168 பூண்டி மாதா பேராலயம், பூண்டி

    

புனித ஜென்மராக்கினி மாதா பேராலயம்

இடம் : பூண்டி 

மாவட்டம் : தஞ்சாவூர் 

மறை மாவட்டம் : கும்பகோணம் 

நிலை : பேராலயம் (Basilica) 

கிளைப்பங்குகள்:

1. வடக்கு பூண்டி

2. மகிமை புரம்

3. புதுப்பச்சேரி

4. மணல்மேடு

குடும்பங்கள்: 35 (கிளைப்பங்குகள் சேர்த்து 350+)

பங்குத்தந்தையர்கள்:

அதிபர் & பங்குத்தந்தை: அருள்திரு. A. பாக்கியசாமி

துணை அதிபர் &பொருளாளர்: அருள்திரு.‌ J. ரூபன் அந்தோனிராஜ்

அருள்திரு. P. J. சாம்சன்

(Director - Poondi Madha Retreat Centre)

உதவிப் பங்குத்தந்தையர்கள்:

அருள்திரு. A. இனிகோ

அருள்திரு. S. ஜான்சன்

அருள்திரு. A. அருளானந்தம் (Spiritual Father) 

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி: காலை 06:00 மணி, காலை 08:30 மணி, காலை 11:15 மணி, நண்பகல் 12:00 மணி (ஆங்கிலம்), மாலை 05:15 மணி

வாரநாட்களில்: காலை 06:00 மணி, காலை 11:15 மணி, மாலை 05:15 மணி

சனிக்கிழமை: காலை 06:00 மணி திருப்பலி, 09:30 மணி குணமளிக்கும் திருஎண்ணெய் பூசும் திருப்பலி, 11:15 மணி திருப்பலி, மாலை 05:15 மணி சிறு தேர்பவனி, திருப்பலி, மாலைப்புகழ் செபவழிபாடு -திவ்விய நற்கருணை ஸ்தாபகத்தோடு

ஒவ்வொரு மாதமும் 08-ம் தேதி மாலை 05:15 மணி முதல் இரவு 12:00 மணிவரை "பூண்டி மாதா புதுமை இரவு" வழிபாடு

குறிப்பு : காலை 05:00 மணி முதல் இரவு 09:00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

காலை 07:00 மணி முதல் மாலை 07:00 மணிவரை ஆராதனை ஆலயம் திறந்திருக்கும்.

 பேராலய திருவிழா :

கொடியேற்றம்: மே - 6

தேர்பவனி: மே -14

திருவிழா திருப்பலி : மே - 15  

அன்னையின் பிறப்புப் பெருவிழா

ஆகஸ்ட் - 30 கோடியேற்றம்.

செப்டம்பர் - 8 தேர்பவனி

செப்டம்பர் - 9 திருவிழா திருப்பலி.

வழித்தடங்கள்:

விமானம்: திருச்சி விமான நிலையம் 42கி.மீ

இரயில்: பூண்டிக்கு தெற்கே 12கி.மீ தூரத்தில் உள்ள பூதலூர்.

மேற்கே திருச்சி இரயில் நிலையம் 35கி.மீ

அரசு மற்றும் தனியார் பேருந்துகள்:

வேளாங்கண்ணி, தஞ்சாவூர், கும்பகோணம், பூதலூர், கல்லணை, செங்கிப்பட்டி, திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், புள்ளம்பாடி, லால்குடி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து பூண்டிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

இருச்சக்கர வாகன வழித்தடம்:

திருச்சி -கல்லணை -பூண்டி.

திருச்சி -காட்டூர் -கல்லணை -பூண்டி.

திருச்சி -முல்லைக்குடி -கல்லணை -பூண்டி.

வேளாங்கண்ணி -தஞ்சாவூர் -பூண்டி

கும்பகோணம் -திருவையாறு -பூண்டி

புதுக்கோட்டை -கந்தர்வகோட்டை -செங்கிப்பட்டி -பூண்டி

திருச்சி -செங்கிப்பட்டி வழிகாட்டி கோபுரம் -பூண்டி

திருச்சி -நம்பர்.1 டோல்கேட் -லால்குடி -பூண்டி.

Location map:

Poondi Madha Basilica

04362 280 422

https://maps.app.goo.gl/Fvhb8uzp73Jx93728

வரலாறு :

பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பசிலிக்கா பேராலயம், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கே 3கி.மீ. அருகிலும், கல்லணைக்கு கிழக்கே 14கி.மீ. தொலைவிலும், தஞ்சை -திருச்சி இருப்புப் பாதையில் பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 12கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பசுமை நிறைந்த நெற்பயிரும், செங்கரும்பும், உயர்ந்த தென்னை மரங்களுடனும் சூழ்ந்த சோலைவனமாக பார்போற்ற விளங்குவது தான் அலமேலுபுரம் பூண்டி. இப்போது இது பூண்டி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.  

வீரமாமுனிவர் தந்த பூண்டி ஆலயம்:

1710 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இயேசுவின் நற்செய்தியை போதிக்க வந்தவர் தான் இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை. கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி. இவரது புனைப்பெயர் தான் வீரமாமுனிவர். இந்தியாவில் கிறிஸ்துவ சமயத் தொண்டாற்ற பல இடையூறுகளைச் சந்தித்தாலும், அனைத்தையும் இயேசுவின் வழிநடத்தலால் இறைத்திட்டம் என்று ஏற்றுக் கொண்டார். இவர் சமயத் தொண்டோடு தமிழ்மொழி மீது இருந்த தாகத்தால், தமிழைத் திறம்பட கற்று, தமிழ் கிறிஸ்தவ காவியம் தேம்பாவணி மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள் பல படைத்து தமிழன்னைக்கு பெருமை சேர்த்தார்.

தாம் சென்ற இடங்களில் எல்லாம் மாதாவின் பெயரில் ஆலயங்களை எழுப்பி, மக்கள் வணங்கி செபிக்க வழிவகை செய்தார். அவ்வாறு 1714-1718 -ல் பூண்டியில் தங்கி கட்டிய ஆலயம்தான் தற்போது பூண்டி மாதா பசிலிக்காகவாக சிறப்பு பெற்றுள்ளது.

மாதா சொரூபம்:

வீரமாமுனிவரால் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் நூற்றாண்டுகளைக் கடந்ததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் பொலிவிழந்து காணப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், 1858 ஆம் ஆண்டு மரியன்னை, பெர்னதத் என்ற சிறுமிக்கு காட்சி தந்து "நாமே அமலோற்பவம்" என்று சொல்லி செபமாலை செபிக்கும்படி சொல்லிச் சென்ற நினைவாக, இப்பகுதியில் பணியாற்றிய இயேசு சபை குருக்கள் மூலம், மாதா காட்சி நல்கிய தோற்றத்தைக் கொண்ட மூன்று மாதா சுரூபங்கள் பாரீசிலிருந்து வரவழைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான் பூண்டி மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டு ஜென்மராக்கினி மாதா என்று அழைக்கப்படுகிறது.

1924 ஆம் ஆண்டு கடுமையான புயல்வீசி வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சொரூபம் சேதம் அடையாமல் இருக்க, மிக்கேல்பட்டி பங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1925 ஆம் ஆண்டு மீண்டும் பூண்டிக்கு கொண்டு வரப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டது.

பங்கு ஆலயம்:

பூண்டியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட மாதா ஆலயம் தொடர்ந்து மதுரை மிஷன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கும்பகோணம் புதிய மறைமாவட்டமாக உருவானபோது, அம்மறைமாவட்ட ஆளுகைக்கு உட்பட்டு 1909 ஆம் ஆண்டு மிக்கேல்பட்டி பங்கின் கிளைப்பங்காக ஆனது. தொடர்ந்து 1944 ஆம் ஆண்டு வரை கிளைப்பங்காகவே செயல்பட்டு வந்தது. 

04.01.1945 அன்று குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் பிரான்சிஸ் அவர்களால் பூண்டி மாதா ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

1950 ஆம் ஆண்டில் இரவு நேரங்களில் ஆலயத்தினுள் பிரகாசமான வெளிச்சம் ஏற்படவே, ஆலயம் தீப்பிடித்து விட்டதோ!! என்று அஞ்சிய பங்குத்தந்தையும், இறைமக்களும் ஆலயத்தை திறந்து பார்த்தபோது, நெருப்பே இல்லாமல் பிரகாசமான வெளிச்சத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன்!!! இது "மாதாவின் பிரசன்னம்" என்று உணர்ந்தனர். இந்தச் செய்தி சுற்றிலுமுள்ள பகுதி மக்களுக்கெல்லாம் தெரியவர, ஏராளமான மக்கள் வந்து மாதாவை தரிசித்துச் சென்றுள்ளனர். இதுபோல் பலமுறை நடந்துள்ளது.

அருட்திரு. லூர்து சேவியர் (1955-1972):

அருட்திரு. லூர்து சேவியர் அவர்கள் சிறுவயது முதல் மாதாவிடம் ஆழ்ந்த விசுவாசம் கொண்டவராய் இருந்துள்ளார். பூண்டி மாதா ஆலயத்திற்கு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற பிறகு இவரது தன்னலமற்ற சேவையும், மாதாவிடம் வைத்த அளவிட முடியாத நம்பிக்கையும், பக்தியும் மாதாவின் புதுமைகள் உலகுக்குத் தெரிய காரணமாயிருந்தது. அதுவரை "ஜென்மராக்கினி மாதா" என்று அழைக்கப்பட்டு வந்த மாதாவை "பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா" என்று அழைத்து உலகறியச் செய்தார்.

ஆலயம் பழமைவாய்ந்ததாக இருந்ததால், இயற்கை சீற்றங்களால் ஆலயச் சுவர்கள் சேதம் அடைந்து காணப்பட்டது. ஆகவே அருட்தந்தையவர்கள் ஆலயத்தை புதுப்பித்துக் கட்ட எண்ணினார். ஆனால் பழுதடைந்த பகுதியை இடிக்கவோ, கட்டவோ பணம் இல்லாமல் சிரமப்பட்டார். செபத்தினால் அடையமுடியாதது எதுவும் கிடையாது என்ற ஆழ்ந்த விசுவாசம் உடைய தந்தையவர்கள், "கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மனதில் இருத்தி, பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவிடம் மனம் உருக 15 நாட்கள் விரதம் இருந்து மன்றாடினார். 

அருட்திரு. லூர்து சேவியர் அவர்களின் வேண்டுதலை ஏற்றவராய், மாதா புதுமை செய்தார்கள். பூண்டி மாதாவின் கருணையால், தந்தையவர்களின் உள்ளுணர்வு ஆலயம் இடிந்து விழுவதுபோல் உணர்த்தியது. பள்ளிக் குழந்தைகளுக்கும், மாதாவின் பக்தர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க ஆலயத்தைச் சுற்றி தடுப்புக் கயிற்றை கட்டச் செய்தார். 1956 ஆம் ஆண்டு நவம்பர் 22-ம் நாள் வெள்ளிக்கிழமை, ஆலயத்தில் இடிக்க வேண்டிய பகுதி மட்டும் யாருக்கும் எந்த இடையூறும் இன்றி இடிந்து விழுந்தது. பூண்டி மாதாவின் புதுமையை எண்ணி அருட்தந்தை அவர்களும், மக்களும் மாதாவிற்கு நன்றி கூறினர்.

அதன்பின் பல சிரமங்களுக்குப் பிறகு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 02.05.1964 அன்று குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பவுல் அருள்சாமி அவர்களால் புனிதப்படுத்தப் பட்டது. அருட்திரு. லூர்து சேவியர் அவர்களின் காலத்தில் தொடர்ந்த பூண்டி மாதாவின் புதுமைகள், தமிழகம் மட்டுமல்லாது மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களிலும் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், மேலும் ஜெர்மனி, அரபு நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் பரவியது. அன்னையிடம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த நன்றிக் கடிதங்களும், காணிக்கைப் பொருட்களும் ஆலய அருங்காட்சியகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

கலங்கரை விளக்காய் மாதா கோபுரம்:

பூண்டிக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்திட ஆலயத்தின் முன்பகுதியில் அருட்திரு. லூர்து சேவியர் அவர்கள் வானுயர்ந்த கோபுரத்தைக் கட்டினார். 1970 ஆம் ஆண்டு முதல் உடல்நலம் குன்றவே திருச்சி குழந்தை இயேசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று ஓய்வெடுத்தபோது, 16.04.1972 அன்று காலை இறைவனிடம் சென்றார். அவரது உடல் பூண்டி மாதா பேராலய கோபுரத்தின் கீழ்ப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்றும் அன்னையின் பக்தர்கள் அருட்தந்தையின் கல்லறை முன்பு செபிப்பதைக் காண முடியும். செபித்த பலர் பல்வேறு அற்புதங்களை, நன்மைகளை பெற்றுள்ளனர். 

கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அவர்களின் முயற்சியால் அருட்தந்தை. லூர்து சேவியர் அவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் முதற்கட்டமாக 14.05.2016 அன்று "இறையடியாராக"

உயர்த்தப்பட்டார். 

திருச்சிலுவை அருளிக்கம்:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து, சிலுவை சுமந்து, ஆணிகளால் அறையப்பட்டு உயிர்விட்ட திருச்சிலுவையின் சிறுபகுதி மேதகு கர்தினால் லூர்து சாமி அவர்களின் பேருதவியால், அருட்பணி. இராயப்பர் அவர்களால் உரோமையிலிருந்து கொண்டு வரப்பட்டு, மக்கள் வணக்கம் செலுத்த பூண்டிமாதா திருப்பீடத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

திருத்தலமாக:

பங்கு ஆலயமாக இருந்த பூண்டி மாதா ஆலயம், குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் 26.01.1995 அன்று திருத்தலமாக அறிவிக்கப்பட்டது.

பசிலிக்கா:

பூண்டி மாதா திருத்தலம், திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால், 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03-ம் தேதி திருத்தல பேராலயமாக உயர்த்தப்பட்டு, கீழ்க்காணும் 6 நாட்கள் நிறைபலன் நாட்கள் என அறிவிக்கப்பட்டது.

அவை:

1. ஜனவரி 03 பேராலயம் புனிதப் படுத்தப்பட்ட பொன்னாள்.

2. தவக்காலத்தின் ஆறாவது வெள்ளிக்கிழமை

3. மே 15 பேராலய ஆண்டுப் பெருவிழா

4. ஜூன் 29 புனித இராயப்பர், சின்னப்பர் பெயர் கொண்ட விழா

5. ஆகஸ்ட் 03 இவ்வாலயம் பேராலயமாக அறிவிக்கப்பட்ட நாள்

6. செப்டம்பர் 08 அன்னையின் பிறப்புப் பெருவிழா.

முதல் புதுமை

1949இல் மிக்கேல்பட்டி என்னும் சிற்றூரை சார்ந்த பெரியவர் ஞானதிக்கத்தின் வயிற்றுவலி, அன்னையை நம்பியதால் அற்புதமாக குணமானது. இதுவே இத்திருத்தலத்தில் நடந்த  முதல் புதுமை. அவரளித்த காணிக்கையான நற்கருணை கதிர் பாத்திரம் இன்னும் இன்றும் அன்னை புகழ்பாடுகிறது.

பூண்டி மாதாவின் புதுமைளோ எண்ணிலடங்காதவை. ஆகவே இவற்றை எழுத இடம் போதாத அளவில் உள்ளன.

அன்பிரவு வழிபாடு

இறை அன்பு என்பது தனித்தன்மையானது. இறைவன் அவரவருக்கே (ஒவ்வொருவருக்கும்) உரிய பொருள். இந்த உறவே இறுதிவரை நிலைக்கக் கூடியது. இந்த அன்பே இறைவனையும்,  மனிதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையிலும் இரவு 9-12 மணிவரை அன்பிரவு செபகூட்ட வழிபாடு நடைபெற்று திருப்பலியுடனும், இறையாசீருடனும் நிறைவேற்றப்படுகிறது.

பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருள்திரு. இருதயம் பவுல் (04.01.1945 -11.01.1948)

2. அருள்திரு.‌ J. மரிய ஆரோக்கியம் (12.01.1948 -10.02.1948)

3. அருள்திரு.‌ C. O. துரைசாமி (11.02.1948 -26.09.1948)

4. அருள்திரு.‌ M. டேவிட் (27.09.1948 -02.06.1952)

5. அருள்திரு.‌ A. அருமைநாதர் (03.06.1952 -07.10.1952)

6. அருள்திரு. D. மரிய மிக்கேல் (08.10.1952 -31.08.1955)

7. அருள்திரு.‌ V. S. லூர்து சேவியர் (01.09.1955 -16.04.1972)

8. அருள்திரு.‌ A. உபகாரசாமி (பொறுப்பு)(16.04.1972 -31.08.1972)

9. அருள்திரு. A. இராயப்பர் (01.09.1977 -15.06.1991)

10. அருள்திரு. S. சூசை (15.06.1991 -20.08.1997)

11. அருள்திரு. P. தங்கசாமி (20.08.1997 -08.06.2003)

12. அருள்திரு. L. குழந்தைசாமி (10.06.2003 -09.06.2009)

13. அருள்திரு. P. சகாயராஜ் (09.06.2009 -06.06.2010)

14. அருள்திரு. A. அகஸ்டின் பீட்டர் (06.06.2010 -20.05.2012)

15. அருள்திரு. M. A. செபாஸ்டின், அதிபர் (09.06.2009 -20.06.2015)

16. அருள்திரு. M. A. செபாஸ்டின் அதிபர் & பங்குத்தந்தை (20.05.2012 -20.06.2015)

17. அருள்திரு. A. அமிர்தசாமி, அதிபர்& பங்குத்தந்தை (20.06.2015 -18.06.2016)

18. அருள்திரு. A. பாக்கியசாமி, அதிபர்& பங்குத்தந்தை (18.06.2016 முதல்..) 

உதவி அதிபர் &பொருளாளர்:

1. அருள்திரு. S. I. அருள்சாமி (09.06.2009 -19.06.2015)

2. அருள்திரு. S. அல்போன்ஸ் (20.03.2015 -18.07.2021)

3. அருள்திரு.‌ J. ரூபன் அந்தோனிராஜ் (18.07.2021...)

 பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..! 

வரலாறு: பூண்டி மாதா பேராலய வரலாறு புத்தகம்.