229 வியத்தகு வியாகுல மாதா ஆலயம், மலையன்குளம்


வியத்தகு வியாகுல மாதா ஆலயம்

இடம் : மலையன்குளம்

மாவட்டம் : திருநெல்வேலி

மறை மாவட்டம் : தூத்துக்குடி

பங்குத்தந்தை : அருட்பணி சி. தே ஜஸ்டின்

நிலை : திருத்தலம்

கிளைகள் : 4

1. நெல்லையப்பபுரம்
2. சகாயபுரம்
3. பத்தினிப்பாறை
4. தோட்டாக்குடி

குடும்பங்கள் : 30
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : மே மாதம் 20 -ம் தேதி கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் நடைபெறும்.

மலையன்குளம் புனித வியாகுல அன்னை திருத்தல வரலாறு :

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு என்னும் கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் கிழக்காக அமைந்துள்ள அமைதியான சிற்றூர், மலையன்குளம். இங்கு கிறிஸ்தவர்களும் இந்துக்களும் சாதி, மதவேறுபாடின்றி உடன்பிறப்புகள் போல இணைந்து வாழ்கின்றனர். சமூக சமய நல்லிணக்க மனநிலை இங்கு வாழும் மக்களிடையே இன்றுவரை ஆழமாக வேரூன்றியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் புனித வியாகுல அன்னையே பாதுகாவலர்! அவளருளால் மலையன் குளத்தில் வசந்தம் மலர்ந்தது.

ஒரு காலத்தில் காடுகள் சூழ்ந்து மறைத்திருந்த மலையன்குளம், இன்று சென்னை, பெங்களூர், திருச்சி, நாகர்கோயில், கேரளம் போன்ற தொலைதூர இடங்களிலிருந்து வரும் பக்தர்கள் தரிசித்துச் செல்லும் புகழ்மிக்க ஒரு திருத்தலமாகத் திகழ்கிறது. புனித வியாகுல அன்னை இத்திருத்தலத்தின் நாயகியாக விளங்குகின்றார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் மற்றும் வாணிப நோக்குடன் கடலோரத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த கிறிஸ்தவ மக்கள் மலையன்குளத்தில் குடிசை அமைத்து வாழத் தொடங்கினர். ஒரு சில குடும்பங்கள் அருகிலுள்ள தெய்வ நாயகபேரி என்ற இடத்திலும் குடியேறினர். இவ்விரு சிற்றூர்களுக்கும் பொது ஆலயமாக உருவானதே மலையன்குளம் புனித வியாகுல அன்னை ஆலயம்.

ஆரம்பத்தில் இது ஒரு குடிசைக் கோயில். ஒரு தீ விபத்தில் அழிந்து போனதினால், அதன் நினைவாக மக்கள் அங்கு ஒரு குடிசை மட்டும் எழுப்பி கொட்டகை அமைத்து வழிபாடு செய்து வந்தனர். காலப்போக்கில் தெய்வ நாயகபேரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் மலையன் குளத்திலேயே குடியேறியனர். சிலர் தொழில் நலம் கருதி இலங்கைக்குச் சென்று விட்டனர்.

இலங்கை வாழ் மலையன்குளம் மக்களும் மற்றும் மலையன் குளத்தின் சுற்று வட்டாரத்திலுள்ள பேய்க்குளம், பத்தினிப் பாறை போன்ற ஊர்களில் சிதறி வாழ்ந்த மக்களும் ஒருங்கிணைந்து நிதி திரட்டி, மலையன்குளத்தில் புனித வியாகுல அன்னைக்கு புதிதாக கற்கோயில் ஒன்றை நிர்மாணித்தார்கள். நிதி பற்றாக்குறையினால் ஆலயமானது கோபுரமின்றி அரைகுறையாக நின்றாலும் பிறகு, இலங்கையிலும் உள்ளூரிலும் வாழும் மக்கள் தாராளமாக அள்ளிக் கொடுத்த நிதி உதவியினால் ஆலயம் முழுமை பெற்றது; 1903ம் ஆண்டில் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

1880ம் ஆண்டிலேயே இயேசுவின் திரு இருதயத்திற்கும் இங்கு ஒரு சிற்றாலயம் இருந்ததாக முதியோர் கூறுகின்றனர். மதுரை மிஷன் வரலாற்றுப்படி மலையன்குளம் 1914ம் ஆண்டில் அணைக்கரை பங்கின் ஓர் இணையூராக இருந்தது. தூத்துக்குடி மறை மாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு, திபூர்சியுஸ் ரோச் ஆண்டகை அவர்கள் 1937ம் ஆண்டு மே மாதம் முதல் நாள் அணைக்கரை பங்கிலிருந்து நாங்குநேரியைப் பிரித்து அதனைத் தனிப்பங்குத்தளமாக ஏற்படுத்தினார்கள். அதன் காரணமாக மலையன்குளம் நாங்குநேரியின் 57 இணையூர்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

1999ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. எஸ்.டி.அமல்நாதர் ஆண்டகை நாங்குநேரிப் பங்கின் வடபாகத்தைப் பிரித்து மலையன்குளம் ஊரை ஒரு பங்குத்தலமாக ஏற்படுத்தினார்கள்.

மாபெரும் ஜுபிலி 2000 ஆண்டிலே மலையன்குளம் மாதா திருத்தலத்திற்கு இத்தாலியிலிருந்து சிறப்பு அன்பளிப்பாக அன்னை பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் ‘முக்காடு’ என்னும் திருமேனித் துகிலின் ஒரு சிறுபகுதி கிடைக்கப் பெற்றது. இத்தாலி நாட்டில் கியேத்தி மறை மாவட்டப் பேராயர் மேதகு கர்தினால் வின்சென்கோ பாஜியாக்கோ ஆண்டகை வழியாக கியேத்தி மறைமாவட்ட பூர்ச்சிநகர் பங்குத்தந்தை அருட்திரு, தொன்மிக்கேலே கல்லூச்சி அவர்கள் மலையன்குளம் பங்குத்தந்தை அருட்திரு. ஜெரோசின் அடுத்தாரைக் காத்தார் அவர்களிடம் தந்தார். இன்று மாதா பீடத்தில் அழகிய பொற்கதிர் பாத்திரத்தில் இத்திருப்பண்டம் நிறுவப்பட்டுள்ளது.

புனித வியாகுல அன்னையின் பாதுகாவலில் வனப்புறும் மலையன்குளத்தை ஒரு பிரபல திருத்தலமாக்கிய சிறப்பு இங்கு பணியாற்றிய பங்குத் தந்தையர்களையே சாரும். அருட்திரு. விஜய் அமல்ராஜ் எஸ்.வி.டி.அடிகளார், புனித வியாகுல அன்னையின் திருப்பாதங்களை நனைத்துக்கொண்டு ஓடும் தீர்த்த ஊற்றினைப் பெருக வைத்தார். பக்தர்கள் இந்தத் தீர்த்தத்தை பிணிபோக்கும் மருந்தாக அருந்தி அற்புதங்கள் காண்கின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 10ம் நாள் கொண்டாடப்பட்டு வந்த புனித வியாகுல அன்னையின் திருவிழாவை தற்போது மே மாதம் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.

மலையன்குளம் இளைஞர் இயக்கத்தினர் ஒருங்கிணைந்து திருவிழா காலத்தில் மக்கள் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக பணி செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் புனித வியாகுல அன்னையின் திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கெல்லாம் நவநாள் காலத்தில், சிறப்பாக திருவிழாவுக்கு முந்திய இரவிலும் திருவிழா தினத்தில் காலையிலும் ‘அன்னையின் விருந்து’ வழங்கும் நல்லதோர் அன்புப் பணியை இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த இளம் செயல் வீரர்கள் இன்றுவரை ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும் நிர்வாகக் கமிட்டியின் ஆதரவுடனும் செயல்படுத்தி, வெளியூர் பக்தர்களை மகிழ்விக்கின்றனர்.

மலையன்குளம் மாதா திருத்தலத்தில் மாதா காட்சி கொடுத்த அற்புதங்கள்

1. மலையன்குளம் மாதா கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில், திருத்தலத்தின் உள்ளே உள்ள மலைப்பீடத்தில் அமர்ந்துள்ள மாதா சிரித்த முகத்துடன் உள்ளுர் மக்கள் மூன்று நபர்களுக்கு காட்சி தந்துள்ளார்கள். அன்னை கொடி மரத்தில் காட்சி தந்த நாள் முதல் கொடிமரத்தில் மஞ்சள்கயிறு கட்டி ஜெபிக்கும் இளம் உள்ளங்களுக்கு அற்புதமாக திருமணம் நடைபெறுகிறது.

2. கொடி மரத்தில் பக்தியோடு தொட்டில் கட்டி ஜெபிக்கும் தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கிறது.

3. முருகன் என்னும் சமையல்காரருக்கு மாதா காட்சி தந்து கை நிறைய அரிசியை அற்னுதமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

மலையன்குளம்; மாதா திருத்தலத்திற்கு சனிக்கிழமை தோறும் திருப்பலிக்கு வருகின்ற அன்னையின் பிள்ளைகளுக்கு மலையன்குளம் மக்கள் சார்பாக மதியம்; அசன உணவு வழங்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் அசன உணவை நிறுத்தி விடலாம் என்று 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊர்க் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின் அனைவரும் உறங்கச் சென்றனர்.

அன்றைய தினம் திருத்தலத்தில் அன்னையின் அசன உணவை சமைத்துக் கொடுக்க வந்திருந்த சமையல்காரர்கள் தம் பணி முடித்து ஆலயத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுள் முருகன் என்னும் இந்துமத சகோதரரை மாதா எழுப்பியுள்ளார்கள். கண் விழித்த முருகன் நான் சமையல்காரன் எனக்கு எதுவும் தெரியாது. மலையன்குளம் மக்கள்; அங்கே படுத்து உறங்குகிறார்கள். அவர்களிடம் கேளுங்கள் என்றார். அதற்கு மாதா, உன்; கைகளை நீட்டு என்றார். முருகனும் தன் கைகளை நீட்டி ஏந்த அவரது கைகள் நிறைய அரிசியை அள்ளிக் கொடுத்து, “வருகிற மக்களுக்கு வயிறார உணவு கொடுக்கச் சொல்” என்று கூறிவிட்டு அன்னையின் திருச்சுரூபத்தில் மறைந்து விட்டார்கள்.

அதைப் பார்த்து முருகன் அலறினார். கைகள் உதற பொன்னிற புகை அரிசியில் இருந்து வருகிறது. கோயில் மணி ஒலிக்க இரவு ஒரு மணிக்கெல்லாம் ஊர் மக்கள் ஒன்றாய் கூடினர். நடந்ததைக் கேட்டு, “மரியே வாழ்க!” என்று கண்ணீரோடு கதறினர். விடிய விடிய அன்னைக்கு நன்றி கூறி ஜெபித்தனர். ஊர் கூட்டத்தில் எடுத்த முடிவிற்கு பயந்தனர். அசன உணவை நிறுத்த யாருக்கு தைரியம் வரும்? அன்றிலிருந்தே தொடர்ந்து உணவு தர முடிவு செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த நிமிடம் வரை சனிக்கிழமை தோறும் அன்னையின் அற்புத உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அன்னை மரியாளின் அருள் உதவியினாலும், பக்தர்களின் உதவியோடும் அற்புதமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல அன்னையின் திருவிழாவின்; துவக்க நாளான மே 20 ம் நாள் கொடியேற்றம் அன்று மதியமும், 9ம் திருவிழாவான மே 28ஆம் நாள் இரவும், 10ஆம் திருவிழாவான மே 29ஆம் நாள் காலையும் அன்னையின் பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அன்னையின் உணவுக்கு ஏராளமான பக்தர்கள் அரிசியைக் காணிக்கையாக கொடுப்பது அன்னையின் ஆலயத்தில் ஓர் அற்புதம் தான்.!.

4. அருட்சகோதரி ஒருவருக்கு திருத்தலத்தில் உள்ள நற்கருணைப் பேழையிலிருந்து மாதாவின் சுரூபத்திற்கு ஓர் ஒளி ஊடுருவிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார்கள். பல அருட் சகோதரிகள் ஒன்றாக இருந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் போது இந்த அருட் சகோதரிக்கு மட்டும் தெரிந்தது ஓர் அற்புத ஒளி.

5. ரொசிட்டா என்ற பெண்ணுடன் 06.01.2014ல் மாதா அற்புதமாகப் பேசியது நற்சுகம் கிடைக்கப் பெற்றது இன்றும் ஓர் சாட்சியாகவே உள்ளது.

6. மண்ணின் மைந்தர் அருட்தந்தை ஆ.பு. விக்டர் அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது மாதாவின் பாதத்தில் தானாக பொங்கி எழுந்த நீரூற்றைப் பார்த்து சிலர் பரவசமடைந்தனர்.

7. மாதாவின் அற்புத மாமருந்தைக் கொண்டு ( தீர்த்தம் ) அனேகர் நோயிலிருந்து சுகம் பெற்று சாட்சி சொல்லுகின்றனர்.

இவ்வாறு இன்னும் எத்தனையோ எண்ணற்ற அற்புதங்களும், அதிசயங்களும் மக்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாருங்கள் அன்னையின் ஆசீரை பெற்று அனுபவியுங்கள்.

வியாகுலம் நிறைந்த தேவதாயார் தம்முடைய திவ்விய குமாரன் சிலுவையில் அறையுண்டிருந்ததைப் பார்த்து நின்று அழுதுகொண்டிருந்தாள். வாக்குக்கெட்டாத வியாகுலவாள் தமது இருதயத்தில் ஊடுருவப்பட்டு ஆறுதல் அற்று நின்றாள். திவ்விய குமாரனுக்குத் தாயான இந்த ஆசீர்வதிக்கப்பட்டவள் சொல்வதற்கு அரிதான துக்க துயரத்தை அடைந்திருந்தாள். திவ்விய தாயாரே! உம்முடைய திருக்குமாரன் சிலுவையில் பாடுபட்ட திருக்காயங்களை எங்கள் இருதயத்தில் பதித்தருளும். வியாகுலம் நிறைந்த கன்னிகையே! கிறிஸ்து நாதருடைய பாடுகளினால் நாங்கள் ஈடேற்றம் பெறத்தக்கவர்களாய் இருக்கும்படி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.