441 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மணலிக்குழிவிளை


தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : மணலிக்குழிவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : மாத்திரவிளை

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. மரிய வின்சென்ட் (மாத்திரவிளை வட்டார முதல்வர்)

குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

புதன் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

வெள்ளி மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, ஜெபக்கொண்டாட்டம்.

சனிக்கிழமை திருப்பலி : காலை 06.00 மணிக்கு

திருவிழா : செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பித்து அக்டோபர் மாதத் துவக்கத்தில் நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர் :
அருட்பணி. அனஸ்தாஸ் OCD

வழித்தடம் : நாகர்கோவில் -குளச்சல். குளச்சல் -தக்கலை சாலையில் செம்பொன்விளைக்கு அடுத்து முக்காடு சந்திப்பு.

Location map : https://maps.app.goo.gl/xQDQyyQdfEqjhREdA

வரலாறு :

மணலிக்குழிவிளை தொடக்க காலத்தில் மாத்திரவிளை, புனித ஆரோபண அன்னை ஆலயத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மணலி மக்களுக்கென வழிபாட்டுத் தலம் அமைக்க அருகிலுள்ள குழிவிளை என்ற இடத்தில் மக்கள் 13 சென்ட் நிலம் வாங்கி, அதில் தூய மிக்கேல் அதிதூதர் குருசடி அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.

மணலி மக்கள் குழிவிளை -யில் வழிபாட்டுத்தலம் அமைத்ததால் 'மணலிக்குழிவிளை' எனப் பெயர் பெற்றது.

1987 ஆம் ஆண்டில் அருட்பணி. ஜோக்கிம் அவர்கள் மாத்திரவிளை பங்குத்தந்தையாக பணியாற்றிய போது 40 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

19.09.1990 முதல் கருக்கன்குழி, பாட்டவிளை, படுவாக்கரை, முக்காடு, ஓலக்கோடு, செம்பொன்விளை, கூட்டமாவு, செந்தரை, ப. கோட்டை, வழுதலம்பள்ளம், மணலி ஆகிய பகுதிகளை கொண்டதாகவும், மாத்திரவிளை பங்கிலிருந்து, சகாயநகர் பங்கின் கிளைப் பங்காக மாற்றம் பெற்றது.

அருட்பணி. வின்சென்ட் அவர்களின் பணிக்காலத்தில் ஞாயிறு திருப்பலி, வெள்ளி நவநாள் திருப்பலி மற்றும் அருளடையாளக் கொண்டாட்டங்கள் யாவும் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தன. 09.09.1990 முதல் பாதுகாவலர் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. பிற சமய சகோதரர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

இவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வந்த வேளையில், சில சமூக விரோதிகளின் தூண்டுதலால் வழிபாடுகள் தடைபட்டன.

தக்கலை துணை ஆட்சியாளரால் ஆலயத்தை இடிக்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. அருட்பணி. வின்சென்ட் அவர்கள் 1. ஆலயத்தை இடிக்கக் கூடாது, 2. வழிபாட்டை தடை செய்யக் கூடாது ஆகிய இரு தடை ஆணைகளை உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்றார்.

மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற ஆணைகளை மீறி, திருமணம், அடக்கச் சடங்குகளை நடத்த விடாமல் தடுத்த வேளையில், மேதகு ஆயர் அவர்கள், இறை மக்களின் அவரவர் இல்லங்களில் திருப்பலியுடன் திருமணச் சடங்குகள் நடத்த அனுமதி வழங்கினார்.

பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் மீண்டும் ஆலயத்தை இடிக்க அதிகாரிகள் ஆணை பிறப்பித்தனர். மக்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆலய பொருட்கள் அபகரிக்கப் பட்டன. 1992 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆலயத்தை இடிக்க முற்பட்ட போது மேதகு ஆயரின் முயற்சியால் முறியடிக்கப் பட்டது.

அருட்பணி. ஜெகத் கஸ்பார் அவர்கள் பங்குத்தந்தையாக நியமிக்கப் பட்டார்.

1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் நாள் நள்ளிரவில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் சில சமூக விரோதிகளால் எரித்து சாம்பலாக்கப் பட்டது.

அருட்பணி. ஜெகத் கஸ்பார் அவர்களின் வழிகாட்டுதலோடும், சகாயநகர் பங்கு ஆலய மக்களின் உதவியோடும் அன்றிரவே எரிந்த ஆலயம் சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்தது. வழிபாடுகள் தொடர்ந்தன. இதனிடையே மாவட்ட மக்கள் கொதித்தெழுந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் பங்கு கொண்ட பேரணி, பொதுக்கூட்டங்கள் திக்கணங்கோடு, கருங்கல், பள்ளியாடி ஆகிய இடங்களில் நடைபெற்றன. மாநில அரசு தலையிட்டு, அமைச்சர் குழுவை அனுப்பியது.

12.11.1994 அன்று ஆலயத்தை இடிக்கவும், வழிபாடுகளை தடை செய்யவும் வழங்கப்பட்ட ஆணைகள் உயர்நீதி மன்ற நீதிபதி உயர்திரு பக்தவல்சலம் அவர்களால் ரத்து செய்யப்பட்டது.

10.07.1995 அன்று கட்டப்புளி திரு. இயேசு முத்து அவர்களுக்கு சொந்தமான பதினைந்தரை (15.5) சென்ட் நிலம் வாங்கப்பட்டு புதிய ஆலயம் கட்டும் பணி துவங்கியது.

06.08.1995 அன்று அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. இராஜேஷ் பைலட், மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் தலைமையில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது.

அருட்பணி. லூக்காஸ் அடிகளார் ஆலயப் பணிகளை முன்னின்று நடத்தினார்கள். ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அருட்பணி. லூக்காஸ் அவர்களின் தலைமையில் 06.11.1999 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

17.09.2008 அன்று தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தை அருட்பணி. A. ஆன்றனி சகாய ஆனந்த் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.

மக்களின் ஜெப தேவைகளுக்காக வேளாங்கண்ணி மாதா குருசடி ஒன்று கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

சகாயநகர் பங்கின் கிளைப் பங்காக இருந்த போது பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

1. அருட்பணி. பிரான்சிஸ் M. வின்சென்ட்
2. அருட்பணி. ஜெகத் கஸ்பார்
3. அருட்பணி. J. லூக்காஸ்
4. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ்
5. அருட்பணி. S. K. ஜோஸ் ராபின்சன்
6. அருட்பணி. E. யூஜின்
7. அருட்பணி. G. ஜஸ்டஸ்
8. அருட்பணி. மைக்கேல் ராஜ்
9. அருட்பணி. A. ஜோசப்ராஜ்.

தனிப் பங்காக உயர்த்தப் பட்ட பின்னர் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :

1. அருட்பணி. A. ஆன்றனி சகாய ஆனந்த்
2. அருட்பணி. பெஸ்கி
3. அருட்பணி. கிறிஸ்துராஜ்
4. அருட்பணி. வின்சென்ட் ராஜ்
5. அருட்பணி. மரிய வின்சென்ட் (தற்போது)

தகவல்கள் : ஆலய நிர்வாகம்.