இடம் : தொண்டி
மாவட்டம் : இராமநாதபுரம்
மறைமாவட்டம் : சிவகங்கை
மறைவட்டம் : R. S. மங்கலம்
பங்குத்தந்தை : அருள்பணி. M. சவரிமுத்து
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித செபஸ்தியார் ஆலயம், முகில்தகம்
2. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், வெள்ளாளக்கோட்டை
3. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தண்டலக்குடி
4. புனித செபஸ்தியார் ஆலயம், புடனவயல்
5. புனித சந்தியாகப்பர் ஆலயம், நரிக்குடி
6. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், காந்திநகர் -சின்ன தொண்டி
7. குழந்தை இயேசு கெபி, வேலாங்குடி
8. புனித சவேரியார் ஆலயம், சவேரியார் பட்டணம்
9. புனித செபஸ்தியார் ஆலயம், செங்காலன்வயல்
10. புனித செபஸ்தியார் ஆலயம், RC நகர், வட்டாணம்
11. புதுக்குடி
12. விளக்கனேந்தல்
13. கோடிவயல்
குடும்பங்கள் : 337 (கிளைப் பங்குகள் சேர்த்து)
ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணி
புதன், சனி திருப்பலி : மாலை 07.00 மணி
திருவிழா : மே மாதத்தில் முதல் சனி, ஞாயிறு.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருள்பணி. அலெக்சாண்டர் HGN, (நரிக்குடி)
2. அருள்பணி. மாசில்லாமணி HGN, (விளக்கனேந்தல்)
3. அருள்பணி. பால்ராஜ், MSFS (வட்டாணம்)
4. அருள்சகோதரி. அன்னம்மாள், (வட்டாணம்)
5. அருள்சகோதரர். ரூபன் (வட்டாணம்)
வழித்தடம் : தொண்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map : https://g.co/kgs/dS1pua
வரலாறு :
புதுமைகள் பல புரியும் பயணிகளின் விடிவெள்ளி, தொண்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்...
தொண்டி கிராமமானது அக்காலத்தில் குருமிலாங்குடி பங்கின் ஒருபகுதியாக இருந்தது. இவ்வேளையில்
இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள மட்டியரேந்தல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திரு. இரோணிமூஸ் திருமதி. மரிய முத்தம்மாள் தம்பதியரின் மகன் திரு. பாக்கியம் என்பவர், தொண்டியில் வாழ்ந்து வந்த போது இங்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என குருமிலாங்குடி பங்குத்தந்தையிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் கோரிக்கை நிறைவேறாததால் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் ஜான் பீட்டர் லொயானால்டு SJ அவர்களை நேரடியாக சந்தித்ததின் பலனாக, 1956ம் ஆண்டில் தொண்டியில் தற்போது ஆலயம் அமைந்துள்ள நிலம் வாங்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப் பட்டது.
அதன்பின் பல ஆண்டுகளாக இந்த நிலமானது வேலிகள் எதுவுமின்றி வெற்றிடமாக இருந்ததால் தொண்டி ஊராட்சி மன்றத்தில், இது புறம்போக்கு நிலம் என்று எடுத்துக் கொள்ளப்படும் என்ற சூழ்நிலை வந்ததால், திரு. பாக்கியம் அவர்களது மகன் திரு. மரியதாஸ் அவர்கள் இந்த இடத்தைச் சுற்றிலும் மூன்றடி உயர சுற்றுச்சுவர் எழுப்பி, இடத்தின் மையப்பகுதியில் (தற்போது ஆலயம் அமைந்துள்ள இடம்) 6 அடி உயர சிமென்ட் சிலுவையைச் செய்து நட்டு வைத்து, இது ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்பதை உறுதிப்படுத்தினார்.
இக்காலகட்டம் வரை திரு. பாக்கியம் அவர்களது குடும்பம் மட்டுமே, கத்தோலிக்க குடும்பமாக தொண்டியில் வசித்து வந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் காவல்துறை மற்றும் சில அரசுப் பணிகளில் பணியாற்ற ஒருசில கத்தோலிக்க குடும்பங்கள் தொண்டியில் குடிவந்தனர். இக்குடும்பங்களில் உள்ள மக்கள் அனைவரும் சரியான சாலைவசதிகள் இல்லாத 5கி.மீ தொலைவில் உள்ள குருமிலாங்குடி ஆலயத்திற்கு சென்று வந்தனர். இந்த மக்களின் துன்பத்தை கண்ணுற்ற அப்போதைய குருமிலாங்குடி பங்குத்தந்தை அருள்பணி. பாக்கியம் அடிகளார் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 05.00 மணிக்கு S.S அரிசி ஆலையில் திருப்பலி நிறைவேற்றினார்.
இந்த திருப்பலியானது தொண்டியில் வாழ்ந்து வந்த கத்தோலிக்க மக்களுக்கும், சுற்றுக்கிராம மக்களுக்கும் நல்ல பலனைக் கொடுத்தது. மக்கள் கூட்டத்தைக் கண்ணுற்ற பங்குத்தந்தை கிறிஸ்துமஸ் மற்றும் முக்கிய விழாக்களில் தொண்டியில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.
தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. R. S. பீட்டர் பணிக்காலத்திலும் S. S. அரிசி ஆலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
அருள்பணி. R. S. பீட்டர் அவர்கள் தொண்டியில் ஆலயம் கட்ட மக்கள் விரும்புவதை பேராயரிடம் தெரிவிக்க, மதுரை பேராயர் மேதகு P. ஜஸ்டின் திரவியம் அவர்களால் ஆலயம் கட்டுவதற்கு ரூபாய் நாற்பதாயிரம், தேவகோட்டை வட்டார அதிபரிடம் கொடுக்கப் பட்டது.
ஆலயம் கட்டப்பட்டு 1977 -ம் ஆண்டு பேராயர் P. ஜஸ்டின் திரவியம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. ஆலயமானது கடற்கரை அருகிலேயே இருப்பதால் புனித சிந்தாத்திரை மாதா ஆலயம் என பேராயரால் பெயரிடப் பட்டது.
குருமிலாங்குடி பங்குத்தந்தை அருள்பணி. P. ஜோசப் அடிகளார் பணிக்காலத்தில் ஞாயிறு மாலை திருப்பலி, திங்கள் காலைத் திருப்பலி, புதன் மாலை சகாய மாதா நவநாள் திருப்பலி, வியாழன் காலைத் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வந்தது.
குருமிலாங்குடி பங்குத்தந்தையாக அருள்பணி. S. A. அருள் ஜீவா பணி புரிந்த போது 1987 ம் ஆண்டு தொண்டி தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. S. A. அருள் ஜீவா அவர்கள் பணிப் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. G. வின்சென்ட் அமல்ராஜ் பணிக்காலத்தில் மறைமாவட்ட நிதியுதவி மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதைய புதிய ஆலயத்தைக் கட்டி, அப்போதைய சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு. எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் 29.09.1990 அன்று புனிதப் படுத்தப் பட்டது.
தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. M. சவரிமுத்து அவர்களின் முயற்சியாலும், அமலவை அருட்சகோதரிகளின் பேருதவியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் சிந்தாத்திரை அன்னை ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, அழகிய புதிய பீடமும் கட்டப்பட்டு 08.12.2019 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
18.01.2020 முதல் புனித சிந்தாத்திரை அன்னைக்கு நவநாள் தொடங்கப்பட்டு சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.
அன்று முதல் இன்று வரை வங்கக் கடற்கரை ஓரத்தில் பொலிவுடன் வீற்றிருக்கும் சிந்தாத்திரை அன்னையின் புகழ் எங்கும் பரவி உள்ளது. தூய சிந்தாத்திரை அன்னை பயணிகளின் விடிவெள்ளியாக, வாழ்வில் சோர்வுற்றவர்களின் நம்பிக்கையின் நங்கூரமாக, தன்னை அண்டி வருவோருக்கு அடைக்கலம் தரும் விசுவாசத்தின் தாயாக திகழ்கிறார். அனைத்து சமயத்தவரும் அன்னையை ஆவலோடு தேடி நற்சுகம் பெற்று நன்றியை வெளிப்படுத்தும் விதமாக மல்லிகைப்பூ மாலை அணிவிப்பது வழக்கமாக உள்ளது இவ்வாலய தனிச்சிறப்பு.
ஆகவே பயணிகளின் அன்னையாகவும், மனக்கவலையை நீக்கி மணம் தரும் மல்லிகை மாதா என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்படும் சிந்தாத்திரை மாதாவை நாளும் தேடுவோம்... செபிப்போம்... புதுமைகளைக் காண்போம்... இறைவனின் நிறைவான ஆசியுடன் வாழ்வோம்..
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. புனித வின்சென்ட் தே பவுல் சபை (ஆண்கள்)
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை (பெண்கள்)
3. மரியாயின் சேனை
4. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருள்பணி. S. A. அருள் ஜீவா (1987-1988)
2. அருள்பணி. G. வின்சென்ட் அமல்ராஜ் (1988-1991)
3. அருள்பணி. A. இராஜமாணிக்கம் (1991-1994)
4. அருள்பணி. V. புஷ்பராஜ் (1994-1999)
5. அருள்பணி. S. பிரான்சிஸ் சேவியர் (1999-2004)
6. அருள்பணி. S. அருள் (2004-2006)
7. அருள்பணி. S. எட்வின் ராயன் (2006-2011)
8. அருள்பணி. A. அருள்ஜோதி (2011-2013)
9. அருள்பணி. M. சவரிமுத்து (2018 மே முதல் தற்போது...)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. M. சவரிமுத்து.