இடம் : குருசடி, நாகர்கோவில்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை
பங்குத்தந்தை : அருட்பணி பிரான்சிஸ் போர்ஜியோ
குடும்பங்கள் : 750
அன்பியங்கள் : 15
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணி மற்றும் மாலை 05.00 மணி.
நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு
செவ்வாய் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி.
திருவிழா : ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையை ஒட்டிய பத்து நாட்கள்.
குருசடி பங்கின் மண்ணின் மைந்தர்கள் :
அருட்தந்தையர்கள்
1. Fr M. மரிய கிரகோரி
2. Fr A. சொர்ணராஜ்
3. Fr V. M அருள் ஜேசு ராபின்
4. Fr S. ஆன்றனி மெகலன்
5. Fr J. ஜாய்
6. Fr A. அமலதாஸ் டென்சிங்
7. Fr R. A. S கிளிட்டஸ்
8. Fr D. ஆன்றனி ஜெயக்கொடி
9. Fr D. அருள் யூஜின் ராய்
10. Fr லியோன் குரூஸ் இரத்தினம்
11. Fr V. ஜெரி
12. Fr பெர்க்மான்ஸ் JS.
அருட்சகோதரிகள் :
1. Sis வின்னிபிரட்
2. Sis சலேட் மேரி
3. Sis S. சிறிய புஷ்பம்
4. Sis எல்ட்ரட்
5. Sis M. மேரி நிர்மலா
6. Sis K. அமலோற்பவம்
7. Sis D. ஹெலன் நிர்மலா
8. Sis J. வினிப்ரட் ஜோதி
9. Sis M. ஆக்னெஸ் குளோறி
10. Sis S. செல்மா மேரி
11. Sis S. ஸ்டெபனா மேரி
12. Sis மரிய மதலேனம்மாள்
வழித்தடம் :
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து : 38E, 38G, 38P, 30B, மற்றும் ஷேர் ஆட்டோ.
குருசடி ஆலய வரலாறு :
வேணாட்டு மற்றும் திருவிதாங்கூர் ஆட்சிக்காலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதிகள் மேல்பிடாகை, நடுப்பிடாகை, கீழ்பிடாகை, அழகியபாண்டியபுரம் பிடாகை, தாழக்குடி பிடாகை, தோவாளை பிடாகை, படப்பற்று பிடாகை, கோட்டாற்றுப் பிடாகை, பறக்கைப் பிடாகை, தேரூர்ப் பிடாகை, சுசீந்திரம் பிடாகை, அகஸ்தீஸ்வரம் பிடாகை என 12 பிடாகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிடாகையும் ஒரு நாட்டுக்கூட்டத் தலைவனின் கீழ் இருந்தது.
இப்பன்னிரு பிடாகைகளுள் கோட்டாற்றுப் பிடாகைக்கு உட்பட்ட இடம்தான் குருசடி. இதன் பழைய பெயர் 'பஞ்சவங்காடு' என்பதாகும்.
இவ்வூர் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து வகையான மரங்கள் அடர்ந்து வளர்ந்த ஒரு காடாக இருந்த காரணத்தால், பஞ்சவங்காடு என்று அழைக்கப்பட்டது எனவும்;
கயத்தாறு, கங்கை கொண்டான் வட்டாரப் பகுதிகளை ஆட்சி புரிந்த வெட்டும் பெருமாள் அவர்கள் தலைமையில், பாண்டிய அரச குல கடைசி மன்னர் சந்திரசேகர பாண்டியனின் குலத்தைச் சார்ந்த "ஐந்து பஞ்ச பாண்டியர்" அரியநாத முதலியை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றனர். இவர்களை போரில் வெல்ல முடியாமல் போன அரியநாத முதலியார், விசுவநாத நாயக்குருக்கு இச்செய்தியை தெரிவிக்க, நாயக்கர் பெரும் படையுடன் வந்து போரிட்டும் பஞ்ச பாண்டியரை வெற்றிகொள்ள முடியவில்லை. விசுவநாத நாயக்கர், தன் அமைச்சர் அரியநாத முதலியுடனும் மற்றும் மற்ற அரசியல் பிரதானிகளுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து பஞ்ச பாண்டியர்களை தோற்கடித்தனர். இதன் விளைவாக பஞ்ச பாண்டியர் மானம் காக்க குமரி மாவட்டத்தில் உள்ள பஞ்சவங்காடு எனும் குருசடிப் பகுதியில் குடியமர்ந்து வாழலாயினர். பஞ்சபாண்டியர் குடியமர்ந்த காட்டுப்பகுதி அவர்களின் பெயரால் (பஞ்சவன்+காடு) பஞ்சவங்காடு என அழைக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
குருசடி பெயர்க்காரணம் :
அக்காலத்தில் மீனவகுலப் பெண்ணொருத்தி, மீன்கள் விற்ற பின்னர் ஊருக்கு செல்ல இரவு நேரமாகிவிட்டதால், பஞ்சவங்காட்டிலுள்ள மங்கம்மாள் சாலை ஓரம் அமைந்திருந்த சாலைமடத்தில் இரவில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மதுரை நாயக்கர் காலத்தில் நாஞ்சில் நாட்டுப் பகுதிகள் இருந்த போது நாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் பாலமாக பல சாலைகளையும், அவற்றின் ஓரங்களில் சாலைமடங்களும் அதனருகே குடிதண்ணீர்க் கிணறுகளும் அமைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் ராணி மங்கம்மாள் காலத்தில் கி.பி 1689-1706 அமைக்கப்பட்டதால் மங்கம்மாள் சாலை என்றே அழைக்கப்பட்டன. இந்த மங்கம்மாள் சாலை ஒன்று பஞ்சவங்காடு வழியாகச் சென்றது. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை இந்துவாக இருந்தபோது இந்த சாலை வழியாகத் தான் திருச்செந்தூர் சென்றதாக கூறப்படுகிறது). ஆனால் அப்பெண்ணுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவள் தூய அந்தோணியாரிடம் பாதுகாப்பு வேண்டி மன்றாடினாள். அப்பொழுது அவள் முன் ஒரு பிரகாசமான ஒளி தென்பட்டது. அவ்வொளியின் பாதுகாப்பில் இரவுப்பொழுதை கழித்த அப்பெண் தன்னை அந்தோணியாரே பாதுகாத்தார் என உணர்ந்து, அவ்விடத்தில் ஒரு மிகச் சிறிய குருசை (சிலுவை) நாட்டிச் சென்றாள். குருசு இருந்த இடமே இன்று குருசடி என்று அழைக்கப்படுகிறது.
ஊரின் எல்லை :
குருசடி ஊரின் மத்தியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. தெற்கில் சூரங்குடியும், வடக்கில் தொழில் நுட்பக் கல்லூரியும், கிழக்கில் வட்டக்கரை ஊரும், மேற்கில் அனந்தன் கால்வாயும் எல்லைகளாக அமைந்துள்ளன.
குருசடி ஊர் வரலாறு :
குருசடி ஊர் ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
ஆசாரிபள்ளம் கோவில்விளையில் இருந்த ஓலைக்குடிசை வழிபாட்டுதலமானது, 1704- ஆம் ஆண்டு புனித அந்தோணியார் ஆலயம் என்ற பெயரில் புதிய ஆலயமாக கட்டப்பட்டது. ஆயினும் சிலரது ஆலோசனையின்படி, அந்த ஆலயத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வந்த அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் ராமராஜா, கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத அந்த ஆலயத்தை 1705 -ல் தீக்கிரையாக்க உத்தரவிட்டார். இதனால் புனித அந்தோணியார் ஆலயம் பஞ்சவங்காடு என்ற குருசடி -க்கு மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.
மேலும் பஞ்சவங்காட்டிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள், அவரவர் பகுதிகளில் தனித்தனியாக குருசடிகள் வைத்து வழிபட்டதாகவும், பஞ்சவங்காட்டில் பொதுவானதொரு குருசடி கட்டி மந்திரவாதம், பில்லி சூனியம், பேய்களுக்கெதிரான ஆற்றல் கொண்டவரான புனித அந்தோணியார் பெயரை வைத்தனர் என்றும் கூறப்படுகிறது.
எனினும் இராஜாக்கமங்கலத்திலிருந்து, திருச்செந்தூர் வரை போடப்பட்ட மங்கம்மாள் சாலையும், அதன் ஓரம் அமைந்த பஞ்சவங்காட்டு கிணறும், அவ்வழியாக வந்த மீனவப்பெண் நாட்டிச் சென்ற குருசுமே (சிலுவை) குருசடி ஊர் உருவாக காரணமாயிற்று என்று உறுதி படுகிறது.
மங்கம்மாள் சாலை வழியாக பயணம் செய்வோர், அசுத்த ஆவிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், இளைப்பாறவும் இக்குருசடி உதவியது. இதனால் இக்குருசடியின் புகழும் பரவி ஊர் விரிவடைந்தது. புனித அந்தோணியார் குருசடியின் புகழால் கிறிஸ்தவ குடியிருப்புகள் அதிகரித்தன.
குருசடி ஊரின் பிற சமய மக்களும் கிறிஸ்தவம் தழுவ, மக்களின் எண்ணிக்கை அதிகரித்து குருசடி ஊருக்கென மிகப்பெரிய ஆலயம் 1911-இல் கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
சிறிய ஆலயம் :
குருசடியின் பழமையான ஆலயம் 1690 ல் கட்டப்பட்டதாகும். ஆலயத்தின் பீடப்பகுதியின் கீழ் 328 ஆண்டுகள் பழமையான சிலுவை அமைந்துள்ளது. (இதுவே மீனவப் பெண்ணால் வழங்கப்பட்ட சிலுவையாகும்)
முதலில் வழிபட்டு வந்த சிலுவை ஆலயம் அளவில் சிறியதாக இருந்ததால 1705- ஆம் ஆண்டு வாக்கில் புனித அந்தோணியார் படம் வைத்து ஓலைக் கூரையாலான ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
1825 -ஆம் ஆண்டளவில் சிறிய ஓட்டுக் கூரையிலான ஆலயம் அமைக்கப்பட்டது.
பெரிய ஆலய தோற்றம் :
1825-இல் கட்டப்பட்ட ஆலயமானது, மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க போதுமானதாக இல்லாமல் போகவே, மக்கள் ஒன்று கூடி முடிவு செய்து, இவ்வூர் பெரியவர்களிடம் இனாமாக இடம் பெற்றனர்.
1881-இல் தற்போதைய ஆலயம் இருக்கும் இடத்தில் புதிய ஆலயம் கட்ட அருட்தந்தை எலியாஸ் (லம்பார்டியா மறை மாநிலம், இத்தாலி) அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.
ஆலயம் கட்ட சிமென்ட் கலவையை பயன்படுத்தாமல், கடுக்காயை ஊறவைத்து அதனை சுண்ணாம்புடன் சேர்த்து, காளை மாடுகளால் இழுக்கப்படும் செக்கில் போட்டு ஆட்டி, மணலுடன் இக்கலவையை செங்கல்களுக்கிடையில் வைத்து கட்டியுள்ளதால் மிகவும் உறுதியாக இருந்தது. குருசடி பங்கின்கீழ் இருந்த அனைத்து மக்களும் இங்கு தங்கியிருந்து வேலைகளைச் செய்ததால் அதிகம் நிதி தேவைப்படவில்லை.
ஆலய வேலைகள் 30 ஆண்டுகளாக நடந்தது. ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 06-01-1911 அன்று கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் முதன்முதலாக அந்தோணியார் ஏலேலக்கும்மி பாடப்பட்டது குருசடி பங்கில் தான் என்பது தனிச்சிறப்பு.
1911 முதல் 1955 காலகட்டம் வரை ஆலயத்தில் மின்சார வசதிகள் இல்லை. அந்த காலத்தில் திருப்பலி முழுதும் இலத்தீன் மொழியயிலும், மறையுரை தமிழிலும் நடைபெறும். ஆகவே மக்கள் மறையுரையை கேட்கும் வண்ணம், ஆலயத்தின் நடுப்பகுதியில் உள்ள தூணின்மேல் படிக்கட்டுகள் வழியாக ஏறிச்சென்று குருக்கள் உரத்தக்குரலில் மறையுரை நிகழ்த்துவார்கள்.
ஆலய கோபுரங்களில் உள்ள மூன்று மணிகளும் பெல்ஜியம் நாட்டில் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டவை.
ஆலயத்தில் உள்ள கொடிமரம் சிறப்பு வாய்ந்தது. இக் கொடிமரத்தின் அடிப்பகுதியில் புனித தோமையார் காலத்து கற் சிலுவைகள் உள்ளன.
1842 முதலே ஆலயத் திருவிழாவில் தேர் பவனி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த காலத்தில் தேரோடும் வீதிகள் இருந்ததாக கூறப்படுகிறது. தேர்பவனி வரும் போது பிற மதத்தவரும் வந்து மரியாதை செய்வது தனித்தன்மை வாய்ந்தது. தேரானது 9-ஆம் திருவிழா இரவிலும், 10 -ஆம் திருவிழாவில் பகலிலும் ஊரைச்சுற்றி வருகின்றது.
தனித்தன்மைகள்:
1. அருட்பணியாளர் இல்லம் : அருட்பணி வின்சென்ட் பணிக்காலத்தில், பழைய இல்லமானது இடிக்கப்பட்டு, புதிய இவ் இல்லம் கட்டப்பட்டு 1-5-1997 ல் திறக்கப்பட்டது.
2. பங்கு மேய்ப்பு பணி அலுவலகம் :
இவ் அலுவலகம் 02-08-2009 அன்று கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் வின்சென்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
3. புனித லூர்து அன்னை கெபி :
மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறைகளைச் செதுக்கி அழகிய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டுள்ளது.
4. புனித அந்தோணியார் குருசடி :
குருசடி ஊரின் நுழைவு வாயிலில் காணப்படும் அழகிய புனித அந்தோணியார் குருசடி, 1950 -இல் கட்டப்பட்டதாகும்.
5. புனித யூதாததேயு குருசடி :
15-01-1961 -இல் அர்ச்சிக்கப்பட்ட புனித யூதாததேயு குருசடியானது, புனித அந்தோணியார் ஆலயம் அர்ச்சிக்கப்பட்ட 50-ஆம் ஆண்டு நினைவாக கட்டப்பட்டதாகும்.
6. புனித மிக்கேல் அதிதூதர் குருசடி :
புனித அந்தோணியார் ஆலயத்தின் தெற்கே திருச்சிலுவை கல்லூரியின் (Holly cross college) அருகில் புனித மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டு 01-01-2010 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
7. புத்தக நிலையம் :
8. சமுதாயக் கூடம் :
9. புனித அந்தோணியார் கலையரங்கம் :
10. புனித அந்தோணியார் படிப்பகம் (நூலகம்):
11. கிணறும் தண்ணீர் தொட்டியும் :
ராணி மங்கம்மாள் காலத்தில் குருசடி சாலையின் ஓரம் கிணறும் அதனையடுத்து தண்ணீர் தொட்டியும் இருந்தன. இக்கிணற்று நீரைத் தான் அக்காலத்தில் இவ்வூர் மக்கள் அனைவரும் குடிதண்ணீராக பயன்படுத்தி வந்தனர். தற்போதும் இந்த கிணறு நல்ல தண்ணீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.
12. நியாயவிலைக்கடை:
13. கல்லறைத் தோட்டம் :
14. பாலர் பள்ளி :
15. நூற்றாண்டு நுழைவு வாயில் :
16. ஊர் பொதுநலச் சாவடி :
வெளியூரிலிருந்து வரும் நோயாளிகள் தங்கி நலம் பெற அமைக்கப்பட்டது தான் பொதுநலச் சாவடி (சாவடி என்றால் சிறு சத்திரம் எனக் கொள்க).
17. நீரோடை மாத இதழ் :
18. தினசரி சந்தை :
மக்கள் பொருட்களை கொண்டு வந்து வியாபாரம் செய்ய அமைக்கப்பட்டு, தற்போது மணோன்மணி சந்தை என்ற பெயரில் அழைக்கப்பட்டு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
19. சுவாதி மருத்துவமனை :
இவ்வூரின் மையப்பகுதியில் 1989 -இல் Dr P. சுப்பையா சுவாதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பெயரால் சுவாதி மருத்துவமனை என்ற பெயரில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
20. திருச்சிலுவைக் கல்லூரி (Holly Cross college) :
தொடக்க காலத்தில் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பெண்களை கல்லூரிக்கு அனுப்புவதில்லை. ஏனெனில் மாவட்டத்தில் பெண்களுக்கென்று தனியாக கல்லூரிகள் ஒன்றும் இல்லை. இந்த குறையை போக்கும் வண்ணம் அப்போதைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்கள் குமரி மாவட்டத்தில் ஒரு கல்லூரியை அமைக்க பிற மறை மாவட்டங்களிலுள்ள பெண்கள் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் அருட்சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்து, திருச்சி திருச்சிலுவைக் கல்லூரியின் தலைமை அருட்சகோதரி மேரி செசில் அவர்கள் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
அதன்படி அப்போதைய குருசடி பங்குத்தந்தையும் பின்னாளில் வேலூர் ஆயராகவும் இருந்த அருட்தந்தை அந்தோணிமுத்து அவர்கள் ஆலயத்தின் அருகிலேயே நிலம் கல்லூரிக்காக ஒதுக்கிக் கொடுத்தார். மேலும் குருசடி, வட்டக்கரை, சூரங்குடி கிராமங்களில் வாழ்ந்த மக்களிடமிருந்தும் நிலங்களை வாங்கிக் கொடுத்தார். இவ்வாறாக திருச்சிலுவைக் கல்லூரி 1965 -இல் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது திருச்சிலுவைக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
21. புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி
1918 -இல் ஊர் மக்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டு, 1985-86 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளியாகவும், 1888-89 -ஆம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாகவும் உயர்த்தப்பட்டது.
22. திருஇருதய கன்னியர் சபை 29-10-1967 -இல் ஆரம்பிக்கப்பட்டது.
23. தூய தெரசாவின் கார்மல் சபை :
இவ்வாறாக பல தன்னிறைவுத் திட்டங்களையும், நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டு, தனித்தன்மையுடன் விளங்குகிறது குருசடி தலத்திருச்சபை.
குருசடி பங்கின் கிளையாக இருந்து தற்போது தனிப்பங்காக உயர்த்தப்பட்ட ஊர்கள் :
அனந்தன்நகர், கார்மல்நகர், மறவன்குடியிருப்பு, மேலராமன்புதூர், புன்னைநகர், தளவாய்புரம், வடக்குக்கோணம், வட்டக்கரை, வேதநகர்.
1936 -இல் தனிப்பங்காக குருசடி ஆலயம் ஆனது முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Fr ரிச்சர்டு ரொசாரியோ
2. Fr அம்புரோஸ் பெர்னாண்டஸ்
3. Fr D. C ஆன்றனி
4. Fr பெனடிக்ட் J. R அலெக்ஸாண்டர்
5. Fr R. அந்தோணிமுத்து
6. Fr V. சூசைமரியான்
7. Fr M. டயோனிசியுஸ்
8. Fr A. கபிரியேல்
9. Fr S. M மரியதாசன்
10. Fr M. பெஞ்சமின் செபஸ்தியான்
11. Fr A. ஜோசப் ராஜ்
12. Fr S. வின்சென்ட்
13. Fr A. M ஹிலாரி
14. Fr ச. சேகர் மைக்கேல்
15. Fr M. பெஞ்சமின் லடிஸ்லாஸ்
16. Fr W. ஜார்ஜ் வின்சென்ட்
17. Fr முனைவர் L. தார்சியுஸ் ராஜ்
18. Fr பிரான்சிஸ் போர்ஜியோ (தற்போது..)
இவ்வாறாக சிறந்த ஒரு வரலாற்றையும், பழமையையும், பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டங்களையும் அதன் பயனாக தங்களது வாழ்க்கை தரம் உயர்வு பெற்று, பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டிவரும் பங்கு மக்களையும், ஏராளமான இறையழைத்தல்களையும் கொண்டு சிறப்பு பெற்று, தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை பிரான்சிஸ் போர்ஜியோ அவர்களின் வழிகாட்டுதலில் மேன்மேலும் உயர்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது குருசடி புனித அந்தோணியார் தலத்திருச்சபை.
(முனைவர்கள் ஞா. புஷ்பராஜ் - ச. ரெஜி சாம் எழுதிய பதுவைப் புனிதரின் பாதையில் நூற்றாண்டு கண்ட குருசடி - புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு ஆலய வரலாறு எழுதப்பட்டது)