501 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், கோத்தகிரி

           
  

தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : கோத்தகிரி

மாவட்டம் : நீலகிரி
மறைமாவட்டம் : உதகை (ஊட்டி)
மறைவட்டம் : குன்னூர்.

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:
1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஒரசோலை
2. புனித சகாய மாதா ஆலயம், ரைபிள் ரேஞ்ச்.

பங்குத்தந்தை : அருட்பணி. ஞானதாஸ்
உதவிப் பங்குத்தந்தை : அருட்பணி. லியோ சேவியர்
பள்ளி தலைமை ஆசிரியர் : அருட்பணி. K.ஜெயக்குமார்

குடும்பங்கள் : 600
அன்பியங்கள் : 34

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 07.00 மணிக்கும், காலை 09.00 மணிக்கும் திருப்பலி. தொடர்ந்து நற்கருணை ஆராதனை

வாரநாட்களில் காலை 07.00 மணிக்கு திருப்பலி. தொடர்ந்து நற்கருணை ஆராதனை

செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணிக்கு செபமாலை, புனித அந்தோணியார் நவநாள் செபம், தொடர்ந்து திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு செபமாலை, இறை இரக்கத்தின் நவநாள் செபம், திருப்பலி.

சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு செபமாலை, புனித ஆரோக்கிய அன்னையின் நவநாள் செபம், திருப்பலி.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 11 -ஆம் தேதி புனித லூர்து அன்னை கெபியில் மாலை 05.00 மணிக்கு செபமாலையைத் தொடர்ந்து, திருப்பலி, அன்னையின் தேர்பவனி.

திருவிழா : 

செப்டம்பர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு, ஒன்பது நாட்களுக்கு புனித ஆரோக்கிய அன்னையின் நவநாள் நடைபெறும்.

நவநாள் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை: ஆடம்பர நற்கருணை பவனி.

செப்டம்பர் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை திருத்தலப் பெருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:
1. அருட்பணி. E. ஜாண் வில்லியம், SDB
2. அருட்பணி. P. கிறிஸ்டோபர், SDB
3. அருட்பணி. S. ஜோசப்பிரபு, Capuchin
4. அருட்பணி. R. சார்லஸ் பாபு, Ooty diocese
5. அருட்பணி. J. ஸ்டீபன், Salvatorians

அருட்சகோதரிகள்:
1. Sr. ரோஸ்மேரி, IHM
2. Sr. மேரி ஆக்னஸ், IHM
3. Sr. சோபிதா, CSST
4. Sr. சாந்த மரியா ஷீனோ, Canossian
5. Sr. பிரிஸ்கா மைக்கேல், Teaching sisters of the Holy cross
6. Sr. செல்வமேரி, Franciscan sisters of the Immaculate Heart of Mary
7. Dr. Sr. பிளான்சி ஆன்சிந்தா, ரொசாரியோ, Canossian
8. Sr. ரெஜினா மேரி, CSST
9. Sr. மேரி லில்லி ரோஸ்லின், FMM
10. Sr. இளையராணி ஷீனா பிரான்சிஸ், FMM
11. Sr. மரிய அனிதா, Franciscan sisters of St. Thomas.
12. Sr. எலிசபெத் மரியாள், FMM
13. Sr. அனுஷ்யா மேரி, SM.

குருமட மாணவர்கள்:
1. Bro. டிக்சன் ஜான் ரொசாரியோ
2. Bro. நிர்மல் சில்வெஸ்டர்.

வழித்தடம் :
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இருந்து ஆலய தரிசனம்.

Location map : https://maps.google.com/?cid=352760735017975810

திருத்தல வரலாறு :

புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வரலாறு ஒருசில வருடங்களைத் தாங்கி நிற்கும் குறுகியகால வரலாறு அல்ல..! மாறாக பல நூற்றாண்டுகளை வென்று நிற்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்பதே கோத்தகிரி மக்களுக்கு பெருமையையும் முழு நிறைவையும் தருகிறது.

கி.பி 16 ஆம் நூற்றாண்டின் தொடக்ககட்டத்தில் (1603-1619) சேசு சபை மறைப்பணியாளர்களால், கிறிஸ்தவம் என்னும் அருள் வார்த்தை நீலமலைப் பகுதிக்குள் அடியெடுத்து வைத்த பொற்காலம் எனலாம்.

1619-1637 இக்காலகட்டத்தில் மதுரை மண்ணிலும் மறைப்பணி மலர்ந்த காலம் என்பதனையும் மறக்கலாகாது.

1773-1886 காலகட்டம், உலகையே ஊடுருவிச் செல்லும் கிறிஸ்துவின் அன்பை போதிக்கும் கிறிஸ்தவம், பிரெஞ்சுக்காரர்களால் நம் தமிழ்நாட்டுடன் ஒட்டிப்பிறந்த கடற்கரை காவியமாம் பாண்டிச்சேரிக்கு ஊடுருவிய காலமாகும். இதன் விளைவாக தமிழ்நாட்டிலும் கிறிஸ்தவம் விதைக்கப்பெற்று அனைவரின் உள்ளத்திலும் இறைபக்தி என்னும் பயிர் செழித்து வளர ஆரம்பித்தது.

இதனால் இயற்கையை வணங்கிய இதயங்கள் இறைவனின் அன்பில் பிணைக்கப் பட்டன. தெளிந்த இறைவார்த்தைகள் மக்கள் மனங்களில் ஆழமாக ஊடுருவின. கிறிஸ்துவின் சாட்சியாக புனித அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ) போன்று ஆர்வம் மிக்க இறைபக்தி மிகுந்த சேசுசபை குருக்கள் சத்தியமங்கலம் பகுதியில் இறைப்பணியை மேற்கொண்டு வந்தனர்.

கி.பி 1776 ஆம் ஆண்டில் திருத்தந்தை 13 ஆம் கிளமென்ட் பணிக்காலத்தில் MEP சபை குருக்கள் மேற்கொண்ட முயற்சியால் பாண்டிச்சேரி கிறிஸ்தவத்தின் தலைமையகமாக ஒளிர்ந்தது.

1836 ல் பாண்டிச்சேரியிலிருந்து அருட்பணி. பாக்ரோ (Fr. Pacreau, அருட்பணி. கூஸ்ட் (Fr. Ghost) ஆகியோர் கோவையிலுள்ள கருமத்தாம்பட்டியில் தங்கி தங்களது பணியை ஆரம்பித்தனர். இவர்களை தொடர்ந்து அருட்பணி. பிகோட் போக்ளேயர் (Fr. Bigot Beauclair), அருட்பணி. மிட்ரால் (Fr. Metral) ஆகியோரும் செயல்பட்டு வந்தனர்.

இவர்கள் கோவை மண்டலத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய கிளைப் பங்குகளைக் கொண்டு அருட்பணி. பெக்குவின் தலைமையில் 1846 ஆம் ஆண்டில் செயல்படத் துவங்கியது. இவற்றிற்கு உதகைப்பங்கு தலைமைப் பங்காக விளங்கியது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு முதல் முதன்மைப் பணியாளராகச் செயல்பட்ட பேரருட்பணி. மாரியோன் தி பிரசியாக் (முன்ளார் பேராயர்) (Msgr. Marion de Bresillac) அவர்கள் கோவை மற்றும் நீலகிரி மண்டலங்களை பார்வையிட்டார்.

அருட்பணி. போன்ஷியோன் அவர்கள் நீலகிரியின் தலைமையாக 1849 ல் பணியமர்த்தப் பட்டார். இவரது அருஞ்செயல்கள் கோத்தகிரிக்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கியது. 1850 ஜனவரி மாதம் 24 ம் தேதி பேராயர். மாரியோன் டி பிரசியாக் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கோத்தகிரி மக்களின் இறைப்பக்தியைக் குறித்தும், கத்தோலிக்க குடும்பங்களின் எண்ணிக்கை குறித்தும் இப்பகுதியில் ஏற்கனவே சிற்றாலயம் இருந்ததால் ஆலயங்கள் அமைப்பதன் தேவையைக் குறித்தும் எழுதினார்.

இதன் பயனாக இரண்டாவது சுவிட்சர்லாந்து என்று போற்றப்படும் கோத்தகிரியில் ஆலயம் எழுப்ப தீர்மானிக்கப்பட்டு 1867 ஆம் ஆண்டில் திரு. ரீமன் (Mr. Redmond) என்பவரது நிலத்தில் சகாய அன்னைக்கு ஒரு சிறு ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலயம் மக்களின் வற்றாத இறைபக்திக்கு வடிகாலாகத் திகழ்ந்தது.

மக்களின் பக்திக்கு பரிசாக அன்னையும் ஏராளமான அற்புதங்களையும் அள்ளித் தந்ததால் விரைவில் இவ்வாலயம் புனிதத் தலமாக விளங்கியது. அன்னையை நாடி வந்த அனைத்து மக்களும் குறிப்பாக படகர் இன மக்களும் அனைத்து வகையிலும் ஆரோக்கியம் பெற்றதன் நினைவாக ஆரோக்கிய அன்னை என்று அழைக்கலாயினர்.

1885 இம் ஆண்டு பவானி ஆற்றை மையமாகக் கொண்டு உதகை, வெலிங்டன், கொடிவேரி, மேட்டூர் என நான்கு பிரிவாக பிரித்து, ஒவ்வொரு மையத்திற்கும் பொறுப்பாக அருட்பணியாளர்கள் நியமிக்கப் பட்டனர்.

அதன்பிறகு வெலிங்டன் தனிப் பங்காக உயர்த்தப்பட்டு அருட்பணி. பியாரோன் தலைமையில் குன்னூர் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் ஆகியன அதன் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தன.

1893 ல் வெலிங்டனில் இருந்து குன்னூர் தனிப்பங்காக பிரிக்கப்பட்டு கோத்தகிரி, மேட்டுப்பாளையம் ஆகியன அதன் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தன. அருட்பணி. தி ஜெலிஸ் புதிய பங்கின் தந்தையாக செயல்பட்டார்.

கோவை மறைமாவட்டம்:

1866-1940 வரையிலான கோவை மறைமாவட்ட காலகட்டத்தில் கோத்தகிரி அன்னையின் மகிமையால் ஏராளமான இறைமக்கள் புனித யாத்திரையாக வரத் தொடங்கினர். இவர்களுக்கு தங்கும் இடமும், உணவும் கொடுத்து உதவியவர்கள் இந்து சமய படுகர் இன மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த காலகட்டத்தில் அருட்பணி. மோரின் அவர்கள் ஆலயத்தை 1938 ல் விரிவுபடுத்தி சிறப்புற நடத்தி வந்தார்.

மைசூர் மறைமாவட்டம் (1940-1955):

1918 ல் முதல் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். அருட்பணி. பேஷீ அவர்கள், குன்னூர் கோத்தகிரி பங்குகளின் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது பெருமுயற்சி செய்து ரூ. 4000 கொடுத்து கோத்தகிரியில் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி (தற்போதைய ஹோலிகிராஸ் கான்வெண்ட்) அதில் பெண்களுக்கு கல்வி நிலையமும், சிறிய மருத்துவமனையும் அமைத்து பொதுச் சேவையில் ஈடுபட்டு வந்தார். ஒருசில வருடங்களுக்கு பிறகு இந்த பொதுச்சேவை மையம் FMM சபை அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. அருட்சகோதரிகள் இதனையொட்டிய மேலும் சில இடங்களையும் வாங்கி பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தி, கோத்தகிரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

1940 ல் பிரான்சின் லூர்து நகரில் தமக்கு ஏற்பட்ட புதுமைக்கு நன்றியறிதலாக திருமதி ரெட்மோன்ட் அளித்த நன்கொடையில், அருட்பணி. ஜென்டீன் அவர்கள் லூர்து அன்னைக்கு கெபி எழுப்பினார்.

1952ஜூன் 2ம் நாள் காலை, 78 வயது நிரம்பிய அருட்பணி போஷியர் MEP அவர்கள், பொருட்களை திருட வந்த சோனிபாய் என்பவரால் கொலை செய்யப்பட்டார். கொலையாளிக்கு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

உதகை மறைமாவட்டம்:

03.07.1955 அன்று பவானி ஆறு மாயர் உட்பட்ட பகுதிகள் மைசூர் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, மேதகு ஆன்டனி படியறா அவர்களால் உதகை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு, திருஇருதய ஆண்டவர் ஆலயம் மறைமாவட்ட பேராலயமாக செயல்பட்டு வருகிறது. அப்போது இம் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட 13 பங்குகளில் கோத்தகிரியும் அடங்கும். தொடர்ந்து வந்த காலகட்டங்களில் அன்னையின் அருளால் அளவற்ற முன்னேற்றமடைந்து, 7 ஆண்களுக்கான துறவற சபைகளும், பெண்களுக்கான 11 Formation House ம் அமைக்கப்பட்டு குருக்களும், கன்னியர்களும், கல்வி, மருத்துவசேவை, சமூகசேவை, விடுதிகள், தியான இல்லம், அன்பியம், மருத்துவமனை, மகளிர் காப்பகம் போன்ற சமூக சேவைகளில் முழுமனதாகவும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டு வந்ததால் கோத்தகிரி துறவற சபைகளின் குட்டி ரோம் என அழைக்கப் படுகிறது. இவர்கள் ஆலயத்திற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தருகின்றனர் அத்துடன் சோலூர்மட்டம், கீழ்கோத்தகிரி, கொட்டக்கம்பை ஆகிய மூன்று கிளைப் பங்குகள் உருவாக காரணமாகவும் அமைந்தது. தற்போது மேற்கூறிய மூன்றும் தனிப்பங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் அழகிய ஆலயமானது முன்னாள் உதகை ஆயரும், தற்போதைய புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட பேராயருமான மேதகு ஆன்டனி அனந்தராயர் தலைமையில் 12.04.2002 அன்று அடிக்கல் மந்திரிக்கப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கிய சாமி அவர்களின் முயற்சியால் மக்களின் ஒத்துழைப்புடன் அழகுற கட்டப்பட்டு 04.09.2004 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி. சாலமன் அவர்களால் 13.09.2009 அன்று குருக்களுக்கான அறைவீடு கட்டப்பட்டு உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.

லூர்து அன்னை கெபி:

1858 ஆம் ஆண்டு லூர்து அன்னையின் கெபி ஆலயத்தின் வலப்புறத்தில் அமைக்கப் பட்டிருந்தது. ஆலய விரிவாக்கத்திற்காக இது இடிக்கப்பட்டது. அதன்பிறகு

லூர்து நகரில் அன்னை காட்சி கொடுத்ததின் 150 ஆம் ஆண்டு நினைவாக, திருத்தல விரிவாக்கப் பணிக்குப் பின்னர் அருட்பணி. சாலமன் அவர்களின் பணிக்காலத்தில் புதிய லூர்து மாதா கெபி 20.07.2008 அன்று உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு Dr. அமல்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

2011 ல் பொறுப்பேற்ற அருட்பணி. C. ரொசாரியோ அவர்கள், இளைஞர் குழுவை ஊக்குவித்து சீரமைத்து மெருகூட்டினார். 2015 ஆண்டில் கொடிமரம் அமைத்தார்.

அருட்பணி. இருதயராஜ் அவர்கள் பங்குத்தந்தையாக இறைப்பணியாற்றிய காலகட்டத்தில், 2017 ஆம் ஆண்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் (150 ஆண்டு ) ஜூபிலி விழாவினை சிறப்பாக கொண்டாடியது. (1887-2017) இதன் நினைவாக, ஆலய நுழைவாயில் மக்களால் எழுப்பப் பட்டது.

2018 ல் பொறுப்பேற்ற அருட்பணி. ஞானதாஸ் அவர்கள் அன்பியங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் பங்குப் பேரவையை அமைத்தார்.

மிகப் பழைமையான கல்லறைத் தோட்டம் மழை வெள்ளத்தாலும், மண்ணரிப்பாலும், பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்று, சீரமைப்புப் பணியைத் திட்டமிட்டு கல்லறைத் தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பினார். மேலும் கல்லறைத் தோட்டத்திற்கு பின்புறம் வாகன நிறுத்துமிடம் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பங்குத்தந்தை அருட்பணி. ஞானதாஸ், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. லியோ சேவியர், புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்பணி. ஜெயக்குமார் ஆகியோருடன் இணைந்து, வழிபாடுகளிலும் அன்பிய செயல்பாடுகளிலும் இறைவேண்டலில் ஈடுபட்டு திருத்தல வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

சாதி, மத, இன பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அருள்புரியும் அன்னையை நாடி பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்று வருகின்றனர். புனித ஆரோக்கிய அன்னையின் அருளை நாமும் நாடி செபமாலை செபிப்போம்.. விரைவில் இவ்வாலயம் திருத்தலமாக உயர செபிப்போம், ஜெயத்துடன் வாழ்வோம்.

ஆலயத்தில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. M. பிரெயோல் (1955-1956)
2. அருட்பணி. தியோபேன், OFM Cap (1956-1958) அருட்பணி. தியோபேன் அவர்கள் தமது எடுத்துக்காட்டான கிறிஸ்துவ வாழ்வால், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பாதையில் முதற்கட்டமாக தற்போது இறையடியார் (Servent of God) நிலைக்கு உயர்த்தப் பட்டுள்ளார்.
3. அருட்பணி. ஏஞ்சலோ OFM cap (1958-1963)
4. அருட்பணி. H. E. ரீகன் (1963-1964)
5. அருட்பணி. T. J. ஜோசப் சால்பு (1964)
6. அருட்பணி. கட்டச்சம்பள்ளி (1964-1966)
7. அருட்பணி. A. ஸ்தனிஸ்லாஸ் (1968-1970)
8. அருட்பணி. F. மேத்யூ (1970)
9. அருட்பணி. F. பெர்னாண்டஸ் (1970-1974)
10. அருட்பணி. P. ஸ்தனிஸ்லாஸ் (1974-1976)
11. அருட்பணி. A. அம்புரோஸ் (1976-1981)
12. அருட்பணி. R. J. அமல்ராஜ் (1981-1982)
13. அருட்பணி. A. அந்தோணிசாமி (1982-1985)
14. அருட்பணி. R. C. தேவராஜ் (1985-1986)
15. அருட்பணி. V. M. ஜேக்கப் (1986-1994)
16. அருட்பணி. M. J. அமல்ராஜ் (1994-1995)
17. அருட்பணி. S. செல்வநாதன் (1995-2000)
18. அருட்பணி. மரிய பென்சிகர் (2000)
19. அருட்பணி. பெரியநாயகம் (2000-2001)
20. அருட்பணி. ஆரோக்கியசாமி (2001-2006)
21. அருட்பணி. சாலமன் (2006-2011)
22. அருட்பணி. C. ரொசாரியோ (2011-2016)
23. அருட்பணி. இருதயராஜ் (2016-2018)
24. அருட்பணி. M. X. ஞானதாஸ் (2018 முதல் தற்போது வரை..)

உதவிப் பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. T. I. ஜோசப் (1981-1982)
2. அருட்பணி. ஜார்ஜ் டேவிட் (1982-1984)
3. அருட்பணி. மரிய பாஸ்கல் சுந்தரம் (1984-1986)
4. அருட்பணி. பால் காஸ்பர் (1986-1987)
5. அருட்பணி. A. வின்சென்ட் (1987-1989)
6. அருட்பணி. மரியபீட்டர் (1989-1990)
7. அருட்பணி. C. ஆரோக்கியசாமி (1990-1991)
8. அருட்பணி. A. இளங்கோவன் (1991)
9. அருட்பணி. S. மரிய லூயிஸ் (1991-1992)
10. அருட்பணி. S.F விக்டர் (1993-1996)
11. அருட்பணி. ஜோசப்ராஜ் (1996-1997)
12. அருட்பணி. லியோன் பிரபாகரன் (1997-1998)
13. அருட்பணி. R. P. ஜெயக்குமார் (1998-1999)
14. அருட்பணி. ஜான் ஜோசப் ஸ்தனிஸ் (1999-2000)
15. அருட்பணி. S. C. ஆரோக்கியராஜன் (2000-2001)
16. அருட்பணி. பெலிக்ஸ் பெர்னாண்டஸ் (2001-2002)
17. அருட்பணி. கிறிஸ்டோபர் பால் வில்சன் (2002-2003)
18. அருட்பணி. ஸ்டீபன் சேவியர் (2004-2005)
19. அருட்பணி. ஜேம்ஸ் ஜெரால்டு (2005-2006)
20. அருட்பணி. C. வின்சென்ட் (2006-2007)
21. அருட்பணி. சார்லஸ் ஜான்சன் (2007-2008)
22. அருட்பணி. சில்வெஸ்டர் (2008-2009)
23. அருட்பணி. மரியசேவியர் ஞானதாஸ் (2009-2010)
24. அருட்பணி. அந்தோணி வின்சென்ட் (2010-2011)
25. அருட்பணி. வில்சன் SJ (2011-2012)
26. அருட்பணி. லூர்து சுரேஷ்குமார் HGN (2013-2014)
27. அருட்பணி. ஜெரோம் (2014-2015
28. அருட்பணி. சின்னப்பராஜ் HGN (2015-2016)
29. அருட்பணி. ஆரோக்கியசாமி டோமினிக் (2016-2017)
30. அருட்பணி. அந்தோணி டேவிட் (2017-2018)
31. அருட்பணி. பீட்டர் ஷேனஸ் C.PP.S (2018-2019)
32. அருட்பணி. லியோ சேவியர் அந்தோணிராஜ் (2019-2020)
33. அருட்பணி. ஆரோக்கிய சாந்தகுமார் (2020-
34. அருட்பணி. ஞானபிரகாஷ் SDM.(2020_

புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் :
1879 முதல் 1992 வரை பங்கின் பங்குத்தந்தையர்கள்.
அதன் பின்னர்
அருட்பணி. S. F. விக்டர்
அருட்பணி. பெரியநாயகம்
அருட்பணி. K. S. மார்சல் ஜோசப்
அருட்பணி. சகாய டென்னிஸ்
அருட்பணி. அமலதாஸ்
அருட்பணி. சார்லஸ் பாபு
அருட்பணி. K. ஜெயகுமார்.

பங்கில் உள்ள துறவற இல்லங்கள் :
1. Carmelite - OCD Fathers
2. CMSF - Franciscan Brothers
3. SDB-Don Bosco Fathers
4. CSsR - Redemptorist Fathers
5. OMI - Fathers
6. OFM -Capuchin Fathers
7. Belvedare - Fathers

1. Assisi sisters of Mary Immaculate (ASMI) - 4
2. Holy Cross Sisters (HC)
3. Franciscan Sisters Servants of the Cross
4. Carmelit Sisters of St Theresa CSST -2
5. Franciscan Missionaries of Mary -FMM Sisters - 2
6. Poor Clares Adoration Monstery (PLPA)
7. Queens Mary sisters (MSJ)
8. Sisters of Our Lady of Sorrows Servants of Mary- Regina Pacis sisters
9. Francis sisters of Vierzehnheiligen
10. Canossian sisters - (FDCC)
11. Holy Spirit sisters - SHSP.

கோத்தகிரி மலைகளின் அருகே எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயத்திற்கு வாருங்கள். அன்னையின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்லுங்கள்.

வரலாறு : ஆலய 150 வது ஜூபிலி மலரில் இருந்து எடுக்கப்பட்டது.
ஆங்கிலம்: அருட்பணி. இருதயராஜ்
தமிழ் : திருமதி. ரோஸ்லின்.

தகவல்கள் : உதவிப்பங்குத்தந்தை அருட்பணி. லியோ சேவியர் அவர்கள்.