765 புனித விண்ணரசி அன்னை ஆலயம், கந்திகுப்பம்

  

புனித விண்ணரசி அன்னை ஆலயம்

இடம்: கந்திகுப்பம், 635107

மாவட்டம்: கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: கிருஷ்ணகிரி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. புனித அடைக்கல அன்னை ஆலயம், அடைக்கலாபுரம்

2. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், அந்தோணியார்நகர்

3. வேளாங்கண்ணி அன்னை ஆலயம், ஆரோக்கிய மாதா நகர் -கொக்கனூர்

4. குழந்தை இயேசு ஆலயம், அச்சமங்கலம்

பங்குத்தந்தை: அருட்பணி. M. ஆல்பர்ட் வில்லியம்

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. லிபின், CR (Congregation of Rosary) 

குடும்பங்கள்: 650 (கிளைப் பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 23 (கிளைப்பங்குகள் சேர்த்து)

வழிபாட்டு நேரங்கள்:

நாள்தோறும் திருப்பலி காலை 06.15 மணி

ஞாயிறு திருப்பலி: காலை 06:30 மணி மற்றும் காலை 08:30 மணி

சனிக்கிழமை மாலை 06:30 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி, நற்கருணை ஆசீர்

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை மாதாவின் தேர்பவனி, சிறப்பு திருப்பலி

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதியை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும்

வழித்தடம்: கிருஷ்ணகிரி -சென்னை நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரியிலிருந்து 13கி.மீ தொலைவில் கந்திகுப்பம் அமைந்துள்ளது 

Location map: https://g.co/kgs/W7RTHC

வரலாறு:

கந்திகுப்பம் என்னும் அழகான கிராமத்தில் அமைந்துள்ள புனித விண்ணரசி அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம். 

தற்போது இருக்கும் கொக்கனூர் பகுதியில்தான் கிறிஸ்தவர்களின் குடியிருப்பு முதன்முதலில் ஆரம்பமானது என்பதை அருட்பணி. லியோ டெபினி (எலத்தகிரி பங்குத்தந்தை) குறிப்புகளிலிருந்து அறிகிறோம். எலத்தகிரியின் பல்வேறு குடும்பங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து எழுதிய அருட்தந்தை டெபினி, ஜாதிமணி குடும்பத்தினரும், கொல்லப்பட்டி குடும்பத்தினரும் மருதேரியில் இருந்தனர் என்றும், இவர்கள் திப்பு சுல்தானின் படையெடுப்புக்கு பயந்து ஆந்திர மாநிலம் புங்கனூர் சென்று, பின்னர் புங்கனூரிலிருந்து கொக்கனூருக்கு வடக்கே சிறிது காலம் இருந்துவிட்டு, எலத்தகிரி அருகே இருக்கும் கொல்லப்பட்டிக்கு சென்றுள்ளனர். இறுதியாக எலத்தகிரி வந்தனர் என்று குறிப்பிடுகிறார். 

ஆகவே 1792-1794 ஆம் ஆண்டுகளில் இக்குடியேற்றம் நடந்திருக்க வாய்ப்புண்டு.

1929 ஆம் ஆண்டு எலத்தகிரியின் கிளைப்பங்கான கந்திகுப்பத்தில் தொடக்கப் பள்ளி ஒன்று துவங்கப்பட்டது. அதுவே பின்னர் 1973 ஆம் ஆண்டில் புனித சவேரியார் நடுநிலைப் பள்ளியாக வளர்ந்தது. 1954 ஆம் ஆண்டு எலத்தகிரி பங்குத்தந்தை அருட்பணி. ஜெசுவோ MEP முயற்சியால் கந்திக்குப்பத்தில் சென்னை சாலைக்கு அருகில் (தற்போதைய ஆலய வளாகம் ) 0.75 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. பின்னர் கூடுதலாக நிலம் 1965, 1972, 1973, 1985 ஆகிய ஆண்டுகளில் வாங்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் பாரீஸ் மறைபரப்பு சபையைச் சார்ந்த அருட்தந்தை மார்ட்டின் MEP (Jean Pierre Martin) கந்திக்குப்பத்தில் தங்கியிருந்தார். அருட்தந்தை மார்ட்டின் அடிகளார் பிரான்ஸ் நாட்டில் 29-12-1881 இல் பிறந்து 29-6-1905 இல் குருவாகி கும்பகோணம் மறைமாவட்டத்தில் உழைப்பதற்காக 16-8-1905 இல் இந்தியா வந்தார். 1919 வரை கோனேரிப்பட்டி மிக்கேல்பட்டி, தோளூர்பட்டி, கோட்டப்பாளையம் போன்ற பங்குகளில் பணியாற்றினார். 1919 முதல் 1930 வரை பாண்டிச்சேரியில் இருந்த புனித சூசையப்பர் குருமடத்தில் (தற்போதைய பெங்களூரு பேதுரு குருத்துவக் கல்லூரி) பேராசிரியராக பணியாற்றினார்.

1930 இல் சேலம் மறைமாவட்டம் உருவானபோது, சேலம் மறைமாவட்டத்தில் இணைந்து 1930-1932 ஆண்டுகளில் கந்திக்குப்பத்தை கிளைப்பங்காகக் கொண்டிருந்த எலத்தகிரியில் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். பின்னர் 1933 முதல் 1960 வரை சூரமங்கலம், சேலம் இளங்குருமடம், புனித பேதுரு குருத்துவக் கல்லூரியில் பணியாற்றி 1960இல் தாம் பணியாற்றிய எலத்தகிரி பங்கில் ஓய்வெடுக்க விரும்பி, கந்திக்குப்பத்தை தேர்வு செய்தார். 1960ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் கந்திக்குப்பத்தில் தங்கியிருந்து, அம்மக்களின் ஆன்மீக நலன்களை கவனித்துக் கொண்டார். பின்னர் ஊட்டி வெலிங்டன் சென்று ஓய்வெடுத்த தந்தை மார்ட்டின் 10-2-1969 இல் இறைவனடி சேர்ந்தார். சேலம் ஆயரில்லத்தில் அவருடைய கல்லறை உள்ளது.

எலத்தகிரி மாணவர் விடுதியில் பணியாற்றிய அருள்தந்தை இக்னேஷியஸ் களத்தில், எலத்தகிரி அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிய அருள்தந்தை தோமினிக் ஆகியோரால் கந்திக்குப்பம் ஆன்மீக வாழ்வில் வளர்த்தெடுக்கப்பட்டது. கந்திக்குப்பம் மக்களின் ஆன்மீக வாழ்வில் அக்கறை கொண்ட அருட்தந்தை இக்னேஷியஸ் களத்தில் அடிகளாரின் முயற்சியால் இன்றைய பங்கு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 15-9-1977 அன்று புதுவை -கடலூர் பேராயர் மேதகு V.S. செல்வநாதர் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

01-06-1979 முதல் கந்திகுப்பம் தனிப்பங்காக உருவாக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்திரு பெலிக்ஸ் ரெவேல் MEP பொறுப்பேற்றார். அருள்தந்தை ரெவேல் பிரான்ஸ் நாட்டில் 7-2-1915 இல் பிறந்து, 7-10-1945 இல் குருவாகி சேலத்திற்கு பணியாற்ற வந்தார். பெருங்குறிச்சி. தென்கரைக்கோட்டை, கொசவம்பட்டி, வெள்ளாளபாளையம் போன்ற பங்குகளில் பணியாற்றிய இவர் 1979 முதல் 1981 வரை கந்திக்குப்பம் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். பின்னர் 1992 வரை புதுப்பாளையம் பங்குத்தந்தையாக பணியாற்றி, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று 11-4-1997இல் இறைவனடி சேர்ந்தார்.

பின்னர் 1981 முதல் 1986 வரை அருட்தந்தை இக்னேஷியஸ் களத்தில் பங்கின் பொறுப்பேற்றார். பங்கு மக்களை பங்குப்பணிகளில் ஈடுபடவும், பங்கின் வளர்ச்சிக்கு பொருளுதவி செய்வதிலும் பயிற்சி கொடுத்து கந்திகுப்பம் பங்கை வளர்த்தெடுத்தார். 

மதுரை அமலவை கன்னியர் இல்லம் 1990 இல் துவங்கப்பட்டு, பங்கின் மேய்ப்புப் பணியில் சகோதரிகள் துணைபுரிகின்றனர்.

அருள்தந்தை. ஹென்றி ஜார்ஜ் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் கோட்டூர் கிருஷ்ணம்பட்டியுடன் பர்கூர் பங்கு 23-1-1998 அன்று உருவாக்கப்பட்டது. 

அருள்தந்தை. S. மரியஜோசப் அவர்களின் முயற்சியால்  பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டு 28-4-2003 அன்று ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அருள்தந்தை M. அருள்சாமி அவர்களின் முயற்சியால் மறைமாவட்ட வேதியர்களின் துணையோடு அன்பியங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்குப் பின் அருட்தந்தை அருள்சாமி அவர்களின் முயற்சியால் சென்னை சாலையிலும் வரட்டனபள்ளி சாலையிலும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டன.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பங்குப்பேரவை

2. நிதிக்குழு

3. மறைக்கல்வி

4. பீடச்சிறார்

5. பாடகற்குழு

6. மரியாயின் சேனை (ஆண்கள் & பெண்கள்)

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

8. இளையோர் குழு

9. கோல்பிங் இயக்கம்

10. மக்கள் வங்கி

விண்ணரசி அன்னை இலவச தையல் பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அருட்சகோதரிகள் இல்லம்:

அமல அன்னை கன்னியர் சபை இல்லம், மதுரை

பங்கின் கல்வி நிறுவனம்:

புனித சவேரியார் நடுநிலைப் பள்ளி

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்: 

1. அருள்திரு. K. ரவேல் MEP (1979-1981)

2. அருள்திரு. இக்னேஷியஸ் களத்தில் (1981-1986)

3. அருள்திரு. தாமஸ் கிராஞ்சிரா (1986-1989 )

4. அருள்திரு. M. தோமினிக் (1989-1991)

5. அருள்திரு. A. ரொசாரியோ (1991-1992 )

6. அருள்திரு. S. ஆரோக்கியசாமி (1992-1994)

 7. அருள்திரு. S. ஹென்றி ஜார்ஜ் (1994-1999)

8. அருள்திரு. S. மரியஜோசப் (1999-2004)

9. அருள்திரு. M. அருள்சாமி (2004-2008)

10. அருள்திரு. S. சவரியப்பன் (2008-2013)

11. அருள்திரு. S. ஆரோக்கிய ஜேம்ஸ் (2013-2015)

12. அருள்திரு. A. அற்புதராஜ் (2015-2018)

13. அருள்திரு. A. மதலைமுத்து (2018-2021)

14. அருள்திரு. M. ஆல்பர்ட் வில்லியம் (2021 முதல்...)

தூய விண்ணரசி அன்னையின் பாதுகாவலில், பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது கந்திகுப்பம் இறைசமூகம்....

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. M. ஆல்பர்ட் வில்லியம்

தகவல்கள் சேகரிக்க உதவியவர்: திரு ஏசுதாஸ், கிருஷ்ணகிரி