697 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கரும்பாறை

   

புனித வனத்து சின்னப்பர் ஆலயம்

இடம்: கரும்பாறை

மாவட்டம்: ஈரோடு

மறைமாவட்டம்: உதகை

மறைவட்டம்: அந்தியூர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித செபஸ்தியார் ஆலயம், நகலூர்

பங்குத்தந்தை: அருள்தந்தை. ஜோசப் அமலதாஸ்

பொறுப்புத்தந்தை: அருட்பணி. அமல்ராஜ்

குடும்பங்கள்: 80

அன்பியங்கள்: 4

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணிக்கு

மாதத்தின் 2-ம் வெள்ளி மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி

திருவிழா: உயிர்ப்பு பெருவிழாவிற்கு பின்வரும் 3-ம் ஞாயிறு

வழித்தடம்: அந்தியூர் -நகலூர் -பெருமாபாளையம் -கரும்பாறை

Location map:

Vanathu chinnapar church

Nagalur, Tamil Nadu 638502

https://maps.app.goo.gl/DwZZwQUvwht78urZ6

வரலாறு:

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு திரு. இராயப்பன் அன்பவர் தமது கால்நடைகளை கரும்பாறை பகுதியில் பராமரித்து வந்த போது, காட்டு விலங்குகளால் அவை தாக்கப்பட்டு மடிந்து போயின‌.

நல்ல ஆயன் நானே என்று பொழிந்த இறைவனின் பெயரில் நம்பிக்கைக் கொண்டு, அந்த கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து தனது கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக திரு. இராயப்பன் அந்தப் பாறையின் அருகில் சிலுவை -யை நட்டு வைத்து இறைவனிடம் வழிபட்டு வந்ததாக முன்னோர் கூறுவர்.   

அச்சமயத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஜமீன் அவர்கள் தனது நிலத்திற்கு நீர்ப்பாய்ச்ச, மேடையை அமைத்த போது கற்கள் தீர்ந்து போகவே, மேடை அமைக்க தேவைப்பட்ட கற்களை சிலுவை நாட்டப்பட்ட பாறையிலிருந்து வெட்டியெடுக்க தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி, பணியாளர்கள் அந்தப் பாறையை உடைக்க துளையிட்டனர் (துளையிட்ட அடையாளம் இன்றும் உள்ளது). பின்னர் பணியாளர்கள் பாறையை தகர்க்க முயற்சி செய்த போது அவர்கள் பார்வையை இழந்தனர். எனவே அப்பகுதி மக்கள் அனைவரும் இங்கு இறைபிரசன்னம் இருப்பதை உணர்ந்து சிலுவை நட்டு வைத்து வழிபடத் தொடங்கினர்.

சில காலங்களுக்குப் பிறகு வறட்சி ஏற்பட்டது. அப்போது மக்கள் சிலுவையின் கீழ் உள்ள பள்ளத்தில் 'மழை பொங்கல்' வைத்து இறைவனிடம் வேண்டினர்.

என் பெயரால் நீங்கள் எதைக் கேட்டாலும் நான் உங்களுக்குத் தருவேன்... என்ற இறைவார்த்தைகளுக்கு ஏற்ப, எதிர்பாராத விதத்தில் மாலை 04:00 மணியளவில் மழையின் அறிகுறியே இல்லாமல் அந்த பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது‌. அந்த வெள்ளத்தில் சமையல் பாத்திரங்கள் அனைத்துயும் இழுத்து செல்லப்பட்டது. இதனை நேரில் கண்டவர்கள் இன்றும் சாட்சியாக வாழ்கின்றனர்.

கிறிஸ்துவின் செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு குறைய வேண்டும் என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப வாழ்ந்த புனித வனத்து சின்னப்பரின் சிற்றாலயம் உருவானது.

மேலும் அங்குள்ள மரம் செடி கொடிகள் அனைத்தும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இவற்றை எவரும் தவறாகப் பயன்படுத்துவோ, சேதப்படுத்துவதோ இல்லை.

புனித வனத்து சின்னப்பரின் ஆற்றலையும், கருணையையும் உணர்ந்த பல்வேறு இன மக்கள் சாதி, சமய வேறுபாடின்றி நாள்தோறும் வந்து ஜெபித்து செல்கின்றனர்.

முதன்முதலாக இந்த ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அருள்தந்தை.‌ ஜார்ஜ் இஞ்சிபரம்பில் அடிகளார் (1976-1989) ஆவார். 1979 ஆம் ஆண்டு ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அப்போதைய உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் ஆண்டகை ஆலயத்தை அர்ச்சித்தார். தற்போதைய ஆயர் மேதகு அமல்ராஜ் ஆண்டகை அவர்கள் (1987-1988), துணைப் பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்து, இவ்வாலய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

அதன்பிறகு அருள்தந்தை. ஸ்டீபன் (1996-1998) அவர்களால் ஆலயத்தின் முன்புறமுள்ள மண்டபம் விரிவுபடுத்தப் பட்டது.

அருள்தந்தை. மைக்கேல் அடிகளார் (2000-2007) பணிக்காலத்தில் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது. 

அதன்பிறகு அருள்தந்தை. சார்லஸ் பாபு (2011-2016) அவர்கள் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப் பட்டது. மேலும் அருள்தந்தை. ஜார்ஜ் இஞ்சிபரம்பில் பெயரில் அன்னதானகூடம் கட்டினார். 

தற்போதுள்ள பங்குத்தந்தை அருள்தந்தை. ஜோசப் அமலதாஸ் அவர்களால் ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, 13.04.2021 அன்று மேதகு ஆயர் அமல்ராஜ் அவர்களால் திவ்ய நற்கருணை பேழை நிறுவப்பட்டது.

வேண்டுதல்கள் நிறைவேறிடும் கரும்பாறை புனித வனத்து சின்னப்பர் ஆலயம் வாருங்கள்.. இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்தந்தை. ஜோசப் அமலதாஸ்