488 புனித லூர்து அன்னை திருத்தலம், கோ. புதூர், மதுரை

      

புனித லூர்து அன்னை திருத்தலம்

இடம் : கோ. புதூர், மதுரை

மாவட்டம் : மதுரை
மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம் : மதுரை வடக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி. தாஸ் கென்னடி SDB
உதவிப் பங்குத்தந்தை : அருட்பணி. பிரபின் சூசடிமை SDB

குடும்பங்கள் : 1600
அன்பியங்கள் : 49

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 05.30 மணி, காலை 07.45 மணி, காலை 10.00 மணி (மறைக்கல்வி மாணாக்கர்) மற்றும் மாலை 06.30 மணிக்கும் திருப்பலி.

மாதத்தின் முதல் ஞாயிறு ஆங்கிலத்தில் மறைக்கல்வி திருப்பலி.

வாரநாட்களில் காலை 05.30 மணி மாலை 06.30 மணிக்கும் திருப்பலி.

வெள்ளி மாலை 06.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, திருப்பலி.

மாதாந்திர ஆன்மீக நிகழ்வுகள் :
முதல் வெள்ளி : காலை திருப்பலிக்கு பின்னர் நோயாளிகளுக்கு அவர்களது இல்லத்தில் நற்கருணை வழங்கப்படும்.

முதல் வெள்ளி : தொடர்ந்து 9 நாட்களுக்கு மதியம் 02.45 மணிக்கு இறை இரக்கத்தின் நவநாள், நற்கருணை ஆராதனை.

முதல் சனி : மாலை 06.00 மணிக்கு செபமாலை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி, திரு எண்ணெய் பூசுதல்.

11 ஆம் தேதி : புனித லூர்து அன்னை நினைவுநாள் மாலை 06.30 மணிக்கு தேர்பவனியுடன் செபமாலை, நற்கருணை ஆசீர்வாதம், திருப்பலி.

24 ஆம் தேதி : புனித சகாய அன்னை நினைவு நாள்

மாலை 06.30 மணிக்கு தேர்பவனியுடன் செபமாலை, நற்கருணை ஆசீர்வாதம், திருப்பலி.

திருவிழா : பெப்ரவரி 11 ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.

வழித்தடம் : மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 4கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

Location map :
https://maps.app.goo.gl/ZwbnFxAtvyUJC8xb7

திருத்தல வரலாறு:

கி.பி 1920 ஆம் ஆண்டு மதுரை நகரம் குறுக்களவில் சுமார் 2 கி.மீ. வளர்ந்திருந்த காலம், மதுரையைச் சுற்றி பல அழகிய கிராமங்கள் இருந்தன. மதுரை அழகர் கோவில் சாலையில் வயல்கள் சூழ்ந்த மேட்டுப் பொட்டலில் கோசாகுளம் என்ற ஓர் சிறிய கிராமம். சித்திரைத் திருவிழா நடக்கும் நாட்களில் மட்டும் சாலைகளில் மக்கட் கூட்டத்தைப் பார்க்கும் ஓர் எளிய கிராமமிது. வயல்களில் பண்ணை வேலை பார்த்த பாமரக் குடும்பங்கள் பல குடியிருந்தன. அவற்றுள் சுமார் 20 கிறித்தவக் குடும்பங்கள் குடியிருந்தன.

கோசாகுளம் கிராமம் மதுரை புனித வியாகுல அன்னை ஆலயப் பங்கோடு இணைக்கப் பட்டிருந்தது.புனித வியாகுல அன்னை ஆலயப் பங்கின் சுவாமி என்டாலின் சே.ச. அவர்கள், கோசாகுளம் மக்களின் ஞான வாழ்வில் அக்கறை கொண்டு ஆன்ம விசாரணைக்காக அடிக்கடி அங்கு செல்லுபவர். அக்கிராம மக்களின் ஆன்ம தாகம் புரிந்து, எதிர்கால நோக்குக் கொண்டு லூர்தன்னையின் பெயரில் ஓர் ஆலயம் கட்டினார். இப்பொழுதுள்ள சிறிய பீடம் தான் அக்காலத்தில் நிறுவப்பட்ட பழைய கோவில் பகுதியாகும். அவ்வாலயத்தின் முதல் திருவிழாவும் 1920 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோ.புதூரில் எழுப்பப்பெற்ற இச்சிறிய கோவிலை சுவாமி என்டாலின் சே.ச. அவர்கள், லூர்து அன்னைக்கு அர்ப்பணித்து உலகெல்லாம் பரவி வந்த 'நாமே அமலோற்பவம்' என்ற நல்லோசையைக் கோசாகுளத்திலும் எதிரொலிக்கச் செய்தார் என்று மதுரை மறைமாநில பெருங்குருவாக விளங்கிய மறைந்த அருட்தந்தை. இருதயம் அடிகளார் புகழ்ந்துரைத்தார்.

1931 ல் மதுரை வந்த அருட்தந்தை. கபிரியேல் கோமஸ் சே.ச. அவர்களால் கோசாகுளம் லூர்து அன்னை ஆலயமும் அதன் சுற்றுப்புறமும் மேலும் விரிவாக்கம் அடைந்தன. அவர்கள் தான் புதிதாகக் கொண்டுவந்த பளிங்குக் கற்களை பங்கு ஆலயமாகிய வியாகுலமாதா ஆலய பீடத்தில் அமைத்து, அங்குள்ள பழைய கற்களை எடுத்து வந்து இங்கு, புனித லூர்து அன்னை ஆலயப் பீடத்தில் பதித்தார். அத்தோடு பர்மாவிலிருந்து உயரிய தேக்கு மரங்களைக் கொணர்ந்து ஆலயப் பீடப் படிக் கட்டுகளை அமைத்தார்.

1938 ல் மதுரைப் பகுதி திருச்சி மறை மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மறை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. புதிய ஆயரின் இல்லம் புதூருக்கருகிலேயே அமைக்கப்பட்டு புதூருக்கு இன்னும் பெருமை சேர்ந்தது. அப்போதும் கூட புதூர் ஆலயம் வியாகுல மாதா கோவில் பங்கிற்கு உட்பட்டிருந்தது. இருப்பினும் அருட்தந்தை. செ. புதுமை அடிகளார், ஆயர் இல்லத்திலிருந்து வந்து புதூர் மக்களின் ஆன்ம நலனில் அக்கறை காட்டினார். வளர்ந்து வரும் மதுரையின் தேவையை உணர்ந்தும், பெருகிவரும் புதூர் கிறிஸ்தவ மக்களின் ஆன்ம பசியை உணர்ந்தும் கோசாகுளம் புதூர் தனிப்பங்காக, புனித வியாகுல அன்னைப் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 1951 செப்டம்பர் 9 ஆம் நாள் புதிய பங்காக உருவாக்கப்பட்டது. அருட்தந்தை. M.T. அமல்ராஜ் சே.ச. அவர்கள் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார்.

தமது முதல் வேலையாக ஆலயத்தைப் பெரிதாக்கும் பணியில் ஈடுபட்டு, மூன்று பக்கங்களையும் விரிவுபடுத்தி ஆலய முகப்பிலே இன்று நாம் காணும் எழில்மிகு மூன்று நிலைக் கோபுரங்களையும் எழுப்பினார். தேனியில் அமைந்திருந்த ஆலயம் மாதிரியில் விரிவுபடுத்தப்பட்ட புதூர் ஆலயம், 1958 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 7 ஆம் நாள் மந்திரிக்கப் பெற்றது.

1960 ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நள்ளிரவுத் திருப்பலியின் போது இவ்வாலயம் அதிகாரப் பூர்வமாக மதுரை மறை மாநிலப் பேராலயமாக அறிவிக்கப்பட்டது.

அருட்தந்தை. M.T. அமல்ராஜ் அவர்கள் ஓய்வு கொண்ட பின்னர் அருட்தந்தை. சில்வேரியுஸ் சே.ச. 1966 ல் பங்குத்தந்தையானார். நரிமேடு முதலிய வளர்ந்து வரும் பகுதிகளில் ஞாயிறு திருப்பலியினை வாரந்தோறும் நடத்தி எதிர்கால விரிவாக்கப் பணிகளுக்கு வித்திட்டவர் இவரே.

1967 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 29 ஆம் நாள் மதுரை மாநிலப் புதிய பேராயராக பேரருட் பெருந்தகை ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்கள், இதே லூர்து அன்னை திருத்தலத்தில் தான் பேராயராக மதுரை மறைமாநிலப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்கள். அவருக்கு பாலியம்' வழங்கும் பெருவிழா , திருவிழாவாக மிகச் சிறப்புற மதுரை மக்கள் சார்பாகப் புதூரில் நடத்தப்பெற்றது.

1967 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் மதுரை மாநில முதன்மைக் குரு பேரருட்தந்தை. எஸ். இருதயம் அவர்கள் பங்குப் பொறுப்பினை ஏற்றார். பேராலயம் என்ற பெருமை புதூர் லூர்தன்னை ஆலயத்திற்கு நீண்ட காலம் கிட்டவில்லை. 1970 ல் புதுப்பிக்கப்பெற்ற வியாகுல மாதா ஆலயத்திற்குப் பேராலயம் என்ற பெருமை போய்ச் சேர்ந்தது.

புதூரில் பங்குப் பேரவை பரிசோதனை முயற்சியாகத் தொடங்கப் பெற்றது. கோட்டாறு மறை மாவட்டத்திலிருந்து தொண்டராக வந்த அருட்தந்தை. செல்வாசியுஸ் அவர்கள் இளைஞர் நலன்களில் அதிக அக்கறை காட்டி அவர்களின் ஆக்க பூர்வ வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டினார். இச்சமயத்தில் தான் ஆலயத்தின் அருகிலிருந்த கல்லறைத் தோட்டம் அளவில் மிகச்சிறியதாக இருந்ததால், புதிய கல்லறையின் இடத் தேவை அதிகமாக உணரப்பட்டது. பிரச்சனைகள் பல எழுந்த போதிலும் புதூரின் கீழ்ப்பகுதியில் தொழிற்பேட்டையை ஒட்டினாற்போல் கிடைத்த கண்மாய்த் தரிசில் அரசாங்க இசைவுப்பெற்று புதிய கல்லறைக்கு இடம் அமைத்தார் பங்குத்தந்தை. இதற்கு அருந்துணையாக நின்றவர் அருட்பணி. இயேசுதாசன் அடிகளார் அவர்கள். இந்த நேரத்திலே அன்னையின் ஆசியாலும் அன்பர் பலரின் நல்லுதவிகளினாலும் ஆலய வளாகத்தில் மாற்றங்கள் பல செய்யப்பட்டன.

மருத்துவமனை செவிலியாயிருந்த கிறிஸ்தினா சம்பூரணம் அம்மாளின் உதவியால் ஆலய வளாகத்தில் மேடை ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. பாண்டியன் ஹோட்டலில் நிர்மாணக் கட்டமைப்பில் பணி புரிந்த திரு . கௌமேடோ என்பவரின் தாராளச் சிந்தையால் ஆலயத்தில் அழகான இருக்கைகள் போடப்பட்டன. திரு. P.S. ஜான் ஆராச்சி அவர்களின் உதவியால் கோபுர உச்சியில் நவரச விளக்கு பொருத்தப்பட்டது.

1972 ல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. T.A. மிக்கேல் அவர்கள் சலேசியச் சபையினர் இப்பங்கின் பொறுப்பினை ஏற்க முதன்மைக் காரணமானவர் ஆவார். கோ. புதூர் புனித லூர்தன்னை திருத்தலம் 24-9-1975 அன்று காலை 10 மணிக்கு மதுரைப் பேராயரால் சலேசிய சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது புதிய வரலாற்றை மட்டுமல்ல புதிய எதிர்பார்ப்புகளையும் மதுரை மறை மாவட்டத்தில் ஏற்படுத்தியது. அருட்தந்தை. வின்சென்ட் துரைராஜ் முதல் சலேசிய பங்குத்தந்தையாகவும், பவளவிழா ஆண்டிலே பங்குத்தந்தையாக இருக்கும் அருட்தந்தை K.O. லூயிஸ் உதவிப் பங்குத்தந்தையாகவும், இவர்களுக்குத் துணையாக அருட்தந்தை. ஜோசப் சந்தனமும் புதிய பங்குப் பொறுப்பினை ஏற்றனர்.

21-2-1976 புதூர் லூர்தன்னைத் திருத்தல் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல். ஆம், லூர்தன்னையின் நவநாள் பக்தி முயற்சி ஆரம்பிக்கப்பட்டதும் அன்றுதான். லூர்தன்னையின் விசுவாசிகள் மனம் மகிழ பங்கு மக்கள் பங்கேற்க நவநாள் திருப்பலி ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை அந்த நவநாள் தொடர்ந்து வருவது அன்னையின் மீது அன்பர்கள் கொண்டுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது.

1975 செப்டம்பர் 24,25,26 ஆகிய மூன்று நாட்களிலும் கோ. புதூர் தனிப்பங்கான 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. ஆலயப்பீடத்தில் இடது புறம் புதிதாகக் கட்டப்பட்ட வெள்ளி விழா நினைவுச் சின்னமாக லூர்து நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட புதுமைக்கல் பதிக்கப்பட்ட லூர்தன்னையின் தனிபீடம் மந்திரிக்கப்பட்டது. மேலும் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

24-5-1977 ல் அருட்தந்தை. வின்சென்ட் துரைராஜ் அடிகளார் அவர்கள் ரோம் செல்வதின் காரணமாக அருட்தந்தை. ஜோசப் ஜஸ்வந்த்ராஜ் பங்கின் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் தான் புதூர் பங்கு மக்களின் எண்ணிக்கை விரைவாக வளர, அதன் பணிகளைச் செம்மைப்படுத்தவும் ஒழுங்குப்படுத்தவும் புதூர் பங்குத்தலம் 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மாதா, மற்றும் புனிதர்கள் பெயரில் இயங்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது என்றால் மிகையாகாது.

ஆலயத்திற்குச் சொந்தமாக இருந்த புதிய கல்லறைத் தோட்டம் ஆலயத்திற்கே உரியது என்ற 3-2-1980 தேதியிட்ட அரசின் ஆணை பங்கு மக்கள் அனைவருக்கும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

புதுமைமிகு புனித லூர்தன்னைத் திருத்தலத்திற்கு புனிதம் அதிகரிக்கும் வண்ணம் 10-6-1980 அன்று போர்ச்சுக்கல்லிலிருந்து புனித பாத்திமா அன்னையின் சுரூபம் புதூருக்கு வந்து சேர்ந்தது. அன்னையின் சுரூபத்திற்கு புதூர் மக்கள் தம் ஆரவார வரவேற்பை அளித்து தம் உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

24-5-1980 அன்று புதூர் பங்குத்தலத்தின் புதிய அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் அருட்பணி. இ. ஜெகநாதன் அடிகளார் அவர்கள் பொறுப்பேற்றார்.

புதூருக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள கடச்சனேந்தலில் அங்குள்ள மக்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்து சிற்றாலயம் ஒன்று புனித அந்தோணியாரை பாதுகாவலராகக் கொண்டு எழுப்பப்பட்டு, 17-6-1980 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

மே 24, 1982 ல் புதிய பங்குத்தந்தையாக, அதிபராக பொறுப்பேற்று புதூருக்கு வந்தார் அருட்பணி. கிறிஸ்டி அடிகளார் அவர்கள்.

1984 ஜூன் மாதம் 6 ஆம் நாள் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஜேக்கப் அடிகளாரின் திடீர் மரணத்தால் புதூர் பங்கு மக்களுக்கு ஓர் துக்க நாளாக அமைந்தது.

எப்பொழுதும் ஆன்மீகப் பணியிலும் சமூக விழிப்புணர்விலும் சுறுசுறுப்பாக இருக்கும் பங்குத் தலம் புதூர் திருத்தலம். ஆலய வளாகத்தில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களுக்காக ஆலய வளாக மேடை ஒன்று அவசியமென்று உணரப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா 1984 செப்டம்பர் 8 ஆம் நாள் நடைபெற மதுரை பேராயர் ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்கள் அடிக்கல் நாட்டினார். 1985 ஜனவரி 31 ம் தேதி கமிஷனர் திரு. சேர்மன் துரை அவர்களால் ஆலய வளாக மேடை திறந்து வைக்கப்பட்டது.

லூர்து அன்னையின் மகத்துவம் கருதி அதன் புதுமை உணர்ந்து கூடுதல் மக்கள் பெருக, நவநாள் மகத்துவம் பெருக அன்னையின் 750 -வது நவநாள் சிறப்பாக 18-11-1984 இல் கொண்டாடப் பட்டது.

1985 ல் அதிபராக பங்குத்தந்தையாக புதூரில் நுழைந்தார் அருட்பணி அ.ப. ஜேம்ஸ் அடிகளார். பேராயரின் பரிந்துரைப்படி 31-8-1985 லிருந்து அருட் சகோதரர்கள் நற்கருணை தரத் தொடங்கினர். 1985 அக்டோபர் திங்கள் 24,25 ஆம் தேதிகளில் கிறிஸ்து அரசர் பெருவிழாவை முன்னிட்டு 40 மணிநேர நற்கருணை ஆராதனை முதல் முறையாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இது ஆண்டு தோறும் சிறப்பானதொரு வழிபாடாக நடைபெற்று வருகிறது.

ஆலய வளாக வாசலின் வலதுபுறம் அளவில் சிறியதே ஆயினும் அழகாக நேர்த்தியான முறையில் ஓர் சிறிய கெபி அமைத்து அதில் அருள்மிகு அன்னை வேளாங்கண்ணியின் அழகிய சுரூபத்தையும் அமைத்துப் பக்கத்திலேயே கண்ணாடிப் பேழையில் நாளும் நூற்றுக்கணக்கானோர் படித்துப் பயன்பெறும் பொருட்டு திருவிவிலியமும் வைத்து மதுரை ஆலயங்களிலே புதூர் திருத்தலத்திற்குத் தனிப்பெருமை சேர்த்தவர் திரு. ஆர். லூர்துசாமி அவர்கள். தன்னுடைய வறுமையிலும் தளராது தனியாளாய் முயற்சி எடுக்க அன்னையின் அருள் அவருக்கிருக்க 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இச்சிறுகெபி ஆசீர்வதிக்கப்பட்டது.

ஆலயம் மற்றும் பங்கின் செய்திகளை அறியும் பொருட்டு 'லூர்து அன்னை மடல்' முதல் இதழ் 7.10.1986 ல் வெளிவந்தது.

26.04.1987 ஆம் நாள் லூர்தன்னைத் திருத்தல பங்கைச் சார்ந்த நரிமேடு, மீனாட்சிபுரம், செல்லூர், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கென பீபிகுளம் இந்திரா நகரில் கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் ஆலயம் சென்னை மயிலை பேராயர் மேன்மைமிகு கஸ்மீர் ஞானாதிக்கம் ச.ச. அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

புதூர் திருத்தலம் உருவாவது இறைவன் இயேசுவின் மகிமையைப் பறைசாற்றும் செயலே என்பதை அன்னை அமலோற்பவி பலருக்கு உணர்ந்த 900 -வது வார நவநாள் பெருவிழா 24-10-1987 ல் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பழுதுபட்ட ஆலய பீடம் அழகுமிகு கற்களால் புதுப்பிக்கப்பட்டு 25.11.1989 அன்று மந்திரிக்கப் பெற்றது.

அருட்தந்தை. அ.ப. ஜேம்ஸ் அவர்களின் காலம் புதூர் திருத்தலத்தின் புனிதமிகு புரட்சிக்காலம் எனக் கூறலாம். அவர் பணிபுரிந்த ஆறு ஆண்டுகளிலேயும் புதிய ஆன்மீகப் பக்தி முயற்சிகள் நாளும் மேற்கொள்ளப் பட்டன. பைபிள் வாரங்கள் கொண்டாடப்பட்டன. எல்லா சபையினரோடும் இணைந்து பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. குறிப்பாக திருமுழுக்கு ஆயத்தநிலை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது இவரது காலத்தில்தான். நற்செய்தி பெருவிழாக்கள் பன்முறை நடத்தப்பெற்றன. சகோதரர் குரூஸ் திவாகரன் புதூர் மக்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டார். ஆயிரக் கணக்கானோர் வீடுகளில் முதல் முறையாக திருவிவிலியத்தை வாங்க வைத்து அதை நாளும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஊட்டியவர் இவரே. 1991ல் மாற்றம்பெற்று சென்ற அருட்பணி. அ.ப. ஜேம்ஸ் அடிகளாருக்கு ஆயிரக்கணக்கானோர் கூடிநின்று கண்களில் கண்ணீர் மல்க கரம் அசைத்து பிரியாவிடை கொடுத்தனர்.

புதூர் பங்கின் பொறுப்பினை ஏற்ற அருட்தந்தை. சின்னப்பன் அவர்கள் 10 அம்சத் திட்டம் ஒன்றை பங்குப்பேரவையில் 11-6-1993ல் சமர்ப்பித்து பங்கு மக்களிடம் அதை எதிரொலிக்கச் செய்தார். புதூர் திருத்தலத்திலே இரண்டரை ஆண்டுகள் மட்டுமே பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை. சின்னப்பன் அடிகளார், புதுவாழ்வு 2000 -த்தின் வழியாக புதூருக்குப் புதுப்பெருமை சேர்த்தார். புதிய ஆலயம் தேவை என்ற விதையை மக்கள் மனதிலே விதைத்தார். பங்குத்தலத்தை 14 பகுதிகளாகப் பிரித்து புனிதர்கள் பெயரிட்டு பகுதிவாரியாகப் பங்குப் பேரவைக்குப் பொறுப்பார்கள் தேர்வு செய்து பங்குப் பேரவைக்குத் தனி ஜனநாயக அந்தஸ்தைக் கொடுத்த மேதகு மலையப்பன் சின்னப்பன் அவர்களை புதூர் திருத்தலம் என்றும் மறவாது.

1993, டிசம்பர் திங்கள் 16 ஆம் நாள் புதூர் பங்கு மக்களுக்கு இனிய பொழுதாக மலர்ந்தது. மதுரை புதூர் லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி. மலையப்பன் சின்னப்பன் அடிகளாரை வேலூர் ஆயராக 2ம் போப் ஜான்பால் நியமனம் செய்ததை அனைத்துப் பத்திரிகைகளும் பறைசாற்ற ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் புதூர் திருத்தல் மக்கள். 15-1-94ல் அருட்தந்தை ஓ.ஞ. லூயிஸ் அடிகளார் புதூர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். புதிய ஆயராக பொறுப்பேற்க மேதகு மலையப்பன் சின்னப்பன் வேலூர் நோக்கிப் பயணமாகப் பல்லாயிரக் கணக்கானோர் கூடிநின்று கையில் கொடிகளுடனும் விழிகளில் கண்ணீருடனும் பிரியா விடை தந்த காட்சி மனதில் அழியாது நிற்கும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி.

சிறிதுகாலம் பல்வேறு காரணங்களால் நின்றிருந்த லூர்து அன்னை மடல் புதுப்பிக்கப்பட்டு 11-5-1994 அன்று வேலூர் ஆயர் மேதகு சின்னப்பா அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு மதுரைப் பேராயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களால் பவள விழா தொடக்க இதழாக வெளியிடப்பட்டது.

புதூர் திருத்தலத்திலே சிற்றாலயமாக இருந்து அனைத்து வழிகளிலும் ஒத்துழைத்த, ஒத்தக்கடை அருளானந்தர் ஆலயம் புதிய பங்காக 25-6-1994ல் பிரிக்கப்பட்டது.

புதூர் சந்தித்திராத மாபெரும் மக்கள் திரள்கூட 1995 பிப்ரவரி 11ம் தேதி மதுரைப் பேராயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களும் வேலூர் ஆயர் மேதகு சின்னப்பா அவர்களும் கலந்து கூட்டுத் திருப்பலியாற்றி 75வது ஆண்டு ஆலய பவள விழாவை ஆரம்பித்து வைத்தனர். பவளவிழா நிறைவு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் பரவலாக முக்கியமாக ஒவ்வொரு மாத 11ஆம் நாள் நிகழ்ச்சிகள் திட்டமிட்டுப் பகுதிவாரியாக மக்கள் சிறப்பிக்க, பாங்குடன் பங்குப் பேரவையினர் ஒத்துழைக்க, பங்குத்தந்தை ஓ.ஞ. லூயிஸ் தலைமையேற்று செயல்பாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்ட உதவிப் பங்குத்தந்தையர் அருட்பணி. மரிய ஜோசப், அருட்பணி. ஜான்சன் ஒத்துழைப்புடன் நிறைவு நிகழ்ச்சிகள் 1996 பிப்ரவரி 1 முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பாக நடந்தேறியது.

1997 B.B குளம் தனிப்பங்காக உருவாக்கப்பட்டது.

1998 இல் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

ஆம் ஆண்டில் 2000 சலேசியர்கள் பங்குப் பணியேற்றதின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. வெள்ளிவிழா நினைவாக தொன் போஸ்கோ அரங்கம் அமைத்து அதில் தொன்போஸ்கோ சுரூபம் அமைக்கப்பட்டது. மேலும் 'லூர்து அன்னை மடல்' புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்டது.

2002 ல் ஆலய வளாகத்தில் ஒளிக்கம்பம் அமைக்கப்பட்டது. "மாறாத தெய்வம்" ஒலிநாடா வெளியிடப்பட்டது. பங்கில் அன்பியங்கள் துவக்கப்பட்டது. "இறைவனோடு உரையாடுவோம்" என்ற அன்பிய புத்தகம் வெளியிடப்பட்டது. DBYES என்ற வேலைவாய்ப்பு மையம் துவக்கப்பட்டது.

2003 ல்"அன்னை நிலையம்" கட்டப்பட்டது.

2007 கடச்சனேந்தல் தனிப்பங்காக உருவாக்கப்பட்டது.

2008 ல் அலைகள் மீடியா நிலையம் அமைக்கப்பட்டது. ஆலயத்தினுள் லூர்து அன்னை கெபி புதுப்பிக்கப்பட்டது. தொன் போஸ்கோ அரங்கம் சீரமைக்கப்பட்டது. கல்லறைத் தோட்டம் சீரமைக்கப்பட்டது.

2009 ல் 'லூர்து அன்னை இல்லம்' சமுதாயக்கூடம் திறக்கப்பட்டது. பாடகர் குழு மேடை அமைக்கப்பட்டது.

2011 ல் ஆலய வளாகத்தில் தூய லூர்து அன்னை கெபியும் நற்கருணை ஆலயமும் அமைக்கப்பட்டது. இறை இரக்க நவநாள் துவங்கப்பட்டது.

2015 ஆலயத்தின் உள்பகுதி சீரமைக்கப்பட்டது. 2017 | கல்லறைத் தோட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 2018 கல்லறையில் தூய வியாகுல அன்னை கெபி கட்டப்பட்டது. கல்லறையில் சூரிய விளக்குகள் பொருத்தப்பட்டது. அன்னை இல்லம் சீரமைக்கப்பட்டது. பாடகற் குழு மேடை விரிவுபடுத்தப்பட்டது.

2019 போஸ்கோ இல்லம் சீரமைக்கப்பட்டது.

கோ. புதூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தை நாடி பல்வேறு வேண்டுதல்களுடன் இறைமக்கள் வந்து ஜெபித்து, அன்னையின் பரிந்துரையால் இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.

தகவல் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் பங்கு உறுப்பினர்.