565 புனித சவேரியார் ஆலயம், புன்னைக்காயல்

          

புனித சவேரியார் ஆலயம் 

இடம் : புன்னைக்காயல், 628005

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : தூத்துக்குடி 

மறைவட்டம் : தூத்துக்குடி 

பங்குத்தந்தை : அருள்திரு. பிராங்கிளின் பர்னாந்து 

உதவிப் பங்குத்தந்தை : அருள்திரு. ஷிபாகர் 

குடும்பங்கள் : 2300

அன்பியங்கள் : 76

மண்டலங்கள் : 17

வழிபாட்டு நேரங்கள் :

(தூய இராஜகன்னி மாதா ஆலயம்) ஞாயிறு காலை 05.00 மணிக்கு முதல் திருப்பலி. 

காலை 07.00 மணிக்கு இரண்டாம் திருப்பலி. 

காலை 09.30 மணிக்கு மூன்றாம் திருப்பலி. 

(தூய இராஜகன்னி மாதா ஆலயம்) வாரநாட்களில் காலை 05.15 மணிக்கு முதல் திருப்பலி. 

காலை 06.10 மணிக்கு இரண்டாம் திருப்பலி. 

வியாழன் காலை 06.15 மணிக்கு திருப்பலி. (புனித சவேரியார் ஆலயம்) 

வெள்ளி காலை 06.10 மணிக்கு திருப்பலி (திருஇருதய ஆலயம்) 

மாதத்தின் முதல் வெள்ளி காலை 05.00 மணிக்கு திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் முதல் திருப்பலி. 

ஆறு ஆறுகளைக்கடந்து அமைந்துள்ள புனித தோமையார் ஆலயத்தில் முதல் வெள்ளி காலை 08.00 மணிக்கு மூன்றாம் திருப்பலி. 

திருவிழா : நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றம். டிசம்பர் மாதம் 03 ஆம் தேதி திருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள் :

அருள்பணியாளர்கள்:

1. பேரருள்திரு. ஜான் சொர்ணையா J. S பிஞ்ஞேயிர

2. அருள்திரு. ஜான் சிங்கராயன் J. S லோபோ 

3. அருள்திரு. V. இருதயராஜ் 

4. அருள்திரு. டெஸ்டோனிஸ் அமுதன் 

5. அருள்திரு. ஜான் பென்சன் 

6. அருள்திரு. அருள்திரு. சகாயம் 

7. அருள்திரு. தோ இருதயராஜ் பி. ச

8. அருள்திரு. மரிய ஆன்றோ செல்வம் 

9. அருள்திரு. கிளிஃபோர்டு முறாயிஸ்.

அருள்சகோதரிகள்:

1. அருள்சகோதரி. பேதுரு மரியம்மாள்

2. அருள்சகோதரி. பத்திநாத மேரி

3. அருள்சகோதரி. ஹென்ரீட்டா

4. அருள்சகோதரி. சேக்ரட் ஹார்ட்

5. அருள்சகோதரி. மெஜெல்லா 

6. அருள்சகோதரி. தெயோஃபின் மேரி

7. அருள்சகோதரி. மெற்றில்டா

8. அருள்சகோதரி. தெரஸ் இம்மாக்குலேட் மரி

9. அருள்சகோதரி. அல்காந்த்ரா மேரி

10. அருள்சகோதரி. ஜோசப் ஹென்ரீட்டா மேரி

11. அருள்சகோதரி. எல்சீற்றா

12. அருள்சகோதரி. மோட்சமேரி

13. அருள்சகோதரி. லுட்மில்லா மேரி

14. அருள்சகோதரி. விண்ணரசி

15. அருள்சகோதரி. சந்திரகலா 

16. அருள்சகோதரி. லில்லி பிபிமா

17. அருள்சகோதரி. டில்டா

18. அருள்சகோதரி. ப்ரிட்ஜினீட்டா

19. அருள்சகோதரி. ஷர்மிளா

20. அருள்சகோதரி. ஜோசப்ஃபின் பப்டிஸ்டா

21. அருள்சகோதரி. பிளேஸ்ஸிட்டா

22. அருள்சகோதரி. டின்ஷா

23. அருள்சகோதரி. ஜோஷ்லின்க்

24. அருள்சகோதரி. பெபிஸ்டா

25. அருள்சகோதரி. மரிய ஜெயஸ்டா

26. அருள்சகோதரி. அனிற்றா

27. அருள்சகோதரி ரீட்டா

28. அருள்சகோதரி. மரியா பிரான்சிஸ் சாண்டில்லா

29. அருள்சகோதரி. பாபிஸ்டா

30. அருள்சகோதரி. அருள் சீலி

31. அருள்சகோதரி. ப்ரிட்ஜிட்

32. அருள்சகோதரி. டின்ஷா 

33. அருள்சகோதரி. ரொபான்ஸி

34. அருள்சகோதரி. புனிதவதி

35. அருள்சகோதரி. ஆனந்தி

36. அருள்சகோதரி. அனிதா 

37. அருள்சகோதரி. ரொசாரி ராஜகன்னி 

38. அருள்சகோதரி. ஜூடி கில்ராய்

39. அருள்சகோதரி. ப்ளஸிட்டா

40. அருள்சகோதரி. ஜெயா 

41. அருள்சகோதரி. ஜெபா

42. அருள்சகோதரி. விமல்ஜா

43. அருள்சகோதரி. அனிட்டா

44. அருள்சகோதரி. லூர்தம்மாள்

45. அருள்சகோதரி. நிவேதா ராஜன்.

புனித சவேரியார் பங்கில் உள்ள ஆலயங்கள், சிற்றாலயங்கள், கெபிகள் :

1. புனித சவேரியார் ஆலயம், புன்னைக்காயல் (பங்கு ஆலயம்)  

2. புனித இராஜகன்னி மாதா ஆலயம், புன்னைக்காயல்

3. புனித தோமையார் ஆலயம், புன்னைக்காயல்

4. புனித வேளாங்கண்ணி மாதா ஆலயம் 

5. திருஇருதய கெபி

6. புனித மரிய மதலேனம்மாள் கெபி

7. கடற்கரை சகாய அன்னை சிற்றாலயம்

8. புனித அந்தோனியார் சிற்றாலயம், தெற்குத்தெரு

9. புனித வேளாங்கண்ணி அன்னை கெபி, தெற்குத்தெரு

10. கிறிஸ்தவர்களின் சகாய அன்னை கெபி, நூறுவீடு 

11. புனித தோமையார் கெபி, மீனவர் குடியிருப்பு 

12. புனித மிக்கேல் அதிதூதர் கெபி, பொன்மாணிக்கத் தெரு

13. புனித செபஸ்தியார் கெபி

14. புனித சந்தியாகப்பர் கெபி 

15. மூன்றடுக்கு கெபி, மறக்குடியிருப்பு

16. புனித சூசையப்பர் கெபி, சிம்லக்ஸ். 

வழித்தடம் : தூத்துக்குடி -திருச்செந்தூர் செல்லும் வழித்தடத்தில், வடக்கு ஆத்தூரில் இருந்து 6கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவு தான் புன்னைக்காயல்.

Location Map : https://goo.gl/maps/FCetJtjEvmdoHZr3A

வரலாறு :

தமிழகத்தை அணிசெய்யும் முத்துக்குளித்துறையில் தனிச்சிறப்பு மிக்க ஊர் புன்னைக்காயல். பொதிகை மலையில் உதித்து, மன்னார் கடலில் சங்கமமாகும் தாமிரபரணி ஆற்றினால் இவ்வூருக்குச் சிறப்பு வந்தது. பாண்டிய நாட்டின் பழைய தலைநகரான கொற்கையிலிருந்து உருவான பரத ஊரே புன்னைக்காயல் என்று சுருங்கக் கூறலாம். 

மன்னார் கடலில் சங்கமமாகும் தாமிரபரணி ஆற்றின் கழிமுகத்தில், ஓர் இயற்கை துறைமுகமாக புன்னைக்காயல் விளங்கியதன் காரணமாக, 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பமுதல் இந்தியாவுக்கு வணிக நோக்குடன் வந்த போர்த்துக்கீசியர், புன்னைக்காயலைத் தங்களின் கப்பல் தளமாக்கிக் கொண்டனர். 

பழங்காலத்தில் புன்னைக்காயல் ஊரானது பல்வேறு வகுப்பினருக்கு உறைவிடமாக இருந்தது. இங்கு போர்த்துக்கீசிய உயரதிகாரிகளும், உயர் மற்றும் தாழ்ந்த வகுப்பினரும், அடிமைகளும் வாழ்ந்து வந்ததாக புனித பிரான்சிஸ் சவேரியார் 20.03.1544 -ல் மான்சிலாஸூக்கு எழுதிய மடலில் குறிப்பிடுகின்றார். இந்த ஊரில் கரையர்கள், மறவர், தட்டார் சாதியினரும் குடியிருந்தனர். 

தற்போது உள்ள மீன்வாடியின் வடபுறம் செல்லும் ஆற்றில் தான் படகுகளுக்கான ஏற்றுமதி, இறக்குமதியும் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தின் வழியாக பாய்மரக்கப்பல்களும், படகுகளும் வந்து போனபடியால், அவ்வாற்றின் ஒருகிளையை "கப்பலாறு" என்றும், "படகடி ஆறு" என்றும் மக்கள் இன்றுவரை அழைக்கின்றனர். 

திருமறையின் தோற்றம் :

தமிழகத்தில் குமரிமுனை முதல் இராமேஸ்வரம் தீவு வரை பரந்து கிடக்கும் கடற்கரைப் பகுதியே முத்துக்குளித்துறை என அழைக்கப் படுகிறது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்தே இங்கு முத்து வாணிபம் சிறப்பு பெற்று விளங்கியது. முத்து குளிக்கும் உரிமைபடைத்த மக்களாய் இக்கடற்கரைப் பூமியில் வாழ்ந்து வந்தனர் பரதர் என்னும் பழங்குடி மக்கள். 

வாணிபம் செய்வதற்காக போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா கப்பல் பயணம் மேற்கொண்டு, 1498 ஆம் ஆண்டு மே மாதத்தில் கேரளாவில் உள்ள  கள்ளிக்கோட்டையில் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து போர்ச்சுக்கீசியர் பலரும் வாணிப நோக்குடன் இந்தியா வர ஆரம்பித்தனர். அவர்கள் முத்துக்குளித்துறையை வலம் வரும் காலத்தில் (கி.பி 1520), இங்கு 22 பரத ஊர்கள் பரந்து விரிந்து கிடந்தன. அவற்றில் சிறப்பு மிக்க பெரியதோர் ஊராக விளங்கியது புன்னைக்காயல். 

பரதமக்கள் அனைவரும் 1535 ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியரின் ஆதரவில் திருமறையைத் தழுவினர். காரணம் அவர்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த முத்துக்குளிப்பு உரிமையை, திருவாங்கூர் மன்னனான உதய மார்த்தாண்ட வர்மனின் ஆதரவுடன் முகமதியர்கள் பறித்துக் கொண்டனர். 

அதனால் இரு வகுப்பினருக்கும் இடையே பகைமையும், போரும் மூண்டது. இந்தப் போரில் போர்த்துக்கீசியர்கள் பரதவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, முகமதியர்களை தோற்கடித்து, முத்துக்குளிப்பு உரிமையை மீண்டும் பரத மக்களுக்கே வழங்கி விட்டனர். அதற்கு நன்றியாக பரதவர்கள் அனைவரும் திருமுழுக்கு பெற தீர்மானித்தனர். முதலில் 85 பட்டங்கட்டிகள் 1535 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொச்சி தேவமாதா ஆலயத்திற்கு சென்று திருமுழுக்குப் பெற்றனர். பின்னர் கொச்சியிலிருந்து போர்த்துக்கீசிய கப்பற்படையோடு வந்த ஐந்து குருக்கள், பரத ஊர்களுக்கு தனித்தனியே சென்று ஏறத்தாழ 30,000 பரதர்களுக்கு திருமுழுக்குக் கொடுத்தனர்.

ஞான அதிகாரச் சலுகை:

புதிதாக திருமறையைத் தழுவிய பரத மக்கள் ஆயனில்லாத ஆடுகளாகக் கைவிடப்பட்டு வாழ்ந்து வரும் பரிதாபகரமான நிலையை, கொச்சி பிரான்சிஸ்கன் சபை சந்நியாச மடத்தின் அதிபராக இருந்த அருள்திரு. லொரன்சோ டி கோயஸ் அவர்கள், அன்றைய போர்ச்சுக்கல் அரசர் 3-ம் ஜான் என்பவருக்கு 1536 டிசம்பர் 28 ம் தேதி கடிதமாக எழுதினார்.

அக்காலத்தில் இந்தியா முழுவதும் ஞான அதிகாரம் 3 ம் ஜான் அரசர் அவர்களிடம் இருந்தது. காரணம் வர்த்தக நோக்குடன் போர்த்துக்கீசியர் கீழ்த்திசை நாடுகளுக்கு கடல் கடந்து சென்று குடியேறும் நாடுகளில், கிறிஸ்தவ திருமறையைப் பரப்பி ஆலயங்களை எழுப்பி, மறை மாவட்டங்கள் ஏற்படுத்தி, அவைகளை கண்காணிக்கும் பொறுப்பினைத் திருச்சபையின் தலைவரான திருத்தந்தை அவர்கள் போர்ச்சுக்கல் அரசருக்கு வழங்கியதுடன், மறைமாவட்டங்களிலும்,  ஆலயங்களிலும் பணியாற்றுவதற்கு வேண்டிய ஆயரையும், குருக்களையும் நியமித்து, அவர்கள் மீது ஞான அதிகாரம் செலுத்தும் சலுகையையும் அரசருக்கு அளித்திருந்தார். இந்த ஞான அதிகாரச் சலுகை அல்லது போர்த்துக்கீசிய மொழியில் "பத்ருவாதோ" என அழைக்கப் படுகிறது.

இந்த ஞான அதிகாரச் சலுகையை முதன்முறையாக திருத்தந்தை 5 ம் நிக்கோலஸ் அவர்கள் 'ரொமானுஸ் பெந்திபெக்ஸ்' என்ற பத்திரத்தின் மூலம் 08.01.1455 அன்று 5ம் அல்போன்ஸ் என்ற போர்த்துக்கீசிய மன்னருக்கு வழங்கினார். இம் மன்னரின் காலத்திலிருந்து கீழ்த்திசை நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும் தங்கள் ஞான அதிகாரச் சலுகையை பயன்படுத்தி இவர்கள் மறைப்பரப்பு செய்து வந்தனர். 

இந்த ஞான அதிகாரச் சலுகையின் அடிப்படையில் புதிதாக திருமறையைத் தழுவிய முத்துக்குளித்துறை பரத ஊர்களில் ஆலயம் எழுப்பவும், அங்கு பணியாற்ற குருக்களை அனுப்பவும், போர்த்துக்கீசிய நாட்டு 3 ம் ஜான் மன்னருக்கு கடமை இருந்தது. 

எனவே பரத மக்களின் நிலையை இயேசு சபையின் முதல் அதிபரான புனித இஞ்ஞாசியாருக்கு, மன்னர்  உருக்கமாக ஓர் விண்ணப்பம் வைக்க, புனித பிரான்சிஸ் சவேரியாரையும், சகோதரர் மான்சிலாஸையும் முத்துக்குளித்துறையில் மறைப்பரப்பு பணிக்காக அனுப்பி வைத்தார். 

புன்னைக்காயலில் புனித சவேரியார் :

முத்துக்குளித்துறையில் திருமுழுக்கு பெற்ற மக்களை தொடர்ந்து ஞான வாழ்வில் வழிநடத்திச் செல்ல குருக்கள் எவரும் இப்பகுதியில் தங்கியிருந்து நிரந்தரமாக பணிபுரியவில்லை. இவர்களுக்கு திருமுழுக்கு வழங்கிய குருக்களும், கொச்சிக்கு சென்று விட்டனர். திருமறையைக் குறித்து போதிய அறிவும், அவ்வறிவை ஊட்டும் மறைப்பணியாளர்களும் இல்லாத காரணத்தால் பரதர்கள் பெயரளவிற்கு மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்து வந்தனர். கிறிஸ்தவ வழிபாடுகள் இல்லாது கைவிடப் பட்டவர்கள் போலாயினர். இந்நிலையில் தங்களது பழைய நிலைக்கு சென்று (இந்து சமய) வழிபட்டு வந்தனர். இந்த நிலையை நீக்கும் பணியாளராக முத்துக்குளித்துறைக்கு வந்து சேர்ந்தார் இயேசு சபையைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார். 

புனித சவேரியாரின் பணிகள் :

1542 அக்டோபர் மாதத்தில் புனித சவேரியார் முத்துக்குளித்துறை வந்தார். கடலோரத்தில் சிதறிக் கிடந்த பரத ஊர்களையெல்லாம் அவர் சந்தித்து, மறை போதித்து கிறிஸ்துவில் திடப்படுத்தினார். புன்னைக்காயல் ஊருக்கு அடிக்கடி வந்து பணியாற்றினார். 

21.08.1544 ல் தூத்துக்குடியில் இருந்த சகோதரர் மான்சிலாஸ் -க்கு, புன்னைக்காயலிருந்து புனித சவேரியார் எழுதிய கடிதம் "நான் இங்கு தனியாகவே இருக்கிறேன். எனக்கு இங்கு பிரச்சனையாக இருப்பது மொழி தான். மக்களின் மொழி தெரியாமலே அவர்கள் மத்தியில் பணி செய்து கொண்டிருக்கிறேன். மொழி பெயர்ப்பாளரும் என்னுடன் இல்லை. இருந்தாலும் ரொட்ரீகஸ் ஓரளவுக்கு மொழி பெயர்த்து உதவி செய்து வருகின்றார். முன்னர் பரதர் அந்தோனியோ எனக்கு அந்த வேலையைச் செய்து வந்தார். தற்போது அவர் உடல் நலமின்றி மணப்பாட்டில் உள்ளார். எனது மொழி மக்களுக்கும், அவர்கள் மொழி எனக்கும் தெரியாத நிலையில், மறைபோதனை செய்ய வேண்டிய நான், எத்தகைய பயனுள்ள பணியை இங்கு நான் ஆற்ற முடியும் என்பதை நீரே அறிந்து கொள்ள முடியும். எனது ஒரே மொழிப் புலமை இப்போது கிரியைகள் (சைகை) காட்டுவதே. ஆனால் இங்கு எனக்கு வேலை இல்லாமல் இல்லை. சிறு குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குகிறேன். அதற்கு மொழிபெயர்ப்பாளர் தேவையில்லை. பசியோடும், ஆடையின்றி வருவோருக்கும் உதவி செய்கிறேன். இவ்விரு சிறந்த பணிகளையும் செய்வதற்கு எனக்கு நேரம் போதுமானதாக இருக்கிறது." எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். 

தொடர்ந்து சகோதரர் மான்சிலாஸ் அவர்களை புன்னைக்காயலிலே தங்கியிருக்கச் செய்தார். மேலும் புன்னைக்காயல் மக்கள் மத்தியில் புனித சவேரியார் பல நாட்கள் பணிபுரிந்து செபங்களை கற்றுக் கொடுத்து, இம் மக்களின் ஞான வளர்ச்சியில் கருத்தாய் இருந்தார். 

அக்காலத்தில் திருவாங்கூர் அரசர் உண்ணிகேரளத் திருவடியின் ஆட்சி புன்னைக்காயல் வரை பரவியிருந்தது. புன்னைக்காயல் தான் இறுதி எல்லை. இதனை அடுத்த பகுதியில் கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாளின் அதிகாரம் ஆரம்பிக்கின்றது. எல்லையோரத்தில் இருந்த காரணத்தால் சில வேளைகளில் திருவாங்கூர் அரசனின் அதிகாரிகள், புன்னைக்காயல் மக்களுக்கு பிற மாநிலங்களில் இருந்து அரிசி போன்ற உணவுப் பொருட்கள் வந்து சேருவதைக் காரணமின்றி தடை செய்து வந்தனர். அதனால் வேதனையுற்ற சவேரியார், புன்னைக்காயல் மக்களுக்கு ஏற்படும் இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வழி தேடி, இளவரசனுக்கு மன்றாடி கடிதம் அனுப்பினார். 

புனித சவேரியாரின் புதுமைகள் :

புன்னைக்காயலில் இறந்த இளைஞனை அவனது பெற்றோரின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி உயிர் கொடுத்தார் புனித சவேரியார். 

புனித சவேரியாருக்கு புனிதர் பட்டம் கொடுக்க 29.07.1616 ல் கொச்சியில் நடந்த விசாரணையில் பிரான்சிஸ்குஸ் டி அகுயர் என்ற போர்த்துக்கீசிய வியாபாரி இதனை சாட்சியம் கூறினார். 

புனித சவேரியார் கழுத்தில் அணிந்திருந்த செபமாலை மூலமாக பலர் நலம் பெற்றனர். பலர் அவரிடம் ஜெபிக்க கேட்டு அற்புத சுகம் பெற்றனர். இவ்வாறு புனித சவேரியார் புன்னைக்காயலில் தமது அரும்பெரும் பணியை செய்து விட்டு 1549 ல் கோவா புறப்பட்டுச் சென்றார்.

முதல் ஆலயம் :

புனித சவேரியாரின் வருகைக்கு முன்னரே புன்னைக்காயலில் ஒரு குடிசை ஆலயம் இருந்தது. இந்த முதல் ஆலயத்தை எழுப்பியவர் புன்னைக்காயல் மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கியவராகிய கொச்சி பங்குத்தந்தை அருள்திரு. பேதுரு கொன்சால்வஸ் என்று, 1623 ல் கொச்சி ஆயர் மேதகு செபஸ்தியான் தெ சான்பேதுரு அவர்களின் கடிதம் வழியாக அறியப்படுகிறது. 

பின்னர் 1544 ல் புனித சவேரியாரின் முயற்சியால் குடிசை ஆலயம் அமைக்கப் பட்டது. 1551 ல் புன்னைக்காயல் மீது மதுரை நாயக்கரின் வடுக படையெடுப்பின் போது இந்த ஆலயம் அழிக்கப் பட்டது. 

பின்னர் புன்னைக்காயல் மக்களிடமிருந்து நிதி திரட்டி, அருள்தந்தை. ஹென்றி ஹென்றிக்ஸ் அடிகள் ஒரு அழகிய ஆலயத்தை 08.09.1552 ல் எழுப்பி, இறையன்னையின் திருப்பிறப்புக்கு அர்ப்பணிக்கப் பட்டது (புனித இராஜகன்னி மாதா). 1553 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இசுலாமியத் தாக்குதலின் போது இந்த ஆலயமும் அழிக்கப் பட்டது. அதன் பிறகு மீண்டும் புதிய ஆலயம் கட்டப் பட்டது. அருள்திரு. கஸ்பார் தெ அராஞ்சோ என்னும் புதிய குரு 08.09.1580 அன்று தமது முதல் திருப்பலி நிறைவேற்றினார். முத்துக்குளித்துறையின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் இந்த திருப்பலியில் பங்கேற்றனர். 

முத்துக்குளித்துறையில் புன்னைக்காயல் ஊரில் இருந்த புனித இராஜகன்னி மாதா ஆலயம் மட்டும் இயேசு சபையாருக்கு சொந்தமானதாக இருந்தது. மற்ற ஊர்களில் இருந்த ஆலயங்கள் கொச்சி ஆயரின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். 

முத்துக்குளித்துறையில் கற்கோவில் கட்ட மதுரை நாயக்கர் அனுமதி வழங்கிய பின், புன்னைக்காயல் இராஜகன்னி மாதா ஆலயம் கற்கோவிலாக மாற்றப்பட்டு, மூன்று பகுதிகளைக் கொண்ட சிலுவை ஆலயமாக 1599 ல் கட்டி முடிக்கப்பட்டது. 

1685 ல் டச்சுக்காரர்களால் இவ்வாலயம் வணிகக் கிடங்காக மாற்றப்பட்ட பின்னர் இங்கு வழிபாடுகள் நடைபெறவில்லை. 

புனித சவேரியார் ஆலயம் :

1662 ஆம் ஆண்டு புனித சவேரியாருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அதன் நினைவாக 1663 -ல் ஊருக்கு வெளியே தென்புறத்தில் புனித சவேரியார் ஆலயம் அமைக்கப் பட்டது. பின்னர் இதுவே பங்கு ஆலயமாக ஆனது. 1685 ல் டச்சுக்காரர்கள் இராஜகன்னி மாதா ஆலயத்தை வணிகக் கிடங்காக மாற்றியபின், அந்த ஆலயத்தில் இருந்த புனித இராஜகன்னி மாதா சுரூபம், புனித சவேரியார் ஆலயத்திற்கு மாற்றப்பட்டது. 

காலப்போக்கில் பழுதடைந்த புனித சவேரியார் ஆலயத்தை அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. லாம்பர்ட் மிராண்டா அடிகள் (1964-1967) மக்களின் நன்கொடைகளைக் கொண்டு 1964 ஆம் ஆண்டில் புதுப்பித்தார். இவ்வாலயம் மீண்டும் பழுதுபடவே, பயன்படுத்துவது நின்று போனது. 

சுனாமி பேரலைக்கு பின்னர் 2005 -ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்த திருத்தந்தையின் தூதர், மேதகு பேதுரு லோப்பஸ் கின்றானா அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் புனித சவேரியாரோடு தொடர்புடைய ஆலயங்களை பார்வையிட்டார். அவ்வேளையில் புன்னைக்காயல் வந்த அவர், பழுதுபட்ட பழைய ஆலயத்தை இடித்து விட்டு புதிதாக கட்டுமாறு ஆலோசனைக் கூறி, அதற்கு தேவையான நிதிகளையும் வழங்கினார். அதன்பயனாக தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டு 29.09.2007 அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்:

1844 ஆம் ஆண்டுவாக்கில் புன்னைக்காயலில் ஞான அதிகாரக் குழப்பம் வளர்ந்தது. இயேசு சபை பங்கு, கோவா மிஷன் பங்கு என ஊர் இரண்டாக பிளவு பட்டது. ஆகவே கோவா மிஷனைச் சேர்ந்த மக்கள் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தை 1844 ஆம் ஆண்டளவில் கட்டி, கோவா மிஷன் குருக்களைக் கொண்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. 

பின்னர் இவ்வாலயம் நெருப்பினால் அழிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டில் அருள்திரு. மனுவேல் கொய்லோ அடிகளார் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தை மீண்டும் கட்டினார். காலப்போக்கில் பழுதுற்ற ஆலயத்தை 1884 அம் ஆண்டில் அவரே புதுப்பித்தார். 

1886 ஆம் ஆண்டு இவ்வாலயம் கோவா மிஷனைச் சார்ந்த மயிலாப்பூர் மறைமாவட்டத்துடன் இணைக்கப் பட்டது. புனித சவேரியார் ஆலயம் இயேசு சபை குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்துடன் இருந்தது. 

1887 ல் மிக்கேல் அதிதூதர் பங்கோடு பழையகாயல், முக்காணி, சேர்ந்தமங்கலம், குருவித்துறை ஆகிய ஊர்கள் இணைந்திருந்தன. இந்த கோவா மிஷன் பங்கு மக்கள் வழங்கிய நன்கொடைகளைக் கொண்டு அருள்திரு. J. M. பிண்ட்டோ அடிகள் 1906 ல் ஆலயத்தை பழுது நீக்கி, விரிவு படுத்தினார். கோவா மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பள்ளிக் கூடத்தையும், குருக்கள் இல்லத்தையும் கட்டினார். 07.10.1930 அன்று புனித மிக்கேல் அதிதூதர் பங்கு தூத்துக்குடி மறை மாவட்டத்துடன் இணைக்கப் பட்டது. 

பின்னர் மிக்கேல் அதிதூதர் பங்கு புனித வளனார் ஆண்கள் நடுநிலைப் பள்ளியாக பயன்படுத்தப் பட்டது. காலப்போக்கில் இது மிகவும் பழுதடைந்து போன காரணத்தால் இடிக்கப்பட்டு, அவ்விடத்தில் புனித மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டது.

புனித மரிய மதலேனாள் ஆலயம் :

ஊருக்கு வடக்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் 1850 ஆம் ஆண்டில் இயேசு சபையாரால் புனித மரிய மதலேனாள் ஆலயம் எழுப்பப்பட்டு பட்டது. நாளடைவில் பழுதடைந்த இவ்வாலயத்தை அருள்திரு. D. வில்வராயர் அடிகள் 1933 ஆம் ஆண்டில் புதுப்பித்தார். நாளடைவில் மீண்டும் பழுதடைந்த இவ்வாலயம் இருந்த இடத்தில் மக்கள் புனித மரிய மதலேனாள் பெயரில் கெபி ஒன்றைக் கட்டினர். தற்போது அதே இடத்தில் சிறு ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ஊரின் வளர்ச்சிக்கு ஏற்ப புன்னைக்காயல் ஊரில் பல ஆலயங்களும், கெபிகளும் கட்டப்பட்டு, மக்களின் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. 

புனித சவேரியார் திருவிழா :

புனித சவேரியார் திருவிழா பங்குத் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப் படுகிறது. புனித சவேரியார் முத்துக்குளித்துறையில் பணிபுரிந்த போது சிறிய கப்பல்களிலும், படகுகளிலும், தோணிகளிலும் பயணம் செய்ததாக அவரது கடிதங்கள் வழியாக அறியப்படுகிறது. ஆகவே அவரது கடற்பயணங்களை நினைவுகூரும் வண்ணமாக, புன்னைக்காயல் மக்கள் புனித சவேரியார் தேரை கப்பல் வடிவில் அமைத்துள்ளனர்.

முதல் மருத்துவமனை:

தென்னிந்தியாவிலேயே முதல் மருத்துவமனையை உருவாக்கிய பேரும் புகழும் புன்னைக்காயலையே சாரும். போர்த்துக்கீசியரின் ஆதரவில் 16 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் இந்தியாவின் தென்பகுதியில் கிறிஸ்தவ திருமறையை போதித்து வந்த, இயேசு சபையினரின் அரிய முயற்சியால் பல அற நிலையங்களும், அறிவாலயங்களும் இந்தியாவில் உருவாகின. இருப்பினும் அக்காலத்தில் இந்தியா முழுவதுமே இரண்டு  பெரிய மருத்துவமனைகளே இயங்கி வந்தன. ஒன்று சால்செட் என்ற இடத்திலும், மற்றொன்று புன்னைக்காயலிலும் நிறுவப் பட்டிருந்தன. 

புனித சவேரியாருக்குப் பிறகு முத்துக்குளித்துறையில் இயேசு சபை தலைமைக் குருவாக பணியாற்றி வந்த அருள்பணி. ஹென்றி என்றிக்ஸ் அவர்கள், 1550 ஆம் ஆண்டில் புன்னைக்காயலில் இம்மருத்துவமனையை நிறுவினார். இந்த மருத்துவமனையில் சாதி சமய பேதமின்றி நோயுற்ற அனைத்து மக்களும் அன்புடன் ஏற்றுக் கொள்ளப் பட்டனர். மேலும் இலங்கை செல்லும் வழியில் பிணியுற்ற போர்ச்சுக்கீசியர்களும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

மேலும் இந்த மருத்துவமனையின் சார்பில் அனைத்து சமய மக்களுக்கும் மருத்துவம், உணவு, உடையும் இலவசமாக கொடுக்கப் பட்டு வந்தது. ஆகவே ஏராளமான நிதியுதவி தேவைப்பட்டது. எனவே முத்துக்குளிப்பு காலத்தில் புன்னைக்காயல் மக்கள், தங்கள் முத்துக்குளிப்பு வருமானத்தில் ஒருபகுதியை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கி வந்தனர். முத்துக்குளிப்பு இல்லாத காலங்களிலும் மக்கள் தாராளமாக நன்கொடை கொடுத்தனர். அதுமட்டுமின்றி மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்திலிருந்து ஆண்டுதோறும் காணிக்கையில் ஒரு பகுதி புன்னைக்காயல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு வந்தது.

போர்த்துக்கீசியர் மருத்துவமனை :

முத்துக்குளித்துறையின் பாதுகாப்புக்கென போர்த்துக்கீசிய மன்னன் புன்னைக்காயலில் 50 அல்லது 60 போர்வீரர்களைக் கொண்ட படை ஒன்றை நிரந்தரமாக வைத்திருந்தான். பிணியுற்ற வீரர்கள் ஆரம்பத்தில் புன்னைக்காயலின் (முதல்) பொது மரருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் அவர்களுக்கென தனி மருத்துவமனை ஒன்றை 1551 ஆம் ஆண்டு, ஜான் டி தேயுஸ் என்ற போர்த்துக்கீசிய துறவியின் உதவியுடன் எழுப்பினார். 

பொதுமக்களுக்காகவும் போர்த்துக்கீசியர்களுக்காகவும் நிறுவப்பட்ட இவ்விரு மருத்துவமனைகளும் 1553 -ஆம் ஆண்டு வடுகர்கள் படையெடுப்பில் நெருப்புக்கு இரையாகி, முற்றிலும் அழிந்து போனது.

முதல் தமிழ் கல்லூரி :

புன்னைக்காயலில் தமிழ் கல்லூரி அமைக்க போர்த்துக்கல் மன்னர் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, இங்குள்ள மக்கள் ஆரம்பத்தில் 3000 பணம் என்னும் தொகையை இயேசு சபையினரிடம் கொடுத்தனர். அக்காலத்தில் முத்துக்குளித்துறைக்கும் மன்னார் தீவுக்கும் பொது தலைநகராக விளங்கிய புன்னைக்காயலில் கட்டப்பட்டிருந்த இயேசுசபையாரின் தலைமை இல்லம் அகலமாகவும் வசதியாகவும் இருந்ததால், முதல் தமிழ் கல்லூரியானது 1567 ஆம் ஆண்டில் இவ்வில்லத்தில் தொடங்கப் பட்டது. சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் அவர்களே இக்கல்லூரியின் முதல்வராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார். அவருக்கு துணையாக இருந்து தமிழ் பாடங்களை பயிற்றுவித்தவர் பேதுரு லூயிஸ் என்ற தமிழராவார். 

புன்னைக்காயலில் தோன்றிய முதல் தமிழ் கல்லூரியானது, நிதி பற்றாக்குறையினால் நீடித்து இயங்க முடியவில்லை. 1580 ஆம் ஆண்டில் இயேசு சபையினரின் தலைமை இல்லம் புன்னைக்காயலிருந்து, தூத்துக்குடி -க்கு மாற்றப்பட்ட பின்னர் இத்தமிழ் கல்லூரியும் முடிவுக்கு வந்தது.

முதல் தமிழ் அச்சகம் :

தமிழ் மொழியில் முதல் அச்சகம் தோன்றுவதற்கு இயேசுசபை துறவிகளே காரணமாவர். அவர்களின் அரிய முயற்சியால் 1578 ஆம் ஆண்டு கேரளத்திலுள்ள தமிழ் அச்சகங்களுக்கு முன்னோடியாக அமைந்தவர்கள், அக்காலத்தில் முத்துக்குளித்துறையில் இயேசுசபை தலைவராகப் பணியாற்றிய சுவாமி என்றி என்றிக்கஸ் என்பவரும், 1575 ல் இயேசுசபை பார்வையாளராக இந்தியாவுக்கு வந்த சுவாமி அலெக்சாண்டர் வல்லிஞானோ என்பவரும் ஆவர். 

கேரளாவின் கொல்லத்தில் தமிழ் அச்சகம் உருவான 1578 ஆம் ஆண்டிலேயே புன்னைக்காயலிலும், சுவாமி ஜான் பாரியா அவர்களால் தமிழ் அச்சகம் உருவானது. 1581 ல் சுவாமி ஜான் பாரியா இறந்து போனதாலும், போதிய தமிழ் மொழியறிவும் அச்சுத்திறமையும் மிக்க நிபுணர்களின் குறைபாட்டினாலும், அடிக்கடி புன்னைக்காயலில் ஏற்பட்ட வடுகர் படையெடுப்பாலும்,  1586 ஆம் ஆண்டுக்குப்பின் இந்த முதல் தமிழ் அச்சகம் மறைந்து விட்டது. 

முதல் தமிழ் நூல்கள் :

தமிழ் மொழியில் முதன் முதலாக அச்சு வடிவம் பெற்றவை கிறிஸ்தவ மறையைச் சார்ந்த நூல்களேயாகும். கொல்லம், புன்னைக்காயல் ஆகிய இடங்களில் இயங்கி வந்த தமிழ் அச்சகங்களில் பதிவான பல கிறிஸ்தவ நூல்களில் இதுவரை நமக்குக் கிடைத்திருப்பது ஒரு சில நூல்களின் பிரதிகளேயாகும். அவைகள் "தம்பிரான் வணக்கம்", "கிரீசித்தியானி வணக்கம்", "பாவசங்கீர்த்தனக் கையேடு" "அடியார் வரலாறு" ஆகியனவாகும்.  இவற்றில் பாவசங்கீர்த்தனக் கையேடு மற்றும் அடியார் வரலாறு ஆகிய இரண்டும் புன்னைக்காயல் தமிழ் அச்சகத்தில் அச்சிடப்பட்டன. 

வேதியர் பள்ளி :

சுவாமி என்றி என்றிக்கஸ் அவர்களால் 1550 ஆம் ஆண்டில் புன்னைக்காயலில் வேதியர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேதியர் பயிற்சி பள்ளியில் பயின்ற வேதிய மாணவர்கள் பலர் இப்பகுதியில் கிறிஸ்தவத் திருமறை வளர்ந்து முன்னேறுவதற்குப் பல வழிகளிலும் உதவி வந்தனர். அவர்களில் சிலர் செபமாலை, செபம், தீர்த்தம் இவைகளைக் கொண்டு நோய்களை அற்புதமாகக் குணமாக்கினர். நிதி பற்றாக்குறையினாலும், படையெடுப்புகளாலும் பாதிக்கப்பட்ட இப்பள்ளி 1552 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 

குருமடம் :

முத்துக்குளித்துறையிலும் பிற பகுதியிலும் பணியாற்ற சுதேச குருக்களை உருவாக்கும் எண்ணத்துடன் இயேசுசபையினரால் புன்னைக்காயலில் 1550 ஆம் ஆண்டில் இளங்குருமடம் ஒன்று சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இதுவே தமிழகத்தின் முதல் குருமடமாகும். ஆனால் வடுகர் படையெடுப்பின் காரணமாக 1552 ஆம் ஆண்டில் இது அழிவுற்று சிதைந்து போனது. 1575 ஆம் ஆண்டில் மீண்டும் துவங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, 1579 ஆம் ஆண்டில் குருமடம் மீண்டும் துவக்கப் பட்டது. ஆனால் 1580 ஆம் ஆண்டில் இயேசு சபையின் தலைமை இல்லம் புன்னைக்காயலில் இருந்து தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட போது, குருமடமும் தூத்துக்குடிக்கு சென்றது.

பங்கில் உள்ள கல்விக்கூடங்கள் :

1. புனித ஜோசப் ஆரம்பப் பள்ளி

2. புனித மரியன்னை நடுநிலைப்பள்ளி

3. புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி

4. புனித சவேரியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

அருள்சகோதரிகள் இல்லங்கள் :

1. வியாகுல மாதா சபை

2. புனித அன்னாள் சபை.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. பாலர் சபை

2. நற்கருணை வீரர் சபை

3. அமலோற்பவ மாதா சபையினர்

4. திருக்குடும்ப சபை

5. மரியாயின் சேனை

6. மாதா மைந்தர்கள் 

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. புனித அசிசியார் சபை

9. நற்செய்தி பணிக்குழு

10. புனித வளன் பஜனைக்குழு. 

16 ஆம் நூற்றாண்டில் புன்னைக்காயலில் பணியாற்றிய அருட்பணியாளர்கள்:

1. அருள்திரு. பிரான்சிஸ் மான்சிலாஸ் (1542-1546)

2. அருள்திரு. அந்தோணி கிரிமினாலி (1546-1549)

3. அருள்திரு. ஹென்றி ஹென்றிக்கஸ் (1546-1600)

4. அருள்திரு. புவுல் தெ வால்லே (1552)

5. அருள்திரு. தியாகு சோவரால் (1556)

6. அருள்திரு. பிரான்சிஸ் துராம் (1556)

7. அருள்திரு. இர்மாம் பாயரோஸ் (1556)

8. அருள்திரு. சுவாம் தெ மிஸ்கித்த (1560)

9. அருள்திரு. சுவாம் தெ ஃபாரியா (1578)

17, 18 -ம் நூற்றாண்டில் பணியாற்றிய அருட்பணியாளர்கள் :

1. அருள்திரு. அய்ரெஸ் தெ சா (1602)

அருள்திரு. அவ்ரேலியா மான்சியுஸ் (1603)

3. அருள்திரு. யுவான் மரிய கிரேக்கோ (1604)

4. அருள்திரு. தோமினிக் தெ செக்குவேரா (1628-1630)

4. அருள்திரு. எம்மானுவேல் தெ சில்வா (1705-1708)

5. அருள்திரு. யூரம் தெ சில்வா (1707)

6. அருள்திரு. இஞ்ஞாசி சேவியர் (1709)

7. அருள்திரு. யோவான் அந்த்தூனெஸ் (1713)

8. அருள்திரு. செராஃபின் த கோஸ்தா (1729)

9. அருள்திரு. இஞ்ஞாசி கர்தோசா (1730-1734)

10. அருள்திரு. பிரான்சிஸ் ஃப்ளேகர் (1739)

11. அருள்திரு. எம்மானுவேல் தோஸ் ரையிஸ் (1734-1742)

12. அருள்திரு. பிரான்சிஸ் வைஸ் (1742)

13. அருள்திரு. பேதுரு கொர்ரேயா (1752)

இதன்பின் புதிய மதுரை மறைப் பணித்தளம் நிறுவப்படும் வரை, இயேசு சபை குருக்கள் எவரும் முத்துக்குளித்துறையிலோ, புன்னைக்காயலிலோ பணியாற்றவில்லை. கத்தனார் குருக்களும் கோவா குருக்களும் பணியாற்றி வந்தனர். ஆனால் அவர்கள் பணியாற்றிய பட்டியல் கிடைக்கவில்லை.

1.அருள்திரு. பங்கார் (1923-1925)

2. அருள்திரு. B. S. சூசைநாதர் (1925-1931)

3. அருள்திரு. மஸ்கரனாஸ் (1931-1933)

4. அருள்திரு. T. வில்வராயர் (1933-1939)

5. அருள்திரு. A. M. காகு (1939-1943)

6. அருள்திரு. பெனடிக்ட் பர்னாந்து (1943-1950)

7. அருள்திரு. S. அந்தோணி (1950-1952)

8. அருள்திரு. ஸ்டீபன் தாஸ் (1952-1956)

9. அருள்திரு. L. X. பர்னாந்து (1956-1959)

10. அருள்திரு. ரொசாரி கொரைரா (1959-1961)

11. அருள்திரு. J. V. பூபாலராயர் (1961-1964)

12. அருள்திரு. லாம்பர்ட் மிராண்டா (1964-1967)

13. அருள்திரு. ரிச்சர்ட் ரொட்ரிகோ (1967-1969)

14. அருள்திரு. மெதோடியஸ் (1969-1970)

15. அருள்திரு. கருணாகரன் கோமஸ் (1970-1974)

16. அருள்திரு. ஹெர்மஸ் மொடுதகம் (1974-1978)

17. அருள்திரு. S. ராஜா போஸ் (1978-1984)

18. அருள்திரு. பவுல்ராபின்ஸ்டன் ராஜ் (1984-1985)

19. அருள்திரு. பங்கிராஸ் பர்னாந்து (1985-1990)

20. அருள்திரு. செபஸ்தியான் பர்னாந்து (1990-1993)

21. அருள்திரு. ஆன்றனி சுரேஷ் பர்னாந்து (1993-1998)

22. அருள்திரு. ஜோசப் மஸ்கரனாஸ் (1998-2001)

23. அருள்திரு. M. J. இருதயராஜ் (2001-2004)

24. அருள்திரு. புரோமில்டன் (2004-2006)

25. அருள்திரு. ராபின்ஸ்டன் ராஜ் (2006-2007)

26. அருள்திரு. மரிய ஜான் (2007-2011)

27. அருள்திரு. ஜான் செல்வம் (2011-2014)

28. அருள்திரு. வில்லியம் சந்தானம் (2014-2015)

29. அருள்திரு. ஜெயகர் (2015-2016)

30. அருள்திரு. கிஷோக் (2016 -2020)

31. அருள்திரு. பிராங்கிளின் பர்னாந்து (2020 முதல் தற்போது....)

ஆலய வரலாறு எழுத ஆதாரமாக இருந்த நூல்கள்:

அருள்திரு. வெனான்சியுஸ் அடிகள் எழுதிய புகழ் வென்ற புன்னைக்காயல் மற்றும் அருள்திரு. அமுதன் அடிகள் எழுதிய வரலாற்றில் புன்னைக்காயல் ஆகிய நூல்கள்.    

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு உறுப்பினர்.