327 புனித மரிய மதலேனாள் ஆலயம், கொல்லப்பட்டி


பூலோகம் போற்றும் புனித மரிய மதலேனாள் ஆலயம்.

இடம் : கொல்லப்பட்டி

மாவட்டம் : தருமபுரி
மறைமாவட்டம் : தருமபுரி

நிலை : கிளைப்பங்கு

பங்கு : அற்புத குழந்தை இயேசு ஆலயம், செல்லியம்பட்டி

குடும்பங்கள் : 190
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : (பங்கு ஆலயத்தில்) காலை 09.00 மணிக்கு.

புதன் மாலை 6.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

பங்குத்தந்தை (2018): அருட்பணி M ஜார்ஜ்

திருவிழா : ஜுலை மாதம் 22 (ஆடி 6) பூலோகம் போற்றும் மரிய மதலேனாளின் திருவிழா ஆடி பெருவிழாவை ஒட்டிய 9 நாட்கள் நவநாள், 3 நாட்கள் திருவிழா, 4ம் நாள் நன்றி திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறும்.

வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்பு S.கொல்லப்பட்டி கிராம மக்கள் கொடும் நோயினால் தாக்கப்பட்டனர். அப்பொழுது இவ் ஊருக்கு பூலோகம் போற்றும் புனித மரிய மதலேனாள் சுரூபம் கொண்டு வரப்பட்டது.

புனிதையின் வருகைக்குப் பின்னர் தான் அந்த கொடும் நோயில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்தது. அன்று முதல் கொல்லப்பட்டியின் பாதுகாவலியாக மக்களை பாதுகாத்து வருகின்றார் புனித மரிய மதலேனாள்.

புனிதையின் பரிந்துரையால் பல்வேறு புதுமைகள் நடந்து வருவதால், சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் இவ்வாலயம் வந்து ஜெபித்து நலம் பெற்று செல்கின்றனர்.

மிகப்பழமையான ஆலயத்தை2000 -ம் ஆண்டு இடித்துவிட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு 22.07.2002 அன்று அன்றைய ஆயர் மேதகு அந்தோணி இருதயராஜ் D. D அவர்கள் புனிதம் செய்து வைத்து திறக்கப்பட்டது.

வழித்தடம் :
தருமபுரியில் இருந்து பாலக்கோடு செல்லும் பேருந்து புலிக்கரை வழி 8, 8A, 14, 14A, 30,15, 6

தருமபுரியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இவ் ஆலயம் அமைந்துள்ளது.

தகவல்கள் :
மரிய மதலேனாள் நண்பர்கள் குழு கொல்லப்பட்டி.

வாழ்க்கை வரலாறு

மகதலா மரியா கலிலேயாவில் உள்ள மகதலா என்னும் ஊரில் பிறந்தார். அதனால் தான் இவர் மகதலா மரியா என அழைக்கப்படுகின்றார். ஆண்டவர் இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார் (லூக் 8:1-2), அதற்கு நன்றிக்கடனாக இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவுக்கு பணிவிடைசெய்து வந்தார்.

ஒருசிலர் இவர் இயேசுவின் பாதங்களைக் கழுவிய பாவிப்பெண் (லூக் 7: 36-38) எனவும், இன்னும் ஒருசிலர் பெத்தானியைச் சேர்ந்த லாசரின் சகோதரி எனவும் (யோவா 12), வேறு சிலர் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் எனவும் கூறுவார் (யோவா 8: 2-11). ஆனால் இதற்கான ஆதாரங்கள் உறுதியாக இல்லை. இயேசுவால் ஏழு பேய்கள் ஓட்டப்பட்ட பெண் என உறுதியாகச் சொல்லலாம்.

மகதலா மரியா இயேசுவோடு இறுதிவரைக்கும் இருந்தார். இயேசுவைக் கைது செய்து, சிலுவையில் அறைந்து கொன்றபோது இயேசுவின் மற்ற எல்லாச் சீடர்களும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். ஆனால் மகதலா மரியா, இயேசுவின் தாய் மரியாவோடு இறுதிவரைக்கும் உடனிருந்தார். ஆண்டவர் இயேசு மரித்த மூன்றாம் நாளில் இவர்தான் முதன்முறையாக கல்லறைக்குச் சென்று, உயிர்த்த ஆண்டவரை முதன்முறையாகக் கண்டு, அதனை மற்ற சீடர்களுக்கு அறிவித்தார். ஆகையால் மகதலா மரியா, தான் ஒரு பெண் என்பதையும் பாராது, மிகத் துணிவோடு இருந்து செயல்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.

நிகழ்வு

மகதலா மரியா தன்னுடைய கையில், ‘இயேசு உயிர்த்துவிட்டார்’ (Christ is Risen) என்று பொறிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான முட்டையை வைத்திருப்பது போன்ற ஓவியங்கள் இருக்கும். எதற்காக அவர் அப்படி சிவப்பு நிற முட்டையை வைத்திருக்கிறார் என்பதற்காக சொல்லப்படும் தொன்மம். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இயேசுவின் தாய் மரியாவும் மகதலா மரியாவும் ஒரு கூடை நிறைய முட்டைகளை எடுத்து, இயேசு அறையப்பட்ட சிலுவையின் அடியில் வைத்தனர். இயேசுவின் உடலிலிருந்து வழிந்த செங்குருதி, கீழே வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் பட்டு, செந்நிறமாய் மாறிப் போனது. சிலுவையின் அடியில் நின்றிருந்த மகதலா மரியா முட்டைகளை எடுத்துப் பார்த்தபோது அவை சிகப்பாய் மாறியிருந்தன. அதோடு மட்டுமல்லாமல் அவற்றியில் இயேசு உயிர்த்துவிட்டார் என்று பொறிக்கப்பட்டிருந்தன. இந்த முட்டைகளை அவர் உரோமை அரசனாகிய திபேரியசைச் சந்திக்கும்போது கொடுத்தார்.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு மகதலா மரியா, இயேசுவின் தாய் மரியாவோடும் நற்செய்தியாளர் யோவானோடும் எபேசு நகருக்குச் சென்று, அங்கே நற்செய்தி அறிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் மேலைநாட்டுச் திருச்சபையோ மகதலா மரியா இயேசுவின் நெருங்கிய நண்பரான லாசர் மற்றும் மார்த்தாவோடு பிரான்சு நாட்டிற்குச் சென்று, அங்கே நற்செய்தி அறிவித்ததாகும், பின்னர் ஒரு குகையில் சென்று தங்கி, அங்கேயே தன்னுடைய வாழ்நாளின் மீதிநாட்களை செலவழித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவருடைய காலத்திற்கு முன்பு வரை, ஒரு நினைவுநாளைப் போன்றுதான் மகதலா மரியாவின் நாள் நினைவுகூறப்பட்டது. ஆனால் திருத்தந்தை பிரான்சிஸ் தான் மகதலா மரியா திருத்தூதர்களுக்கே இயேசு உயிர்த்த நற்செய்தியை அறிவித்ததால், அவருடைய விழாவை ஒரு பெருவிழாவைப் போன்று கொண்டாடப் பணித்தார். ஆகவே, ‘திருத்தூதர்களின் திருத்தூதர்’ என அழைக்கப்படுகிறார்.