357 செபமாலை அன்னை ஆலயம், மணவாளநகர்

   

செபமாலை அன்னை ஆலயம்.

இடம் : மணவாளநகர்

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை - மயிலை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : திருவள்ளூர்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்கு : புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், தொடுகாடு (பஞ்சமந்தாங்கல்)

பங்குத்தந்தை : அருட்பணி பிரதீப் கிறிஸ்டோபர்

குடும்பங்கள் : 275 (கிளைப்பங்கு சேர்த்து)
அன்பியங்கள் : 9

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணி மற்றும் காலை 08.00 மணிக்கும்.
மாலை 06.30 மணிக்கு கிளைப்பங்கில் திருப்பலி.

செவ்வாய், வெள்ளி, சனி : மாலை 06.00 மணிக்கு செபமாலை, 06.30 மணிக்கு திருப்பலி.

புதன் காலை 0700 மணிக்கு திருப்பலி DMI Convent.

ஒவ்வொரு மாதமும் 7 -ஆம் தேதி செபமாலை அன்னையின் சிறப்பு நவநாள்.

திருவிழா : அக்டோபர் மாதத்தில்.

மண்ணின் மைந்தர்கள் :

அருட்பணி கிறிஸ்டோபர்

அருட்சகோதரி கேதரின்
அருட்சகோதரி சிசிலியா

வழித்தடம் :
திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு செல்லும் வழியும், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியும் இணைக்கும் இடம் தான் மணவாளநகர்.

திருவள்ளூர் இரயில் நிலையத்திற்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

புனித செபமாலை அன்னை ஆலய வரலாறு

எனது பெயர் காமாட்சி. எனது மகன் ராஜா திடீரென்று காய்ச்சலினால் பாதிக்கப்பட்டான். மருத்துவர்களை சந்தித்த பொழுது பல மருந்துகளை கொடுத்தார்கள். ஆனால் நோய் குணமாகவில்லை. இறுதியில் அது டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்யப்பட்டது...! இரத்த அணுக்கள் மிகவும் குறைந்து விட்டதால் எனது மகன் உயிர் பிழைப்பது மிகவும் அரிது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்...! நான் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய போது, என் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் சொன்ன பதில் “மாதா”.

ஆம்.., நானும் என் வீட்டாரும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து செபமாலை அன்னை கெபியில் முழந்தாள் படியிட்டு செபித்தோம்...! அந்த தாயின் பரிந்துரையால் என் மகன் பிழைத்துக் கொண்டான்...! மரியே வாழ்க..! தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறான் என்று சாட்சியம் பகர்ந்தாள் அந்த தாய். மரியே வாழ்க! “அன்னையின்றி வெற்றியில்லை, அன்னையிருக்க தோல்வியில்லை” என்ற கூற்று அத்தாயின் வாழ்வில் மெய்யானது.

ஒவ்வொரு நாளும் பல சமய மக்களும் வந்து செபிக்கும் இடமாகவும், அன்னையின் பரிந்துரை வழியாக இறையாசீரை பெறும் இடமாகவும் மணவாளநகர் புனித செபமாலை அன்னை ஆலயம் திகழ்கிறது.

ஆலயத் தோற்றமும், வளர்ச்சிப் பணிகளும் :

திருவள்ளூர் அருகே மணவாளநகர் பகுதியில் கிறிஸ்தவ இறைமக்கள் சுமார் 1960 ம் ஆண்டு முதல் வசித்து வருகின்றனர். இம்மக்கள் தங்கள் ஆன்மீகத் தேவைகளுக்கு திருவள்ளூர் புனித பிரான்சிஸ் சலேசியார் பங்கு ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி M. அருள்ராஜ் அவர்களின் முயற்சியால் மணவாளநகரில் கல்லறைத் தோட்டத்திற்கு நிலம் வாங்கப் பட்டது. அப்போது இங்கு சுமார் 40 கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆலயம் தேவை என்பதை பங்குத்தந்தை அவர்கள் உணர்ந்தார்கள்.

அருட்பணி இன்னையா அவர்கள் கொடுத்த நிதியுதவியை மறை மாவட்ட ஆயர் மூலமாக பெற்று, அதில் மணவாளநகரில் ஆலயம் கட்ட இடம் வாங்க தீர்மானிக்கப் பட்டது. 1991-ஆம் ஆண்டு அருட்பணி M. அருள்ராஜ், அருட்பணி இருதயராஜ், அருட்பணி பீட்டர் தும்மா ஆகியோரின் தலைமையில் நிலம் வாங்கப்பட்டு, அருட்பணி இன்னையா அவர்களின் விருப்பத்திற்கிணங்க மணவாளநகரில் புனித செபமாலை அன்னை ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

1994 -இல் அருட்பணி M. அருள்ராஜ், அருட்பணி A. அருள்ராஜ் தலைமையில் ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் கஷ்மீர் ஞானாதிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

29-06-1999 அன்று மணவாளநகர் பங்கு ஆலயமாக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி அமலதாஸ் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
தொடர்ந்து அருட்பணி M. B அருள்ராஜ் (2000-2001)அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

2001 முதல் இப்பங்கினது திருவள்ளூர் பங்குத்தந்தை அருட்பணி காணிக்கை ராஜ் அவர்களின் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. 2002 ம் ஆண்டு முதல் பங்கின் பொறுப்பு MSFS சபையிடம் ஒப்படைக்கப் பட்டது.

அருட்பணி P. S ஜோசப் MSFS அவர்கள் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் சிறப்பாக பங்கை வழி நடத்தினார்கள். அழகான மணிக்கூண்டு கட்டப்பட்டது. கிளைப்பங்காக இணைக்கப்பட்ட பஞ்சமத்தாங்கல் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு புதிய ஆலயம் கட்டப் பட்டது.

தொடர்ந்து 2006 முதல் பணியாற்றிய (ஆறு ஆண்டுகள்) அருட்பணி S. கிறிஸ்துராஜ் MSFS பணிக்காலத்தில் 20 ஜெபமாலை கெபிகள், பங்குத்தந்தை இல்லம் ஆகியன கட்டப்பட்டன. கோபுரத்தை உயர்த்தி ஜெபமாலை வடிவம் அமைக்கப்பட்டது. ஆலய நுழைவாயில், புதிய பீடம் அமைக்கப் பட்டது. மேலும் நிலங்கள் வாங்கப்பட்டன.

2012 இல் பொறுப்பேற்ற அருட்பணி தோனி MSFS அவர்கள் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். இவரது பணிக்காலத்தில் கல்லறை தோட்டத்தின் தரைதளமானது உயர்த்தப்பட்டது. பங்கில் மூன்று இடங்களில் மாதா கெபி திறக்கப்பட்டது. ஆலயத்தை சுற்றிலும் சிமென்ட் கல் போடப்பட்டது. தொடர்ந்து 15 ஆண்டுகள் MSFS சபையின் பராமரிப்பில் இருந்த பங்கு 2017இல் மறை மாவட்டத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பிறகு 2017-ல் சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயரின் வழிகாட்டுதலோடு உயர்மறை மாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை. பிரதீப் கிறிஸ்டோபர் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார். இவ்வாலயம் இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மக்களுக்கும் ஆன்மீக, கல்வி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளத்தின் வழிகாட்டியாக விளங்குகிறது.

ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி செபமாலை அன்னையின் நவநாள் கொண்டாடப் படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு செபமாலை, தேர்பவனி, மன்றாட்டு மாலை, திருப்பலி, சாட்சியப் பகிர்வு மற்றும் திருஎண்ணெய் பூசுதல் நிகழ்வு நடைபெறும்.

குறிப்பாக 07-10-2019 அன்று ஆலயத்தின் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

வெள்ளிவிழா கொடிமரம் வைக்கப்பட்டுள்ளது.

சமூக நலக்கூடம் கட்டப்பட்டது.

20 தேவ இரகசிய கெபிகள் அழகுற புதுப்பிக்கப் பட்டது.

நினைவரங்கம் புதுப்பிக்கப்பட்டது.

ஆலயம் வண்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டது. இவையனைத்தும் பங்குத்தந்தை அருட்பணி பிரதீப் கிறிஸ்டோபர் அவர்களின் வழிகாட்டுதலில் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறப்புப் பணிகள்:

கல்விப் பணி DMI அருட்சகோதரிகளால் போளிவாக்கம் DMI St. Joseph’s Global School வழியாக வழங்கப்படுகிறது.

வெங்கத்தூர் அருகே காருண்யா நகரிலுள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு சிறப்பு சேவை.

சத்திரம் அருகே மேட்டுச்சேரியில் உள்ள சிறைக்கைதி குடும்பங்களுக்கு (8 குடும்பங்கள்) சிறப்பு செப உதவி மற்றும் சேவை.

அனைவரும் பயன்பெறும் விதத்தில் ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடத்தப்படுகிறது.

மாலை நேர பள்ளி மூலம் சுமார் 50 சிறுவர், சிறுமியர்கள் பயனடைகின்றனர்.

மரியாயின் சேனை உறுப்பினர்களால் அனைத்து மதத்ததினர் இல்லங்களும் சந்திக்கப்பட்டு செபம் சொல்லப்படுகிறது.

மரியாயின் சேனை
புனித வின்சென்ட் தே பவுல் சபை
மறைக்கல்வி
பீடச்சிறார்
பாடகற் குழு
இளையோர் குழு - ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

செபமாலையின் மகிமை:
“செபமாலை பக்தி முயற்சிகளில் பங்கேற்கும்போது, நமது தாய் மழலைகளுக்கு கற்று கொடுப்பது போல, ஒவ்வொரு மறைபொருளாக நமக்கு விளக்கி சொல்கிறார்” – திருத்தந்தை 13-ஆம் லியோ.

செபமாலை என்றால் ரோஜா மலர்களினால் செய்யப்பட்ட கிரீடம் என்பது பொருள். ஒவ்வொரு முறையும் ‘அருள்நிறை செபம்’ சொல்லப்படும் பொழுது தனக்கு ஒரு ரோஜா மலர் கொடுக்கப்படுகிறது என்றும், ஒரு முழு செபமாலை சொல்லப்படும் பொழுது தனக்கு ஒரு ரோஜாவினால் ஆன கிரீடம் சூட்டப்படுகிறது என்றும் தேவ அன்னை பல மக்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறாள்.

ரோஜா – மலர்களின் அரசியாய் இருப்பது போல், செபமாலை – அனைத்து பக்தி முயற்சிகளிலும் சிறந்ததாய் விளங்குகின்றது. ஆண்டவர் இயேசுவின் மீட்பு மறையுண்மைகள் அனைத்தும் செபமாலையில் அடங்கி உள்ளதால் பக்தி முயற்சிகளில் சிறந்தது. அன்னையை போன்று அது ஒரு எளிமையான, தாழ்ச்சி நிறைந்த செப முயற்சி.

செபமாலையின் வழியாக நாம் நமது அன்னையின் பரிந்துரையை வேண்டுகின்றோம். இதில் ஒரு அற்புதமான செயல் என்னவென்றால், நம்மோடு இணைந்து அன்னையும், வானதூதர்களும் செபிக்கின்றனர். நமது அன்னையின் வேண்டுதல் எதனையும், நம் ஆண்டவர் இயேசு மறுப்பதில்லை, மறுத்ததில்லை. தனது ஒவ்வொரு காட்சியின் வேளையிலும், இந்த உலகத்தின் தீமைகளைத் தகர்த்தெறிய, செபமாலை என்னும் சக்தி வாய்ந்த கருவியை பயன்படுத்த அன்னை அறிவுறுத்துகிறாள்.

எனவே அனுதினமும் செபமாலை செபிப்பதன் வழியாக நம்மிடமிருந்தும், நாம் வாழும் இடங்களிலிமிருந்தும் பலவித ஆபத்துகளையும், தீமைகளையும், சீரழிவுகளையும் தகர்த்திட மற்றும் தடுத்திட முடியும்.

“செபமாலை செபிப்போம் - ஜெயம் பெறுவோம்”

Carry your ROSARY everyday:
When you carry a Rosary, satan has a headache;
When you use it, he collapses;
When he sees you praying it, he faints;
Let us pray the rosary every time, so that he’ll keep fainting.

அன்னையின் அரவணைப்பில் அருட்பணி. பிரதீப் கிறிஸ்டோபர்.