165 தூய அடைக்கல அன்னை திருத்தலம், ஆண்டிப்பட்டி


தூய அடைக்கல மாதா திருத்தலம்

இடம் : ஆண்டிப்பட்டி, ஆலங்குளம்.

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை

நிலை : திருத்தலம் (கிளைப்பங்கு)
பங்கு : உலக மீட்பர் ஆலயம், ஆலங்குளம்.

குடும்பங்கள் : 60
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : நண்பகல் 12.00 மணிக்கு

பங்குத்தந்தை : அருட்பணி அந்தோணி ராசு

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 08 ம் தேதி நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள்.

வரலாறு :

கி.பி 1684ல் தென் தமிழகத்தின் மிகப்பெரிய மறைபணித்தளமாக காமநாயக்கன்பட்டி உருவானது.

தெற்கே இராஜாவூர் வரை அது நீண்டிருந்தது.

கிளைப்பங்குகளாக ஆண்டிப்பட்டி, தென்காசி, சேர்ந்தமரம், வடக்கன்குளம், அணைக்கரை, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகியவை இருந்தன.

காமநாயக்கன்பட்டியில் பணிபுரிந்த அருட்பணி ஜோசப் வியாரா உடன் 1711 முதல் 1714 முடிய அருட்தந்தை பெஸ்கி (வீரமாமுனிவர்) இணைந்து பணியாற்றினார்.

21-12-1714 அன்று ஆண்டிப்பட்டியில் புனித தோமையார் திருவிழாவை நிறைவேற்றி, கிறிஸ்துமஸ் விழா தயாரிப்பில் ஈடுபட்ட பொழுது ராணி மங்கம்மாள் - ன் படையினரால் கைது செய்யப்பட்டார்.

தமிழறியா நிலையில் இலத்தீனில் பேசிய அவரை பில்லி சூனியராக பாவித்து மரண தண்டனைக்கு தீர்ப்பிட்டனர்.

எட்டயபுரம் ஜமீன் ராஜாவின் விவசாயப் பண்ணை அதிகாரி திரு. சங்கரப்ப நாயக்கரின் குறுக்கீட்டால் அருட்தந்தை பெஸ்கி உயிர் தப்பினார்.

மனவேதனையுடன் காமநாயக்கன்பட்டி சென்று கொப்பம்பட்டியில் தமிழ் கற்றார்.

பெஸ்கி - வீரமாமுனிவர் ஆனார்.

தமிழறியாதவர் தமிழை வளர்த்தார். புரியாத சடங்குகளை புரிய வைத்தார்.

வீரமாமுனிவர் தமிழராகிட ஆண்டிப்பட்டி ஒரு முக்கிய காரணமாகும்.

கி.பி 1630 ஆம் ஆண்டிலேயே தூய அடைக்கல அன்னைக்கு ஆலயம் இங்கு கட்டப்பட்டது.

1713 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் கட்டிய பீடம் இன்றுவரை உள்ளது.

வீரமாமுனிவரை காப்பாற்றிய அன்னையின் அருளால் இன்றுவரை இத்திருத்தலத்தில் பல புதுமைகள் நடந்து வருகிறது.

வானம் பிளந்து மன்னா கொட்டியது போல, பூமி பிளந்து தரையில் இருந்து எண்ணெய் வரும் அதிசயம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

30-01-2016 அன்று அன்னையின் சொரூபத்தின் அடியில் எண்ணெய் ஊறியிருந்தது. அதை சுத்தம் செய்த போது மீண்டும் மறுநாள் எண்ணெய் வந்ததால், 01-02-2016 அன்று இரவு 12.00 மணி வரை சிறப்பு ஜெபம் நடத்தப்பட்டது. எதிர்பார்த்தது போல 02-02-2016 அன்று அதிக அளவில் எண்ணெய் வந்தது.

தொடர்ந்து இது போல பல நாட்களாக எண்ணெய் வழிந்தது.

இவ்வாறு அதிசய எண்ணெய் ஊற்றை தந்த தூய அடைக்கல அன்னையை நாடி பல இடங்களில் இருந்தும் மக்கள் வந்து அன்னையின் வழியாக இறைவனின் அருள் வளங்களை பெற்று செல்கின்றனர்.

வழித்தடம் : திருநெல்வேலி-யிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள ஆலங்குளம் வந்து அங்கிருந்து 2கிமீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது.