புனித அன்னம்மாள் ஆலயம்
இடம் : அபிஷேகப்பட்டி
மாவட்டம் : திருநெல்வேலி
மறைமாவட்டம் : பாளையங்கோட்டை
மறைவட்டம் : பாளையங்கோட்டை
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய அடைக்கல மாதா ஆலயம், திருநெல்வேலி டவுன்
பங்குத்தந்தை : அருள்பணி. மை. பா. சேசுராஜ்
குடும்பங்கள் : 20
அன்பியம் : 1
மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி
திருவிழா:
மே மாதம் 09-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை
வழித்தடம்:
நெல்லை டவுன் -தென்காசி சாலையில் அபிஷேகப்பட்டி அமைந்துள்ளது.
வரலாறு:
நெல்லையிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ள அபிஷேகப்பட்டி ஒரு சிறு கிராமம் ஆகும்.
இவ்வூரில் கி.பி 1917 ஆம் ஆண்டில் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர்.
வீரவநல்லூர் பங்குத்தந்தை அருள்பணி. குத்தூரியர் அடிகளாரின் முயற்சியால் கி.பி 1918 ஆம் ஆண்டு சிறு கூரைக்கோவில் கட்டப்பட்டது. ஊர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு விளைநிலங்கள் பெற்றுத் தரப்பட்டது.
கி.பி 1928 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு அருகே ஆர்.சி பள்ளிக்கூடம் உருவானது.
கி.பி 1930 ஆம் ஆண்டில் சில சமூக விரோதிகளால் ஆலயம் தீ இடப்பட்டது.
ஆலயம் சாம்பலான போதும் மரச்சிலுவை மட்டும் எவ்வித பாதிப்பின்றி இருந்தது. இன்றுவரை இந்த திருச்சிலுவை இறைமக்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.
கி.பி 1933 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு, சிங்கம்பாறை பங்கின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.
கி.பி 1963 ஆம் ஆண்டு பேட்டை தனிப்பங்கான போது, இவ்வாலயம் பேட்டை பங்கின் கீழ் வந்தது. பங்குத்தந்தை அருள்பணி. ஜார்ஜ் ஜோசப் சே.ச அவர்களின் வழிகாட்டுதலில் எண்ணற்ற ஆன்மீக, சமுதாய மறுமலர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிக்கூடமும் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
கி.பி 1968 ஆம் ஆண்டு பள்ளியானது ஓட்டு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. அருள்பணி. மரிய மிக்கேல், அருள்பணி. M. அருள், அருள்பணி. J. அருள், அருள்பணி. பீட்டர் மற்றும் பிற பங்குத்தந்தையர்கள் வழிகாட்டுதலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
1976 ஆம் ஆண்டு பள்ளிக்கு, கான்கிரீட் போடப்பட்டு, கூடுதல் கட்டிடமும் கட்டப்பட்டது.
1976 ஆம் ஆண்டு கொடிமரம் நிறுவப்பட்டது.
2005 ஆம் ஆண்டு பேட்டை பங்கிலிருந்து பிரிந்து திருநெல்வேலி டவுன் பங்கோடு இணைந்தது.
வழக்கமாக அன்னையின் திருவிழா ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வந்ததை மாற்றி, மக்களின் விருப்பத்திற்காக 2008 ஆம் ஆண்டு மே மாதம் 9 முதல் 18 வரை கொண்டாடப்படுகிறது.
பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணி சேவியர் அவர்களின் சிறப்பான வழிகாட்டலைத் தொடர்ந்து, அருள்பணி. அருள் அம்புரோஸ் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு கான்கிரீட் கூரை அமைத்து புதுப்பிக்கப்பட்டு, மேதகு ஆயர் A. ஜூடு பால்ராஜ் D.D, அவர்களால் 2011 ஆம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்டது. அருள்பணி. அந்தோணி அ. குரூஸ் பணிக்காலத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
2018 ஆம் ஆண்டு ஆலய 100 -வது ஆண்டு நினைவாக பங்குத்தந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ் அவர்கள் மேற்பார்வையில் மாதா கெபி மற்றும் சமையல்கூடம் கட்டப்பட்டு, மேதகு ஆயர் A. ஜூடு பால்ராஜ் D.D, அவர்களால் 2018 ஆம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்டது.
புதுமைகள்:
திருமணமாகி 17 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த பால்ராஜ் பாத்திமா தம்பதிகள், புனித அன்னம்மாளிடம் ஜெபித்து 2 ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.
அனைத்து சமயத்தை சேர்ந்தவர்களும், புனித அன்னம்மாளை நோக்கி நம்பிக்கையுடன் வேண்டிய போது, குழந்தை பாக்கியம் மற்றும் நோயிலிருந்து குணம், கல்வி ஞானம், வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் பெற்றனர். மேலும் எண்ணற்ற புதுமைகள் இவ்வாலயத்தில் நடந்து வருகின்றது.
அபிஷேகப்பட்டி ஆலய பாதுகாவலி புனித அன்னம்மாளின் ஆசி பெற அனைவரையும் அழைக்கிறோம்.
தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ்
தகவல் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்கள்