தூய கார்மல் அன்னை ஆலயம்
இடம் : வாவறை
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை : பங்குதளம்
கிளைகள் :
1. புனித அலங்கார அன்னை ஆலயம், குழிவிளை
2. புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோடு
3. புனித அந்தோணியார் ஆலயம், கோணசேரி
பங்குத்தந்தை : அருட்பணி மரிய இராஜேந்திரன்
குடும்பங்கள் : 950
அன்பியங்கள் : 15
ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு
திங்கள் திருப்பலி : கன்னியர் இல்லம் காலை 06.30 மணிக்கு
செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு
புதன் : மாலை 05.00 மணிக்கு நவநாள் திருப்பலி
திருவிழா : ஜூலை மாதத்தில் பத்து நாட்கள்.
வாவறை ஆலய வரலாறு :
பெல்ஜியம் நாட்டின் சமயப்பரப்பாளர்கள் (Missionaries) கி.பி 1721 ஆம் ஆண்டளவில் இப்பகுதியில் மறைப்பரப்பு பணி செய்ததின் பயனாக மக்கள் கிறிஸ்தவ மறையை தழுவியதாக வரலாறு கூறுகிறது.
கிபி 1873 -ல் கொல்லம் மறை மாவட்டத்தின் கீழ் வாவறை ஊரில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த ஆலயம் வேங்கோடு பங்குடன் இணைக்கப்பட்டது.
1912 -ல் களியக்காவிளை பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டது. 1914 ல் களியக்காவிளை பங்குத்தந்தை அருட்தந்தை இன்னோசென்ட் அவர்கள் வாவறை ஆலயத்திற்கு நிலம் வாங்க அன்றைய கொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்களிடம் அனுமதி பெற்று நிலம் வாங்கியதாகவும், இப்பகுதியில் கிறிஸ்தவம் வளர அருட்தந்தை அவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
1930 -ல் கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து கோட்டாறு தனி மறை மாவட்டம் ஆனபின், கோட்டாறு மறை மாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு லாரன்ஸ் பெரைரா அவர்களால் 1931 -ம் ஆண்டு வாவறை தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
துவக்க காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அருட்தந்தை இன்னோசென்ட் அவர்கள் ஒரு முறை தனது சொந்த நாடான பெல்ஜியம் சென்றுவர விரும்பினார்.
மக்கள் அவரை வில்வண்டியில் அமரச் செய்து "இன்னோசென்ட் தவமுனியே வாழ்க" எனப் புகழ்பாடி களியக்காவிளை வரைக்கும் சென்று வழியனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவர் கொச்சி சென்று கப்பலில் தனது தாய் நாட்டிற்கு பயணமானார். நடுக்கடலில் கப்பலில் சேதம் ஏற்பட்டு பயணிகள் பலர் கடலில் மூழ்கி இறந்தனர். அருட்பணி இன்னோசென்ட் அவர்கள் கடலில் நீந்த ஆரம்பித்தார். நீந்தும் போது கடலில் கிடந்த ஒரு மரத்தை பற்றியிருந்த உத்தரியத்தை அவர் பிடித்து நம்பிக்கையுடன், இறைவனிடம் தாம் காப்பாற்றப்பட்டால் தான் பணிசெய்த இடங்களில் ஆலயம் கட்டுவதாக கூறி மன்றாடினார். இவர் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட சிலர் காப்பாற்றி பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இவர் பெல்ஜியம் சென்று சேர்ந்ததும் இவரது ஆற்றலை கேள்விப்பட்ட அங்குள்ள மக்கள் அதிகமாக நிதியுதவி செய்தார்கள்.
அருட்தந்தை அவர்கள் சேகரித்த நிதியைக் கொண்டு மீண்டும் இங்கு வந்து வாவறையில் தமது செலவிலேயே ஆலயம் கட்டினார் என்றும், இன்று ஆலயத்தில் காணப்படும் மரத்தால் ஆன கார்மல் அன்னை சொரூபம் பெல்ஜியத்திலிருந்து இவரால் கொண்டு வரப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.
ஆலயமணி :
வாவறை பங்கின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி ஸ்டீபன் நசரேத் (1931-1936)அவர்களின் முயற்சியால் பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆலயமணி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு சமயத்தில் ஆலயத்தினுள் புகுந்த திருடன் விலையுயர்ந்த பொருட்களையும், காணிக்கைகளையும் திருடும் போது ஆலயமணி தானாக அடித்து பங்கு மக்களை விழிப்படையச் செய்து திருடனை அடையாளம் கண்டதாகவும் கூறப்படுகிறது.
பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்டீபன் நசரேத். அருட்தந்தை அந்தோணிமுத்து அவர்கள் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு நிலங்கள் வாங்கி சேர்க்கப்பட்டதுடன் பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன.
அருட்பணி ஞானப்பிரகாசம் பணிக்காலத்தில் 1957 ல் புதிய ஆலயம் கட்டப்பட்டு 1958 ல் மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் இவரது அரிய முயற்சியால் 1958 ல் பள்ளியானது உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. இவர் இரண்டாம் முறையாக 1999 -ல் பொறுப்பேற்று 2000 ம் வரை சிறப்பாக செயலாற்றினார்கள்.
1974 -ல் பொறுப்பேற்ற அருட்பணி அத்னேசியஸ் E. ரெத்தினசுவாமி அவர்கள் கார்மல் சபை அருட்சகோதரிகளை வரவழைத்து 1975 -ல் அவர்களுக்காக சகாயமாதா அன்பு இல்லத்தை ஆரம்பித்தார்கள்.
1978 ல் பொறுப்பேற்ற அருட்பணி அருட்பணி மார்ட்டின் S. அலங்காரம் அவர்கள் முயற்சியால் 1978- ல் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
1980 ல் பங்குத்தந்தையான அருட்பணி J. G ஜேசுதாஸ் அவர்கள் பங்கு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த கார்மல் அன்னை மக்கள் முன்னேற்ற சங்கம் என்னும் அமைப்பை பதிவு செய்து, அதன் சார்பில் மவுண்ட் கார்மல் நெசவாளர் கூட்டுறவு சங்கம், தட்டச்சு மையம், பால் விற்பனை மையம் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை ஆரம்பித்து செயல்பட வைத்தார்.
அருட்பணி அருள் தேவதாசன் பணிக்காலத்தில் ஆலயத்தின் இரு பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 1988 ல் பேராயர் மேதகு எம் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இவரது முழு முயற்சியால் 1990 ல் மேல்நிலைப்பள்ளிக்கு கணிப்பொறி பிரிவு கட்டிடம் மற்றும் வேதியியல் பிரிவு கட்டிமும் கட்டப்பட்டது.
அருட்பணி ஜோக்கிம் பணிக்காலத்தில் தண்ணீர் வசதி செய்ய வேண்டிய ஆயத்தப் பணிகளை முழு மூச்சாக செய்தார்கள்.
அருட்பணி மரிய வில்லியம் பணிக்காலத்தில் கிணறு தோண்டப்பட்டு நல்ல தண்ணீரும் கிடைத்தது.
அருட்பணி பத்றோஸ் பணிக்காலத்தில் கூட்டு குடிநீர் திட்டம் 15-08-1997 ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் ஆலயத்திற்கென்று வெளிஅரங்கம் கட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, இவரைத் தொடர்ந்து தற்காலிக பங்குப்பணியாளராக செயல்பட்ட அருட்பணி ஞானப்பிரகாசம் அவர்கள் பணிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
அருட்பணி ஜார்ஜ் அவர்கள் பணிக்காலத்தில் ஆயர் இல்ல நிதியுதவியுடன் மேல்நிலைப்பள்ளிக்கு 14 வகுப்பறைகள் கொண்ட மாடிக்கட்டிடம் கட்டப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அருட்பணி V. பஸ்காலிஸ் பணிக்காலத்தில் ஆலயத்தினுள் ஒலி ஒளி அமைப்பு மேம்படுத்தப்பட்டது.
2003 ல் பொறுப்பேற்ற அருட்பணி S. வின்சென்ட் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு ஆலய கட்டுமான பணிக்கான நன்கொடை வசூலிக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
2004 ல் பொறுப்பேற்ற அருட்பணி S. அருளப்பன் பணிக்காலத்தில் ஆலயத்தில் மிகச்சிறந்த புதிய நற்கருணை பேழை வைக்கப்பட்டதுடன் மக்களை ஜெப வாழ்வில் ஈடுபடுத்தி வழி நடத்தினார்.
2005 -ல் பொறுப்பேற்ற அருட்பணி மனோகியம் சேவியர் அவர்கள் ஆலய வழிபாட்டில் பங்கு மக்களை அதிகமாக்கினார்.
2006 ல் பொறுப்பேற்ற அருட்பணி S. வின்சென்ட் ராஜ் அவர்களது முயற்சியால் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மேற்கூரை வார்க்கப்பட்டு ஆரம்ப கட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது.
தொடர்ந்து 2009 ல் அருட்பணி சேகர் மைக்கேல் அவர்கள் பொறுப்பேற்று, அவரது தீவிர முயற்சியால் நன்கொடைகள் அதிகமாக வசூலிக்கப்பட்டு ஆலய கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு 16-07-2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புனித பிரான்சிஸ் ஆரம்பப்பள்ளி :
பெல்ஜியம் மறை பரப்பாளர்களால் கிறிஸ்தவத்தை தழுவிய இப்பகுதி மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருந்ததைக் கண்டு, அவர்களது கடின முயற்சியால் 1902 - ல் ஒரு சிறிய ஓலைக் கொட்டகையில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆரம்பப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1938 வரை கேரளா அரசின் மானியத்துடன் செயல்பட்டது. நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட பின் 1961- ல் மீண்டும் ஆரம்பப்பள்ளியாக தனித்து செயல்படத் தொடங்கியது.
புனித பிரான்சிஸ் உயர்நிலைப் பள்ளி :
1951 -ல் பள்ளி தாளாளர் பொறுப்பேற்ற அருட்பணி M. ஞானபிரகாசம் அவர்கள், இப்பகுதி மாணவர்கள் நடுநிலைத் தேர்வு எழுதிய உடன் அத்துடன் படிப்பை முடித்துக் கொள்வதை கண்ணுற்ற அருட்தந்தை அவர்கள், மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களிடம் தெரிவித்து தனது முயற்சியாலும், பங்கு மக்களின் முயற்சியாலும் 1958 ல் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1960- ல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உழைப்பால் வாவறைக்கு இணைப்பு சாலைகள் அமைக்கப் பட்டது.
புனித பிரான்சீஸ் மேல்நிலைப்பள்ளி :
1978 ல் அருட்பணி S. அலங்காரம் அவர்களின் முயற்சியால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியானது தடகள விளையாட்டுப் போட்டியில் குமரி மாவட்டத்தில் மிகச் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை அதிகரிக்க 2005-2006 ம் கல்வியாண்டில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமான விளையாட்டு உபகரணங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. 2007-2008 ம் கல்வியாண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒன்றரை இலட்சம் செலவில் விளையாட்டு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வாங்கி வருவது தனிச் சிறப்பு.
புனித சகாய மாதா அன்பு இல்லம் :
30-07-1977 ல் வாவறை பங்கில் அருட்சகோதரி பெனட் அவர்கள் தலைமையில் மூன்று அருட்சகோதரிகளோடு உதயமானது சகாயமாதா அன்பு இல்லம்.
சகாயமாதா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி :
1978 -ல் கார்மல் சபை அருட்சகோதரிகளால் துவக்கப்பட்டது.
மண்ணின் இறை அழைத்தல்கள் :
அருட்பணியாளர்கள்:
1. Fr ஜோசப்
2. Fr R. லாரன்ஸ்
3. Fr ஜார்ஜ்
4. Fr சின்னப்பர்
5. Fr கிறிஸ்டோபர்
6. Fr S. லாரன்ஸ்
7. Fr வர்க்கீஸ்
8. Fr ஜெயபால்
9. Fr பிரான்சிஸ் மரிய இருதயம்
10. Fr ஆன்றோ ரெக்ஸ்
11. Fr மார்ட்டின் (சூழால் பங்குத்தந்தை)
அருட்சகோதரர்கள் :
1. Bro பிரான்சீஸ்
அருட்சகோதரிகள் :
1. Sister சிசிலி
2. Sister பியாட்ரிக்ஸ்
3. Sister நிவாஸ்
4. Sister ஸ்டெல்லா மேரிஸ்
5. Sister ஞானசெல்வம்
6. Sister கிறிஸ்டல்
வாவறை 1931 ல் தனிப் பங்கானதிலிருந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Fr ஸ்டீபன் நசரேத்
2. Fr லூயிஸ் வறுவேல்
3. Fr வர்க்கீஸ்
4. Fr அந்தோணிபமுத்து
5. Fr வென்செஸ்லாஸ்
6. Fr பர்னபாஸ் நேவிஸ்
7. Fr ஞானபிரகாசம்
8. Fr செபாஸ்டின்
9. Fr அந்தேனிசியஸ் ரெத்தினசுவாமி
10. Fr மார்ட்டின் அலங்காரம்
11. Fr ஜேசுதாஸ்
12. Fr தேவதாசன்
13. Fr அருள் தேவதாசன்
14. Fr ஜோக்கிம்
15. Fr மரிய வில்லியம்
16. Fr பத்றோஸ்
17. Fr ஜார்ஜ்
18. Fr பஸ்காலிஸ்
19. Fr வின்சென்ட்
20. Fr அருளப்பன்
21. Fr மனோகிம் சேவியர்
22. Fr வின்சென்ட் ராஜ்
23. Fr சேகர் மைக்கேல்
24. Fr ஜெயபாலன்
25. Fr ஹில்லாரி
26. Fr ஷெல்லிறோஸ்
27. Fr மரிய இராஜேந்திரன் (தற்போது)
தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை மரிய இராஜேந்திரன் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில் வாவறை இறை சமூகம் வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
(வரலாறு, ஆலய அர்ச்சிப்பு விழா மலரிலிருந்து எடுக்கப்பட்டது)