இடம் : சர்ச் காலனி, மதுக்கரை, மதுக்கரை (PO), கோவை 641105.
மாவட்டம் : கோவை
மறைமாவட்டம் : கோவை
மறைவட்டம் : கோவை
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், காக்காசாவடி
பங்குத்தந்தை : அருள்பணி. விக்டர் சந்தியாகு
குடும்பங்கள் : 350
அன்பியங்கள் : 12
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி மற்றும் காலை 08.15 மணி.
வாரநாட்களில் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு.
வெள்ளி மாலை 06.00 மணிக்கு இறைஇரக்க நவநாள் திருப்பலி.
சனி மாலை 06.00 மணிக்கு சகாய மாதா நவநாள் திருப்பலி.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலி (புனித அந்தோனியார் குருசடி)
திருவிழா : ஆகஸ்ட் 21 ஆம் தேதி.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருள்பணி. S. இராபர்ட் பெல்லார்மின்
2. அருள்பணி. S. டோமினிக்
3. அருள்பணி. A. மரிய ஜோசப்
4. அருள்பணி. A. கிறிஸ்டோபர்
5. அருள்பணி. லியோ லாரன்ஸ்.
6. அருள்சகோதரி. ஜோஸ்பின்
7. அருள்சகோதரி. மெர்சி
8. அருள்சகோதரி. ஞானதீபம்
9. அருள்சகோதரி. விக்டோரியா
10. அருள்சகோதரி. மேரி அசுந்தா
11. அருள்சகோதரி. அந்தோனி
12. அருள்சகோதரி. மரிய அனிட்டா.
வழித்தடம் : கோவை காந்திபுரம் -மதுக்கரை.
Location map :
https://maps.app.goo.gl/pQa6zoBSKCr4fEUH9
வரலாறு :
1934 ஆம் ஆண்டில் மதுக்கரையில் சிமெண்ட் தொழிற்சாலை துவக்கப் பட்டது. ஏனைய மக்களைப் போல கிறிஸ்தவ மக்களும் வேலை தேடி இந்த தொழிற்சாலையை நாடி, இங்கு குடியேறினார். இங்கு ஆலயம் இல்லாததால் கிறிஸ்தவ மக்கள் தங்களது ஆன்மீகத் தேவையை நிறைவேற்ற இயலாமல் மிகவும் அவதியுற்றனர். அப்போது தாத்தா சாமியார் என்று அழைக்கப்பட்ட அருள்பணி. அம்புறோஸ் அவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு திருப்பலி நிறைவேற்ற ஏற்பாடு செய்தார்.
இரண்டாம் உலகப்போர்:
1938 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. அப்போது இங்குள்ள இராணுவ முகாமில் அநேக கத்தோலிக்க இராணுவ வீரர்கள் இருந்தனர். அருள்பணி. ஆண்ட்ரூ சுவாமிகள் முதலில் போறுப்பேற்றார். இவரும் தொடர்ந்து பணியாற்றிய அருள்தந்தையர்கள் சின்னசாமி, அந்தோனிசாமி, தாமஸ் எர்துநாட் ஆகியோரும் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றி வந்தனர். இரண்டாம் உலகப் முடிவடைந்த போது, கத்தோலிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இராணுவ முகாமில் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றுவதும் படிப்படியாக நின்று போனது. அதனைத் தொடர்ந்து தொழிற்சாலையின் நிர்வாகத் தயவையும், போத்தனூர் பங்குத்தந்தையின் உதவியையும் மக்கள் எதிர்நோக்கினர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் மனமுவந்து பள்ளிக்கூட கட்டிடத்தை ஞாயிறு திருப்பலி நிறைவேற்ற வழங்கினர். போத்தனூர் பங்குத்தந்தையர் பழையபடி வந்து திருப்பலி நிறைவேற்றி வந்தனர். இப்பணி சிலகாலம் நடைபெற்று வந்தது. அப்போதைய கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு பிரான்சிஸ் மு. சவரிமுத்து ஆண்டகை அவர்கள், மதுக்கரை பங்கினை கண்காணிக்கும் முழுபொறுப்பை போத்தனூரை அடுத்த மேட்டூரில் உள்ள காரர்மல் சபை குருக்களிடம் ஒப்படைத்தார். கார்மல் சபை அதிபர் அருள்பணி. தனிஸ்லாஸ் அடிகளார் அவருக்கு உறுதுணையாக சேவை மனம் படைத்த அருள்தந்தையர்கள் வின்சென்ட், ஸ்டீபன், பயஸ், ஜெரோம், அம்புரோஸ் பொலிக்கார்ப் ஆகியோர் செயல்பட்டனர்.
ஆலயம் உருவான வரலாறு :
இன்று அழகுடன் காணப்படும் ஆலயமும் அதனைச் சுற்றியுள்ள பள்ளியும், பிற பகுதிகளும் 1918 -ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் போரின் போது போர் வீரராக சேவை புரிந்த திரு. வில்சன் அவர்களுக்கு, அன்றைய அரசாங்கம் இலவசமாக கொடுத்ததாகும். அவரிடமிருந்து 1946 ஆம் ஆண்டு கோவை ஆயர் மறைமாவட்டத்திற்கு வாங்கினார். 1956 ஆம் ஆண்டு மதுக்கரையில் ஒரு ஆலயம் அமைக்கப் படவேண்டும் என்று எண்ணிய ஆயர் அவர்கள், ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஆலயம் கட்ட வழிவகுத்தார். 18.10.1959 அன்று ஆலயம் கட்டப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டு, முதல் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. 1960 ஆம் ஆண்டு மதுக்கரை பங்கினை கவனித்து வந்த கார்மல் சபையினர், வேலைப்பளு காரணமாக பொறுப்பினை கோவை மறைமாவட்டத்திடம் ஒப்படைத்தனர்.
மதுக்கரை பங்கினை வழிநடத்திச் செல்ல அருள்பணி. குழந்தை சாமி அவர்கள் பணி பொறுப்பேற்றார்.
1962 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அருள்பணி. ரெஜிஸ் பணிக்காலத்தில் குருக்கள் இல்லம் கட்டப்பட்டது. ஆலய மணி, மணிக்கூண்டும் வைக்கப்பட்டது. பீடச்சுவர் அலங்கரிக்கப்பட்டது. இடைவிடா சகாய அன்னையின் பக்தி முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
அருள்பணி. மரியநாதர் பணிக்காலத்தில் புனித பத்தாம் பத்திநாதர் ஆங்கில நர்சரி பள்ளி துவக்கப் பட்டது. தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. லூயிஸ் பிச்சை அவர்கள் பள்ளிக்கூடத்தை விரிவாக்கம் செய்தார்.
1981 இல் பொறுப்பேற்ற அருள்பணி. குழந்தை ராஜ் அவர்கள் சுகுணாபுரத்தில் திருப்பலி நிறைவேற்றத் துவங்கினார். கோவைப் புதூரில் திருப்பலி நிறைவேற்ற ஏற்பாடு செய்ததுடன், குழந்தை இயேசு சிற்றாலயத்தைக் கட்டினார். ஆயர் மேதகு அம்புரோஸ் அவர்களுக்கு ஒத்துழைப்புடன், மக்களின் உழைப்பாலும் ஆலயத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினார். பள்ளிக்கூடத்தை காணிக்கை அன்னை சபை அருள்சகோதரிகளிடம் ஒப்படைத்தார். நீர்த்தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து கொடுத்தார்.
கோவைப்புதூர் ஆலயம் புகழ்பெற்று விளங்க அருள்பணி. குழந்தை ராஜ் அவர்கள் பெரிதும் உழைத்தார். மதுக்கரை பங்கின் கிளைப் பங்காக இருந்த கோவைப்புதூர் குழந்தை இயேசு ஆலயத்திற்கு, வியாழக்கிழமை தோறும் மதுக்கரை பங்கு மக்கள் பாதயாத்திரையாக நடந்து சென்று ஆலயத்திற்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தனர்.
தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. லூர்து இருதயராஜ் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விவிலியம் கொடுத்து, மக்களின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தினார். சபைகள் இயக்கங்களை வலுப்பெறச் செய்தார்.
அருள்பணி. ஜோசப் D. செல்வராஜ் பணிக்காலத்தில் இறைஇரக்க நவநாள் சிறப்பாக நடைபெற உதவினார். பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் லூர்து மாதா கெபியை கட்டி 13.04.2002 அன்று முன்னாள் ஆயர் மேதகு அம்புறோஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, மாதாவின் பக்தியை வளரச் செய்தார்.
அருள்பணி. இயேசுதாஸ் அடிகளார் பணிக்காலத்தில் கல்லறை மதிற்சுவர் உயர்த்தப் பட்டது. ஆலயத்தின் பின்புறம் மதிற்சுவர் கட்டப்பட்டது. ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பித்தார். தமக்கு மீட்டத் தெரிந்த இசைக்கருவிகளை, இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அதன்பயனாக பங்கின் பாடகற் குழுவினரால் செபமாலை இசைத்தகடு வெளியிடச் செய்தார்.
ஆலய பொன்விழா நினைவாக, அருள்பணி. இயேசுதாஸ் அடிகளாரின் வழிகாட்டுதலில் மக்களின் ஒத்துழைப்புடன் தற்போது காணப்படும் அழகிய ஆலயத்தை விரிவுபடுத்தி, புதிய மணிக்கோபுரமும் கட்டப்பட்டு 16.01.2008 அன்று மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
அருள்பணி. ஜோசப் டேவிட் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் சமூக நலக்கூடம் ஒன்று கட்டப்பட்டது.
தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. விக்டர் சந்தியாகு அவர்களின் முயற்சியால் மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்திற்கு வெளியே ஒரு ஷெட் மற்றும் ஆரோக்கிய மாதா கெபிக்கு முன்புறம் ஒரு ஷெட் போடப்பட்டது. மேலும் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டு, புனித பத்தாம் பத்திநாதருக்கு புதிய பீடம் அமைக்கப் பட்டது. தொடர்ந்து பல்வேறு பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறைமக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி வருகிறார்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருள்பணி. G. M. குழந்தை சாமி (1960-1961)
2. அருள்பணி. S. சவேரியார் (1962-1963)
3. அருள்பணி. ரெஜீஸ் (1963-1971)
4. அருள்பணி. S. மரியநாதர் (1971-1973)
5. அருள்பணி. லூயிஸ்பிச்சை (1973-1981)
6. அருள்பணி. A. குழந்தை ராஜ் (1981-1987)
7. அருள்பணி. A. ஆல்பர்ட் செல்வராஜ் (1987-1988)
8. அருள்பணி. A. லூர்து இருதயராஜ் (1988-1995)
9. அருள்பணி. எட்வர்ட் (1995-1996)
10. அருள்பணி. அருள்பணி. ஜோசப் டி. செல்வராஜ் (1996-2002)
11. அருள்பணி. இயேசுதாஸ் (2002-2007)
12. அருள்பணி. ஜோசப் டேவிட் (2010-2015)
13. அருள்பணி. விக்டர் சந்தியாகு (2015 முதல் தற்போது வரை..)
ஆலய வரலாறு : ஆலய வரலாற்று மலரிலிருந்து எடுக்கப்பட்டது.