383 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மங்கமனூத்து


புனித சந்தியாகப்பர் திருத்தலம்.

இடம் : மங்கமனூத்து

🦋முகவரி : மங்கமனூத்து,
சிலுவத்தூர் - அஞ்சல்,
திண்டுக்கல் - 624 306.

🍀மாவட்டம் : திண்டுக்கல்
🍀மறை மாவட்டம் : திண்டுக்கல்
🍀மறை வட்டம் : கொசவபட்டி
🍀நிலை : பங்குத்தளம்

💐பங்குத்தந்தை :
அருட்பணி M.A.அந்தோணி (பொறுப்பு)

🍀கிளைப்பங்குகள் :
🌲அதிகாரிபட்டி
🌲கோவில்பட்டி
🌲மஞ்சநாயக்கன்பட்டி
🌲பெத்தனம்பட்டி
🌲வி.எஸ்.கோட்டை
🌲ரெட்டியபட்டி
🌲பாறைப்பட்டி

🌳குடும்பங்கள் :
கிறிஸ்தவ குடும்பங்கள் : 180
பிற மத குடும்பங்கள் : 100

🔥ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

🔥செவ்வாய் : மாலை 07.30 மணிக்கு சந்தியாகப்பர் நவநாள் திருப்பலி.

🔥மற்ற நாட்களில் திருப்பலி : காலை 05.30 மணிக்கு.

🎉திருவிழா : ஜூலை 23, 24, 25 ஆகிய மூன்று நாட்களில் வெகுவிமரிசையாக நடைபெறும்.

ஜூலை 23 :* மாலை 07.00 மணிக்கு கொடியேற்ற திருப்பலியும், அன்னதானமும், கபாலமாலை தேர்பவணியும் நடைபெறும்.
ஜூலை 24 :* மாலை 07.00 மணிக்கு திருவிழா ஆடம்பரத் திருப்பலியும், கலை நிகழ்ச்சியும், வானவேடிக்கையும், இரவு தேர்பவனியும் நடைபெறும்.
ஜூலை 25 :* காலை 07.30 மணிக்கு தேரடி திருப்பலியும், காலை 09.00 மணி, 11.00 மணி, நண்பகல் 01.00 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடைபெறும். பிற்பகல் 02.00 மணிக்கு பகல் தேர்பவனியும், மாலை 07.00 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும். இரவு 10.00 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

🍂மண்ணின் மைந்தர்கள் :
சென்னை அன்னாள் துறவர சபையில் இரண்டு அருட்சகோதரிகளும், மறைமாவட்ட குருமாணவனாக ஒருவரும் இறைப்பணி செய்து வருகின்றனர்.

🚌வழித்தடம் :
திண்டுக்கலில் இருந்து சிலுவத்தூர் வழியாக செந்துரை, செங்குறிச்சி செல்லும் அனைத்து பேருந்துகளும் மங்கமனூத்து திருத்தலத்தில் நின்று செல்லும். 👉பேருந்து வழித்தட எண் : 2

🗒ஊர் மற்றும் ஆலய வரலாறு:
*********************************
💎ஊர் வரலாறு:

🏵காவேரி கரையோரம் வாழ்ந்து வந்த பஞ்சமர் என்று அழைக்கப்பட்ட மக்கள் கொடிய நோயாலும், காவேரி ஆற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து தெற்கு நோக்கி குடிபெயர்ந்து எமது ஊர் எல்லையில் பாய்ந்தோடும் புருஜா நதி கரையோரம் குடியமர்ந்தனர். இங்கும் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதனால் தற்போது உள்ள இடத்திற்கு நகர்ந்து இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மிகவும் செல்வ செழிப்புடன் இருந்ததாலும், போக்குவரத்திற்கு வசதியாகவும் இருந்ததாலும் 18 பட்டி கிராமங்களுக்கு வருவாய் கிராமமாக விளங்கிவருகிறது.

🍇 கி.பி.1606 ல் முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சி செய்துவந்த காலத்தில் அவரது வழித்தோன்றலான ராணி மங்கம்மாள் அவர்கள், திண்டுக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த காலத்தில், 18 பட்டிக்கும் வருவாய் கிராமமாக இருந்துவந்த மங்கமனூத்தை சுற்றி உள்ள ஊர்களில் வசிக்கும் மக்களிடம் வரியாக வசூல் செய்யும் தானியங்களை சேமித்து வைப்பதற்காகவும், மக்களின் குறைகளை கேட்க வரும் அதிகாரிகள் தங்குவதற்கு வசதியாகவும் இங்கு ஒரு சிறிய கோட்டை கட்டியதோடு, தானியங்களை சேமித்து வைக்க தானிய கிடங்குகளையும் அமைத்து சேமித்து வைத்தனர். மேலும் இராணி மங்கம்கம்மாள் இங்கு தங்கி இருந்த காலத்தில் வழிபடுவதற்காக ஈஸ்வரன் கோவில் ஒன்றையும் கட்டி வழிபட்டார்கள். மேலும், மக்கள் தங்கள் குலதெய்வங்களான காட்டாத்து கருப்பணசாமி கோவிலையும், மருதைவீரன் கோவிலையும் கட்டி வழிபாடு செய்துவந்தனர்.

💎ஆலய வரலாறு :
💐மதுரையை தலைமை இடமாகக் கொண்டு சேசுசபை குருக்கள் தங்களது மறைப்பரப்பு பணியினை மேற்கொண்டு வந்தனர். அவர்களில் அருட்தந்தை. மார்ட்டின் சே.ச, அருட்தந்தையும் வேதபோதகருமான அகஸ்டின் கப்பெல்லி சே.ச, வீ்ரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட அருட்தந்தை. ஜோசப் பெஸ்கி சே.ச, ஆகிய மூவரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இந்த மூன்று சேசுசபை குருக்களும் மங்கமனூத்து பணித்தலத்திற்கு வந்து தங்கி தங்களது மறைபணிகளை மேற்கொண்டனர்.

🌹 இவர்கள் மூவரும் தாங்கள் பணிசெய்த காலத்தில் இவ்வூரில் தாங்கள் பணிசெய்தமைக்கான நினைவுச் சின்னங்களை பதிவு செய்துவிட்டுச் சென்றனர். இதில் இத்தாலி நாட்டை சேர்ந்த வேதபோதகர் அகஸ்டின் கப்பெல்லி சே.ச அவர்கள் கி.பி.1697 முதல் கி.பி 1702 வரை ஐந்தாண்டுகள் இங்கு தங்கி மறைப்பணியாற்றி வந்துள்ளார். வேதபோதகர் இங்கு மறைப்பணியாற்றி வந்தபோது ஒருசிலர் இவரை தவறாக பேசியதனால் கடும்கோபம் கொண்டு, இங்கிருந்து செல்ல முடிவெடுத்து தான் இத்தாலி நாட்டில் இருந்து கொண்டுவந்த புனித சந்தியாகப்பரின் சுரூபத்தை தன்னுடன் எடுத்துச்செல்ல முற்பட்டபோது, சுரூபத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. இதனால் அவர் கருப்பு உடை அணிந்து செபவழிபாடு செய்துவிட்டு புனித சந்தியாகப்பர் சுரூபத்தை இங்கு வாழ்ந்து வந்த கிறிஸ்துவ மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, திண்டுக்கல் வழியாக மதுரை சென்று அங்கிருந்து தான் ஏற்கனவே மறைப்பணி செய்துவந்த கழுகேர்கடை (மதுரை மாவட்டம்) என்ற ஊருக்குச் சென்று தங்கியிருந்து மறைப்பரப்பு பணி செய்து வந்த போது தமது 34 வது வயதில் சமய வெறியர்களால் நஞ்சு கலந்த உணவு கொடுத்து கொல்லப்பட்டார்.

🦋அவரது உடலை அவர் கட்டிய புனித சவேரியார் கோவில் வளாகத்திலேயே (கழுகேர்கடை) அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த ஆலயம் வேதபோதகர் ஆலயம் என்றே அழைக்கப்பட்டு பெயர் விளங்குகின்றது.

🍀வேதபோதகர் கொடுத்துச் சென்ற புனித சந்தியாகப்பர் சுரூபத்திற்கு இவ்வூர் கிறிஸ்தவ மக்கள் தென்னங்கீற்றால் ஆன ஒரு சிறிய கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். மேலும் இவ்வூர் இராணி மங்கம்மாள் காலம்தொட்டு 18 பட்டிக்கு தலைமையிடமாக விளங்கியதால் மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் இவ்வாலயத்திற்கு வந்து தங்களுக்கு வேண்டிய வரங்களை புனித சந்தியாகப்பர் வழியாக பெற்றுச் செல்கின்றனர். இதனால் புனித சந்தியாகப்பரின் புதுமைகளை கேள்விப்பட்ட செங்குறிச்சி ஜமீன் அவர்களும் இவ்வாலயம் வந்து வேண்டி வரங்கள் பல பெற்றுள்ளார். அதனால் அவரும், இவ்வூர் மக்களும், சேசுசபை குருக்களும் இணைந்து ரோமாபுரில் உள்ளது போல் கூம்பு வடிவ கோவிலும், கோவிலின் முன்புறம் கற்களால் ஆன தூண்கள் அமைத்து தகர கொட்டகையும் அமைக்கப்பட்டது.

🌹அருட்தந்தை அகஸ்டின் கப்பெல்லிக்குப் பிறகு மறைப்பரப்பும் பணிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட வீரமாமுனிவரும் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளார். அவரின் வருகையை நினைவுபடுத்தும் விதமாக தற்போது அமைத்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்திற்கு அருகில் நடுகல் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அது சாலை விரிவாக்கத்தின் போது சேதமடைந்து விட்டது.

🌺மேட்டுப்பட்டி பங்கிலிருந்து கொசவபட்டி பங்கும், கொசவபட்டியில் இருந்து புகையிலைப்பட்டி பங்கும் உருவானது. புகையிலைப்பட்டியில் மங்கமனூத்து ஒரு கிளைப் பங்காக இருந்து வந்தபோது கி.பி.1991 ம் ஆண்டு புகையிலைப்பட்டி பங்கிற்கு அருட்தந்தை. ஏர்னெஸ்ட் அந்தோணிசாமி அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றதும் மங்கமனூத்தை தனிப் பங்காக மாற்றம் செய்ய வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு இவ்வூர் கிறிஸ்தவ மக்களின் உதவியோடு 01.10.1991 ம் நாளில் புனித சந்தியாகப்பரின் ஆலயத்தின் பிற்பகுதியில் உள்ள கூம்பு வடிவ கோபுரத்தை மட்டும் விட்டுவிட்டு முற்பகுதியை இடித்து ஆலயத்தை விரிவாக்கம் செய்தார்.

🌸 31.05.1992 அன்று ஊரின் மையப்பகுதியில் உள்ள பனிமயமாதா ஆலயத்தில் அப்போது திண்டுக்கல் மறைவட்ட அதிபராக இருந்தவரும், தற்போது திண்டுக்கல் மறைமாவட்ட ஆயராகவும் உள்ள மேதகு தாமஸ் பால்சாமி அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றி ஓர் அறிவிப்பு செய்தார்கள். சேசுசபையைச் சார்ந்த குருமாணவர் அருட்சகோதரர் ஆரோக்கியராஜ் அவர்களையும், சென்னை அன்னாள் சபையைச் சார்ந்த அருட்சகோதரி மேரி அந்தோணியம்மாள் ஆகிய இருவரும் இவ்வூரில் தங்கி ஆசிரிய பணியோடு சமுதாயப்பணியும் செய்வார்கள் என இருவரையும் அறிமுகம் செய்துவைத்து, அவர்கள் இருவரும் மக்களோடு மக்களாக இங்கேயே தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்தார்கள். பிறகு ஆலய விரிவாக்க பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து ஆயர் அவர்களின் தலைமையில் 23.07.1992 அன்று புனிதப்படுத்த திட்டமிட்டபோது 1992 ஆம் ஆண்டு முதல் புனித சந்தியாகப்பர் திருவிழாவிற்கு முன்பாக 17.07.1992 முதல் நவநாள் திருப்பலியும் மற்றும் நவநாள் கொடியேற்றமும் நடைபெறுதல் வேண்டும் என ஊர் மக்களால் முடிவுசெய்யப்பட்டு இன்றுவரை நடந்துவருகிறது. இந்த ஆண்டோடு நவநாள் ஆரம்பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எமது ஊர்மக்கள் சமூக, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய அருட்தந்தை ஏர்னெஸ்ட் அந்தோணிசாமி மற்றும் அருட்தந்தை ஆரோக்கியராஜ் சே.ச அவர்களோடு அருட்சகோதரி இரபேல்மேரி, அருட்சகோதரி அமிர்தம், அருட்சகோதரி மரிய கொரட்டி, அருட்சகோதரி ஜூலியனா ஆகியோர் 01.06.1992 முதல் 31.05.1999 முடிய 7 ஆண்டுகள் எங்களோடு தங்கியிருந்து ஆசிரியப் பணியோடு, சமுதாயப் பணியும் செய்து மக்களை நல்வழிப்படுத்தினர்.

⛪தனிப்பங்கின் தோற்றம் :

💐திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு S.L. கபிரியேல் அவர்களால் கடந்த 07.06.1997 முதல் மங்கமனூத்தை புகையிலைப்பட்டி பங்கிலிருந்து பிரித்து தனிப்பங்காக அறிவித்து திருச்சி பாலக்கரை ஆரோக்கியமாதா கோவிலில் உதவி பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை விக்டர் இம்மானுவேல் அவர்களை எமது பங்கிற்கு முதல் பங்குத்தந்தையாக நியமித்தார்கள். இதுவரை எமது பங்கில் அருட்தந்தை விக்டர் இம்மானுவேல், அருட்தந்தை ஜெயராஜ், அருட்தந்தை மைக்கேல், அருட்தந்தை அ.தி. அன்பரசன், அருட்தந்தை ஜான்பீட்டர், அருட்தந்தை பீட்டர்ராஜ், அருட்தந்தை ஜெயசீலன், அருட்தந்தை பீட்டர் செல்வராஜ், அருட்தந்தை வின்சென்ட் கமலக்கண்ணன் ஆகியோர் பங்குத்தந்தையாக பணியாற்றி உள்ளார்கள். தற்போது கொசவபட்டி மறைவட்ட அதிபர் அருட்தந்தை M.A.அந்தோணி அவர்கள் பொறுப்பு பங்குத்தந்தையாக பணியாற்றி வருகின்றார்கள்.

📈பங்கின் வளர்ச்சிப் பணிகள் :

🌺 07.06.1997 ம் ஆண்டு முதல் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை விக்டர் இம்மானுவேல் அவர்கள் கோவிலின் உள்ளே திருபீடம் அமைத்ததோடு, கோவிலுக்கு தென்புறமாக புனித சந்தியாகப்பர் சிற்றாலயம் அமைத்தார்கள். மேலும் மக்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த டாக்டர் அம்பேத்கார் கல்வி அறக்கட்டளையும் மற்றும் டாக்டர் அம்பேத்கார் படிப்பகமும் அமைத்தார்கள். புனித ஜேம்ஸ் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படல் வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு திட்டமிட்டு திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்திய மாரிஸ்ட் சபை சகோதரர்களை 01.06.1999 ம் ஆண்டுமுதல் இப்பங்கு தளத்தில் கல்வி பணியாற்ற பணியமர்த்தினார்கள். அவர்களின் கனவு தற்போது மெய்யாக உள்ளது.

🍇அருட்தந்தை ஜெயராஜ் பணிக்காலத்தில் 2008 ம் ஆண்டு புனித ஜேம்ஸ் ஆர்.சி.துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக ரூ.20 லட்சம் செலவில் 10 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக்கட்டிடம் அமைத்துக் கொடுத்தார்கள்.

🌸அருட்தந்தை அ.தி.அன்பரசன் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு மணிக்கூண்டினையும், திருத்தலத்தை சுற்றியும், பள்ளி வளாகத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்ததோடு, பங்கில் உள்ள துவக்கப்பள்ளிக்கு கூடுதலாக இரண்டு ஆசிரியர் பணியிடங்களையும் பெற்றுத்தந்தார்கள். மேலும் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப அட்டை கொடுத்து கிறிஸ்துவ குடும்பங்களை ஒழுங்குபடுத்தினார்கள்.

🌺அருட்தந்தை பீட்டர் செல்வராஜ் அவர்களின் பணிக்காலத்தில் தற்போதுள்ள ஆலயம் கட்டி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, ஆலயத்தின் உள்ளே மார்பிள்ஸ் கற்கள் பதித்து அழகுபடுத்தினார். மேலும் ஆலயத்தின் வடக்கு பகுதியில் புனித சந்தியாகப்பருக்கு சிற்றாலயம் அமைத்தார்.

🍎அருட்தந்தை வின்சென்ட் கமலக்கண்ணன் பணிக்காலத்தில் மறைமாவட்ட ஆயர் அவர்களின் அனுமதியோடு மங்கமனூத்து மின்னல் பாய்ஸ் நண்பர்களின் முயற்சியால், பல நன்கொடையாளர்களின் உதவியோடு ஆலய வளாகத்தில் நிரந்தர பந்தலும், மங்கமனூத்து புனித சந்தியாகப்பரின் விசுவாசிகள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியோடு மறைமாவட்ட நிதியுதவியின்றி சப்பரகொட்டகை, புனித சந்தியாகப்பர் கலையரங்கம், ஆலய வளாகத்தில் சுற்றுச்சுவர், மேலும் 49 அடியில் பித்தளையால் ஆன கொடிமரமும் சேர்த்து சுமார் 30 லட்சம் மதிப்பில் செலவுசெய்து அமைக்கப்பட்டது. மங்கமனூத்து புனித சந்தியாகப்பர் திருத்தலமானது திண்டுக்கல் மறைமாவட்டத்தில் முன்னோடி பங்காக செயல்பட்டு வருகிறது.

📝குறிப்பு
மங்கமனூத்து புனித சந்தியாகப்பர், தமது திருத்தலத்தை நாடி வருவோருக்கு வேண்டிய வரங்களை தரக்கூடியவர். கல்வி, வேலைவாய்ப்பு, திருமண காரியம், குழந்தைச் செல்வம், நோய் தீர்க்கும் அருமருந்து, கால்நடைகளின் காவலன் போன்ற பல்வேறு புதுமைகளை செய்து வருகின்றார். இதற்கு இதனை தொகுத்தவரே ஒரு சான்று.
- நன்றி

தொகுப்பு
கொடிமர புனரமைப்புக் குழு,
மங்கை இளைஞர் நற்பணி மன்றம்,
மங்கமனூத்து.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

👉தகவல்கள் : இந்த அழகிய வரலாற்றை திரட்டி தொகுத்த திரு சந்தியாகு (தலைமை ஆசிரியர்) அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..!