புனித செபஸ்தியார் ஆலயம்
இடம்: கண்டியப்பேரி
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: பாளையங்கோட்டை
மறைவட்டம்: பாளையங்கோட்டை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: தூய அடைக்கல அன்னை ஆலயம், திருநெல்வேலி மாநகர்
பங்குத்தந்தை: அருள்பணி. மை. பா. சேசுராஜ்
குடும்பங்கள்: 70
அன்பியங்கள்: 2
ஞாயிறு திருப்பலி: காலை 06.00 மணி
திருவிழா: செப்டம்பர் மாதம் முதல் ஞாயிறு
மண்ணின் இறையழைத்தல்:
அருள்சகோதரி. மைக்கிள் எமிமா, SMMI
வழித்தடம்: நெல்லை டவுன் - இராமையன்பட்டி வழித்தடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map: https://g.co/kgs/kVtsMU
வரலாறு:
திருநெல்வேலி மாநகரின் கண்டியப்பேரி ஊருக்கு இலந்தகுளம் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. குளத்தின் இரு கரைகளிலும் இலந்தை பழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் அப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் பனை மரங்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது.
விளாகம் ஊரை பூர்வீகமாகக் கொண்ட மூன்று குடும்பங்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பனைகள் நிறைந்த இவ்வூரில் குடியேறினர். மூன்று குடும்பங்களைக் கொண்டு குடியேறிய குடும்பங்கள் கி.பி 1901 -ம் ஆண்டில் 40 பேர்களைக் கொண்ட இறைசமூகமாக மாறி உள்ளது என வீரவநல்லூர் பங்கின் வரலாற்று ஆவணங்களில் உள்ளன.
அக்காலத்தில் காலரா நோயின் கொடிய தாக்குதல் ஏற்பட்ட வேளையில் புனித செபஸ்தியாரை பாதுகாவலராகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்ததால், காலரா நோயினால் எவரும் இறக்கவில்லை என்ற மகிழ்ச்சியிலும், இறைநம்பிக்கையிலும் இவ்வாலய இறைசமூகம் வளர்ந்து வந்தது.
வாக்போர்ட் நிலத்தில் குடிசை ஆலயம் அமைத்து முன்னோர்கள் வழிபட்டு வந்தவேளையில், 1948 -ம் ஆண்டு வாக்போர்ட் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, ஆலயம் குளத்தின் கரையிருந்து, வேறிடத்திற்கு மாற்றப்பட்டது.
1953 ஆம் ஆண்டு ஊர் மக்கள் மற்றும் சேசு சபை அருள்பணியாளர்களின் துணையுடன் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. 1963 ஆம் ஆண்டு ஆலயத்தின் முன்புறம் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது.
மக்களின் குடிநீர் தேவைக்காக அருள்பணி. மரிய மிக்கேல் அடிகளாரின் முயற்சியில் அமெரிக்க மக்களின் நிதியுதவியுடன் கிணறு ஒன்று தோண்டப்பட்டது. இன்றளவும் தண்ணீர் வற்றாமல் புதுமைக் கிணறாக விளங்குகிறது.
அருள்பணி. S. சந்தியாகு அவர்களின் முயற்சியால் 1992 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
அருள்பணி. பீட்டர் அவர்களின் முயற்சியால் 1994 ஆம் ஆண்டு ஆலயத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, கல்லறைத் தோட்டமும் அமைக்கப்பட்டது.
ஊர் மக்கள் மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் 85 அடி உயர வானளாவிய கோபுரம் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
2017 -ம் ஆண்டு கொடிமரம் நிறுவப்பட்டது.
கண்டியப்பேரி புனித செபஸ்தியார் ஆலயம் வாருங்கள்.. இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ்