்பணி. பிலிப், அருள்பணி. பவுன், அருள்பணி. அற்புதராஜ், அருள்பணி. ராபின் ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர். தற்போது உதவிப் பங்குத்தந்தையர்களாக அருள்பணி. சகாயராஜ், அருள்பணி. ஜெகன் ஆகியோர் சிறப்புற பணியாற்றி வருகின்றனர்.
திருத்தல தனிச்சிறப்புகள்:
1. உலகிலேயே முதன்முதலாக கட்டப்பட்டுள்ள 100 அடி உயர நற்கருணை கோபுரம்
2. ஐம்பொன் வெங்கலம் கொண்டு உருவாக்கப்பட்ட புனித அந்தோணியாரின் திருப்பண்ட சுரூபம் (புனித அந்தோணியார் திருப்பண்ட ஆலயம்)
3. பால்காரச் சிறுவனுக்கு தேவத்தாய் காட்சிதரும் திருசுரூபம் வைக்கப்பட்டுள்ள, மாதா காட்சிக் கோவில்
4. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய கொடிமரம்
5. உலகிலுள்ள அனைத்து தேவ அன்னையைப் பற்றிய சுரூபங்கள், விளக்கப்படங்கள் உள்ளடக்கிய மாதா காட்சியகம்
6. மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து 9 திருப்பலிகள் (தமிழ், மலயாளம், தெலுங்கு, ஆங்கிலம்)
7. செவ்வாய்க்கிழமைகளில் இறைமக்களுக்கு வழங்கப்படும் அன்பின் விருந்து (அன்னதானம்)
8. ஜூன் 1-ம் தேதி தொடங்கி ஜூன் 13-ம் தேதி வரை 13 நாட்கள் திருவிழா சிறப்பித்தல். திருவிழா நாளன்று கடற்கரையில் பிரமாண்ட திருப்பலி நிறைவேற்றி தேர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
9. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற கிறிஸ்தவ சகோதரர்கள், இந்து, முஸ்லிம் சகோதரர்கள் பெருமளவில் வந்து இறைவனை வணங்கும் சுற்றுலாத் திருத்தலம்
10. ஆலய முகப்பில் அமைந்துள்ள புனித அந்தோணியாரின் அதிசய கெபி... ஆலயத்தின் உள்ளே கீழ்க்கோவிலில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் திருச்சுரூப பீடம்.
புதுமைகள்:
"ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்" திருப்பாடல்கள் 85:7
எண்ணிலடங்கா புதுமைகள் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. புதுமைகள் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை திருப்பலியில், நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் நேரடியாக சாட்சியமளிக்கின்றனர். குறிப்பாக:
1. காணாமல் போன பொருட்களை மீண்டும் கண்டடைவது
2. திருமண சுப காரியங்கள் நிறைவேறுவது
3. குழந்தை பாக்கியம் பெற்றுக் கொள்வது
4. மருத்துவர்களால் கைவிடப்பட்ட புற்று நோயாளர்கள், சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள், தீராத உடல் உபாதைகள் உள்ளவர்கள் குணமடைகிறார்கள்
5. தீய கட்டுகள் பில்லி சூனியங்களிலிருந்து விடுபடுவது.
பங்கில் உள்ள கெபி/குருசடி:
1. திருத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள புனித அந்தோணியார் அதிசய கெபி
2. திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள கல்வாரி குருசடி
பங்கின் சபைகள் இயக்கங்கள்:
1. மரியாயின் சேனை ஆண்கள்/ பெண்கள்
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. புனித பிரான்சிஸ்கன் 3-ம் சபை
4. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்
5. பங்குப்பேரவை
6. இளையோர்குழு
7. மறைக்கல்வி
8. பீடப்பூக்கள்
9. பாடகற்குழு
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருள்பணி. ஆண்டனி செபாஸ்டின் (2001-2003)
2. அருள்பணி. லூயிஸ் ராயர் (2003-2004)
3. அருள்பணி. சிரில் ராஜ் (2004-2009)
4. அருள்பணி. இயேசு ஆண்டனி (2009-2014)
5. அருள்பணி. ஜான் சுரேஷ் (2014-2018)
6. அருள்பணி. லியோ டோமினிக் (2018 முதல்...)
தீராத நோய்களா! மனதில் குழப்பங்களா! திருமணம் தடைபடுகிறதா! குழந்தை பாக்கியம் இல்லையா! எண்ணிய காரியங்கள் நிறைவேறவில்லையா! கலங்க வேண்டாம்...! வேண்டுதல்கள் நிறைவேற்றும் புதுமைகள் பலபுரியும் பாலவாக்கம் கடற்கரை புனித அந்தோணியார் திருத்தலத்திற்கு வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: திருத்தல அதிபர் அருள்பணி. லியோ டோமினிக்